கீதையின் வஞ்சகப் பின்னணி (3)

பிரேம்நாத் பசாஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூலை - தமிழில் ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ எனும் தலைப்பில் விடியல் பதிப்பகமும், சூலுர் வெளியீட்டகமும் இணைந்து வெளியிட்டுள்ளன. 1975ம் ஆண்டு, இந்நூலை எழுதிய பிரேம்நாத் பசாஸ் - ஒரு காஷ்மீரி. தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு - கடவுள் மறுப்புக் கொள்கைக் கண்ணோட்டத்தோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும். 

பெரியார் இயக்கத்துக்கான வரலாற்று ஆவணம் என்று கூறுமளவுக்கு, ஏராளமான வரலாற்றுச் செய்திகளை உரிய ஆதாரங்களுடன் தொகுத்தளித்துள்ளது. அதிலிருந்து சில முக்கிய பகுதிகள்:

* இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்ஸ் வேண்டு கோளை ஏற்று, கி.பி.1785இல் சார்லஸ் வில்கின்ஸ் என்பவர் முதன்முதலாக கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பல மேலை நாட்டு ஆய்வாளர்கள், இதற்குப் பிறகு தான் கீதையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினர். 

* ரிக் வேத காலத்தில் கருநிறம் கொண்ட ‘அரக்கனாக’ ஆரியர்களால் ஒதுக்கப்பட்ட கிருஷ்ணன், பகவத் கீதையில் விஷ்ணுவின் அவதாரமாக உயர்த்தப்படுகிறான். என்ன காரணம்? ஆரியரல்லாதோருக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பனியத்தை மக்களிடையே பரவலாக்கு வதற்கான சூழ்ச்சியே, இது

* நூலாசிரியர் பிரேம்நாத் பசாஸ் கூறுகிறார்: “சத்திரியர்கள் தான் பவுத்தப் புரட்சியை முன்னின்று நடத்தினர். பவுத்தப் புரட்சியை நசுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடியவர்களும் சத்திரியர்கள் தான். எனவே புதிய பார்ப்பனியத்தின் பாடலை (கீதையை) சத்திரியர் வாயில் பாட வைத்தனர். அதுவே புரட்சியைப் புறங்காணுவதற்குப் போது மானதாக இருந்தது.

பார்ப்பனியத்திடம் பவுத்தம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்ட அந்தச் சூழலில், கீதை ஆசிரியன், அர்ச்சுனனது பாத்திரத்தில் சித்தரிக்கும் இளைஞனைப் போன்ற படித்த, படிக்காத எண்ணற்ற இளைஞர்கள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். அந்த இளைஞர்களைக் கவர்ந்து இழுத்து, தங்கள் வலையில் சிக்க வைக்கவும், வேதாந்த மதத்தில் பிடிப்புள்ளவர்களாக மாற்றும் வஞ்சக நோக்கத்துடனும் தான் பகவத்கீதை இயற்றப்பட்டது” என்கிறார் நூலாசிரியர் பசாஸ்.

* “ஈவிரக்கமற்ற குரூரம், தார்மீக மதிப்புகள் அனைத்தையும் கைவிடுதல், மனித நேயமற்ற செயல்களில் ஈடுபடுதல், நாகரீகமின்றி நடந்து கொள்ளுதல், மூர்க்கத்தனம் ஆகிய அனைத்தும் மகாபாரதம் போரின்போது கடைபிடிக்கப்பட்ட தீய நெறிகளாகும். 

கடவுள் மறுப்பாளனை எரித்த பார்ப்பனர்கள்

* ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ நூலின் இரண்டாவது பகுதி - பகவத் கீதையின் உள்ளடகத்தை விரிவாக அலசுகிறது. கீதையின் முரண்பாடுகளையும், வர்ணாஸ்ரமக் கோட் பாடுகளையும் ஆதாரங்களோடு எடுத்துக் காட்டுகிறது. கீதை நாத்திகர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று கூறுகிறது. ‘நாத்திகர்களுக்கு எதிரான போர்’ என்று - நூலாசிரியர் ஒரு தனி அத்தியாயத்தையே எழுதியிருக்கிறார்.

