நாடு முழுவதும் எக்ஸாமினேஷன் நடக்கின்ற சமயமல்லவா இது? இதில் சம்பந்தப்பட்டவர்கள் மூன்று சாரார் - அதாவது கேள்வி கேட்பவர்; பதில் எழுதுபவர்; திருத்துபவர். இம்மூன்று சாராரில் கேள்வி கேட்பவர் வேலைதான் சுளுவானது. மற்ற இரண்டு வேலைகளும் தொல்லை மிகுந்தவை. ஆதலால் சுளுவான வேலையையே நான் இன்று எடுத்துக் கொள்ளப் போகிறேன்.

kuthoosi gurusamyசரித்திரம், பூகோளம், கணக்கு, இங்கிலீஷ், தமிழ், பொருளாதாரம், விஞ்ஞானம்-இவை போன்ற பல பகுதிகள் இருக்கின்றன அல்லவா? நான் இன்று கேட்கும் கேள்விகள் எந்த ஒரு குறிப்பிட்ட பாடத்தையும் சேர்ந்தவையல்ல, கீழ் வகுப்புகளில் “சோஷ்யல் ஷ்டடீஸ்” என்று புதிதாக ஒரு பாடம் வைத்திருக்கிறார்களே! அதைப் போல் இதுவும் ஒரு “கதம்பம்!”

இந்தக் கதம்ப எக்ஸாமினேஷனுக்கு யாரும் பதில் எழுதி அனுப்ப வேண்டாம்! திருத்துகின்ற வேலை தொல்லையானது என்று சொன்னேன் அல்லவா? அதனால்!

விடை தெரிந்தவர்கள் தங்களுக்குள்ளாகவே சொல்லிக் கொண்டாலே போதும்! நன்றாக எழுதாதவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விடைத்தாளை விரட்டிக் கொண்டு போவதுபோல் இந்த வெய்யில் காலத்தில் நீங்கள் யாரும் உங்கள் விடைத்தாளை விரட்டிக் கொண்டு அலையாமலிருப்பதற்காகவே விடை எழுதும் வேலை வேண்டாம் என்ற 144 தடையுத்தரவு போட்டிருக்கிறேன்! விடை தெரியாத கேள்விகளைப் பற்றி யோசித்து மண்டையை உடைத்து கொள்ளாதீர்கள்! உங்களை மேல் வகுப்புக்கு அனுப்பவோ, அல்லது பள்ளியைவிட்டு வெளியேற்றவோ (அதாவது படிப்பு முடிந்துபோய்) அல்லவே, இந்தக் கேள்விகள்! வெறும் பொழுதுபோக்குக் கேள்விகள் தானே!

கதம்ப எக்ஸாமினேஷன்

நேரம் இஷ்டம்போல்!
மார்க் - கிடையாது!

1. சென்னை மேல்சபைக்கு அசெம்பிளி மெம்பர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்க்கண்டவர்கள்-0-சுன்னம் முதல் வோட்டு வாங்கி யிருப்பதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கிக் கூறுக:-
(a) அப்துல் ஹமீத்கான், (b) அப்துல் மஜீத், (c) மீனாம்பாள் சிவராஜ், (d)கோவிந்தசாமி படையாட்சி, (e) நாகசுந்தரம் அய்யர், (f) டாக்டர் நமசிவாயம், (g) கே. சி. சுப்பரமணியஞ் செட்டியார், (h) தாண்டவஞ் செட்டியார்.

2. ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் மந்திரி சபை அற்பாயுளில் மாண்டு போகும் என்று பூந்தி ஜோசியர் உட்பட எல்லோருமே கூறுகிறார்களே, அது ஏன்?

3. அரிசியைப் பொங்கிச் சாப்பிடுவதுதான் நல்லது என்றும், அரிசியிலுள்ள தவிட்டில்தான் பி - வைட்டமின் இருக்கிறதென்றும், உணவு ஆராய்ச்சி நிபுணர்கள் கரடியாகக் கதறினாலும், தும்பப் பூப் போன்ற அரிசியைச் சமைத்து நன்றாகச் கஞ்சியை வடித்துவிட்டுச் சலவை வேட்டியை மெல்வதுபோல் மென்று தின்கின்ற பிரகஸ்பதிகளைப் பற்றி ஒரு பக்கத்துக்கு மேற்படாமல் எழுதுக. (வசைச் சொற்களை உபயோகப்படுத்தக் கூடாது.)

