சென்னை சட்டசபைக்குத் தேர்தல் பிரசாரங்களும் ஓட்டுச் சேகரிப்பும் தமிழ் நாட்டில் நடைபெறுகின்றதானாலும் கிளர்ச்சி உண்டாக்கத்தக்க அளவுக்கு அவ்வளவு மும்முரமாய் இல்லை என்பது யாவரும் அறிந்த விஷயமாகும். இதற்குக் காரணம் என்னவென்றால் பொது ஜனங்களுக்கு இப்போதைய தேர்தலில் சிறிதும் உற்சாகம் இல்லாதிருப்பதேயாகும்.
ஏனெனில் தேர்தல் கட்சிகளின் தத்துவமும் தேர்தலில் நிற்கும் அபேட்சகர்களும் பெரும்பாலும் தங்கள் தங்கள் சுயநலத்துக்கும் பெருமைக்கும் நிற்கின்றார்களே ஒழிய மற்றபடி அவற்றுள் உண்மையும், நாணயமும் பொது நல நோக் கமும் சிறிதும் இல்லை என்பதாக மக்கள் கருத நேரிட்டு விட்டதேயாகும்.
மற்றும் இரண்டாவதாக தேர்தலில் நிற்பவர்களில் 100க்கு 75 பேருக்கு மேலாகவே தங்கள் தங்கள் சாரும் கட்சித் தலைவர்களின் நன்மைக்காக அவர்களால் நிறுத்தப்படுபவர்கள் எனப்படுவது.
மூன்றாவதாக, தேர்தலில் பிரசாரம் செய்யும் கூலிப் பிரசாரகர்களும் பெரிதும் தங்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு சுயநலம் காரணமாக முக்கியமாய் இன்னின்னாருக்கு ஆகக்கூடாது என்று பிரசாரம் செய்யப்படு கின்றார்களே தவிர இன்னாருக்கு ஆக வேண்டும் என்கின்ற பிரசாரம் மிக்க குறைவாயிருப்பதால் பொது ஜனங்களுக்கு அப்படிப்பட்ட பிரசாரத்தி னிடம் அபிமானமில்லாமலிருப்பதுடன் அப்பிரசாரங்களையும் வெறுப்பது.
நான்காவதாக, தேர்தலில் நிற்கும் கனவான்கள் பெரும்பாலரும் முன்பின் பேர் கேட்டில்லாதவர்களாகவும் வெறும் பணக் கொழுப்பாலும் தாங்கள் உதவி பெற்ற கட்சியாருக்கு அடிமையாய் இருப்பதற்கே நிற்பவர் களாயுமிருக்கிறார்களே தவிர சொந்த செல்வாக்கும் பொது நல உணர்ச்சியும் சிறிதுமற்றவர்களாயிருக்கிறார்கள் என்று பொது ஜனங்கள் கருத நேர்ந்தது.
ஐந்தாவதாக, தேர்தல்களில் இதுவரை இருந்து வந்த பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி அடியோடு நழுவப்பட்டு இரு கட்சியாரும் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகி இரு கட்சியாரும் பார்ப்பனர்களை நிறுத்தி அப்பார்ப்பனர்களுக்கு இரண்டு கட்சியாரும் பிரசாரம் செய்து ஓட்டு சேகரிக்க முயற்சித்து வருவதாகத் தெரிவது.
ஆறாவதாக, நமது நாட்டு மக்களின் கவனம், பகுதி உப்புச் சத்தியாக் கிரகத்திலும், பகுதி சுயமரியாதை கிளர்ச்சியிலும் இழுக்கப்பட்டு விட்டதால் இரண்டு காரணங்களாலும் பொது ஜனங்களால் சட்டசபை கௌரவம் அலட்சியிக்கப்பட்டிருப்பது. ஆகவே இத்தியாதி காரணங்களால் இவ் வருஷ சட்டசபைத் தேர்தல்களில் அதிகமான கிளர்ச்சியோ உற்சாகமோ காணப்படாமலிருப்பது ஓர் அதிசயமல்ல.
