கணினிப் பயன்பாட்டில் தமிழ் இடம் பெறுவது இக்காலத்திற்கும்    எதிர்காலத்திற்கும் மிகவும் தேவையானது.இக்காலம்வரை தமிழின் தொல் இலக்கியங்களைக் காத்துவந்தோம். அந்த  இலக்கியங்களே தமிழைக் காத்து வந்துள்ளன.

அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றக் காலத்தில் தமிழ் அடுத்த படிநிலைக்குத்  தன்னை அணியப் படுத்திக் கொண்டுவிட்டது. சென்ற நூற்றாண்டுக்கு முன்னமேயே தோன்றிய பல்துறைத் தமிழ் அறிஞர் களும்   அப்போக்குகளில்  தமிழை வளப்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதனால் தமிழும் வளப்பட்டது. தொழில்நுட்ப அறிவும்  இம்  மண்ணில் வளப்படத் தொடங்கியது. அனைத்துத்துறையின்  நல்கையும் தமிழுக்குக் கிட்டியது.

இன்றைக்குக் கணினி பரவலாக  ஆங்கிலத்தின் பயன்பாட்டில் உள்ளது.  ஆங்கிலத்தில்  செய்திப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. ஆங்கிலத்தில் சொற் செயலி, இயல்மொழி சொற்பகுப்பு சொல்லாய்வு,   பேச்சொலி  உணரி, எழுத்துணரி, எனப் பலமென்பொருள்கள் உருவாக்கப்பட்டுக் கணிப்பொறியில் ஆங்கிலச் செயற்பாடுகள் விரிவாக்கப் பட்டுவிட்டன.

தமிழில் அச்சுத்துறைக்குத் தேவையான எழுத்துருக்களும், மென்பொருள்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றிடை  ஒருங்குப்பாடு இல்லை. ஒருவரின் செயல்பாட்டை இன்னொன்று ஏற்கும்நிலையமைவு இல்லை.

ஆங்கிலத்தில் மட்டுமே இயங்கி வந்த கணினியை உலகின் பல மொழிகளுக்கும் விரிவுபடுத்தி கணினியின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் முயற்சியில்உருவான கண்டுபடிப்பே பல மொழிகளுக்குமான ஒருங்குகுறி அமைப்பு.

உலகின் பல மொழியாளர்களும் இந்த ஒருங்கு குறியமைப்பன் உதவி கொண்டு தத்தம்  மொழியைக் கணினிப் பயன்பாட்டிற்குள் அமைத்துக் கொள்வதன் வழி கணிப்பொறியைத் தங்கள் மொழியில் இயங்க வைத்துக் கொள்ளலாம்.

கணினியின் அடிப்படை மென்பொருள்கள் உருவாக்கித் தரும் நிறுவனங்கள் சில ஒன்றிணைந்து ஒருங்குகுறி சேர்க்கையும் என்ற  அமைப்பை உருவாக்கி உலகின் அனைத்து மொழிகளுக்கும் ஒருங்குகுறியில் இடம் உருவாக்கித் தருகிறது. 

இந்தியாவில் உள்ள மக்கள்தொகை மிகுந்த மொழி முதல் சிறுபான்மை மக்களை உடைய மொழி வரை சொந்த எழுத்து வடிவங்கள்  கொண்ட மொழிகள் அனைத்தும் இந்த ஒருங்குகுறி அமைப்பல் இடம் பெற்றுக் கொள்ள முன் வந்தன.

தமிழும் அந்த  வகையில் ஒருங்குகுறியில் இடம் பெற்று மின்னஞ்சல், அச்சுவகை மேம்படுத்தம், ஊடக ஏந்துகள் பெற்று இயங்கத் தொடங்கியது. அதேநேரத்தில் இந்தியாவிலேயே செல்வாக்குப் பெற்று,  இந்திய அரசிடமிருந்து கோடி கோடியாக நன்கொடை பெற்றுக் கொழித்துக் கொண்டிருக்கும் மொழியாகவும் மக்கள் பயன்பாட்டில் அறவே இல்லாத  மொழியாகவும் உலகில்  யாருக்கும் தாய்மொழியாக இல்லாத சமற்கிருதம் இந்த ஒருங்குகுறியமைப்பல் இணைந்து தமக்கென்று இடம் பெற்றுக் கொள்ள முன்வந்தது.

