மனிதன் மாட்டைத் தொடலாம்! அடிக்கலாம்! கொல்லலாம்! தின்னலாம்! கேட்பாரில்லை! ஆனால் கல்மாட்டைத் தொட்டால் மட்டும் குற்றம்!
“என்னைத் தீண்டாதே! நான் எலெக்ட்ரிசிட்டி! உன் மீது ‘ஷாக்’ அடிக்கும்!” என்கிற ஜாதியார் இன்னமுந்தான் இருக்கிறார்கள்! ஆனால் இவர்களுக்குத் தனி ரயில் வண்டியோ, பஸ்ஸோ, ட்ராமோ, கிடையாது. பீஷ்வாக்கள் ஆட்சியாயிருந்தால், “பிராமணர்களின் தனி வண்டி,” என்று ஒரு வண்டியே இருக்கும்!
தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதாக புது அரசியல் சட்டம் தம்பட்டமடிக்கிறது. அது ஒரு குற்றம் என்று கூடக் கூறுகிறது. ஜாதி ஒழிந்து விட்டதாகக் கூறி, வகுப்புவாரி உரிமையைக் கூடக் குழிதோண்டிப் புதைத்து விட்டார்கள்.
இந்த மகாண சர்க்காரோ, கோவில்களையெல்லாம் பொது மக்களுக்குத் திறந்து விட்டதாகக் கூறி, சட்டமும் செய்து, படமும் பிடித்து பத்திரிகையிலும் போட்டு விட்டார்கள்!
“கோவில் மூலஸ்தானத்துக்குள் நுழைந்து பார்! கோவில் மடப் பள்ளிக்குள் நுழைந்து பார்! சட்டம் குறுக்கே நிற்காது!” என்று நான் ஊர் ஊராகச் சொல்லிக்கொண்டுதான் வருகிறேன்.
கோவில் நுழைவு உரிமையின் லட்சணத்தைச் சோதனை செய்யவேண்டுமென்பது என் ஆசை. யாரோ ஒரு நண்பர் வேறொரு மாதிரி சோதனை செய்திருக்கிறார். அவர் என்னைப் போன்ற சாதாரணமானவரல்ல! ஒரு விஸ்வகர்ம பிராமணர்! ஆமாம், சாட்சாத்!
1. தேவாங்க பிராமணர்
2. சவுராஷ்டிர பிராமணர்
- என்று இன்னும் எத்தனையோ பேர் தங்களை பிராமணர்களாக்கிக் கொண்டிருக்கிறார்களல்லவா?
விஷயம் இதுதான். ஆடி மாதம் 23-ந் தேதியன்று நெ. பெரியசாமி பத்தர் என்பவர் கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோயிலுக்குள் சென்றாராம். அங்கிருந்த நந்தியை (கல் மாட்டை)த் தொட்டாராம்! எப்படித் தொடலாம்?
அக்கிரகாரத்துப் பிறவிகள் உடனே அவர்மேல் விழுந்து பிடுங்கினவாம்! அடியும் கூட உண்டாம்! சம்ரோட்சணை செய்வதற்காக என்று ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாதாம்!
கம்யூனல் ஜீ. ஒ. கிளர்ச்சிக்கு ஆதரவாக, யாரேனும் இம்மாதிரிக் கற்பனை செய்து எழுதியிருக்கிறார்களோ என்று சிலர் சந்தேகிக்கலாம்!
கீழக் கடலங்குடித் தெருவிலுள்ள அவரே கடிதம் எழுதியிருக்கிறார், பிள்ளையார் சூழியில் துவக்கி! ஒருக்கால் அந்தக் கடிதமும் எப்படி யிருக்குமோ என்று நினைக்கலாமே!
இதோ, இன்னொரு ருசு! ரசீது நம்பர் 2984. தேதி 7-8-50.
“பெரிய நந்தியைத் தொட்டதினால் சம்ரோஷணை செய்வதற்காக செலவிற்காக மேற்படியார் மூலம் வரவு”
- என்றும் காரணம் கூறப்பட்டிருக்கிறது. அக்கவுண்டெண்ட் இனிஷ்யலும், எக்ஸ்க்ணட்டிவ் ஆஃபீசர் (ஆர். கோவிந்தராசு) கையெழுத்தும் இருக்கின்றன.
இன்னும் என்னய்யா வேண்டும்?
“சற்றே விலகியிரும் பிள்ளாய்,” என்று நந்தன் அன்று கூறினானாம்! நந்தி விலகி நின்றதாம்! இன்று அதே நந்திக்காக ஒருவர், அதுவும் சாட்சாத் விஸ்வகர்ம பிராமணர் ஒரு ரூபாய் அபராதம் செலுத்துகிறார்!
நமக்கும் ஒரு ஆல்லாடியோ, ஒரு வி. வி. எஸ். ஸோ கிடைத்தால் இது பற்றி ஒரு வழக்குத் தொடர்ந்து பார்க்கலாம்! நாம் தான் நாதியற்ற இனமாச்சே துரோகிகளும், சமய சஞ்சீவிகளும், சுய விளம்பரக்காரர்களும், டம்பாச்சாரிகளும் மலிந்த இனமாச்சே!
அபராதம் மட்டுமா? அக்கிரகாரத்தின் மலத்தை வாரித் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளச் சொன்னாலும் (இப்போதும் நம் இனந்தானே மலம் எடுக்கிறது? அவர்கள் எங்கே எடுக்கிறார்கள்?) நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டியதுதானே?
நானா யிருந்தால், “அபராதம் கொடுக்க முடியாது; உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள்” என்று சொல்லியிருப்பேன்!
மானமுள்ள திராவிடன் கோவிலுக்குள் செல்ல மாட்டான். அப்படிச் சென்றால் எதையும் தொடவேண்டும். எங்கேயும் செல்ல வேண்டும். இந்த வம்புக்காகத் தான் அந்த வம்பர் குகைக்குள் நான் நுழைவதேயில்லை! என் தோழர்களும் நுழைவதில்லை!
- குத்தூசி குருசாமி (18-8-50)
நன்றி: வாலாசா வல்லவன்