பெரியார் திராவிடர் கழகம் வெளியிடவிருக்கும் 27 குடிஅரசு தொகுதிகளடங்கிய 100 தொகுப்பை சேலம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வாங்க முடிவு செய்துள்ளது. சேலம் மாவட்டக் கழக சார்பில் செயலாளர் சக்திவேல் மேட்டூர் பெரியாரியல் பயிற்சி முகாமில் இதை அறிவித்தார்.

சேலம் மாவட்ட பெரியார் திராவிடர் கழக சார்பில் பயிற்சி முகாம் ஜூன் 7, 8 தேதிகளில் மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் சிறப்புடன் நடைபெற்றது. முகாம் தொடங்கும் நாளில் கழகத் தோழரின் மரணம் ஒன்று நிகழ்ந்துவிட்டது. மேட்டூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் படிப்பகத்தை காலை முதல் இரவு வரை முழு நேரமாக இருந்து கவனித்து வந்த கழகத் தோழர் செல்வம், உடல்நலமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைகள் பலனின்றி முடிவெய்திவிட்டார்.

கழகத் தோழர்கள் மேட்டூரிலுள்ள தோழர் செல்வம் இல்லத்துக்கு திரண்டு வந்து, இறுதி வணக்கம் செலுத்தினர். பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சிற்பி ராசன் மற்றும் கழகத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர். பகல் 12 மணியளவில் எவ்வித மூடச் சடங்குகளும் இன்றி உடல் அடக்கம் நடைபெற்றது. கழகத் தோழர்கள் ஏராளமாக இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி - கருநாடக அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்காக கருநாடக மாநில நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்ததால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்த போது அவர் கருநாடகத்தில் கொல்லேகால் நீதிமன்றத்தில் இருக்க வேண்டியதாயிற்று. ஏழாம் தேதி இரவுதான் அவர் மேட்டூர் வந்து சேர்த்தார்.

பயிற்சி வகுப்பின் காலை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. இந்தப் பயிற்சி, ஏற்கனவே பயிற்சிப் பெற்ற தோழர்களைத் தவிர்த்து, புதிதாக கழகத்தில் சேர்ந்த தோழர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்ட பயிற்சியாகும்.

முதலில் சென்னையைச் சேர்ந்த மனித உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தென்பாண்டியன் - ‘பாகுபாடு’ என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். அரசியல் சட்டத்தின் 14, 19, 21வது பிரிவுகள் வழங்கும் சமத்துவம், பேச்சு, மாண்பு தொடர்பான உரிமைகளையும், இந்த உரிமைகளோடு 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி ஆரம்பக் கல்வியும் அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளதையும், அய்.நா.வின் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் 2வது பிரிவு இனம், சாதி, பால் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளதையும் விரிவாக எடுத்துக்காட்டி, சட்டங்கள் வழங்கியுள்ள உரிமைகள், சமூகத்தில் பாதுகாக்கப்படாமல், பாகுபாடுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதை பல்வேறு உதாரணங்களுடன் எடுத்துக்காட்டி விளக்கமளித்தார்.

சட்டமன்றம், அரசியல் கட்சிகள், மக்கள் பிரச்சினைகளிலிருந்து விலகி நிற்பதையும், இளைஞர்களின் எதிர்காலத்துக்கு எந்த வேலைத் திட்டமும் உறுதி செய்யப்படாத, நாட்டின் அவலத்தையும் சுட்டிக் காட்டிப் பேசினார். பாகுபாடுகளை ஒழித்து சமத்துவத்துக்காக, பெரியார் போராடியதை விளக்கிக் கூறினார். பயிற்சியில் பங்கேற்பாளர்களின் மனத் தடைகளை அகற்றும் விளையாட்டு முறைகளைப் பயன்படுத்தி, பயிற்சியாளர் பங்கேற்பை இலகுவாக்கினார். உணர்ச்சிகரமான முழக்கங்கோடு தனது உரையை நிறைவு செய்தார். தேனீர் இடைவேளைக்குப் பிறகு மாலை 5.30 மணியளவில் சென்னை வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், உலக மயம் பற்றி, விரிவான விளக்கங்களை பயிற்சியாளர்களின் பங்கேற்போடு நடத்தினார்.

உலகமயமாக்கல் நிகழ்ந்துவரும், ஒரு சமூகத்தின் மீது நின்று கொண்டு நாம் பாகுபாடுகளுக்கு எதிராக சமத்துவம் கோரும் உரிமைகளுக்குப் போராட வேண்டியிருக்கிறது என்பதையும், மக்கள் நலன் காக்கும் கடமையை சட்டப்படி ஏற்றுக் கொண்டுள்ள அரசு, மக்கள் நலன் சார்ந்த உரிமைகளைக் காப்பாற்றும் கடமைகளை கட்டாயமாக செயல்படுத்த வேண்டியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, இந்தக் கடமைகளை நிறைவேற்றும் அமைப்பு முறைகளை வரையறுத்து, வழி நடத்துவதற்கே அரசியல் சட்டம் வகுக்கப்பட்டது என்பதை எடுத்துக் காட்டினார். ஆனால் உலக மயம் இதற்கு எதிர்த்திசையில் செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.

