ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி பார்ப்பனர்கள் குறை கூறி வருவதையும், அதை "வெட்டி 500 கஜ ஆழத்தில் புதைத்துவிட வேண்டு"மென்று தோழர்கள் சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் சொல்லுவதையும் நமது பார்ப்பனரல்லாத மூடப் பாமர ஜனங்கள் நம்பி விடுகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதாரிலேயே படித்த பகுத்தறிவுள்ள மக்கள் என்பவர்களும் கூட அப்பார்ப்பனர்களுடன் கூடிக் கொண்டு குலத்துரோகிகளாய் நடித்து வருவதைப் பார்த்து வருகிறோம்.
பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்டு சுமார் 15 வருஷ காலமே ஆயிருந்தாலும் கூட அது ஏற்பட்ட பிறகு இந்த நாட்டுக்கு 100க்கு 97 பேர்களாய் உள்ள பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கும், சிறப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கும் எவ்வளவு பயன் அளித்து வந்திருக்கின்றது என்பதை உணர்ந்தால் பார்ப்பனர்களின் சூழ்ச்சியும், அவர்களுக்கு உதவி செய்யும் மூடர்களுடையவும் கூலிகளுடையவும், குலத்துரோகிகளுடையவும் யோக்கியதையும் சிறிதாவது விளங்காமல் போகாது.
இதற்குச் சமீபத்தில் நடந்த ஒரு விஷயத்தை சின்ன உதாரணமாகக் காட்ட ஆசைப்படுகின்றோம்.அதாவது இவ்வருஷம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் உத்தியோகத்துக்கு 87 பேர்கள் சர்க்காருக்கு தேவை இருந்ததால் அதை பூர்த்தி செய்ததில் பார்ப்பனர்களுக்கு 16 ஸ்தானங்கள் மாத்திரம் கொடுக்கப்பட்டு விட்டு பாக்கி 71 ஸ்தானங்கள் பார்ப்பனரல்லதார்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த 71 ஸ்தானங்களிலும் ஆங்கிலோ இந்தியருக்கு 1, தாழ்த்தப்பட்ட வர்களுக்கு 11, கிறிஸ்தவர்களுக்கு 13, முகமதியர்களுக்கு 15 ஸ்தானம் வழங்கப்பட்டு மற்ற "ஜாதி இந்துக்கள்" என்போர்களுக்கு 31 ஸ்தானமும் வழங்கப்பட்டிருக்கிறது.
ஜனகணித விகிதாச்சாரப்படி பார்த்தால் பார்ப்பனர்களுக்கு அவ்வளவு (16) ஸ்தானங்கள் வழங்குவது மிகமிக அதிகமானாலும் ஜஸ்டிஸ் கட்சி என்பதாக ஒரு "உத்தியோக வேட்டைக் கட்சி இல்லாதிருக்குமானால் இந்த 87 ஸ்தானங்களும் அந்த திருக்கூட்டத்தாருக்கே போயிருக்குக் கூடும் என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்க முடியுமா" என்று கேட்கின்றோம்.
சப் இன்ஸ்பெக்டர் வேலை என்பது விளையாட்டான உத்தியோகம் என்று யாரும் மதித்துவிட முடியாது.
தென்னிந்தியாவில் போலீஸ் இலாக்காவிலும், முனிசீப்பு இலாக்காவிலும் (நிர்வாகம், நீதி என்கின்ற இரண்டு இலாக்காவிலும்) பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாதிருந்து இருக்குமானால் நேற்று நடந்த இந்திய சட்டசபைத் தேர்தல்களின் முடிவு இந்தப்படி ஆயிருக்காது என்பதற்கு அனேக ஆதாரங்கள் காட்ட நம்மால் முடியும். இது ஒரு புறமிருக்க இந்த நாட்டுக்குப் பழம்பெரும் குடிமக்களாகிய பார்ப்பனரல்லாதார் நிலை இந்த 20ம் நூற்றாண்டிலும், சூத்திரர்களாயும், சண்டாளர்களாயும் மதிக்கப்படவே முடியாது. ஆகவே கப்பலுக்கு சுங்கான் எப்படி முக்கிய கருவியோ அதுபோல் மக்களை நடத்துவதற்கு போலீசும் முனிசீப்பும் சுங்கான் மாதிரியாய் இருந்து வருகின்ற அவ்வளவு முக்கியமானதாகும்.
