சாலையில்
கைவிரித்துக் கிடந்த
இயேசு நாதரை
அவரை கடந்து செல்லும்
பாதசாரிகளின்
பாதங்கள் பட்டு சிதறி ஓடுகின்றன
சில்லறை காசுகள்.
அவரை அங்கிருந்து
அப்புறப்படுத்த முடியாமல்
விழித்துக் கொண்டிருக்கிறார்
போக்குவரத்துக் காவலர்.
அலையாய் எழும் கேள்வி
--------------------------
காய்ந்து கிடக்கும்
வைகை ஆற்றின் கரையில் நின்றபடி
கடலலை எப்படியிருக்கும் என
கேட்ட மகளுக்கு
உலர்ந்து கொண்டிருக்கும்
சேலைகள் காற்றில் அசைவதைக் காட்டி
இப்படித்தான் இருக்கும் என்கிறேன்.
எதிர்மறை
-----------
குழந்தைப் பேறு
அதிகரிப்பைத் தடுக்க
வீதிக்கு வீதி காண்டம் எந்திரங்கள்.
குழந்தைப் பேறு வேண்டி
கோவில் அரசமரங்களில்
வேண்டுதல் சீட்டுகள்.
தவறாகாத தவறு
-----------------
சிவப்பு மை கொண்டு
திருத்துவதால்
தவறாகி விடாது தவறுகள்.
வளர்ப்பு
---------
முருங்கையை
ஒடித்து, ஒடித்து
வளர்த்த அம்மாக்கள்
குழந்தைகளை
அடித்தே வளர்க்கிறார்கள்.
- ப.கவிதா குமார் (