சட்டம் ஒழுங்கு என்றால் என்ன விலை என்று கேட்டு, அதை மொத்த விலைக்கே வாங்கிவிட்டனர் திமுகவினர். 2011க்கான திமுக தேர்தல் அறிக்கையை விளக்கி மார்ச் 23ல் திருவாரூரில் பேசிய கலைஞர் “மணல் கடத்தல், அரிசி கடத்தல், கந்துவட்டிக்கொடுமை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். அதே போல மற்றவர்களை மிரட்டி, அச்சுறுத்தி பணம் பறிக்கும் கட்டப் பஞ்சாயத்தும் ஆங்காங்கே தலைதூக்கியுள்ளது. இதற்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தேர்தல் அறிக்கையில் விட்டுப்போனதையும் சேர்த்து பேசியுள்ளார்.

அதாவது மேற்கண்ட குற்றங்கள் தமிழகத்தில் தற்போது நடைபெறுவதையும், அதிகரிப்பதையும் அவரே ஒப்புக்கொண்டுள்ளார். ஏனெனில் அவரால் அதை மறுக்கவோ, மறைக்கவோ இயலாது என்பதே உண்மை. இதற்காக தமிழகத்தில் நடைபெற்றுள்ள கொலைகளும், கொடுமைகளும் என்னவென்று மக்கள் அறிவர். கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர், பள்ளிப்பாளையம் வேலுச்சாமி படுகொலை, மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுடலைமுத்து மற்றும் தாசில்தார் ஆகியோர் படுகொலை, கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராடிய சி.பி.ஐ(எம்) ஊழியர் நாவலன், திமுக செயலாளராலேயே வெட்டிப்படுகொலை செய்யப்பட்டது என தொடர்ந்து நடந்த படுகொலைகள் சொல்லும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு யாரிடம் மண்டியிட்டு கிடக்கின்றன.

அனைத்து ஆறுகளிலும் மணல்கொள்ளை நடக்கிறது. ஓர் ஆண்டில் 70 லட்சம் லாரி லோடு என 5 ஆண்டில் மட்டும் ரூ. 59,500 கோடி ரூபாய் அளவிற்கு நடந்துள்ள மணல்கொள்ளையை ஏன் தடுக்க முடியவில்லை கலைஞரால்? மதுரையில் நடப்பது தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு ஆட்சியல்ல என்பதை தமிழகமே அறியும். தினகரன் அலுவலகத்தில் நடந்த கலவரங்களும், 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்டதும் யாரால் என அதிகம் விசாரிக்க வேண்டாம். சாட்சியங்களாய் உள்ளவர்கள் கலைஞரின் மனச்சாட்சியாய் இருப்பதால் உளவுத்துறை அவசியமே இங்கு தேவையில்லை.நெல்லை மாவட்டத்தில் அரசு விழாவிற்காக சென்ற சுகாதாரத்துறை அமைச்சரின் பாதுகாப்புக்காக சென்ற காவல்துறை ஆய்வாளர் அவர் கண்முன்னே கொலை செய்யப்பட்டபோது, தண்ணீர்கேட்டு கதறி இறந்துபோன துயரம் யார்மறப்பர்? விழுப்புரம் மாவட்டம், ரெட்டணையில் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் நியாயமான கூலிகேட்டு போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, விவசாயிகளை ஒழுங்கு செய்யவா? ஒடுக்கவா?

உலக வரலாற்றிலேயே முதன்முறையாக நீதிமன்றத்தில் நீதிபதிகளே காவல்துறையால் தாக்கப்பட்டதும் தமிழகத்தில்தான். அதே நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டக்கல்லூரியிலோ ஒரு மாணவனை பலர் சூழ்ந்து தாக்கும்போது கைகட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் முதல்வர் பொறுப்பில் உள்ள காவல்துறை தான். சந்தி சிரிக்கிறது சட்டம் ஒழுங்கை பார்த்து1 ரூபாய்க்கு ரேசனில் விற்கப்படும் அரிசியையும், இலவச வண்ணத் தொலைக்காட்சியையும் கடத்திட ஆளும் கட்சி உதவியில்லாமல் யாரால் முடியும்? சென்னையில் அனைத்திந்திய மாதர் சங்கத் தலைவர் ஒருவர் நேரடியாக நின்று அரிசியை கடத்துபவரை மடக்கினார். பல இடங்களில் மணல் கொள்ளைகளை மக்களே மடக்கினர். காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?