அப்படிப்பட்ட பதவியாகிய போலீசில் இந்நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன் எப்படி இருந்து வந்தது என்பதும், இன்று எல்லா மத வகுப்புக்காரர்களுக்கும் இடம் கிடைக்கும்படி செய்தது ஜஸ்டிஸ் கட்சியா அல்லது காங்கிரசா என்பதும் யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கிவிடும்.
ஆனால் "உத்தியோகம் தான் பெரிதா தேசம் பெரிதா" என்று பார்ப்பனர்கள் நம்மைப் பார்த்து கேள்விகள் கேட்பார்கள். பார்ப்பனர்களது கூலிகளும் அடிமைகளும் இதற்குப் பின்பாட்டும் பாடுவார்கள்.
உத்தியோகத்தை மனதில் வைத்தே தேசம், தேசாபிமானம் என்று பார்ப்பனர்கள் பேசிவரும் இரகசியம் பார்ப்பனரல்லாத "தேசாபிமானிகள்" பலருக்குத் தெரியாது என்பதோடு பலர் தெரிந்தும் தங்கள் பிழைப்புக்கு வேறுவிதி இல்லாமல் பின்பாட்டுப் பாடுகிறார்கள் என்றே நினைக்கிறோம்.
இன்று தமிழ்நாட்டில் உள்ள எல்லா தேசபக்த பார்ப்பனர்களையும் எடுத்துக் கொண்டால் அவர்களது பிள்ளை குட்டிகள் பேத்துபிதுர்கள் எல்லாம் எதை எதிர்பார்த்து இன்று வாழுகின்றார்கள் வளர்க்கப்படு கின்றார்கள். S.S.L.C., F.A., B.A., M.A., B.L., M.L. முதலிய படிப்புகள் படிப்பிக்கப்படுகின்றார்கள் என்பவைகளைக் கவனித்தால் பார்ப்பனர்கள் தேசாபிமானத்தைப் பிரதானமாகவா அல்லது உத்தியோகத்தைப் பிரதானமாகவா கருதியிருக்கிறார்கள் என்ற இந்த சூட்சி விளங்காமல் போகாது. பார்ப்பனர்கள் சர்க்கார் உத்தியோகத்தை எதிர்பார்க்காமலும், நம்பி இருக்காமலும் வெறும் புத்திக்காகவும், அறிவுக்காகவும், தேசபக்திக்காகவுமே படிக்கிறார்கள் என்று இந்த நாட்டில் இன்று எந்த முட்டாளாவது கருதி இருக்கிறாரா என்று கேட்கின்றோம்.
ஆகவே உத்தியோகத்தையே பூராவும் நம்பி உயிர் வாழும் ஒரு கூட்டம் உத்தியோகத்திலேயே 100 க்கு 70, 80, 90 கணக்கில் புகுந்து கொண்டும், நத்திக் கொண்டும் மற்றவர்களை உள்ளே விடவொட்டாமல் சூட்சி செய்து வயிறு பிழைக்கும் ஒரு கூட்டம் அதற்காகவே தங்கள் பிள்ளைக்குட்டி பேத்து பிதுர்களை தர்பித்து செய்து கொண்டு அரசாங்க ஆதிக்கத்தைக் கைப்பற்ற எல்லாவித இழி தொழிலையும் கையாடும் ஒரு கூட்டம்.
"உத்தியோகம் பெரிசா தேசம் பெரிசா" என்று உத்தியோகத்தில் 100 க்கு 25 வீதம் கூட இல்லாத நம்மைக் கேட்பதாயிருந்தால் இதில் யோக்கியப் பொறுப்போ, நாணையமோ கடுகளவாவது இருக்க முடியுமா என்று கேட்பதோடு இதை கடுகளவு அறிவாவது இருக்கும் மனிதன் நம்பமுடியுமா என்றும் கேட்கின்றோம்.