உலக மயம் என்ற கொள்கை மக்கள் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதில்லை. அதில் வர்த்தகக் கண்ணோட்டமே மேலோங்கி நிற்கிறது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நகர்மயமாக்கப்படும் போக்கு, மிக விரைவாக நிகழ்ந்து கொண்டிருப்பது, தமிழ்நாட்டில்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று குறிப்பிட்ட அவர்,1944 ஆம் ஆண்டிலிருந்தே உலகமய கொள்கைகளுக்கான விதை இந்தியாவில் போடப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டார். உலகமயமாக்கல் படிப்படியாக அமுலாக்கப்பட்ட வரலாறுகளையும், கல்வி, விவசாயம், மருத்துவம் மற்றும் சட்டத் துறையில், இந்தக் கொள்கை உருவாக்கிய பாதிப்புகளையும் விரிவாக எடுத்துரைத்தார். இரவு 8 மணி வரை அவரது பயிற்சி வகுப்பு நீடித்தது. பயிற்சியாளர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி விவாதித்தனர்.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் பயிற்சி காலை 10 மணியளவில் தோழர் சிற்பிராசனின் ‘மந்திரமா தந்திரமா’ பயிற்சிகளோடு தொடங்கியது. பல்வேறு மூடநம்பிக்கைகளை விளக்கி சிற்பிராசன் பயிற்சியளித்தார். தேனீர் இடைவேளைக்குப் பிறகு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கடவுள் எனும் தலைப்பில் பயிற்சியளித்தார். அதனைத் தொடர்ந்து, குடந்தையில் கழகம் நடத்திய நடிகவேள் நூற்றாண்டு விழாவில் முரசொலி முகிலன் குழுவினர் நிகழ்த்திய பகுத்தறிவு கலை நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 3 மணிக்கு வகுப்புகள் தொடங்கின.

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் பெரியாரியலை மேலும் வளர்த்தெடுத்து, மக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய தேவை; கழகத்தை மேலும் வலிமையாக்க பின்பற்ற வேண்டிய செயல் உத்திகள் போன்ற பிரச்சினைகள் குறித்து பேசினார். விவாதங்களில் தோழர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘குடிஅரசு’ தொகுப்புகளை மக்களிடம் கொண்டு செல்லுவதில் கழகத்தின் செயல்பாடுகள்; பயிற்சிப் பெற்ற தோழர்கள், எதிர்காலத்தில், இயக்கத்துக்கும், பெரியாரியலுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி விளக்கிப் பேசினார். பயிற்சிப் பெற்ற தோழர்கள், தாங்கள் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கை பற்றிய உறுதியறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“சாதி மறுப்பு திருமணம் தான் செய்வேன்; குறைந்தது 5 புதிய தோழர்களை ஓராண்டில் இயக்கத்துக்கு கொண்டு வருவேன்; இனி நண்பர்களிடம் உரையாடும்போது, பெரியார் கொள்கைகளைப் பேசுவேன்; பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களை குடிக்க மாட்டேன். இனி கிரிக்கெட் விளையாட மாட்டேன்; பறையடிக்கும் பயிற்சி பெறுவேன்; வீதி நாடகக் குழுவை உருவாக்குவேன்; கழக ஏட்டுக்கு புதிய சந்தாக்களை சேர்ப்பேன்” என்று தோழர்கள் பலரும் தங்களின் உறுதி ஏற்பை அறிவித்தனர்.

தனது பெண்ணை புரட்சிகரப் பெண்ணாக வளர்ப்பேன் என்று முகாமில் பங்கேற்ற ஒரு தோழியர் அறிவித்தார். சேலம் மாவட்டம் கழக சார்பில்,. குடிஅரசு தொகுதிகளின் 100 தொகுப்பை வாங்குவதாக மாவட்ட செயலாளர் சக்திவேல், பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். தனது சொந்தப் பொறுப்பில் 5 தொகுப்புகளை வாங்கி, ஒரு தொகுப்பை (27 தொகுதி) தனக்கும், எஞ்சிய 4 தொகுப்பை கழகத் தலைமை பரிந்துரைக்கும் நிறுவனங்களுக்கும் நன்கொடையாக வழங்குவதாக, சிற்பிராசன் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். புதிய பயிற்சியாளர்கள் அனைவருக்கும் கழகம் வெளியிட்டுள்ள பெரியார் நூல்களை சிற்பி ராசன் அன்பளிப்பாக வழங்கினார்.

கழகத்தை நோக்கி புதிதாக வந்துள்ள 20, 25 வயதுள்ள இளைஞர்கள் 60 பேர் பங்கேற்றனர். புதிய இளைஞர்களைக் கருத்தில் கொண்டு, பெரியாரியலின் அடிப்படையான கொள்கைகள், எளிமையாக எடுத்து வைக்கப்பட்டன. தோழர் சிற்பிராசன் இரு நாட்களும், கழகத் தோழர்களோடு ஒன்றாக இருந்து, மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகளை செய்யும் பயிற்சிமுறைகளை விளக்கிக் காட்டினார்.

மாவட்டத் தலைவர் மார்ட்டின், செயலாளர் சக்திவேலு, காவலாண்டியூர் விஜயன், கோகுல கிருட்டிணன் (இளம்பிள்ளை), ஆசைத்தம்பி (மேட்டூர்), கோவிந்தராசு (பொருளாளர்) உள்ளிட்ட தோழர்கள் முகாமுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்தப் பயிற்சி - தங்களுக்கு புதிய கொள்கை வெளிச்சத்தையும், சமூகப் பார்வையையும் தந்துள்ளதாகக் கூறிய இளைஞர்கள், ஊர்த் திரும்பியவுடன், பெரியாரியலை - நண்பர்களிடமும், குடும்பத்தினரிடம் பரப்பவும், பெரியார் திராவிடர் கழக அமைப்பை உருவாக்கவும் தீவிரமாக செயல்படுவோம் என்று கூறி, விடை பெற்றனர். 8 மணியளவில் மாவட்ட செயலாளர் சக்திவேல் நன்றி கூற, பயிற்சி நிறைவடைந்தது.

Pin It