சுப்பிரமணிய சிவா இந்திய விடுதலை இயக்கப் போராளி; வ.உ.சிதம்பரனாரின் இனிய நண்பர்; ‘ஞானபாநு’ என்ற இதழின் ஆசிரியர். அவர் சமஸ்கிருத மொழியில் ஓரளவு பயிற்சியும் பெருமளவு பற்றுதலும் உடையவர். அதுபோலவே ஆங்கில மொழியிலும் ஓரளவு பயிற்சி பெற்றிருந்தார். ஆயினும் தம் தாய்மொழியான தமிழுக்கிருந்த இடங்களில் சமஸ்கிருதமும் ஆங்கிலமும் ஆதிக்கம் செலுத்துவதனை அவர் விரும்பாதவரானார். அந்த இரு மொழிகளின் ஆதிக்கங்களிலிருந்தும் தமிழ்மொழிக்கு விடுதலை தேடவும் பாடுபட்டார்.

subramanya sivaசுப்பிரமணிய சிவா தனித்தமிழ் ஆர்வம் கொண்டு தன் ‘ஞானபாநு’ இதழில் பின்வரும் விளம்பரத்தை வெளியிட்டார்.

“உங்களால் தனித்தமிழில் எழுத முடியுமா? முடியுமானால் முந்துங்கள். சமஸ்கிருதம் முதலிய அந்நிய பாஷைச் சொற்களில் ஒன்றும் கலவாது தனித்தமிழில் நமது, ‘ஞானபாநு’வில் எட்டுப் பக்கத்திற்குக் குறையாது வரும்படியாக தமிழ் பாஷையின் சிறப்பைப் பற்றியாவது திருவள்ளுவ நாயனாரின் சரித்திரத்தையாவது எழுதுவோருக்கு, ரூபா ஐந்து இனாமளிப்பதாகத் தமிழபிமானியொருவர் முன் வந்திருக்கிறார்.

சமஸ்கிருதச் சொல்லாகிய கஜம் திரிந்து தமிழில் கயம் என்றாகியிருப்பது போன்ற திரிபுச் சொற்களும் உபயோகப்படுத்தலாகாது. சுருக்கத்தில், எந்த பாஷையின் சொற்களுக்கும் சம்பந்தமில்லாத தனித்தமிழ்ச் சொற்களே உபயோகிக்கப்பட வேண்டும்.

வியாசங்கள் வருகிற ஆவணி மாதம் 15ஆம் தேதிக்குள் நமது ‘ஞானபாநு’ காரியஸ்தலத்திற்கு அனுப்பிக் கொடுக்கப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்படுகிறது. வெகுமதிக்குரித்தாகிய வியாசமானது நமது பத்திரிகையில் பிரசுரிக்கப்படும். இவ்விஷயத்தைப் பற்றி மற்ற விவரங்கள் ஏதேனும் வேண்டுவோர் கீழ்க்கண்ட விலாசத்திற்கு எழுதித் தெரிந்து கொள்க. இவ்விளம்பரம் 1915 சூலை மாத ஞானபாநு இதழில் வெளியிடப் பெற்றது.

இதே விளம்பரத்தை ‘சுதேசமித்திர’னில் வெளியிடுமாறு சிவா வேண்டுகோள் விடுத்தார். இவ்விளம்பரத்தை வெளியிட சுதேசமித்திரன் உரிமையாளர் கட்டணம் கேட்டு மடல் எழுதினார். சுதேசமித்திரன் மீது சிவா கருத்துப் போர் தொடுத்தார். ஐந்து ரூபா விளம்பரத்தை, சுதேசமித்திரனில் வெளியிடுமாறு சிவா விடுத்த வேண்டுகோளை, சுதேசமித்திரன் உரிமையாளர் குறிப்பிட்டு எழுதிய கடிதம் வருமாறு – Dear SIr, தங்கள் லெட்டருடன் அடக்கம் செய்தனுப்பியுள்ள மாட்டரையெமது பேரில் பிரசுரம் செய்ய தினப் பதிப்புக்கு 5 ரூபாயும் குறைந்த சார்ஜாகும். மேற்படி சார்ஜை அனுப்பிவித்தால் விளம்பரம் உடனே பிரசுரம் செய்யப்படும்.