* “கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்று பெரியார் கூறிய கருத்துகள் - தங்களைப் புண்படுத்துவதாகப் பார்ப்பனர்கள் கூக்குரலிடுவது வாடிக்கை யாக இருக்கிறது. ஆனால், கீதையில் “வேதாந்தங்களை”த் தவிர (பார்ப்பனிய கருத்துகள்) மற்றக் கருத்துகளைப் பின்பற்றுகிறவர்களுக்கு, தந்துள்ள பட்டங்கள் - படுமோசமானவை. துஷ்கருமன் (தீம்பு செய்பவன்), நர ஆத்மா (கீழ்மகன்), ஹத ஞானம் (செத்த அறிவு), அல்பமேதாவி (அறிவு கெட்டவன்), அபுத்துவன் (அறிவில் லாதவன்), நஷ்டன் (அழிந்து போனவன்), அசேதனன் (மூளையற்றவன்), சம்சய ஆத்மா (சந்தேகப் பிராணி), கடவுள் மறுப்பாளர்களுக்கு - கிருஷ்ணன் வழங்கியுள்ள பட்டங்கள் என்ன தெரியுமா? நஷ்டாத்துமா (அழிந்துபட்ட ஆத்மா), இடம்பமான் (இடம்பம் பேசுபவன்), மதன வித்தன் (அகந்தையானவன்), அசுரன், ராட்சசன், கடவுள் மறுபபாளர்களை விளிக்கும் போதெல்லாம், இதே சொற் களையே கிருஷ்ணன் பயன்படுத்துகிறான். 

* அரசதிகாரத்தில் இருந்த சத்திரியர்கள் - ஒரு இயக்கமாக செயல்பட்டதால் தான் பார்ப்பனர்கள், ஆதிக்க நிலை ஆட்டம் கண்டது என்பதை ‘கிருஷ்ணன்’ நன்றாகவே உணர்ந்திருந்தான். எனவே பார்ப்பனியம் பாதுகாப்புடன் நீடிக்க வேண்டுமானால் சத்திரியர்கள் ஒற்றுமைக்கு முடிவு கட்ட வேண்டும், என்றும், அவர்களின் போரிடும் ஆற்றலை மழுங்கடிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டான். இதற்கு நல்வாய்ப்பாக கிருஷ்ணன் மகாபாரதப் போரைப் பயன்படுத்திக் கொண்டான் என்கிறார் நூலாசிரியர்.

* போரில் வெற்றி பெற்று, பாண்டவர்கள் தலைநகருக்குத் திரும்பும்போது அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றது பார்ப்பனர்கள் தான். பாண்டவர்களின் குலத்தினரோ, போரில் உயிரிழந்த குடும்பத்தைச் சார்ந்த வர்களோ அல்ல; பார்ப்பனக் கூட்டத்தில் நின்றிருந்த ஒரு சார்வாகன் (கடவுள் மறுப்பாளன்) யுதிஷ்டிரனைப் பார்த்து, “உற்றார் உறவினரைக் கொன்று அழித்து என்ன பயன் கண்டாய்?” என்று கோபத்துடன் கேட்கிறான், யுதிஷ்டிரன் தலைகுனிந்து நின்றான்; உடனே உயிரை மாய்த்துக் கொள்ளவும் துணிந்தான். உடனே கூடியிருந்த பார்ப்பனர்கள், “அவன் ஒரு அசுரன், கவலைப்படாதீர்கள்” என்று யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறினர்; உடனே சார்வாகனைப் பார்ப்பனர்கள் பிடித்து, நெருப்பிலிட்டுக் கொளுத்தி விட்டார்கள் என்று மகாபாரதம் கூறுகிறது.