இதுவரை சமற்கிருதப் பயன்பாடாக நாம் பார்த்திருப்பதெல்லாம் சில வேத நூல்களும் பகவத் கீதையும்தாம். அவை  தேவநாகரி எழுத்தில்  இடம் பெற்றுள்ளன. அந்தத் தேவநாகரி யெழுத்தில் சிற்சில மாற்றங்களுடன் வட இந்திய மொழிகளான இந்தி, மராத்தி, குசராத்தி போன்ற மொழிகள் கையாண்டு வருகின்றன. அவற்றில் இந்திக்கான தேவநாகரி வடிவத்தையே சமற்கிருதம் பெற்று  அம்மொழியில் உள்ள நூல்களைப் பதிப்பத்து வந்துள்ளது. இதைத் தவிர சமற்கிருதத்திற்கென தனி எழுத்தை இதுவரை உருவாக்கிக் கொண்டதில்லை.

இப்போது ஒருங்குகுறிச் செயற்பாடு கணினியில் ஏற்பட்ட  பிறகுதான்  சமற்கிருதம் தமக்கென  ஒரு வடிவத்தை அமைத்துக் கொண்டு சமற்கிருதம் என்ற பெயரிலேயே இயங்க  வேண்டிய   கட்டாயம் ஏற்பட்டது. தேவநாகரி அமைப்பல் வட இந்திய மொழிகள் பல அவ்வப் பெயர்களில் இடம் பெற்று வருவதில் ஒன்றாக "தேவ பாடை'யான சமற்கிருதம் இயங்க மனம் ஒப்பவில்லை. சமற்கிருதத் திற்கென்று தனி இடம் பெற வேண்டும்  என  எண்ணினர். கடந்தகால  வரலாற்றைத் தேடுகின்றனர்.

இந்தியாவிற்குள் நுழையுங் காலத்திலும் இவர்களுக்கு எழுத்து  வடிவம்  இருந்ததில்லை. சிந்துவெளி எழுத்துகளும் இவர்களுடையதில்லை. வடநாட்டில் வழங்கி வந்த  பாலி,  பராகிருதம் இவற்றையொட்டி சில      பயன்படுத்தங்கள் நடைபெற்றன.

வேத நூல்கள் எனக் கூறப்படும் நூல்களில் மிகவும் பழமையாகக் கருதப்படுவது ருக்கு வேதம். அவையும் அவர்களின் வாய்மொழியாகவே வாழ்ந்து  வந்தன. "எழுதாக்கிளவி' யாகவே  நடைமுறையில் இருந்து வந்தன.

இந்தியாவில் பரவலாக  மாநில மொழிகளைத் தங்கள் தாய்மொழிகளாகக் கொண்ட பிராமணர்கள் பகவத்துகீதை, வேதங்கள், சொலவங்கள் இவற்றைப் படிப்பதற்காகச்  சமற்கிருதம் தெரிந்து வைத்திருக் கின்றனர்.    அவர்களுக்கேகூட அனைவர்க்கும் மனப்பாடமாகச் சொல்ல மட்டும் தெரியும். சிலருக்கே படிக்கத் தெரியும். படிக்கத் தெரிந்தவர்கள் அந்தந்தமாநில மொழிகளில் எழுதியதையோ அச்சிட்ட தையோ படிப்பர். பெரும்பாலும் தேவநாகரி எழுத்தில் எழுதியுள்ளதையே படிப்பர்.  பரவலாகக் கடைகளில் கிடைக்கும் பகவத்துக்கீதை நூல்களில் தேவநாகரி எழுத்திலும் அதன் எழுத்துப்  பெயர்ப்பு தமிழிலும் எழுதப்பட்டிருப்பதை நாம் காணலாம்.

தென்னாட்டில் தமிழகத்தில் சிலர் பழைய கிரந்த எழுத்தில் அச்சான பொத்தகங்களை வைத்திருப்பர்.