இப்படிக்கு,
T.S.Viswanathan

சிவா இந்தக் கடிதத்தை வைத்தே தமது தாக்குதலைத் தொடுத்தார். முதலில் மேற்காணும் கடிதத்தில் இருந்த ‘லெட்டர்’, ‘மாட்டர்’, ‘பேபர்’, சார்ஜ் எனும் ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி அக்கடிதம் பின்வருமாறு அமைதல் வேண்டும் என்பதைக் குறிப்புரையுடன் ‘ஞானபாநு’வில் வெளியிட்டார்.

“ஆங்கிலம் தெரியாத தமிழர் நமது வாசகர்களில் அநேகர் இருப்பாராகையால் அவர்கள் இக்கடிதத்தைத் தெளிவாகப் படித்து அறிந்து கொள்ளும் பொருட்டும், இந்தக் கடிதத்தை ஆங்கிலம் கலவாத தமிழில் எழுதுதல் சுலபமென்று சுதேசமித்திரன் பத்திராதிபர் தெரிந்துகொள்ளும் பொருட்டும் நாம் அக்கடிதத்தை ஆங்கிலம் கலவாத தமிழில் எழுதுகிறோம். அது பின்வருமாறு:

அன்பார்ந்த ஐயா, தங்கள் கடிதத்துடன் அடக்கம் செய்தனுப்பியுள்ள விஷயத்தைப் பொது பத்திரிகையில் பிரசுரம் செய்ய தினப் பதிப்புக்கு மாதம் 1-க்கு 8 ரூபாயும் வாரம் மும்முறைப் பதிப்புக்கு 5 ரூபாயும் குறைந்த விகிதமாகும். மேற்படி விகிதத்தை அனுப்பிவித்தால் விளம்பரம் உடனே பிரசுரம் செய்யப்படும்.

இப்படிக்கு

டி.எஸ்.விஸ்வநாதன் சொந்தக்காரர்

இதைத் தொடர்ந்து 8-8-1915இல் பின்வரும் மடலை எழுதினார்:

“ஐயா

தங்களுடைய 6/8/15 கடிதம் வரப்பெற்றோம். அடக்கம் செய்து அனுப்பப்பட்டிருந்த ‘இனாம் ரூபாய் ஐந்து’ என்ற விஷயம் எமக்கு எவ்வகையினும் லாபம் கொடுக்கக் கூடியதன்று. பிற பாஷைச் சொற்களைக் கலவாமல் தனித்தமிழில் எழுதுவோருக்கு இனாம் கொடுப்பதால் நம்மவரைத் தமிழ்ப் பாஷையிலேயே எழுதும்படி தூண்டலாம் என்பதே எமது நோக்கம். இதைத் தாங்கள் ஊதியத் தரத்தக்கதோர் விளம்பரம் எனக் கருதி, தங்களுடைய பத்திரிகையில் பிரசுரிப்பதற்குக் கூலி கேட்டது எமக்கு ஆச்சர்யமாயிருக்கிறது. ‘சுதேசமித்திரன்’ சுய பாஷைக்கு மித்திரனாயிருக்கும் என்றே இதுகாறும் நினைத்திருந்தோம். இப்பொழுது தங்களுடைய கடிதத்தின் மூலமாக எமக்கு இவ்விஷயத்தில் ஒரு பெரும் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.