இவை ஒரு புறமிருக்க இரு கட்சியாருடைய சொந்த நாணயப் பொறுப்பு எப்படி இருந்தாலும் அவர்களின் உள் எண்ணம் எப்படி இருந்தாலும் நமது சுயமரியாதைக் கொள்கைகளைப் பொறுத்தவரை ஒன்றுக் கொன்று மேல் கீழ் என்று சொல்வதற்கில்லையானாலும் இரு கட்சியாராலும் கிடைக்கக்கூடிய பயனையடையத் தவறிவிடக் கூடாது என்பதே நமதபிப் பிராயமாகும். பொது நலத்தை உத்தேசித்து இந்தப்படி எதிர்பார்ப்பதில் யாதொரு குற்றமும் இல்லை என்றே சொல்லுவோம்.
ஏனெனில் இந்த சர்க்காரைப் பற்றி யார் எவ்வளவு குற்றம் சொன்னாலும் அவர்களுடைய எண்ணத்திலும், நடவடிக்கைகளிலும் எவ்வளவு நாணயக் குறைவும், முரண் பாடுகளும் இருந்தாலும் நமது இயக்கக் கொள்கைகளுக்கு அவர்களால் கிடைக்கக் கூடிய அனுகூலத்தை அடைய நாம் எதிர்பார்க்கும் போது இன்றைய தேர்தலில் போட்டிபோடும் இரு கட்சியாராலும் இயக்கத்திற்குக் கிடைக்கும் பயனை அலக்ஷியம் செய்ய வேண்டியதில்லை என்றே யாருக்கும் தோன்றும்.
பொதுவாக நோக்கும் போது இரு கக்ஷியிலும் பார்ப்பனர்களை விட மோசமானவர்கள் அல்லாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். சுயமரியாதைக் கொள்கைகளை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
என்றாலும் விரோதிகளும் இருக்கின்றார்கள் என்பதையும், விரோதிகளின் ஆதிக்கம் இரு கக்ஷியிலும் சிறிது இருக்கின்றது என்பதையும் நாம் மறைக்க முயலவில்லை. ஆனாலும் இவ்விரு கக்ஷியாரிடமும் நாம் இப் போது எதிர்ப்பார்ப்பதெல்லாம்.
1. உத்தியோகங்களிலும், பள்ளிக் கூடங்களிலும் படிப்பு கற்பிக்கப்படுவதிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது.
2. ஜாதி வித்தியாசமும் தீண்டாமையும் அடியோடு ஒழிய வேண்டு மென்பது.
3. பெண்களுக்கு ஆண்களைப் போலவே எல்லாவித சுதந்திரமும் இருவருக்கும் கலியாண ரத்தும் வேண்டு மென்பது.
4. கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் சிலவு செய்யப்படும் பணமும், நேரமும், முயற்சியும் மக்கள் நலத்திற்கு அதாவது தொழிலுக்கும், கல்விக்கும், அறிவு வளர்ச்சிக்கும் திருப்பப்பட்டு அந்தப்படி உபயோகப் படுத்தப்பட வேண்டுமென்பது.
5. பள்ளிக் கூடங்களில் மத சம்மந்தமான விஷயங்களைப் படிப்பிக்கவோ அவற்றின்மூலம் பொதுக் கல்வி கற்பிக்கவோ மத சம்மதமான உணர்ச்சிகள் பள்ளிக் கூடங்களில் காட்டப் படவோ கூடாது என்ப தும், பொதுப் பணத்தில் எல்லோருக்கும் ஒரு அளவிற்காவது சம மான கல்வி கற்பிக்க வேண்டும் என்பது.
மற்றும் பல விஷயங்கள் இருந்தாலும் இவைகளையே முக்கியமாய் இப்போதைய சட்டசபை மூலமும், அதனால் ஏற்பட்டுள்ள மந்திரிகள் மூலமும் எதிர்பார்க்கின்றோம்.
இவைகளில் எதையும் அசாத்தியமானதென்றோ, அமிதமான தென்றோ நடு நிலைமையில் உள்ள யாரும் சொல்லி விடமுடியாது. இவைகளில் அநேகம் உலகத்தில் மற்ற நாடுகளில் நடை பெற்று வருகின்றவை களாயுமிருக்கின்றன.
முதலாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது நமது நாட்டில் அதிகமான வகுப்புகளும் உயர்வு தாழ்வு வித்தியாசங்களும் இருப்பதால் அது அநேகமாக நமது நாட்டில் மாத்திரம் இருப்பதாய்க் காணலாம்.