கிரந்தம்

கிரந்தம் ஒரு மொழியன்று. அஃது ஓர் எழுத்து வடிவமுறைமட்டுமே. தமிழகத்தின் வடபகுதியையும் இப்போதுள்ள   ஆந்திரத்தில் சில பகுதியையும் இணைத்து ஒரு காலத்தில் அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த பல்லவன் தன் அரசு  மொழியாகச் சமற்கிருதத்தைப் பயன்படுத்தினான்.

அவன்  காலத்தில்தான் முதன்முதலாகச் சமற் கிருதம் புகுத்தப்பட்டது. பிராமணர்களுக்கெல்லாம் உயர்மட்ட மதிப்புரவு  கொடுக்கப்பட்டது. அவன் காலத்தில் எழுப்பப்பட்ட  கோவில்களில் அவன் புகழ்பாடும் செய்திகள், அவன் பிராமணர்களுக்குக் கொடுத்த கொடைச் செய்திகளை கல்வெட்டுகளாகப் பதிக்கச்  செய்தான். ஆவணங்கள் எழுதுவித்தான். நாலாயிரத் திவ்வியப் பிரபந்த ஈட்டு உரை போன்றவை எழுந்தன.

அத்தனையும் கிரந்த எழுத்துகளில்தாம் உருவாக் கப்பட்டன. கிரந்த எழுத்துகளில் ஒரு மொழிக்குத் தேவையான அனைத்து ஒலிகளையும் எழுதிவிட முடியாது.

இருமொழி இரண்டுவகை எழுத்துகள்

அன்றைய நாளில் தமிழ் எழுத்துகளைக் கடன் பெற்றுக்கொண்டு பல நூல்கள் வேதங்கள் எழுதப் பட்டிருந்தன. அச்சொற்றொடர்கள் முழுவதும்சமற்கிருதத்தில் அமைந்தனவும் அல்ல. இடையில் தமிழ்ச்சொற்கள் பெய்யப்பட்டிருக்கும்.

இருமொழியினருக்கும் பயனில்லை

அதனால் தமிழ் மக்கள் யாரும் படிக்க இயலாது. கிரந்த எழுத்துகளில் சிலவே தமிழ் எழுத்துகளாக இருக்கும். அப்படியே அதன் ஒலிகளைக் கற்றுக் கொண்டு படித்தாலும் விளங்காது. அவை சமற்கிருத மொழியில் இடையில்தான் சில தமிழ்ச் சொற்கள் மட்டுமே  இருப்பதால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது.

அதேபோல் சமற்கிருதம் அறிந்த சமற்கிருதவாணர் களும்  படிக்கமுடியாது. இதன் அனைத்து வரிவடிவ ஒலிகளையும்  பன்பற்றிப் படித்தாலும் புரியாது. காரணம் சமற்கிருதச்சொற்களுக்கிடையில்  தமிழ்ச் சொற்கள் இருப்பதால் அவர்களுக்கும் புரியாது.

அவ்வாறு கோளாறு படித்த கல்வெட்டுகள் அவை. பொதுமக்களுக்கும்  தெரியாது. அறிஞர்களுக்கும் விளங்காது. இருமொழி எழுத்துச்சார்ந்த கோளாறான தொகுப்பே    இக்கோயில் கல்வெட்டுகள், ஆவணங்கள், ஈட்டுரைகள்.

ஈட்டுரைகளிலும் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத் தின் மூலமே   தமிழானதால்  அதுவே  பொதுமக் களுக்கும் விளங்கும் என்ற நிலைதான்.

சமற்கிருதம் அரசு மொழியாக மட்டுமே  இருந்த போது அரசின் ஏவலுக்கு  ஏற்ப அவர்கள் காலத்தில் எடுப்பத்த கல்வெட்டுகள் அவை.அவற்றில் மொழியமைப்போ முறையோ  கிடையாது. மக்கள் சார்ந்தனவுமல்ல. அவர்களின் ஆட்சி வீழ்ந்தபோது அம்முறைகளும் வீழ்ந்துபோனது.

கிரந்தத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு

இந்த ஈட்டுரைகள் பயனற்றுக்  கிடப்பது கண்டு இப்போது சென்னைப்   பல்கலைக்   கழகத்தில் அவற்றை ஒரு மொழிப்படுத்தினால் ஒருமொழியின ராவது செய்திகளையாவது தெரிந்து கொள்ளலாம் என்ற  அளவில் மொழிபெயர்ப்பு முயற்சி நடந்தது.