தமிழ் பாஷையைத் தனிப்பாஷையென்று தமிழ்ப் பண்டிதர்களில் பலரும் மண்டையுடைத்துக் கொள்கிறார்கள். இப்பொழுதோ, தமிழர்களுக்குள் பெரும்பான்மையாக வழங்கி வரும் மிக்க பத்திரிகைகளும் தமிழ் பாஷையைச் சித்திரவதை செய்கின்றன. இது மிகவும் விசனிக்கத்தக்கது. தங்களுடைய பத்திரிகைக்கு தான் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். ஆகையால் தமிழ் பாஷையை ஆதரித்துக் காப்பதற்குத் தாங்களும் தங்களுடைய பத்திரிகைகளுமே முயற்சிக்க வேண்டும். ஆகையால் மேற்படி ‘இனாம் ரூபாய் ஐந்து’ விளம்பரத்தைத் தங்களுக்கு இஷ்டமிருந்தால் தங்களுடைய பத்திரிகையில் பிரசுரிக்கவும்.

தங்கள் உண்மையுள்ள,
சுப்பிரமணிய சிவம் பத்திராதிபர்

இம்மடலுக்குப் பிறகும் சுதேசமித்திரன் சிவாவின் விளம்பரத்தை வெளியிடவில்லை. இதே போல், இந்துநேசன் என்ற இதழும் வெளியிட மறுத்தது. இதனைக் கண்டித்துத் தம் ‘ஞானபாநு’ இதழில் சிவா எழுதியதாவது,

நாம் இவ்விஷயத்தைக் குறித்து விளம்பரங்கள் பிரசுரிக்கும்படி பல பத்திரிகைகளுக்கும் எழுதிக் கேட்டுக் கொண்டோம். நமது வேண்டுகோளுக்கிணங்கி சில பத்திரிகைகள் பிரிசுரித்தன. ஆனால் நமது சென்னையில் நடைபெறும் இரண்டு தினசரிப் பத்திரிகைகளும் இவ்விளம்பரத்தைப் பிரசுரிக்க மறுத்துவிட்டன. ‘பன்மை எழுவாய்க்கும் பயனிலை ஒருமையாகப் பிரசுரிக்கப் படித்திருக்கும் பத்திரிகை நமது நாட்டில் அறிவின்மையையே விருத்தி செய்யும் என்பதில் சந்தேகம் என்ன? அந்நியச் சொற்களைக் கேட்பாரில்லாமல் பிரயோகித்துத் தமிழிலக்கியத்தையும் ஒருமைப் பன்மை கூடத் தெரியாது கண்டவாறெல்லாம் எழுதித் தமிழிலக்கணத்தையும் சித்திரவதை செய்கின்றன. 'இந்து நேசன்' எங்ஙனம் நமது விளம்பரத்தைப் பிரசுரம் செய்யும்?

“சுதேசமித்திரனோ ஐரோப்பிய நடையைப் பின்பற்றி உலாவும் பத்திரிகையன்றோ? தனித்தமிழ் எழுதினாலும் சரியே, கலப்புத் தமிழ் எழுதினாலும் சரியே, அதற்கு வேண்டியது பணம்தான் போலும்.”

“ஹிஸ் எக்ஸெல்லென்ஸி கவர்னர்” "யூவர் மெஜஸ்டிக் ஓபீடியண்டு ஸெர்வண்டு” என்ற வார்த்தைகளெல்லாம் சுதேசமித்திரனில் பிரசுரிக்கப்படுகின்றன. தமிழ் ஜனங்களுக்குச் சுதேசமித்திரன் அறிவைப் பரப்புகின்றதா? அல்லது ஆங்கில பாஷையைப் பரப்புகின்றதா?

"இந்த இரண்டு பத்திரிகைகளும் அழகிய பெயர்களையுடைத்தாயிருந்தும் அப்பெயர்கட்கொவ்வும் செயல்களைச் செய்யாமை மிகவும் விசனிக்கத்தக்கது. ஸ்வய பாஷையை ஆதரியாத பத்திரிகைகள் ஸ்வய தேசத்தை எங்ஙனம் முன்னேற்றத்திற்குக் கொண்டுவரப் போகின்றனவோ? தெரியவில்லை. ஆனால் நம்மவர்கட்கும் இவ்விரண்டு பத்திரிகையைத் தவிர வேறு தினசரிப் பத்திரிகைகள் இல்லையே! தட்டிச்சொல்ல ஆளில்லா விட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் தானே!” என்றெழுதினார். சுப்பிரமணிய சிவாவின் விளம்பரமும், மடலும், இந்துநேசன், சுதேசமித்திரன் ஆகியவற்றைக் கண்டித்து எழுதிய குறிப்பும் அவரது தமிழ்ப் பற்றை மட்டுமின்றித் தனித்தமிழ் ஆர்வத்தையும் தெளிவுபடுத்துகின்றன.