ஆனாலும் மைசூர் முதலிய சுதேச மன்னர்கள் தேசங்களில் கூட இக் கொள்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டு அமுலில் நடக்கின்றது. நமது மாகாணத் திலும் ஒருவாறு அமுலுக்கு இப்போதைய மந்திரிகளால் கொண்டு வரப்பட்டுமிருக்கின்றது.
வகுப்புவாரி கல்வி விஷயமும் நமது நாட்டில் நமது “மதத்தில்” சிலர் படிக்கலாம், சிலர் படிக்கக் கூடாது என்பதும், சிலர் படிக்க வசதி உள்ளவர்கள், சிலர் படிக்க வசதி இல்லாதவர்கள் என்பதுமான தத்துவங்கள் ஒரு சாராரால் வெகுகாலமாக வலியுறுத்தி வந்ததாலும் இனியும் வலியுறுத்தப் படுவதாலும், இதற்கேற்ற சூழ்ச்சிகள் நிறைந்திருப்பதாலும் கல்வி யும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவப்படி கற்பிக்க வேண்டியதாகின்றது.
2 - வதான ஜாதி வித்தியாசமும், தீண்டாமையும் ஒழிய வேண்டும் என்கிற விஷயத்திலும் யாருக்கும் ஆக்ஷேபணை இல்லை என்றே சொல்லப்படுகின்றன.
பொது வாழ்க்கையில் திரு. காந்தியவர்களுக்கு மாத்திரம் ஜாதி வித்தியாசத்தில் சற்று குழப்பம் இருந்தாலும் தீண்டாமை விஷயத்தில் இதுவரை எந்த அரசியற்காரராவது, சீர்திருத்தக்காரராவது ஆக்ஷேபித்ததே கிடையாது.
மற்றபடி வருணாச்சிரமக்காரரின் ஆக்ஷேபணைகளைப் பற்றி நாம் கவனிக்க வேண்டியதில்லை. அவர்கள் மநுதர்ம சாஸ்திரக் காரர்களானதால் அவர்களைப் பற்றிப் பேசுவதே வீண் நேரக் கேடாகும்.
3 - வதான பெண்கள் விஷயத்தில் சமவுரிமை வழங்க வேண்டு மென்ற கொள்கையையும் யாவரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. திட்டத்தில் மாத்திரம் சிறிது தகராறு இருப்பதால் அதுவும் பெண்கள் முயற்சியி லேயே சரிப்பட்டுவிடும்போல் தோன்றுகின்றது. கல்யாண ரத்து விஷயங்களிலும் மகமதியர்களுக்குள்ளும், கிருஸ்தவர்க்குள்ளும், இந்துக்களில் சில வகுப்புகளுக்குள்ளும் இப்போது அந்த வழக்கம் இருந்தே வருகின்றது. தவிரவும், இந்தியாவில் பரோடா சமஸ்தானத்தில் இதற்காக சட்டம் நிறை வேறி விட்டது. ஆதலால் இதுவும் அசாத்தியம் என்று சொல்லி விட முடியாது.
4 - வதாக கடவுள் மதச் செலவு விஷயம். இது இதுவரை மக்களுக்கு பகுத்தறிவு வளர பார்ப்பனர்களும், “பண்டிதர்” களும் முட்டுக்கட்டையாய் இருந்து வந்ததால் ஜனங்கள் உண்மையறிய முடியாமல் போய் விட்டது. இப்போது அவர்களது ஆதிக்கமும் செல்வாக்கும் குறைந்து விட்டதால் அதனால் பிழைப்பவர்களை விட இனி யாரும் அதை ஆக்ஷேபிக்க முடியாத நிலைமைக்கு வந்து விட்டது. எனினும் பார்ப்பனரல்லாத டிரஸ்டிகள் பலர் இதை ஒரு வியாபாரமாகக் கொண்டு கொள்ளை அடிப்பதால் அவர் களே முட்டுக்கட்டையாயிருக்கிறார்கள்.
ஆனாலும் பின்னால் வரப்பட்ட தேர்தல்களில் அவர்களும் புத்தி கற்பிக்கப்படுவார்களானாலும் சட்டங்கள் மூலம் இத்துறையில் பல திருத்தங்கள் செய்ய அவசியமிருக்கின்றன.