நாலாயிரத்திவ்வியப்   பிரபந்தத்தில் நம்மாழ்வார் எழுதிய ஓராயிரமான திருவாய்மொழிக்கான ஈட்டுரை களைத் திரு. புருடோத்தமர் (நாயுடு) அவர்களை அமர்த்தி மொழி பெயர்க்க வேண்டியதாயிற்று. அதன் பின்னரே அதன் ஈட்டுரைகளை அறிஞர்களே விளங்கிக் கொள்ள முடிந்தது. ஈட்டுரைகளுக்கே இந்தநிலை யென்றால் கல்வெட்டுகளைக்  கூறவே தேவையில்லை.  இவை இருமொழி; எழுத்துகளின் வகைகளும் இரண்டு.

இவை படிப்பதற்குக் குழப்பமானது போலவே, கல்வெட்டுச் செய்திகள் வரலாற்றுக்கும் பயன்படாது. மொழி ஆய்வுக்கும் பயன்படாது.  அவ்வாறு தொல்லைப்பட்டு புரிந்து கொண்டாலும் அவை அடிமை வரலாற்றையே சுட்டி நிற்கும்.  உண்மை வரலாற்றை என்றைக்கும் தராது.

இந்தக்   கிரந்த  எழுத்துகள்  தமிழ் எழுத்துகள் பலவற்றை எடுத்துக் கொண்டு சில மாற்றங்களைச் சில எழுத்துகளில் செய்து கொண்டு வேறுமொழி வடிவம் போல் செய்து கொண்ட எழுத்துத் தொகுதி. அவற்றில் "ஐ ஷ ஹ ஸ க்ஷ' போன்ற தமிழ் ஒலிக்கு அப்பாற்பட்ட எழுத்துகளும் இருந்தன.

அவற்றில்  நூல்கள் சிலவும் வந்திருக்கின்றன. யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை மயிலை என மூன்று ஊர்களிலும் சில அச்சகங்களில் அந்நூல்கள் அச்சிட்டு வெளிவந்துள்ளன. அவற்றைப் பார்த்தால்   தமிழ்  எழுத்துகள் பெரும்பான்மையாக விரவியுள்ளதைக் காணலாம். இதைக் கண்ட திரு. இரமணசர்மா என்பவர் இந்த வரிவடிவத்தைச் சமற்கிருத மொழிக்கு முழுவதுமாகப் பயன்படுத்த ஒரு பரிந்துரையை இந்திய அரசு வழியாக ஒருங்குகுறி சேர்க்கையத்திற்கு அனுப்பயுள்ளார். அவர் காஞ்சி மடத்தைச் சார்ந்தவர். ஆதலால் அவருக்கு நடுவண் அரசில் செல்வாக்கு இருந்தது.

அவர் கொடுத்த கிரந்த எழுத்துத் தொகுதியில் தமிழ் எழுத்துத் தொகுதியிலேயே  அவை  இணைக்கப் படவேண்டும் என்ற வகையில் "நீட்டித்த தமிழ்' என்ற தலைப்பல் அவரின் முன்மொழிவுப் பரிந்துரை அமைந்திருந்தது. அதன் பறகு  திரு. நாக.  கணேசன், திரு. இரமணசர்மா  இருவரும் இணைந்து  தனி இடத்தொகுதி கிரந்தத்திற்கென வேண்டுமென்ற முன்மொழிவை வைத்தனர்.

அதில் தமிழ் எழுத்துகளான உயிர், மெய், துணை எழுத்துக் குறியீடுகள் ஆக 41  எழுத்துகள் கிரந்த எழுத்துத் தொகுதியில் சேர்க்கப் பட்டிருந்தன. இந்த 41 எழுத்துக் குறியீடுகளை வைத்துக் கொண்டு தமிழின் 247  எழுத்துகளில் பெரும்பான்மை எழுத்துகளை உருவாக்கிவிட முடியும். தமிழ் ஒலித்தொகுதியில் இல்லாத வருக்க எழுத்துகளுக்குக் கிரந்தக் குறியீடுகள் என்று பிரித்து எழுத்தால் தனிக்  கிரந்த எழுத்துகளாக 27 எழுத்துகள் மட்டும்  இருந்தன. எனவே  பெரும் பான்மைத் தமிழ் எழுத்துகளையும் சிறுபான்மை வேறு குறியீடுகளையும் கொண்டதே கிரந்தம்.