4. பெரும் பெருந்தலைவர்களை யெல்லாம் பேட்டி கண்டு, “உயிரை வாங்குகின்ற” சென்னை பத்திரிகை நிருபர்கள் எல்லோரும், கடந்த 7-8 நாட்களாக ஆச்சாரியாரை மட்டும் நெருங்காமல், கேள்விகளைத் தாளில் எழுதியனுப்பி விட்டு, அவர் வீட்டு வெளிவாசலில் “இதுகள்” மாதிரிக் காத்துக் கிடப்பதன் காரணமென்ன?

5. மரமந்திரி முன்ஷியார் வனமகோத்சவம் நடத்தி, நாடெங்கும் லட்சக்கணக்கான செடிகளை (துளசிச்செடி உட்பட) நட்டபிறகு அவைகளின் மீது மேகங்கள் தங்கி மழை பொழிந்திருப்பதன் அளவை மாகாண வாரியாகக் கணக்கிட்டு எழுதுக.

6. பிராமணர்கள் வருண ஜபம் நடத்தியிருக்காவிட்டால் தமிழ் நாட்டில் இவ்வளவு பெரும் மழை கொட்டியிருக்காது என்பதை அடிப்படையாக வைத்து, பிராமணர் உடலுக்கும் கருமேகத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைப் பற்றி ஒரு பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதுக.

7. அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு (என்னைப் போன்ற) சாதாரணங்களாயிருந்த காங்கிரஸ்காரர்களில் பலர், இன்று லட்சாதிபதிகளாயிருப்பதாகச் சொல்லப்படுகிறதே! அப்பேர்ப்பட்ட “மந்திரவாதிகளில்” நூறு முக்கிய பெயர்களைக் குறிப்பிடுக. (தெரிந்திருந்தால் தியாக சொத்து விவரமும் குறிப்பிடலாம்.)

8. அக்கிரகாரவாசிகள் கம்பர் விழாக் கொண்டாடுகிறார்களே தவிர வள்ளுவர் விழாக் கொண்டாடுவதில்லையே! ஏன்?

9. திராவிட விவசாய சங்கம் ஏற்படுவது பற்றி தஞ்சை மிராசுதார்களில் பலருக்கு 103 டிகிரி காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்களே! ஏன்?

10. கருஞ்சட்டைகளையும், செஞ்சட்டைகளையும் ஒழித்துக் கட்டுவதற்காக அக்கிரகாரம் வகுத்துக் கொண்டிருக்கின்ற இரகசியத் திட்டங்களில் மூன்றைப் பற்றிக் கூறுக.

11. பக்தவத்சலனார் “பாரததேவி” ஆசிரியராக வந்திருப்பதற்கும், காமராசர் ஆச்சாரியார் பின்புறமாகக் குழிதோண்டப் போகிறார் என்பதற்கும், உள்ள ஒற்றுமை- வேற்றுமைகளைப் பற்றி சுருக்கி எழுதுக.

12. “அக்கிரகாரத்துக்குப் பஞ்சாங்கம் இருப்பது மாதிரி, காங்கிரஸ்காரருக்குப் புது அரசியல் சட்டம் இருக்கிறது”, - இதை விளக்கி இரண்டு பக்கத்தில் ஒரு கட்டுரை வரைக.

13. கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெயராலும், சுயேச்சையின் பெயராலும் நின்றவர்களில் ஆளுக்கு 40, 000 ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரையில் செலவழித்து வெற்றி பெற்றவர்களின் பெயர்களில் பத்தும், தோல்வியுற்றவர்களின் பெயர்களில் பத்தும் கூறுக.