சுப்பிரமணிய சிவா தம் தனித்தமிழ் முயற்சியினை ஓர் இயக்கமாகவே கருதியிருந்தார் என்பது மேலும் சில சான்றுகளால் தெளிவாகிறது. இக்கருத்துப் போரில் வ.உ.சிதம்பரனாரும் கலந்துகொண்டு சுதேசமித்திரனின் கலப்புத் தமிழுக்கு எதிராக பாரதி என்ற மாத இதழில் கட்டுரை எழுதினார். இவரைத் தொடர்ந்து பரலி சு.நெல்லையப்பர் நடத்திய ‘லோகோபகாரி’ இதழும் இந்தக் கருத்துப் போரில் ‘ஞானபாநு’ வின் சார்பில் பங்கு கொண்டது.

சிவாவும் ஞானபாநுவில் சுதேச மித்திரனுக்குப் பதிலளித்துக்கொண்டு தன் கருத்தை வலியுறுத்திக்கொண்டே இருந்தார். சுதேசமித்திரனுடைய நடையும் தன்மையும் இப்பொழுது நல்வழியில் சீர்திருத்தப்பட வேண்டும். அப்படிச் செய்யாமல் முயலுக்கு மூன்றே கால் என்ற பழமொழிப்படி ஒரு பிடிவாதமாக, சுதேசமித்திரன் தன்னுடைய பிற பாஷா நடையையும் தன்மையையுமே அனுசரித்து வருமானால் அது செய்ய வேண்டிய வேலை செய்து முடித்தாய் விட்டதென்றும் இனிமேல் அதற்கு நமது நாட்டில் வேலை இல்லை என்றும் நாம் விசனத்துடன் வெளியிட வேண்டியிருக்கின்றது.”

1915 அக்டோபர் ஞானபாநு இதழில் கட்சிக் கட்டுப்பாட்டை விடவும் கன்னித் தமிழ் மொழியின் வளர்ச்சியே பெரிதாகக் கருதிய அந்நாளைய தேசபக்தர் எல்.எஸ்.சுப்பராய அய்யர் சிவாவின் தனித்தமிழ் முயற்சிக்கு ஆதரவளித்து எழுதிய ‘தமிழின் தற்காலநிலை’ என்ற கட்டுரையை சிவா வெளியிட்டார். அக்கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு:

