தேசியக் கல்விக் கொள்கை-2019 வரைவு அறிக்கை 484 பக்கங்களுடன் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை ‘கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை’ என்றுதான் கூறவேண்டும்.  பிரதமர் மோடியின் முதல் ஆட்சிக் காலத்திலேயே அமைக்கப்பட்டு விட்டது.  இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

புதிய கல்விக்கொள்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கும், அரசமைப்பின் அடிப்படை அம்சத்திற்கும் எதிரானது என்று கூறப்படுகிறது.  இதுபற்றி நாடு தழுவிய அளவில் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்குப் போதிய அவகாசம் தரப்படவேண்டும் என்றும் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் போர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.

hindi 600ஏற்கெனவே வெளிவந்த கல்விக் குழுக்களின் அறிக்கைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.  தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை மாற்றங்களைப் புகுத்த ஆயத்தமாகிறது.  இக்கல்விக் கொள்கை முந்தைய கல்வியாளர்களின் பரிந்துரைகளுக்கு நேர்மாறானதாக உள்ளது.

டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு அறிக்கை, இலட்சுமணசாமி  முதலியார் குழு அறிக்கை, கோத்தாரி குழு அறிக்கை போன்ற கல்வியாளர்களின் பரிந்துரைகளின் அடித்தளத்தையே புரட்டிப் போட்டு இந்துத்துவக் கொள்கைகளுக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.  இதனை மறுத்து மும்மொழிக் கொள்கை என்ற பெயரால் இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனைக் கல்வியாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தும், இரண்டே நாளில் கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கையில் புதிய திருத்தம் வெளியிடப்பட்டது.  இந்தியைத் திணிப்பது இல்லை என்றும் ஆனால் மும்மொழித் திட்டம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக இந்தியை அல்லது சமஸ்கிருதத்தை தமிழகம் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை.  மத்திய அரசு கொண்டுவரும் மும்மொழித் திட்டத்தின் நோக்கமே அதுதான்.

“மூன்றாவது மொழியை மாணவர்களே விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் எனப் பரிந்துரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  ஆனால் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்பதே மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்கான அடையாளம்” என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

1968-இல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியின் போது முதல் தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது.  அனைத்து குழந்தைகளுக்குமான கட்டாயக் கல்வியை நிறைவேற்றுவது என்று அறிவித்த அந்தக் கொள்கையில்தான் மும்மொழித் திட்டமும் புகுத்தப்பட்டது.

அதற்குத் தமிழ்நாடு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது.  1986-இல் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தார்.  குறிப்பாக தலித், பழங்குடி குழந்தைகளுக்கான கல்வியில் பாகுபாடுகளை அகற்றுதல் அதன் நோக்கமாகக் கூறப்பட்டது.  அதுவும் மும்மொழித் திட்டத்தையே வலியுறுத்தியது.

பாரம்பரியம், கலாச்சாரம் என்ற பின்னணியைக் கூறி சமஸ்கிருதத்தை ஒரு மொழிப்பாடமாகக் கற்பிக்க வழி செய்யப்பட்டது.  1992-இல் நரசிம்மராவ் அதில் மாற்றங்கள் செய்தார்.  2005-இல் பிரதமராக இருந்த மன்மோகன் ஆட்சியில் அது செயல்படுத்தப்பட்டது.  அதில்தான் மருத்துவம், பொறியயல் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் புகுத்தப்பட்டன.

இப்போது மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு ஆவணத்தில் இடைநிலைப் பள்ளி வரையில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  சில மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக ‘இந்தித் திணிப்பு’ பற்றிய வரிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இரயில்வேயில் பணியாற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், இரயில் நிலைய அதிகாரிகளுக்கு இடையே தகவல் தொடர்புக்கு இனி இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டுமென்று தெற்கு இரயில்வே உத்தரவிட்டுள்ளது.  இதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

மதுரை அருகே கடந்த மாதம் 10-ஆம் நாள் ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் இயக்கப்பட்டன.  இருப்பினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  இரயில்வே அதிகாரிகள் பேசிக்கொண்ட வெவ்வேறான மொழியால் ஒருவரின் தகவலை மற்றவர் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கலே இந்த நிகழ்வுக்குக் காரணம் எனத் தெரிய வந்தது.

இதனால் இனி யாரும் மாநில மொழியில் பேசிக் கொள்ளக் கூடாது என தெற்கு இரயில்வே கடந்த ஜூன் 12, 2019 சுற்றறிக்கை வெளியிட்டது.  அதில் “கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இரயில்வே நிலைய அதிகாரிகளுக்கு இடையே தகவல் தொடர்புக்கு இனி இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசவேண்டும்.  தொடர்பை மேம்படுத்தும் நோக்கிலும் தொடர்பு கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த உத்தரவை மாற்றம் செய்து மறுஉத்தரவை வெளியிட்டது.  ‘அதிகாரிகள் தாங்கள் பிறப்பிக்கும் கட்டளைகள் அனைத்தும் தெளிவாகவும், எளிதாகவும் புரிந்துகொள்ளும் வகையில் பேசிக்கொள்ளலாம்’ என்பதே அந்த மாற்றமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக தெற்கு இரயில்வேயில் இந்திய மொழி பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  குறிப்பாக இரயில் நிலைய மேலாளர்கள் பிரிவில் 40 விழுக்காடு இந்திக்காரர்களாக இருக்கின்றனர்.  இவர்களுக்குத் தமிழ் மொழி முழுமையாகத் தெரியாது.  இவ்வாறு மத்திய அரசு அலுவலகங்கள் எல்லாம் இந்திக்காரர்களால் நிரப்பப்படுகிறது.

இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்க முற்படும் பாஜகவின் ஆர்வக் கோளாறு மிகவும் ஆபத்தானது.  தேசத்தின் மொழிகள் பற்றிய விவரங்களும், அதைப் பேசுவோர் பற்றிய புள்ளி விவரங்களும் மத்திய அரசிடம் இல்லை.  இந்நிலையில் இந்தி பேசுவோர் பெரும்பான்மை என்று தவறாகக் கூறுகின்றனர்.

மொழிப் பிரச்சனையில் நமது நாடு பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது.  தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா போன்ற பல மாநில மக்கள் தம் மொழிக்காகப் போராடியுள்ளனர்.  இந்தப் போராட்டங்களை ஆட்சியாளர்கள் அவ்வப்போது மறந்துபோய் விடுகின்றனர்.  மற்றொரு போராட்டத்தின் மூலம் அவற்றை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

இந்தியாவில் மட்டும்தான் குழந்தைகள் மூன்று மொழிகளைக் கற்கக் கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.  இந்தியாவில் நூற்றுக் கணக்கான மொழிகள், குறிப்பாக பழங்குடி இன மக்களின் மொழிகள் ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தை இழந்துள்ளன.  அந்தக் குழந்தைகள் நான்கு மொழிகளைக் கற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் சுமார் 4. 7 கோடி குழந்தைகள் பத்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை கைவிட்டு விட்டனர் எனக் கண்டுபிடித்துக் கூறியுள்ளது.  இதற்கு என்ன காரணம்?

பெண் குழந்தைகளை ஒதுக்குதல், குடும்பப்பொருளாதாரம், இவற்றோடு இன்னொரு முக்கிய காரணம் மொழிச்சுமையும் ஆகும்.  குழந்தைகள் பல மொழிகளைக் கற்கக் கட்டாயப்படுத்துவதால் பள்ளிப் படிப்பை வெறுத்துக் கைவிடும் போக்கு உருவாகிறது.

இந்தியா பலமொழிகளைப் பேசும் ஒரு துணைக் கண்டமாக இருக்கிறது.  இந்த நிலையை மாற்றி ஒரு நாடாக ஆக்க வேண்டுமானால் இந்தியை அனைவரும் பேசும்படி செய்ய வேண்டும் என்று போலி தேசிய வாதிகளும், இந்துத்துவ அமைப்புகளும் திட்டம் போட்டு செயலாற்றுகின்றன.

இந்தியைத் திணிப்பது என்பது மாநிலங்களுக்கு அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் செயலாகும்.  யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போன்றதாகும்.

உலகத்தின் சிறந்த உயர்தனிச் செம்மொழிகளில் தமிழுக்கும் இடம் உண்டு.  கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் இந்தப் பட்டியலில் சீனமும், தமிழும்தான் இன்றும் வழக்காற்றில் உயிரோடு உள்ளன. 

“கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலை                                                     யாளமும் துளுவும்

உன்னுதரத் துதித்தெழுந்து ஒன்றுபல                                                                 ஆயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து                                                             சிதையா உன்

சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து                                                              வாழ்த்துதுமே”

என்று மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை இதுபற்றியே பாடிவைத்தார்.

இந்திய மொழியியலை ஆராய்ந்த கால்டுவெல் இந்திய மொழிகளை திராவிட மொழிக் குடும்பம் என்றும், ஆரிய மொழிக்குடும்பம் என்றும் இரண்டாகப் பகுத்தார். திராவிட மொழிக் குடும்பத்திற்குத் தமிழே தாய் என்றும், ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததே சமஸ்கிருதம் என்றும் அறுதியிட்டுக் கூறினார்.

“தமிழ் பழைமையானது; நலம் சிறந்தது; உயர்நிலையில் உள்ளது.  விரும்பினால் வடமொழி உதவியின்றி இயங்க வல்லது” என்பது ஆய்வாளர் டாக்டர் கால்டுவெல் கூற்று.

சமஸ்கிருதத்தை தேவமொழி என்று கூறி அன்று முதல் இன்றுவரை மத்திய ஆட்சியாளர்கள் செல்லப்பிள்ளையாக வளர்த்து வருகின்றனர்.  மக்களின் வரிப் பணத்தை வாரி வழங்குகின்றனர்.  ஆயினும் அந்த மொழி செத்த மொழியாகவே இன்னும் இருந்து வருகிறது. உயிரூட்டும் முயற்சியும் ஓயவில்லை.

“இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு சமஸ்கிருதத்துக்கு உள்ள சிறப்பு முக்கியத்துவத்தையும், அறிவு வளர்ச்சிக்கும் நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்குமான அதன் தனித்துவப் பங்களிப்பையும் கவனத்தில் கொண்டு சமஸ்கிருதப் படிப்புக்கான வசதிகள் பள்ளிகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் செய்யப்படும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எக்காலத்திலும் மக்கள் பேசும் மொழியாக சமஸ்கிருதம் இருந்ததில்லை.  மக்களால் பேசப்படாத ஒரு மொழியை மாணவர்கள் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது.  எல்லாக் கல்விக் கொள்கைகளிலும் இது இடம் பெறுவதன் மூலம் அதன் அரசியல் ஆதிக்கத் தன்மையை அறிய முடிகிறது.  தமிழ், இந்தி, சமஸ்கிருதம் என்னும் இந்த முக்கோணம் முரண்பாடுகளின் முக்கோணம்.

Pin It