இதில் திரு. இரமணசர்மாவின் முன்மொழிவு இந்தக் கிரந்த எழுத்துத் தொகுதியை ஒருங்கு குறியமைப்பல் ஏற்படுத்திக் கொண்டு சமற்கிருதத் திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற நேரிய நோக்கம் கொண்டது. தமிழ் எழுத்துகள் இல்லாமல் கிரந்தம் இயங்காது. எனவே அவற்றையும் இணைத்துக் கொண்ட ஒரு தொகுதியைக் கொடுத்தார்.

திரு. நாக.  கணேசன் முன்மொழிவு நோக்கமே வேறானது.  நாளைய உலகில் தமிழ் உள்ளடக்கிய அனைத்து மொழிகளும்  அவற்றின்   சொந்த எழுத்துகளை விட்டுவிட்டு கிரந்த  எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதாகும். இந்தியாவில் வட பகுதியில்  தேவநாகரியும் தென்  பகுதியில் கிரந்தமும் மட்டுமே இயங்க வேண்டும் என்ற நச்சான

நோக்கத்தைக் கொண்டது. இவற்றில் திரு.  இரமணசர்மாவின் நோக்கம் சமற்கிருதத்தை ஒருங்குகுறிப் பயன்பாட்டில் இணைக்க  வேண்டும்  என்பதைக் கொண்டதாக இருப்பதால், அவற்றில் இன்றைக்கு நாம் பயன்படுத்தி வரும் தமிழ் எழுத்து வடிவங்கள் எந்த ஒன்றும் இடம்பெறக் கூடாது என்று நாம் வரையறை செய்து தடுத்துக் கொண்டுவிட்டால்  அவர் எந்த வடிவத்தையாவது புதியதாக உருவாக்கிக்  கொள்ளட்டும். அதில் நாம் தலையிடப் போவதில்லை. தமிழுக்குக் கேடுவராது.

இரண்டாமவரான திரு. நாக.  கணேசன் தமிழி லேயே தமிழ் நெடுங்கணக்கைச் சிதைக்கும் வண்ணம் அவருடைய  முன்மொழிவுகள் அமைந்துள்ளன. அவருடைய நோக்கமும் நாளைய உலகில் தமிழ் நெடுங்கணக்கைச் சிதைப்பதே.

ஆரியர்கள் தமிழை அழிக்க  முன்வந்தபோதெல்லாம் முதலில் கை வைப்பது தமிழ் நெடுங்கணக்கின் மீதுதான் என்பதுதான்  வரலாறு.   தமிழ் நெடுங் கணக்கைச் சிதைப்பது, தமிழை அழிப்பது இரண்டும் வேறல்ல.  இந்த நெடுங்கணக்கைச் சிதைத்ததனாலேயே  தமிழினம் வேறுபட்டு மலையாளம், கன்னடம், தெலுங்காகப் பிரிந்து நிற்கிறது.

"சோ' பார்ப்பான் வலைதமிழ் நெடுங்கணக்கைச் சிதைக்கும் திட்டமே. அவன் "கு'ஐ தமிழில் சிலகாலம் இணைத்து எழுதிப்  பார்த்து விட்டான். கட்டுக் கோப்பான தமிழ் நெடுங்கணக்கால் அது தப்பத்தது. அதை விடுத்து எப்போது வாய்ப்பு வரும் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரிலும் இப்போது ஒருங்குகுறி என்ற  பெயரிலும் தமிழ் எழுத்தைச் சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமிழறிஞர்கள் என்ற போர்வையில் ஒரு கூட்டம் அலைகிறது.