என்னைப் பற்றியே சொல்கிறேன். என் நாட்டுப் பாஷையும் வீட்டுப் பாஷையும் தமிழ்; பெற்றதும் பாலூட்டி வளர்த்ததும் தமிழ்; எல்லாமே தமிழ்; ஆயினும் என்ன? பாஷா பரிமாணத்தைச் சொல்லி அவமானித்துக்கென்ன குறை? சமஸ்கிருதம் தெரியாது, ஆங்கிலமோ சொற்பந்தான் தெரியும்; எனினும் வழங்கும் போது பத்துக்கு
சமஸ்கிருதம் 3; இங்கிலீஷ் 2, துலுக்கு 1; மற்றவை 1; எனக்கு அப்படித்தான் வழக்கம்.” பிறமொழிக் கலப்புக் குறித்து, “ஆதியிலிருந்தே பூர்வீக ஆசிரியர்களுடைய சகவாசம் வந்தது முதலே தமிழுக்குச் சமஸ்கிருதம் முதல் சத்துருவாயிற்று. அது ‘தேவபாஷை’, ‘தெய்வ பாஷை’ என்று பூஜிக்கப்பட்டதால் தமிழர்களால் ஆவலோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிறகு நவாபு தர்பாரில் இராஜபக்திக்காகவும் பயத்துக்காகவும் இந்துஸ்தானியும் தடையிலாது ஏற்று வழங்கப்பட்டது. தற்காலம் இராஜாங்க பாஷையாகிய ஆங்கிலமோ ஏகச் சக்ராதிபத்யம் பூண்டு மற்ற எல்லா பாஷைகளையும் ஆளுங்கால், அதன் சொந்தக்காரரைக் கப்பம் செலுத்திக் கைகட்டித் தூர நின்று மரியாதை செய்ய ஏவி எங்கும் செல்லுகிறது. இவ்விதம் மீறியுள்ள அந்நிய சத்துருக்களால் தாக்கப்பட்டும் போதாமல், உட்கலகக்காரர்களாகிய தெலுங்கு, கன்னடம் முதலியவைகளால் பாதிக்கப்பட்டும் குலஸ்திரியான தமிழ்மாது பொறுமையோடு அடங்கி நிற்கிறாள். ஆனால் இந்தப் பொறுமை துராகிருதமாக நுழைந்த சத்துருக்களுக்கு இடமேயின்றி அனுபவ பாத்யத்தையும் கொடுத்து, தான் ஏமாந்து நிற்கவும் இடம் உண்டாக்குகிறது. அந்தோ! காலத்தின் போக்குக்கும் குணத்துக்கும் சன்மானம் என்னே! அந்தோ! கோடிக்கணக்கான பிள்ளைகளைப் பெற்ற தமிழ்மாது தன் பிள்ளைகளால் தானறியப்படாமல் போனதன்றி பிற சொற்களைப் பார்த்துத் தன் பெயராலே அழைக்கும் மதியற்ற குழந்தைகளைப் பெற்ற விபரீதம் என்னே! இக்கொடுமையை மாந்தர் சகிப்பரோ?

1915 அக்டோபர் 1, 6, 15 நாளிட்ட சுதேசமித்திரன் இதழ்களில் பாரதபுத்திரன் என்பவர் ஞானபாநுவிற்கு மறுமொழி எழுதினார். அதற்கு மறுமொழியாக, 'நாமும் சுதேசமித்திரனும்' எனும் கட்டுரை வெளிவந்தது. அதில் “ஆங்கிலச் சொற்கள் கலவாத தமிழ் எழுத வேண்டுமென்றும் எப்பொழுதும் கூறிவருகின்றோமேயொழிய சமஸ்கிருதச் சொற்களையும் கலவாத தனித்தமிழ் எழுதவேண்டுமென்று நாம் ஒருபொழுதும் கூறினதில்லை” என்று சிவா குறித்தார். இக்கருத்தை ஒட்டி சிவாவின் எழுத்துக்களைக் கூர்ந்து பார்க்கும் போது தனித்தமிழ் கொள்கையைக் குறித்து எழுதிய இடங்களிலெல்லாம் ஆங்கிலச் சொற்களைத் தமிழ்நடையில் களைவதே வலியுறுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருதச் சொற்களை அல்ல. இதைப் பார்க்கும் போது சிவாவின் தனித்தமிழ்க் கொள்கை நிறைவெய்தியாக அமையவில்லை. ஆனால் மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம் 1916இல் சமஸ்கிருதச் சொல் ஆதிக்கத்தைத் தமிழ்நாட்டில் முற்றிலுமாக எதிர்த்தது என்பதும் இங்கு நினைவிற்குரியது.