இந்த சூட்சிகளை வெகு காலமாக அனுபவத்தில் தெரிந்து அனுபவித்து வந்த சர். தியாகராயர், டாக்டர் நாயர் போன்ற மேதாவி அறிஞர்கள் தான் உத்தியோகத்தில் விகிதாச்சாரம் கிடைக்க வேண்டும் என்கின்ற கொள்கையோடு இந்த ஜஸ்டிஸ் கட்சியை ஆரம்பித்தார்களே ஒழிய, மற்றபடி வெள்ளைக்காரர்களே எல்லா உத்தியோகத்திலும் இருக்க வேண்டும் என்றோ, இந்த நாட்டை என்றென்றைக்கும் வேறு நாட்டாரே ஆள வேண்டும் என்றோ கருதி அல்ல என்பது நமது அபிப்பிராயம்.
இந்த இயக்கத்தின் பயனாய் பார்ப்பனர்களின் ஏக போக, (உத்தியோக)அனுபவிப்பு குறைந்த பிறகு தான் பார்ப்பனர்கள் "உத்தியோகம் வேறு, தேசாபிமானம் வேறு" என்று சொல்ல ஆரம்பித்தார்களே தவிர, அதற்கு முன்பு வரை உத்தியோகங்களே தேசாபிமானமாய் இருந்து வந்தது யாரும் அறியாததல்ல. உதாரணமாக ஜஸ்டிஸ் கட்சி ஏற்படும் வரை காங்கிரஸ் பிரசிடெண்டுகளும், காரியதரிசிகளும், ஹைக்கோர்ட் ஜட்ஜு களாகவும், நிர்வாக சபை மெம்பர்களாகவும் இருந்து வந்ததே போதுமானதாகும்.
ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்பு தீண்டப்படாதார் நிலை எப்படி இருந்தது என்பது இப்பொழுது கூலிக்கு மாரடிக்கும் சில பச்சகானா தேசபக்தர்களுக்கும், அரை டிக்கட் தேச பக்தர்களுக்கும் தெரியாவிட்டாலும், ஒரு 40 வயதுக்கு மேல்பட்ட பார்ப்பனர் பார்ப்பனரல்லாத "தேசபக்தர்" எவரும் அறிந்ததேயாகும். அப்படிப்பட்ட கூட்டத்திற்கு இன்று போலீஸ் இலாகாவில் சப் இன்ஸ்பெக்டர் பதவியில் 87க்கு 11 ஸ்தானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது என்றால் அந்த சமூகத்துக்கு காங்கிரஸ் சமுதாயத் துறையிலோ, உத்தியோகத் துறையிலோ சாதித்தது என்ன என்பது நமக்கு விளங்கவில்லை.
சர்க்காருடையவும், ஜஸ்டிஸ் கட்சியாருடையவும் ஆதிக்கத்தில் உள்ள ஸ்தலங்களாகிய உத்தியோகம், சட்டசபை, ஸ்தல ஸ்தாபனம், ரயில் வண்டி, கச்சேரிகள், ரோட்டுகள் பள்ளிக்கூடங்கள் முதலாகிய இடங்களில் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமை வழங்கி அவர்களது சுயமரியாதை காப்பாற்றப்பட்டிருப்பதை எவறாவது இன்று மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
ஆனால் பொது ஜனங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரசினுடையவும், பார்ப்பனர்களினுடையவும் ஆதிக்கத்தில் இருந்து வரும் கோவில், குளம், சத்திரம், சாவடி முதலிய இடங்களில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை ஒரு சிறு விரல் விட்டு சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
எந்தப் பார்ப்பனர் பள்ளிக்கூடத்திலாவது ஒரு ஆதிதிராவிடருக்கு வாத்தியார் வேலையாவது கொடுத்தார்களா, மாணாக்கனாகவாவது சேர்த்துக் கொண்டார்களா? "சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்தான் பண்டாரம்" என்பது போல் கோவில்களைப் பற்றி லட்சியமே இல்லாத தாழ்த்தப்பட்ட சமூகத்தாரிடையில் புராணப் பிரசங்கம் செய்வதின் மூலம் அவர்களுக்கு கோவில் வெறியை உண்டாக்கி, அதன் பெயரைச் சொல்லி கோவில் பிரவேசத்துக்கு சத்தியாக்கிரகம் செய்வதாயும், பட்டினி கிடப்பதாயும் சொல்லி மக்களை ஏமாற்றி 10 லட்சக் கணக்கில் பொருள் பரித்து கடசியாக "பொது ஜனங்கள் பக்குவமாக இல்லை ஆதலால் கோவில் பிரவேசம் கூடாது" என்று சொல்லி விட்டதைத் தவிர, அந்தப் பணத்தில் சட்ட சபைக்குப் போக சௌகரியம் செய்து கொண்டது தவிர, வேறு என்ன செய்ய முடிந்தது என்று கேட்கின்றோம்.