அக்கூட்டத்தில் ஒருவராக திரு. நாக.  கணேசன் இருந்து கொண்டு சமற்கிருதத்திற்குச் சற்றும் தொடர்பல்லாத  தமிழில்  இருக்கக்  கூடிய ஏழு எழுத்துகளையும்  இணைக்க  வேண்டும்  என்று முன்மொழிவு செய்துள்ளார்.

ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் கிரந்தம் கலந்து எழுதப் பட்டுள்ளன. அவற்றைப் பதிவு செய்ய வேண்டும்  என்று சாக்குப்போக்கு வேறு  கூறிக்கொண்டு கணினிசார் தமிழ் உணர்வாளர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அவர்கள் கிரந்தத்தைத் தமிழ் ஒருங்குகுறியோடும் தமிழ் எழுத்தைக் கிரந்தத்தோடும் கலந்து  மொத்தத்தில் தமிழ் எழுத்தின்  தனித்த அடையாளத்தை அழிக்கப் பார்த்தனர்.

தமிழக அரசு பரபரப்பு நேரத்தில் தமிழக முதல் வரிடம் ஒப்புதல் கையொப்பம்  வாங்கி அனுப்பி விட்டனர். நல்ல வேளையாகத் தமிழறிஞர் சிலருக்குச் செய்தி கசிந்துவிட அவர்கள் எடுத்த முயற்சியால் இடை நின்றது. வாயிலிட்ட நஞ்சு தொண்டையோடு நின்றது போல். கணினி    அறிஞர்கள், தமிழறிஞர்களை ஒன்றிணைத்து தென்மொழி அவையம், பாவலரேறு தமிழ்க்களத்தில் பேரா. பொன்னவைக்கோ தலைமையில்   ஒருங்குகுறிச்சிக்கலை  முன்னெடுத்துக் கருத்துரையாடல் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் திரு. மணி. மணிவண்ணன், இராம்கி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உலகத் தமிழ்க்கழகம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்,  மக்கள் சனநாயக இளைஞர் கழகம், தென்மொழி  அவையம் போன்ற முப்பது அமைப்புகள் இணைந்த தமிழ் உரிமைக் கூட்டமைப்பு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து,

"தமிழ் ஒருங்குகுறியில் கிரந்தம் நுழையக்கூடாது. கிரந்தத்தில் தமிழ் எழுத்தை நுழைக்கவும் கூடாது.' என்ற முழக்கத்தை முன்னெடுத்துச் சென்னையில் பல இடங்களிலும், தஞ்சையிலும் கருத்தரங்குகள் பல நடைபெற்றன.

காஞ்சியில் தொடர்முழக்கப் போராட்டம் காஞ்சி மடத்தை எதிர்த்து நடந்தது.  தஞ்சையிலிருந்தும் ஓ‘ரிலிருந்தும் ஊர்திப் பரப்புரைச் செலவு ஒரே நேரத்தில் கிளம்ப தமிழ் நாட்டின் முகாமையான ஊர்களில் பரப்புரை செய்து வந்தன. இதன் விளைவாக தமிழ் நாடு அரசு 14பேர் குழு ஒன்றை நீதியரசர் மோகன் தலைமையில் உருவாக்கியது.

தமிழ் எழுத்துகளிலிருந்து எ, ஒ, ழ, ற, ன, ஞ, ட என்ற எழுத்து வடிவங்கள் ஏழையும் கிரந்த எழுத்துத் தொகுதியில் சேர்க்க வேண்டும் என்ற நடுவண் அரசின் கோரிக்கைக்குத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் கொடுப்பது பற்றி முடிவெடுப்பதற்கான குழு அது.

சமற்கிருதத்திற்காக, கிரந்தத்தை மீட்டுருவாக்கம் செய்து  கொள்ளட்டும்  புதியதாக வரிவடிவம் படைத்துக்  கொள்ளட்டும். அதில் நம் தலையீடு ஏதுமில்லை. ஆனால் கிரந்த   எழுத்தில்  தமிழ் எழுத்துகள் ஒன்றும் இடம் பெறக் கூடாது. தமிழ் எழுத்துகளின்   துணைகொண்டு     சமற்கிருதப் பாடையைத் தூக்க வேண்டாம்.

