சுவாமி வேதாசலம் அவர்களின் அருமைப் புதல்வி திரு.செல்வி நீலாம்பிகையம்மைக்கும், நமது நண்பரான திருவாளர் திருவரங்கம் பிள்ளை அவர்களுக்கும் நடந்த திருமணச் சடங்கு சம்பந்தமாக சில விபரங்கள் பொது மக்கள் கவனத்தை இழுக்கும்படி நேர்ந்தது பற்றி வருந்துகிறோம். ஆயினும் இச்சடங்கானது இது சமயம் தமிழ்நாட்டில் வெகு மும்மரமாய் நடந்துவரும் தமிழ் மக்களின் மனிதத்தன்மை உணர்ச்சியின் எழுச்சிக்கு இடையூறாய் நிற்குமோவென்னும் ஐயத்தால் அவற்றை வெளியிட்டாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது பற்றி வெளியிடலாயிற்று. அதற்கு சமாதானமாக பண்டிதர் ஆனந்தம் அவர்கள் எழுதிய கட்டுரையானது குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டது போல் செய்து விட்டாலும், “கண்டு களித்தோன்” என்னும் நண்பர் எழுதிய மற்றொரு கட்டுரையும், அதை ஒருவாறு திருவாளர் கா.சுப்பிரமணியபிள்ளை அவர்கள் சரி என்று ஒப்புக்கொண்ட தாக்கலும், மக்களுக்கு திருப்தி அளிக்கும் எனக் கருதி அவ்விஷயத்தை அத்துடன் நிறுத்திவிடலாம் என்பதாக முடிவு செய்து “இவ்விஷயம் இத்துடன் முடிவு பெற்றது” என்பதாக குறிப்பும் எழுதி முடித்துவிட்டோம்.

periyar maniammaiஆனால் மறுபடியும் சுவாமி வேதாசலம் அவர்களின் சிஷ்யர் என்று சொல்லப்படுபவரான திருவாளர் பாலசுந்தரம் அவர்களால் ஒரு நீண்ட வியாசம் வெளிவந்தபிறகு இவ்விஷயம் மறுபடியும் தலையெடுக்க வேண்டியதாகி விட்டது. இதைப் பற்றி பலருக்குப் பலவிதமாய் தோன்றினாலும் நம்மைப் பொருத்தவரை கோயிலில் சுவாமிகளுக்கு பூசை செய்யும் குருக்கள் என்பவர்களை தமிழ் மக்கள் சடங்குகளில் சேர்த்துக் கொள்வதானது, தமிழ் மக்கள் சுயமரியாதைக்கு குறைவு என்பதே நமது அபிப்பிராயம். ஆதாரங்களையும் ஆராய்ச்சிகளையும் கொண்டு குருக்கள்மார்களை ஆதி சைவர்கள் என்றோ, தமிழர் என்றோ, வேளாளர் என்றோ ருஜு செய்து விடலாமானாலும், அக்குருக்கள் ஒப்புக் கொள்ளாதவரையில், அதாவது அக்குருக்கள் நமக்கு சமமானவரென்றும், நம்மை விட உயர்ந்தவரல்லவென்றும், நம்முடன் இருத்தல் உடனுண்ணல் முதலிய காரியங்களை ஒப்புக் கொள்ளாமல் இருக்கும் போது அவர் யாராயிருந்தாலும் நமக்கு என்ன பிரயோஜனம்?

சாதாரணமாக 100-க்கு 75 வைணவ பார்ப்பனர்கள் ஆதியில் இன்னார் என்பது நமக்குத் தெரியும். ஸ்ரீராமானுஜர் காலத்தில் பார்ப்பனர்கள் ஆனவர்கள் என்பது ஆராய்ச்சி வல்லோரின் ஆராய்ச்சியின் முடிவு என்றே வைத்து கொள்வோம். அதனால் நமக்கு என்ன லாபம்? நம்மிலும் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவனை, அதிலும் பிறவியிலேயே உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவனை உயர்ந்த தன்மையைக் காட்டுவதற்கு ஆதாரமாக பழக்கத்தில் வந்து கொண்டிருக்கிற சடங்குகளை நடத்திக் கொடுப்போனாக சேர்த்துக் கொள்ளுவதால் நாமே அவ்வுயர்வுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஆகிறோமா யில்லையா என்பதுதான் நமது கவலை. ஆனால் விஸ்வகர்மாள், தேவாங்கர்கள் முதலானவர்கள் தங்களை பிராமணர்களென்றும், மற்றும் கோமட்டி செட்டியார்கள் வாணிப செட்டியார்கள் முதலானவர்கள் தங்களை வைசியர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகிறார்களே, பூணூலும் போட்டுக் கொள்ளுகிறார்களே. அவர்களையெல்லாம் நாம் பிராமண வைசிய கூட்டத்தில் சேர்த்து விடாமல் ஏன் பார்ப்பனரல்லாதாருடன் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதாக கேட்கலாம். இவர்களை நாம் பார்ப்பனரல்லாதாருடன் சேர்த்துக் கொண்டிருப்பதை இவர்கள் ஆnக்ஷபிக்காமல் ஒப்புக் கொள்ளுகிறார்கள்.

ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நமது சடங்குகளுக்கு நாம் இவர்களை நடத்தி வைக்கக் கூப்பிடுவதுமில்லை. ஆகவே இந்த சமாதானம் இவ்விஷயத்திற்கு பொருத்தமில்லை என்பதோடு இதைப்பற்றி நாம் அதிகமாக விவாதிப்பதும் சரியல்ல. அல்லாமலும் இவர்களெல்லாம் அரசாங்கக் குறிப்பிலும் பார்ப்பனரல்லாதார் வகுப்பிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதை அவர்கள் ஒப்புக் கொண்டுமிருக்கிறார்கள். குருக்களோ பார்ப்பன வகுப்பில் சேர்க்கப்பட்டு இருப்பதுடன் தங்களையும் பார்ப்பனர்களாகவே மதித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அத்தோடு பார்ப்பனர்களும் குருக்கள்களை தங்களைவிட சற்று தாழ்ந்தவர்கள் என்பதாக மாத்திரம் எண்ணிக் கொண்டு பார்ப்பனர்களுக்குள்ள உரிமைகளில் குருக்கள் பிரவேசிப்பதை தடுப்பதுமில்லை. அன்றியும் பண்டிதராயுள்ள சிலர்கள் தவிர மற்றையோர் இக் குருக்கள்களைப் பார்ப்பனர்கள் என்றே எண்ணிக் கொண்டும் தங்களைவிட உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டுமிருக்கிறார்கள்.

இப்போது நமது மனிதத் தன்மை பிரசாரத்தில் முக்கியமானதெல்லாம் எவன் தன்னை உயர்ந்தவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறானோ அவனை நமது சமூகச் சடங்குகளை நடத்துவிப்பதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடாதென்பதுதானே ஒழிய பார்ப்பனர் மாத்திரம் கூடாது என்பதல்ல. இத்தீர்மானம் திருவாளர் திரு.வி. கலியாணசுந்திர முதலியார் தலைமை வகித்த மாயவரம் சன்மார்க்க சங்க மகாநாட்டிலும் மற்றும் பார்ப்பனரல்லாதார் மகா நாடுகளிலும் ஏகமனதாய் தமிழ் மக்களால் செய்யப்பட்டிருக்கிறது. பார்ப்பனர்களுக்கும் நமக்கும் இருக்கும் தகராறின் முக்கியமே நம்மைவிட தான் உயர்ந்தவன் என்று எண்ணிக் கொண்டு இருப்பது தானே தவிர வேறில்லை; தவிரவும் நமது பிரசாரத்தின் கருத்து எல்லாம் எல்லா சுயமரியாதையும், சமத்துவமும் வேண்டும் என்பது தானே ஒழிய இந்த மதம் வேண்டும், இந்த மதம் வேண்டாம் என்கிற மதப்பிரசாரமல்ல. அதோடு இந்த நமது கொள்கையை ஒப்புக் கொள்ளும் எந்த மதத்தையும், எந்த சமயத்தையும், எந்த சங்கத்தையும் நாம் உபயோகப்படுத்திக் கொள்ளத் தயாராயிருப்பதுடன் அவைகளை மதிக்கவும் தயாராயிருக்கிறோம்.

