kuthoosi gurusamy 300“நீ பார்ப்பன துவேஷியா?” - என்று யாராவது என்னைக் கேட்டால்,

“நீ பாம்பு துவேஷியா?” - என்று பதிலுக்குக் கேட்பேன்!

“நீ மதத் துவேஷியா?” - என்று கேட்டால், “நீ புலி துவேஷியா?” - என்று கேட்பேன்!

“நீ முதலாளி துவேஷியா?” - என்று கேட்டால், “நீ மூட்டைப் பூச்சி துவேஷியா?”, - என்று கேட்பேன்.

“நீ வைதீகத்தின் துவேஷியா?” என்று கேட்டால், “நீ காலராவின் துவேஷியா?”, என்று கேட்பேன்!

பாம்பிலே எல்லாப் பாம்புமே கெட்ட பாம்பல்ல, அதிலே நல்ல பாம்புமுண்டே! - என்று சிலர் கூறலாம்.

ஆமாம்! நல்ல பாம்பும் உண்டுதான்! அதாவது பார்ப்பதற்கு நல்ல பாம்பு! படத்துடன் கூடிய பாம்பு! பரதநாட்டியம் ஆடும் பாம்பு! பாம்பு இனத்திலேயே அழகான பாம்பு! இசை உணர்ச்சியே உருவான பாம்பு! மகுடி கேட்டுத் தலையசைத்துத் தாளம் போடும் பாம்பு!

ஆனாலும் இந்த நல்ல பாம்பைக் கண்டு தானே பலர் நடுங்குகிறார்கள்? ஆடும்போது நன்றாகத் தானிருக்கிறது! ஆனால் கடித்து விட்டாலோ? உடலே நீல (ஆரிய) நிறமாகி விடுகிறதே!

“அய்யோ! அடிக்காதே அப்பா! அழகான பாம்பு!” என்று யார் சொல்வார்கள்? விஷயந் தெரியாத சின்னஞ்சிறு பிள்ளைகள் தான் சொல்வார்கள், ஆனால் மற்றவர்கள்? துணிச்சலிருந்தால் தடியெடுத்துத் தாக்குவார்கள்! கோழையானால் ஓட்டமெடுப்பார்கள்!

பாம்பு விஷயம் இப்படியே நிற்க!

சென்னைப் பல்கலைக் கழகத்தார் ஏராளமான நல்ல பாம்புகளைப் பாலூட்டி வளர்த்து வருவதாகக் கேள்வி! பாம்புகளிலே தண்ணீர்ப் பாம்பும் உண்டு என்பது எனக்குத் தெரியும். ஆனால் கண்ணை மூடிக்கொண்டு கட்டியணைக்கும்போது, எது தண்ணீர்ப் பாம்பு, எது விஷப் பாம்பு என்பது எப்படி நமக்குத் தெரியும்?

“பாம்புக்குப் பாலூற்றி வளர்க்காதே” என்பது பழமொழி!

பல்கலைக் கழகத்தாரே! பாம்பை வளர்க்காதீர்கள்! கூடை கூடையாக நல்ல பாம்புகளை (பல்பிடுங்காமலே) வைத்து வளர்க்கிறீர்களாமே? உண்மைதானா?

பாம்பைப் பிடித்துப் பல்லையாவது பிடுங்கிவிட்டுத் தரலாமென்றால், பாம்புப் பிடாரனைப் பார்த்து, “ஏய்! கருப்புச் சட்டை! கிட்டே வராதே! போ! போ!” - என்று துரத்துகிறார்களே! என்ன செய்வது?

சட்டை எதுவானாலென்ன? அவன் சேவைதானே முக்கியம்? நல்ல பாம்புக் காதலர்களுக்கு என்றுதான் புத்தி வருமோ?

- குத்தூசி குருசாமி (28-03-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It