14. உலகம் உருண்டையல்ல; தட்டைதான் என்பதையும், கிரகணம் ஏற்படுவதற்குப் பாம்புதான் காரணம் என்பதையும், செத்துப் போனவர்கள் கூட பச்சைக் காய்கறிகளைத் தின்கிறார்கள் என்பதையும்! சமஸ்கிருதம் ஒன்றுதான் ஹிந்து கடவுள்களுக்குத் தெரியும் என்பதையும், தக்க உதாரணங்களுடன் விளக்கிக் காட்டுக,

15. ளுhயமநளயீநயசந; ளுhநடடல; ஊயசடலடந; சுரளமin கூடி றுhடிஅ யஅடிபே வாநளந, னனை டுடிசன துநளரள றசவைந டிn hளை வடிபேரந?

16. மதுரை - போடிநாய்க்கனூர் ரெயில்வேயைக் கோபால்சாமி அய்யங்கார் இத்தனை ஆண்டுகளாகப் புதுப்பிக்காமலிருந்து வந்ததற்கும், டி. வி. சுந்தரமய்யங்கார் பஸ் சர்வீசுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி சூசனையாகக் குறிப்பிட்டுக் காட்டுக.

17. “புல் ஏந்திய கையில் இனி வாள் ஏந்துவோம்!” இது எப்போது, எதற்காகக் கூறப்பட்டது? இப்படிக் கூறியவர் யார்? அவர் இன்று உயிருடனிருக்கிறாரா?

18. திராவிடர் கழக ஒழிப்பு மகாநாடு கூட்டியவர்களில் யார் யாருக்கு லாம்? யார் யார் கட்டை விரலை வாயில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? (“லாபம்” என்பதில் வட நாட்டானிடமிருந்து பெற்ற கூலியையும் சேர்த்துக் கொள்ளலாம்.)

19. கீழ்க்கண்ட நாடுகளில் எந்த நாட்டில் பூதேவர்கள் என்ற பிராமணர் இருக்கிறார்கள்? -
(a) ஃப்ரான்ஸ், (b) போலந்து, (c) அபிசீனியா, (d) ஆஸ்ட்ரேலியா, (e) இந்தியா, (f) அமெரிக்கா, (g) ஜப்பான், (h) சீனா, (i) பர்மா, (j) ராஷ்யா.
(வயிற்றுப் பிழைப்புக்காகப் போயிருக்கின்ற பிராமணர்களைப் பற்றியதல்ல, இந்தக் கேள்வி,)

20. காந்தியாரைச் சுட்டுக்கொன்றவன் (a) பாகிஸ்தான் முஸ்லீம், (b) குடிவெறியன், (c) மராத்திப் பார்ப்பான், (d) இங்கிலீஷ்காரன், (e) ஆதிதிராவிடன் - இவர்களில் யார்?

21. ஒரு எம். எல். ஏ. க்கு மாதம் 150 ரூபாய் வீதம் 54 மாதத்துக்கும் நாள் ஒன்றுக்கு ரூ. 7-8-0 வீதம் 276 நாட்களுக்கும், வருமானம் கிடைக்கிறது, 5 ஏக்கர் நஞ்சை நிலத்தில் ஏக்கர் ஒன்றுக்கு வருஷம் ஒன்றுக்கு 240 ரூபாய் வீதம், நாலரை வருஷத்துக்கு நிகர வருமானம் கிடைக்கிறது. இவைகளைத் தவிர, மந்திரிகளிடம் சிபார்சு செய்ததன் மூலமும், அதிகாரிகளை மிரட்டியதன் மூலமும் மாதம் ஒன்றுக்கு சராசரி 400 ரூபாய் வீதம் 4 வருஷம் 8 மாதத்துக்குக் கிடைக்கிறது. மேற்கண்டவைகளுக்காகப் பிரயாணஞ் செய்ததில் மொத்தச் செலவு 175 ரூபாயும், பிரயாணத்தின் மூலம் வருமானம் 1, 463-8-0-ம் கிடைக்கிறது. அப்படியானால் இந்த எம். எல். ஏ. க்கு இறுதியில் கிடைத்த நிகர வருமானம் எவ்வளவு?

(குறிப்பு:- இந்த எம். எல். ஏ. க்கு பூர்வீக சொத்தோ, உழைப்பினால் வந்த வருமானமோ ஆதியின் ஒன்றுமில்லை என்று வைத்துக்கொண்டு இந்தக் கணக்கைச் செய்ய வேண்டும்.)

- குத்தூசி குருசாமி (09-04-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It