இம்முறையில் பார்க்கும் போது திருச்செல்வி நீலாம்பிகை அம்மையாரின் மணச்சடங்கு சமத்துவத்திற்கு ஒத்ததல்லவென்பதுதான் நமது தாழ்மையான அபிப்பிராயம். சுவாமி வேதாசலம் அவர்களும் திருவாளர்களான கா.சுப்பிரமணிய பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் நம்முடைய சுயமரியாதை, சமத்துவம், மனிதத் தன்மை ஆகிய கொள்கைகளுக்கு உடன்பட்டவர்கள் என்றும், மத சமய ஆராய்ச்சி விஷயமாய் யாராவது நமக்கு இடையூறு செய்ய வந்தால் நாம் அவைகளையும் லட்சியம் செய்யப் போவதில்லையானாலும், அப்பேர்ப்பட்ட இடையூறுகளுக்கும் அம்முறையிலும் கூட நமக்கு இப்பெரியார்கள் பின்பலமாய் இருக்கிறார்கள் என்கிற தைரியத்திலேயே அவர்களை மலை போல் நம்பி வருகிறோம்.

சைவத்தின் பெயராலும், வைணவத்தின் பெயராலும் அனேக பண்டிதர்கள் என்பவர்கள் நமக்கு இடையூறு செய்யக் காத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். சில பார்ப்பனர்கள் இவற்றிற்கு உள் உளவாயிருந்து சில பண்டிதர்கள் என்னும் சமயவாதிகளைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருப்பதும் நமக்குத் தெரியும். இதற்கெல்லாம் இவர்கள் பதில் சொல்லுவார்கள் என்கிற தைரியத்தோடே இருக்கிறோம். பண்டிதத் தன்மை வேறு, அறிவு வேறு, சமயம் வேறு என்பது நமது அபிப்பிராயம். இவை நமது நாட்டில் பிரிக்கப்படவேயில்லை, சரியானபடி உணரப்படவும் இல்லை. எந்தப் பண்டிதரைப் பார்த்தாலும் எந்த அறிவாளியைப் பார்த்தாலும் அவரவர்கள் சமயத்தை ஒட்டி பண்டிதர்களாக இருக்கிறார்களே ஒழிய அதை தனக்குள் கட்டி வைத்து விட்டு பண்டிதத் தன்மையையும், அறிவையும் பிரித்துக் கொள்வதில்லை. சமயம் என்பது அவரவர் சொந்த விஷயம். பாண்டித்தியம், அறிவு என்பது பொது விஷயம். இது யெல்லாரும் ஒப்புக்கொள்ளத் தக்கதுடன் எல்லோருக்கும் பயன்படத் தக்கது. எனவே நமது நாட்டு பண்டிதர்கள் எவ்வளவோ சிறந்தவர்களாயிருந்தாலும் பொது மக்கள் எல்லோராலும் மதிக்கப்படாமல் ஒரு கூட்டத்தாரால் மாத்திரம் மதிக்கப்படுபவர்களாக ஆகி விடுவதற்குக் காரணம் இதுதானே ஒழிய வேறில்லை.

அன்றியும் பண்டிதத் தன்மை வேறு, அறிவு வேறு என்று கூட நாம் வெகுநாளாய் சொல்லி வருகிறோம். மகாத்மா காந்தியும் தன்னுடைய அறிவையும் பாண்டித்தியத்தையும் இதுசமயம் ஒரு சமயத்திற்கு அடிமையாக்கி விட்டதினால் தான் அந்த சமயக்காரரால் மாத்திரம் இப்போது மதிக்க வேண்டியவர்களாகி விட்டார். எனவே சுயமரியாதைக்கும் மனிதத் தன்மைக்கும் ஒரு காரியம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டுமானால் சடங்கு செய்பவர்களுக்கும் செய்வித்துக் கொள்பவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும், உயர்வு தாழ்வும் இல்லை என்பதாய் இருவரும் ஒப்புக் கொண்டதாக இருந்தாலொழிய அது சுயமரியாதைச் சடங்கு அறிவுச் சடங்கு என்பதாக ஒப்புக் கொள்ளத்தக்கினதில்லை என்பதையும், இனியும் இம்மாதிரி நடைபெறும் சடங்குகள் எல்லாம் பார்ப்பனீயச் சடங்குகள் என்பதாகத்தான் முடிவு பெறும் என்பதையும், சமத்துவத்திலும் சுயமரியாதையிலும் கவலையுள்ள மக்கள் திருச் செல்வி நீலாம்பிகை திருமணச் சடங்கை பின்பற்றக் கூடாதென்பதையும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 02.10.1927)