* பாரதப் போரினால் கிருஷ்ணனின் வஞ்சகத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறின. பார்ப் பனர்கள் மீண்டும் ஆதிக்கம் பெற்றார்கள். மரணப் படுக்கையிலிருந்த பீஷ்மன், வெற்றி வேந்தனாகிய யுதிஷ்டிரனுக்கு, கூறும் அறிவுரையே இதற்கு சரியான சான்று:

“பார்ப்பனர்களுக்கு பிரம்மதானம் கொடுப்பதே வேந்தனுக்கு அழகு. பார்ப்பனர்களுக்கு அளிக்கும் தானம் அசுவமேத யாகத்தைவிட சிறந்தது. பார்ப்பனர்களுக்கு இவ்வாறு தானம் செய்வதன் மூலம் - சத்திரியன் சொர்க்கத்தை அடைகிறான். பார்ப்பனர்களுக்கும், கடவுள் களுக்கும் மட்டுமே நிலங்கள் சொந்த மாக்கப்பட வேண்டும்.  பார்ப்பனர்களிடமிருந்து நிலங்களைப் பறிப்பது மன்னிக்க முடியாத குற்றம். தவறிக்கூடப் பார்ப்பனரைத் தண்டிக்காதே. பார்ப்பனர்கள்தான் மனிதரில் உயர்ந்தவர்கள். நீரிலிருந்து நெருப்பு பிறக்கிறது. பார்ப்பனரிலிருந்து சத்திரியன் பிறக்கிறான். பாறையிலிருந்து இரும்பு உண்டாகிறது. இரும்பு பாறையை வெட்டும் போதும், நீர் நெருப்பை அணைக்கும் போதும் பார்ப் பனனுக்கு சத்திரியன் பகைவன் ஆகிறான். அதன் பின் அவர்கள் முகமிழந்து அழிந்து போகிறார்கள். பார்ப்பனர்களுக்குச் சமமாகத் தங்களைக் கூறிக் கொள்கிறவர்களைத் தண்டிக்க வேண்டியது அரசனனது கடமை.” (மேற்கோள் ஆதாரம்: எம்.என்.ராய் எழுதிய மெட்டிரியலிசம்)

ஆர்ய பட்டரை’ வெறுத்து ஒதுக்கிய பார்ப்பனர்கள்

* “கதம்பக் குவியலான கீதைத் தத் துவம், புதிது புதிதான விளக்கங்களை நுழைப்பதற்கு இடமளிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது. ஆனால் சமூகத் தடைகளைக் கடந்து புது வழியில் செல்வதற்கு அது வழிகாட்டவில்லை” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கோசாம்பி.

* பல்வேறு சிந்தனைகளைக் கொண்டிருந்த மக்களின் மனநிலை மாறத் தொடங்கிய நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கி.பி.319ஆம் ஆண்டில் சந்திரகுப்தன் என்ற உள்ளூர் படைத் தலைவன், பாடலி புத்திரத்தில் ஒரு பேரரசை உருவாக்கினான். கோசலம், மகதம் ஆகிய பகுதிகளிலும் தனது ஆட்சியைப் பரவச் செய்து 16 ஆண்டுகாலம் ஆட்சி செலுத்தினான். தொடர்ந்து அவனது மகன் சமுத்தரகுப்தன் தனது எல்லைகளை மேலும் விரிவுபடுத்தினான். சந்திரகுப்தனுக் குப் பிறகு அவனது மகன் இரண்டாம் சந்திரகுப்தன் பதவிக்கு வந்து, தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டான்.

* குப்தர்கள் தங்கள் ஆட்சி எல்லைப் பகுதிகளை விரிவாக்கி, ஒரு பேரரசை நிறுவினார்கள். அதற்கு வழிமுறைகளைக் காட்டியது கீதையின் கற்பிதங்களே என்கிறார் நூலாசிரியர். குப்தர்கள் ஆட்சியில், பார்ப்பன ஆதிக்கம் மீண்டும் நிலை நாட்டப்பட்டது. இந்த ஆட்சியில் மக்களின் சமூகப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது உண்மை தான் என்று கூறும் நூலாசிரியர், அதற்கு, நாட்டு நிர்வாக அமைப்பில் பவுத்த புரட்சி நிறுவி இருந்த நல்ல அடித் தளங்கள் தான் காரணமே தவிர, குப்தர்களது திறமையல்ல என்று நூலாசிரியர் கூறுகிறார்.