சிவாவின் தனித்தமிழ் முயற்சிகளைக் குறித்து டாக்டர் கா.சிவத்தம்பி தமது 'தனித்தமிழ் இயக்கத்தில் அரசியற் பின்னணி' எனும் நூலில் கூறுவதாவது: தனித்தமிழ் மக்களிடையே பிரச்சாரம் செய்யும் ஓர் இயக்கம் 1916க்கு முன்னரே (1915 ஜூலையிலேயே) நிலவியது என்பதற்கு (இனாம் ஐந்து ரூபா கடிதம்) இக்கடிதம் சான்று தருகிறது. ஞானபாநுவில் நடத்தப் பெற்ற இவ்வியக்கம் இதழுடன் நின்றுவிட்ட ஒரு விஷயமல்ல என்பதும் தெரிய வருகின்றது. சுப்பிரமணிய சிவா அவர்கள் தனித்தமிழில் எழுதுவதனை ஓர் இயக்கமாகவே நடத்தி வந்தாரென்பது தெரிய வருகிறது.

திரு.வி.க. முதலானோர் தமிழ்மொழி பயன்படுத்தப்படுவது பற்றி இயக்கம் நடத்தியதை விமர்சனம் செய்துவிட்டு, மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம் 1916இல் தோன்றியது என்றும் சிவாவின் தனித்தமிழ் இயக்கம் 1915இல் தோன்றியது என்றும் சுட்டிக் காட்டுகிறார் சிவத்தம்பி.

மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தில் சமஸ்கிருதச் சொற்களின் களையெடுப்பு வலியுறுத்தப்பட்டது. இக்கொள்கை சிவாவின் தனித்தமிழ் இயக்கத்தில் கால் கொள்ளவில்லை. சிவாவின் எழுத்தில் சமஸ்கிருதச் சொற்களின் விழுக்காடு மிக அதிகம்.

போராட்டத்திற்குத் தீர்வு என்ன?

தனித்தமிழ் நடையில் இந்த இருவேறு நிலைப்பாடுகளைப் பற்றிய தீர்வுக்கான தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சியின் ஆய்வுரையை டாக்டர்.கா.சிவத்தம்பி மேற்கோளாகக் காட்டியுள்ளார். “பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள் போன்ற பெரும் புலவர்கள் பண்டிதர்களானோர் படிப்பதற்காக அவர்கள் ஈடுபட்டிருந்த மொழித்துறை பற்றியே அந்நாளில் நூற்கள் இயற்றினர். சாதாரண பொதுமக்களோடு அவர்கள் எந்த வகையிலும் தொடர்பு கொண்டவர்களாகவிருக்கவில்லை. ஆகவே வடமொழிச் சொல் கலவாத தனித்தமிழில் எழுதுவதைக் கொள்கையாகக் கொண்டிருந்தனர். அதனால் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படவில்லை. ஆகவே வ.வே.சு.ஐயர், பாரதியார், சுப்பிரமணிய சிவம் ஆகிய தேசியத் தலைவர்கள் நிலை இதற்கு முற்றிலும் வேறுபட்டதாகும். அவர்கள் சாதாரணப் பொது மக்களோடு தொடர்புகொண்டு அவர்களிடையே தேசபக்தியை, ஏகாதிபத்திய எதிர்ப்புணர்ச்சியை பரப்புவதற்காகவே பத்திரிகை நடத்தினார்கள், நூல் எழுதினார்கள் ஆகவே, வழக்கில் வந்துவிட்ட வடமொழிச் சொற்கள் கலவாத தனித்தமிழில் எழுதுவதையோ பேசுவதையோ அவர்கள் விரும்புவதில்லை. அதனால் அவர்களுடைய தனித்தமிழ்க் கொள்கை ஆங்கில ஆதிக்கத்துக்கு மட்டுமே எதிராக இருந்தது. மறைமலை அடிகள், சிவா ஆகியோரின் தனித்தமிழ் நடை கொள்கையைத் தீர்மானித்து அவர்களுடைய அரசியல் நோக்கே என்ற கண்ணோட்டத்தில் டாக்டர் கா.சிவத்தம்பி ஆய்ந்துள்ளார்.

முடிவுரை

இக்கருத்துப் போர் இயக்க நிலையில் மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் தொடங்க, முன்னோடியாக அமைந்தது எனலாம்.

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்