ஐந்தாவதாக மத சம்மந்தமான பாடங்கள் விஷயத்திலும் சர்க்கார் தலையிட வேண்டிய அவசியமில்லை யென்றே சொல்லுவோம். அவற் றிற்கு “மத ஆச்சாரிய பீடங்களும்”, “மத சந்யாசிகளும்” இருப்பதால் அவைகளை அவர்களிடமே விட்டு விட வேண்டியது நியாயமாகும். பிறகு பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
அப்படிக்கில்லாமல் பல மதக்காரரும் பல மத அவநம்பிக்கைக்காரரும் இருக்கும் போது எதற்காக சிறு பிள்ளை களுக்கு இவைகளை பொதுச் செலவில் போதிக்க வேண்டும்? மத சம்மந்த மும் கடவுள் சம்மந்தமும் மக்களுக்கு மூட நம்பிக்கையை வளர்த்து மக் களை மூடர்களாக்கி விட்டது என்று பலர் கருதும் போது அறிவுக்காக படிக்க வைக்கும் படிப்பில் மத சம்மந்தமான படிப்புப் படிக்க வைப்பது முட்டாள் தனங்களுக்கு எல்லாம் அரசனான முட்டாள் தனமாகும் என்பதை யாரும் ஒப்புக்கொள்வார்கள்.
தவிரவும் இக்கொள்கையை ருஷியா, ஜர்மனி, அமெ ரிக்கா, சைனா முதலிய தேசங்கள் ஒப்புக்கொண்டு நடத்தையில் கொண்டு வந்து விட்டன. ஆகவே நமது நாட்டில் மாத்திரம் இவை இருக்க வேண்டு மென்பது சிலரின் சோம்பேறி வயிற்றுப் பிழைப்புக் காரணத்தை விட வேறு காரணம் இல்லை.
பொதுப்பணத்தில் எல்லோருக்கும் சமமான கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது. இது விஷயத்தில் கல்வி இலாகாவில் பொது அறிவுக்கு என்று ஒரு பிரிவும் சர்க்கார் உத்தியோகத்திற்கு என்று ஒரு பிரிவும், தனி அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் என்று ஒரு பிரிவும் ஏற்பாடு செய்து அந்தப்படி பிரித்து பொது அறிவுப் பிரிவில் இத்தனை வருஷத்தில் இந்தியாவில் தற்குறிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று திட்டம் போட்டு அந்தப் படிக்கு யார் யாருக்கு எந்த எந்த வகுப்பாருக்கு எவ்வித வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பவைகளைக் கண்டு திட்டம் போட்டு அதற்கு மாத்திரம் பொதுப்பணத்தை செலவு செய்ய வேண்டும்.
மற்றபடி உத்தி யோகத்திற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டு விட்டதால் அந்தப் படியே மக்களைப் பொறுக்கி எடுத்து அதற்கு வேண்டிய படிப்பை வகுப்பு வாரி பிரதிநிதித்துவப்படி படிப்பிக்க வேண்டும். அதாவது மெடிக்கல்ஸ் (வைத்தியம்) இஞ்சினீரிங், சட்டம் (லா), ஐ. சி. எஸ். என்பது போன்ற பிரிவுகள் படி வகுக்க வேண்டும்.
அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் வேண்டிய படிப்பு அவரவர்கள் சொந்தப் பணத்தில் படித்து பயிற்சி பெறத்தக்கதாக வேண்டும். அந்த அறிவையும் ஆராய்ச்சியையும் வேண்டுமானால் அவர்கள் வியா பாரம் போல உபயோகித்துக் கொள்ளுவதில் ஆக்ஷேபணை இல்லை.
ஆகவே இவைகளை யாரும் அமிதம் அசாத்தியம் என்று கருதிவிட முடியாது. மற்றபடி அரசியல் திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டாமா அவற்றைப் பற்றி நமக்கு கவலையில்லையா என்று சிலர் கருதக் கூடும். நமது அரசியல் திருத்தம் முதலாவது எவ்வித உத்தியோகத்திற்கும் µ 1000 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளம் இருக்கக் கூடாது என்பதாகும்.
அமுலுக்கு வந்துவிடுமானால் நாம் எதிர்பார்க்கும் மற்ற அரசியல் திருத்தங்களெல்லாம் அதற்குள் அடங்கிவிடும் என்பதே நமதபிப்பிராயமாகும். ஆனால் அதைப் பற்றி இப்போது பிரஸ்தாபிப்பதில் பயனில்லை என்று கருதி தற்காலம் இத்துடன் முடிக்கின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 31.08.1930)