* பவுத்தப் புரட்சியின்போது அமு லில் இருந்த சமூக நடைமுறைகள் அனைத்தும், குப்தர்கள் ஆட்சியில் மாற்றியமைக்கப்பட்டன. பார்ப்பன புரோகிதங்களும், சாதியமும், யாகங்களும், சடங்குகளும் முக்கியத்துவம் பெற்றதோடு, பார்ப்பனர்களுக்கு, குப்தர்கள் ஏராளமாக நிலங்களையும் வழங்கினார்கள். பசுக்கள் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. மக்கள் மொழியான ‘பிராகிருதம்’ ஒழிந்து, சமஸ்கிருதம் அரசு மொழி யாகியது.

* குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த ஆரியபட்டர் (கி.பி.476) கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய மொழிகளிலிருந்த வானவியல், கணிதம் பற்றிய  குறிப்புகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார். அந்த அடிப்படையில் கோப்பர்நிக்கஸ் காலத்துக்கு முன்பே, கி.பி.499இல் சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளை வெளியிட்டார். பூமி தனது அச்சில் சுழன்று வரும் கோளம் என்றும், பூமி மற்றும் சந்திரன் நிழல்களே கிரகணங்கள் என்றும், ஆண்டுக்கு 365.3586805 நாட்கள் என்றும் அவர் கூறினார். ஆரியபட்டர், சோதிடம், சாதகம் ஆகியவற்றை அறிவியல் அல்ல என்று புறக்கணித்தார். ஆனால், ஆரியபட்டரின் புரட்சிகர கருத்துககளை, பார்ப்பனர்களும், குப்த ஆட்சியாளர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, அதே காலத்தில் வாழ்ந்தவராக மிகிரர் என்ற பிற் போக்குவாதி, வானவியலை சோதிடம், சாதகம், கணிதம் என்று மூன்றாகப் பிரித்து, சோதிடத்துக்கும், சாதகத்துக்கும் முக்கியத்துவம் அளித்தார். 

பார்ப்பனர்கள் ஆர்யபட்டரைப் புறக்கணித்து வராகமிகிரரை ஏற்றுக் கொண்டனர். வானவியல், கணிதம் ஆகியன வளர்ச்சி அடை யாமல் தடுத்தனர். (இந்தியாவின் செயற்கைக் கோள் ஒன்றுக்கு ‘ஆர்யபட்டா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.)

* குப்தர்கள் ஆட்சியில் சட்ட நூல் கள், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை பற்றிய நூல்கள் எழுதப் பட்டன. ஏராளமான புராணக் கதைகளும் அப்போதுதான் உற்பத்தியாயின. ஆனாலும் கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய அனைத் திலும் பார்ப்பனிய உற்பத்திகள் கீழ்த்தர மானவையாகவும், சொந்த முயற்சியின்றி திருடப்பட்டதாகவும் இருந்தன என்கிறார் நூலாசிரியர் பசாஸ்.

* பவுத்தம் உருவாக்கிய மக்களாட்சி தத்துவத்தை ஒழித்தது குப்தர்களே என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ஆர்.சி.மஜும்தார் புதிய கலை இலக்கியங்களை உற்பத்தி செய்த பார்ப்பனர்கள், பழைய சாத்திரங்களில் மாற்றம் செய்வது, இடைச் செருகுவது, புதிதாக சேர்ப்பது என்ற அனைத்து கபட வேலை களையும் செய்தனர். பார்ப்பனர்களின் முக்கிய எதிரியான கவுதம புத்தர் - இந்துக் கடவுளான விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக குப்தர்கள் காலத்தில் அறிவிக்கப்பட்டார். 

Pin It