எல்லைப்புறக் காந்தி என்று பட்டம் சூட்டப்பட்ட தோழர் அப்துல்கபூர்கான் அவர்கள் ராஜத்துவேஷ குற்றத்துக்காக இரண்டு வருஷம் தண்டிக்கப்பட்டு விட்டார்.
தான் செய்த காரியத்துக்காகவோ, பேசிய பேச்சுக்காகவோ வருத்தம் தெரிவிப்பதன் மூலம் மன்னிப்புக் கேட்டும் அரசாங்கம் மனமிரங்காமல் இரண்டு வருஷம் தண்டித்து விட்டது.
வெள்ளை அறிக்கையையும், பார்லிமெண்டு கூட்டுக் கமிட்டி அறிக்கையையும் நிராகரிக்கிறது என்கின்ற காங்கிரஸ் திட்டத்தில் அரசாங்கத்தை மன்னிப்புக் கேட்டுக் கொள்வது என்பதும் ஒரு பிரிவு போல் காணப்படுகின்றது. ஐயோ பாவம் காங்கிரசே! நீ இன்னமும் என்ன கதிக்கு ஆளாகப் போகின்றனையோ!! உனது வீரமே வீரம்!!!
(பகுத்தறிவு துணைத் தலையங்கம் 23.12.1934)
***ராமராஜ்யம் திரும்பி வருகிறது
பலாத்கார உடன்கட்டை
வடநாட்டில் தாமோ என்ற தாலூகாவைச் சேர்ந்த நோஹ்டோ என்ற கிராமத்தில் ஒரு புருஷன் காயலாவாக இருந்து இறந்து போனார். அவரது மனைவியை உடன்கட்டை ஏறும்படி அவரின் உறவினர்கள் கட்டாயப்படுத்தி நெருப்புக்குள் பிடித்து தள்ளி விட்டார்களாம். மனைவி தப்பி ஓட எவ்வளவோ முயற்சித்தும் பயன் இல்லாமல் சாம்பலாகி விட்டதாக அசோசியேட் பிரஸ் கூறுகிறது.
இந்து மதத்தின் பெருமையும், ராமராஜியத்தின் அருமையும் சுயராஜியத்துக்கு எவ்வளவு தகுதி உடையது என்பதை இந்தியர்கள் உணர்வார்களாக.
(பகுத்தறிவு செய்தி விமர்சனம் 23.12.1934)
***
ஆசிரியர்கள் மகாநாடு
பிள்ளைகளைப் பற்றிய கவலை இல்லை
எங்கு பார்த்தாலும் ஆசிரியர்கள் மகாநாடுகள் கூட்டப்படுவதும், ஆசிரியர்களின் சம்பளங்கள் போதாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதும், மந்திரிகள் முதலிய பெரிய சம்பளக்காரர்களும், செல்வவான்களும் ஆசிரியர்களை வாழ்த்தி ஆசீர்வதிப்பதுமாகவே இருந்து வருகின்றதே ஒழிய, பிள்ளைகள் சம்பளம் கொடுக்கச் சக்தி இல்லாமல் பள்ளிக்குப் போக முடியாமல் கல்விப் பட்டினியாய் இருந்து தற்குறிகளாகி 100க்கு 92 பேர் எழுத்து வாசனை அற்ற குருடர்களாக இருந்து இந்திய நாட்டை "அலங்கரித்து"க் கொண்டிருக்கின்றார்களே என்ற கவலை ஒருவரிடத்திலாவது இருந்ததாகவோ, இதற்காக ஒரு மகாநாடாவது கூட்டப்பட்டதாகவோ, ஒரு மந்திரியாவது, ஒரு பிரபுவாவது, ஒரு ஆச்சாரிய ஸ்வாமிகளாவது கவலைப்பட்டதாகவோ தெரியவேயில்லை. இந்தக் காலம் செல்வவான்கள் காலமானதால் பணம் சம்பாதிப்பதைப் பற்றியே உலக நிகழ்ச்சிகள் நடைபெறுவதும், செலவிட வேண்டியவர்கள் கஷ்டத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கவும் ஆன காரியம் நடக்கின்றது. இதற்காக யார் என்ன செய்யக்கூடும்?
"எல்லாம் பகவான் செயல்" அல்லவா?
(பகுத்தறிவு செய்தி விளக்கம் 23.12.1934)