அரசு  அமைத்திருந்த குழு ஏழு தமிழ் எழுத்து வடிவங்களைக் கிரந்தத்தில்  சேர்ப்பது பற்றியது. ஏற்கனவே கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள அத்தனை தமிழ் எழுத்துகளையும் அவர்கள்  பயன்படுத்தக் கூடாது என்பதே நம் உறுதியான கோரிக்கை.

முதலில் இந்த ஏழு எழுத்துகளை சேர்ப்பது பற்றிய முடிவில் அதைத் தடுத்துக் கொள்ள அரசு அமைத்துள்ள  குழுவினர்  அனைவரையும் தமிழுரிமைக் கூட்டமைப்பின்  சார்பல் சென்று   பார்த்தோம். கருத்தரங்கு, தொடர் முழக்கப் போராட்டம் ஊர்திப்பரப்புரை பற்றி எடுத்துக் கூறினோம். வழக்கிழந்த வடமொழிக்காக வாழும் தமிழைத் தாக்கமுறச் செய்வது பற்றி எடுத்துரைத்தோம்.

இதே நேரத்தில் அக் குழுவில் இடம் பெற்ற பேரா. வ. செ. குழந்தைசாமி தேர்தல் ஆதரவுக் கோரிக்கைபோல்,  தன் வேண்டுகை அறிக்கையை, தான் சார்ந்த குழுவினர் அனைவருக்கும் கொடுத்திருந்தார்.

அதில், 1400  ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது கிரந்தம். (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய) திராவிட மொழிக் குடும்பத்தினர் (அவர்களின் சொந்த  எழுத்துகள் தூக்கி  எறியப்பட்டு)க்கு கிரந்த வரிவடிவந்தான் காலப்போக்கில் மாற்றான வடிவமாக அமையக்கூடும் என்பதே என் கணிப்பு. "பழனி,

பாலாறு'  என்ற  சொற்களைக்கூட கிரந்தத்தில் கூற"ழ,ற,' எழுத்துகள் இல்லை. தமிழ் எழுத்துகளைக் கொடுத்து கிரந்தத்தை வளப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். பல்லாயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்த எழுத்து மரபுள்ள செம்மொழியான தமிழுக்கு முன்னால், 1400 ஆண்டு "பாரம்பரியம்' உள்ள கிரந்தம் அவர் அறிவியல் கண்ணை மறைத்திருக்கிறது.

சில  ஆண்டுகளுக்குமுன் கணினி  பரவலாக வருவதற்குமுன்  "கணினி  வருகிறது; தமிழ் தன் எழுத்தமைப்பை  மாற்றிக் கொள்ள  வேண்டும். எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று நடைமுறைக்குப் பொருந்தாத  ஒரு திருத்தத்தை முன்வைத்து தமிழ் நெடுங்கணக்கை அழிக்க முன்வந்தவர் வ. செ. குழந்தைசாமி.

தமிழக அரசு நடத்திய செம்மொழி மாநாட்டிலும் இதே முயற்சியைச்  செய்தார். நல்ல வேளையாக கலைஞருக்கு   எழுத்துச் சீர்திருத்தத்தில்  நாட்டமில்லாததால் தமிழ் தப்பித்தது. ஒரு வழியாக 12.2.2011இல் அமைந்த 14  பேர் குழுவில் 10  பேர்   மட்டுமே  வந்தனர். குழந்தைச்சாமிக்கு ஆதரவாக  அவர் பின்  ஒருவர்  மட்டுமே நின்றார். மற்ற அனைத்து அறிஞர்களும் ஏழு தமிழ் எழுத்துகளைக் கிரந்தத்திற்குத் தாரை  வார்ப்பதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததால் குழுவின் முடிவு தமிழ் நலனுக்குச் சார்பாக அமைந்தது.

தமிழுக்கு நலமான நம் நிலைப்பாடு இதுவே. தமிழில் கலந்துள்ள ஐ, ஷ, ஹ, ஸ, க்ஷ போன்ற கிரந்த   எழுத்துகளைக்   அறவே களையெடுக்க வேண்டும்.

கிரந்தத்தில் உள்ள அனைத்துத் தமிழ் எழுத்துகளும் ஒன்றில்லாமல் திரும்பப் பெற வேண்டும்.

Pin It