காங்கிரஸ் பார்ப்பனர்கள் உத்தியோகத்துக்குத்தான், "உத்தியோகம் பெரிதா தேசம் பெரிதா" என்று கேட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் அதே பார்ப்பனர்களை ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் "தேசம் பெரிதா கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்வது பெரிதா" என்று கேட்டால் அப்போது என்ன சொல்லுவார்கள் என்பது விளங்கவில்லை.
ஆனால் அதற்கும் ஒரு தந்திரமான பதில் சொன்னாலும் சொல்லுவார்கள். அதென்னவென்றால் "கோவிலுக்குள் செல்லவும், சுவாமி தரிசனம் செய்யவும் சுயராஜ்யம் வந்தால் தான் முடியும். இல்லாவிட்டால் முடியாது" என்று சொல்லி ஏமாற்றி விடுவார்கள். அதையும் நம்ம சோணகிரிகள் நம்பி விடக்கூடும்.
இவை எப்படியோ போய்த் தொலைந்தாலும், இன்று தாழ்த்தப்பட்ட சமூகம் 100ல் 13 ஸ்தானங்கள் வீதம் போலீசில் இடம் பெற்றதும், முகமதிய சமூகம் 100இல் 17 ஸ்தானங்கள் பெற்றதும் ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் இருந்தால் ஒரு நாளாவது முடிந்து இருக்குமா என்பதே நமது கேள்வி.
மற்ற ஜாதி இந்துக்கள் 100 ல் 35 ஸ்தானங்களும் பெற்று இருக்கிறார்கள் என்றாலும் 100க்கு 3 வீதம் ஜனத் தொகை (13 லட்சம் ஜனத் தொகை) உள்ள பார்ப்பன சமூகம் 100ல் 18 ஸ்தானங்கள் (லட்சம் ஜனங்களுக்கு 1லீ வீதம்) பெற்று இருப்பதும் (100க்கு 70 வீதம்) 325 இலட்சம் ஜனத்தை உள்ள பார்ப்பனரல்லாதார் சமூகம் (9 லட்சம் ஜனங்களுக்கு 1 வீதம்) 35 ஸ்தானங்களே பெற்று இருப்பதும் இப்படி இவ்வளவு வித்தியாசத்தில் இருந்தும் ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சியென்று பார்ப்பனர்கள் கூப்பாடு போடுவதும், இதற்கு சில பார்ப்பனரல்லாத கூலிகள் பின்தாளம் போடுவதும் என்றால் இதற்கு என்ன பெயர் சொல்லுவது என்பது நமக்குப் புரியவில்லை.
ஆகவே நமது பார்ப்பனரல்லாதார் சமூகம் அவர்களது ஜனத்தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரம் உத்தியோகத்தில் பெரும் வரையிலும் அல்லது பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்கு மேற்பட்ட விகித உத்தியோகம் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் வரையிலும் ஜஸ்டிஸ் கட்சி இருந்து தீர வேண்டியதே நமது அபிப்ராயமாகும்.
அது "தேசத் துரோகக்" கட்சியினாலும் சரி, "சர்க்கார் தாசர்கள் குலாம்கள்" கட்சி ஆயினும் சரி அதனுடைய பிறப்புரிமையைப் பெற்ற பிறகுதான் அது வேறு வேலையில் இறங்க வேண்டுமே தவிர அதை விட்டு விட்டு பார்ப்பனர்களுக்குப் பயந்து கொண்டு "எங்களுக்கு வகுப்புவாரித் திட்டம் வேண்டியதில்லை. யாரோ ஒருவர் இருவருக்கு மந்திரி பதவியோ, பெரிய சர்க்கார் உத்தியோக பதவியோ மாத்திரம் இருந்தால் போதும். நாங்களும் பெரிய தேசபக்தர்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்கள் தான்" என்றால் அதைவிட ஈனத் துரோகமான கட்சி உலகில் வேறு இல்லை என்றுதான் சொல்லுவோம்.
(பகுத்தறிவு தலையங்கம் 23.12.1934)