இந்திய ஒன்றிய அரசின் நரேந்திர மோடி அமைச்சரவையில் மிக முக்கியமான அமைச்சர்களில் ஒருவராக இருப்பவர் நிதின் கட்கரி.
சமீபத்தில் ஒரு விழாவில் பேசும் போது காங்கிரஸ் கட்சி பலம் பெற வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் கருத்துத் தெரிவித்து இருந்தார்.
அதற்கு அவர் சொன்ன காரணம்தான், ஆடு நனைகிறதே என்று ஓநாய் கதறி அழுத கதையாக இருந்தது.
ஏனெனில் காங்கிரஸ் பலம் மிக்க எதிர்க்கட்சியாக வரவில்லை எனில் மாநிலக் கட்சிகள் பலம் பெற்று விடுமாம். அச்சப்படுகிறார் அவர்.
மாநிலக் கட்சிகள் பலமாக இருக்கும் மாநிலங்களில் தேசியக்கட்சிகளின் வளர்ச்சியும், வலிமையும் குறைவாகத்தான் இருக்கும். இதற்குப் பல்வேறுபட்ட காரணங்கள் உண்டு.
குறிப்பாக மாநில சுயாட்சியை வலியுறுத்துகின்ற தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் மாநிலக் கட்சியாக வலிமை பெற்று இருப்பது நிதின்கட்கரி போன்றவர்களுக்குப் பயத்தையும், கலக்கத்தையும் உருவாக்கி இருக்கிறது.
பல்வேறுபட்ட இனம் ,மொழி, கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இவர்கள் பேசும் இந்தி (சமஸ்கிருதம்) ஒரே மொழி , ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஆர்.எஸ்.எஸ் - இன் முகமூடி பா.ஜ.கவின் கொள்கையாக முன்னெடுப்பதை தி.மு.கழகம் கடுமையாக எதிர்க்கிறது.
மாநிலக்கட்சிகள் பலமாக இருக்கும் மாநிலங்களில் இது போன்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதனால் மாநிலக் கட்சிகள் வலிமை பெற்று விடக் கூடாது என்கிறார் நிதின் கட்கரி. இது அவரிடம் இருக்கும் அச்சத்தைக் காட்டுகிறது.
இந்திய ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சி தேய்ந்து வருகிறது என்பது உண்மைதான். மாநிலங்களின் கட்சிகள் பலம் பெற்று விட்டால் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற திமுகழகத்தின் கொள்கை முழக்கம் நடைமுறையில் உண்மையாகிவிடும் என்ற கலக்கம் நிதின் கட்கரியின் பேச்சில் தெரிகிறது.
அது மட்டுமன்று, கூட்டாட்சி முறைக்கு எதிராக மாநிலக் கட்சிகளின் மீதான பா.ஜ.கவின் வன்மத்தைக் கொட்டி இருக்கிறார் நிதின் கட்கரி.
ஏதோ காங்கிரஸ் கட்சியின் மீது அதிக அக்கறையுள்ளவர் போல அவர் காட்டிக் கொள்வது முதலைக் கண்ணீராகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் எனக் கருதப்படும் ராகுல் காந்தி மாநிலக் கட்சிகளைக் கூட்டணிக்குள் இணைத்து கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலு சேர்த்து விடுவாரோ என்ற அச்சமும் தெரிகிறது. ஏன் இந்த அச்சம்?
காரணம் “திராவிட மாடல் - ஆட்சி”,
“திராவிட மாடல் -அரசியல்”,
“திராவிட மாடல் - மு.க.ஸ்டாலின்”.
- சிற்பி செல்வராஜ்