இந்துக்களின் இல்லற தருமம் (ஆரிய முறை)

பாரதம் - அனுசாசன பர்வம்
இக்கதை லிங்கபுராணத்திலும் இருக்கிறது (அதிதி பூசை)

சுயோதனராஜனுக்கும் நர்மதைக்கும் பிறந்தவளான சுதானை என்ற அழகிய பெண்ணை அக்கினி தேவருக்கு மணஞ்செய்து கொடுத்தனர். அக்கினிக்கும் சுதானைக்கும் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்குச் சுதரிசனமென்று நாமங் கொடுத்தனர். பிறகு அக்குழந்தைக்குப் பூணூற் கலியாணஞ் செய்தும் தகுந்த வயதடைந்தவுடன் போகவதியென்னும் பெண்ணை மணஞ்செய்தும் வைத்தனர். இவர்கள் கிரகஸ்தாச்சிரமத்தைக் கடைப்பிடித்து வாழும் நாளையில், சண்டனை வென்றிட வேணுமென்கிற எண்ணங்கொண்டு குருசேத்திரம் சென்றனர். அங்கு அவர்கள் பர்ணசாலை ஒன்றைக்கட்டி மாதவர்கள், ரிஷிகள் முதலியவர்களுக்கு உபசாரம் முதலியவைகளும் செய்து இல்லற தருமத்தை நடத்தி வருங்காலத்திற் சுதரிசனன் தன் மனதிற்குடி கொண்டிருக்கப்பட்ட விரத முடிவெல்லாம் தமது தரும பத்தினிக்குத் தெரியப்படுத்தி, பெண்ணே! இந்த ஆச்சிரமத்தின் வழிவருபவரை அன்பு பாராட்டி அறுசுவையன்னமும் வருந்தியுண்பித்து ஆசிர்வசனம் பெறவும், அதிதி பூசையே மேலானது. மற்றவை ஆசார வயிற்றுப் பூசை.

அதிதிகள் எதைக்கேட்டாலும் சந்தோஷத்துடன் கொடுக்க வேண்டியதே. அவர்கள் ஒருவேளை ஆனந்தமாய் உன்னை விரும்பினாலும் முகஞ்சுளிக்காமல், மேனி நெளியாமல் வீட்டிலொளியாமல், மேவி விடுவதே மேன்மைத் தருமத்துக்கு வேராகும். நானில்லாதபோது துறந்தோர் முதலிய பேர்கள் வந்தால், அவர்களைப் பூசித்தனுப்புவதே உனக்குக் கடமை; இதுவே தருமமென்று எடுத்துக்காட்டி இருவரும் மனங்கலந்து வாழ்ந்தார்கள்.

ஒரு நாள் சுதரிசனன் தருப்பை முதலியவைகள் கொண்டு வருவதற்குக் காட்டுக்குச் சென்றிருந்தனன். அந்தச் சமயம் ஓர் பிராமணன் பர்ணசாலைக்குள் வர, போகவதியென்பவள் கணவன் கற்பித்தபடி அவனுக்கு வேண்டிய பணிவிடை செய்து வணங்கினான். வந்த பிராமணன் சந்தோஷப்பட்டு அவளைப் பார்த்து ‘பைந்தொடியே! கந்தர்வன் கணையால் நொந்தயானுன்னை வந்தடைந்தேன்; உன்னமுத முலையையும், அதரக்கனியையும், அலைந்து கெட்டோடி வந்த எனக்கருந்தி மோகத்தைச் சேருந் தாகத்தைத் தீரு’மென்று பலவாறு வேண்டினன். அந்தப்பெண், முனிவரே! தீமைக்கேதுவாகிய காரியங்களிற் பெரியோர்கள் விருப்பங்கொள்ளார்களே. இந்த இல்லறத்திலிருக்கப்பட்ட பதார்த்தங்களில் பெண்ணின்பந் தவிர்த்தும் பின்னையெது வேண்டினுங் கேளுமைய வென்றனள்.

பிராமணன் அவளைப் பார்த்து பெண்ணே! நீ என்ன தந்தாலுந் தீண்டேன். நான் மோக விகாரங் கொண்டிருக்கிறேன்; தடை செய்தால் என் பிராணன் போய்விடும்; உனக்கும் பாவமும், பழியும் வரும் என்றனன். அக்காரணங்களைக் கேட்ட அப்பெண், அதிதிகளின் மனது திருப்தியாகாவிடில் தாங்கள் செய்த பெருந்தவமெல்லாம் அழிந்து போகுமெனக் கருதிப் பிராமண அதிதியை நோக்கி. தேவரீரிச்சை தீரும்படிச் செய்யலாமென்று கட்டி முத்தாடி அதரபானமூட்டினான். பிறகு பிராமணனும் போகவதியும் உல்லாசமாக ஓர் அறைக்குள் சென்றனர். காட்டிற்குச் சென்றிருந்த போகவதியின் கணவன் வந்து போகவதியைக் கூப்பிட்டும் காணாமல் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தான். அவ்வீட்டிற்குள் சுதரிசனன் மனைவியுடன் இருந்த அதிதிப் பிராமணன், அவனைப் பார்த்து ஓய்! பிராமணனே கவலைப்படாதே; கண் கலங்காதே; மயக்கமுறாதே; உன் மனைவி அதிதி பூசை பண்ணுகிறாளென்றனன். இக்கோதைக்கிசைந்த மணவாளன், சொற்குறிப் பறிந்து மேலான கதியைச் சம்பாதிக்க விரும்பி, அதிதியின் பேச்சைக் கேட்டு ஆனந்தமாய்ச் சரீரம் புளகித்து மனங்குளிர்ந்து, “அய்யா! மஹானுபாவா! அதிதிகள் ஆசைப்பட்டு விரும்பினபடிக்கு வழிபடச் சொல்லி என் மனைவிக்கு உத்தரவு செய்திருந்தேன். அதன் பிரகாரம் என் பெண்ஜாதி அதிதி பூஜை பண்ணுகிறாள், மெத்தவுஞ் சந்தோஷமென்று” வாயிற் போய் நின்று வாயோயாமல் துதித்தான்.

அவன் மனைவியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்த வேதியன், வந்த வேடத்தையொழித்து, எமதருமராஜனாகிய எதாரூபமெடுத்துச் சுதரிசனை என்ன வரம் வேண்டுமென்று கேட்க உடனே போகவதியும் அவளுடைய புருஷனுமாகிய புண்ணியவானும், அவனை எமதண்டனையும், எமவாதனையும் இல்லாமலிருக்கும்படி வரம் கேட்டனர். அந்தப்படி எமனின் வரத்தைப் பெற்று இன்பமாக வாழ்ந்து வந்தனர். எனவே இதைப் பார்த்துத் தான் பெரிய புராணமும் இயற்கை நாயனார் சரித்திரம் முதலியவையும் பக்த லீலாமிர்தத்தில் கபீர்தாஸ் சரித்திரம் முதலியவையும் எழுதப்பட்டன என்பது இப்போதாவது புரிகிறதா?

(தந்தை பெரியார் அவர்கள் “சித்திர புத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதிய கட்டுரை - 06.11.1943 தேதியிட்டு வெளியான ”குடி அரசி” ல் வெளி வந்தது

நூல்:- “இந்து மதமும் தமிழர்களும்” பக்கம்:- 12-14 ) 

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

Pin It