புலிக்குட்டி போன்றே
இருந்தது அந்தப் பூனை
சாதுர்யமாய் எடுத்து வைக்கும் அடி
பார்க்கும் பார்வை
ஓய்வில் கம்பீரம்
வணங்காத குணம் என்று
எங்களோடு ஒருவராய்
அது வாழ்ந்த போது,
ஏதிலியாய் வந்த
புதிய பூனையின் வரவால்
எங்களை
உதறிவிட்டுச் சென்றது
செருக்குடன்.

ஏதிலி பெண் என்றறிந்த பின்
இணையாக்கி கொண்டது.
தலைமுறைகளை வளர்த்தது
எங்களைப் போலவே

ஒவ்வொன்றும் ஒருவிதமாய்
ஆனால் தோற்றத்தில் ஒரே மாதிரியாய்.

எங்களின் மீதான வன்மம்
தீர்க்க
ஒவ்வொன்றாய் கொன்றனர்
எதிரிகள்தான் கொல்கின்றனர்
என்றறிந்தும்
ஏதும் செய்ய இயலாதிருந்தோம்

சகுனம் சரியில்லையென்று
சாக்கில் பிடித்துப் போய்
அடித்துக் கொன்றிருக்கலாம்
பிரத்யேக வலையில்
சிக்க வைத்து
கழுத்தை நெறித்திருக்கலாம்
முள்கம்பி
பெட்டிகளில் அடைத்திருக்கலாம்
வன்மத்தின் உச்சத்தில்
நினைத்துப் பார்க்கவே முடியாத
கொடூரங்களை நிகழ்த்தியிருக்கலாம்
எங்கள் குட்டிப் புலிகளிடம்.

இறந்து போன ஒவ்வொன்றும்
உயிர் பிரியும் கணத்தில் கூட
நினைத்திருக்குமோ,
எங்களது வருடலை,
எதிர்பார்த்து எதிர்பார்த்து
உயிரை விட்டிருக்குமோ
நம்மினத்தவர் நம்மை
காப்பாற்ற
வருவார்களென.

புலியோ
பூனையோ
பொதுமக்களோ
வாழ்வது கடினம்
சாவது எளிது.

Pin It