திமுக-வின் மாநில அமைச்சராக இருந்த என்.கே.பி.பி ராஜா ஆள்கடத்தல் மற்றும் நில அபகரிப்பு வழக்கில் திமுகவால் நடவடிக்கை எடுக்கப்பட்டவர் தான், ஆனால் இன்று மீண்டும் அவருக்கு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டதன் மூலம் அவரின் சட்டவிரோத செயல்களுக்கும் அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. சேலத்தில் நிலம் தர மறுத்ததால் 6 பேர் ஒரே குடும்பத்தில் படுகொலை செய்யப்பட்டது வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினரால் தான். கொலையாளியை சேலம் மத்திய சிறையில் அரசு காரிலேயே சென்று சந்தித்து விட்டு வந்தார் அமைச்சர். சட்டம் என்ன செய்தது? இவை தவிர திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் அவரின் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டதும், முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாச்சலம் கொலை செய்யப்பட்டதும் என கூலிப்படைகளால் நிகழ்ந்த கொலைகள் ஏராளம்.

லீலாவதி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கொலைகாரர்கள் அண்ணாவின் பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டது போன்று ஏராளமான குற்றவாளிகள் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டதுதான் இன்றைய சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு காரணமென தமிழகம் நன்கு அறியும். கலைஞரும் அறிவார். ஆனாலும் இத்தகைய குற்றவாளிகள் பெரும்பாலோர் தற்போது அமைச்சர்களுக்கு பணியாட்களாய் வேலை செய்வதால் அரசு நடவடிக்கை எடுக்குமென யாரும் நம்பப்போவதில்லை. 46 பேர் காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து சென்றபோது மர்ம மரணம், 30 என்கவுண்டர்கள், 2010ல் மட்டும் 1576 கடத்தல்கள் என விவரங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் விவரங்களின் அடியில் நசுங்கி கிடப்பது சட்டம் ஒழுங்குதான்.

ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு வேலை தரும் அரசாணை எண் 170ஐ எதிர்த்து போராடிய வாலிபர்கள் மீது தடியடி மற்றும் 140 பேர் சிறையில் அடைப்பு, பெட்ரோல் விலைஉயர்வுக்கு எதிராக போராடிய வாலிபர்கள் மீது தடியடி, சமச்சீர் கல்வி கேட்ட மாணவர்கள் மண்டை உடைப்பு, தனியார் பள்ளி கட்டண சட்டத்தை அமல்படுத்த போராடிய பெற்றோர்களை கைது செய்தது, உரிமைக்காக போராடிய அரசு ஊழியர்களை அடித்து விரட்டியது, நியாயமான ஊதியம் கேட்டு கோட்டை நோக்கி பேரணியாக கிளம்ப தயாரான சத்துணவு ஊழியர்களை சொந்த ஊரிலேயே கிளம்பும் முன்பே கைது செய்தது, சென்னையில் சத்துணவு ஊழியர்களை தடி கொண்டு தாக்கியது, பாக்ஸ்கான் தொழிலாளர்களை சங்கம் அமைக்கவிடாமல் தடுத்தது, தொழிற்சங்க கொடியை ஏற்றுவதற்கு கூட அனுமதி மறுத்த காவல்துறை தலைவர்களை கைவிலங்கிட்டு கைது செய்த கொடுமை என மக்கள் போராட்டங்களை அரசு அவமதித்த முறையையும் அடக்கி ஒடுக்கிய சம்பவமும் மக்கள் அறிவர்.சென்னையில் ஊர்வலம் என்றால் கூவம் ஓரத்தில் மட்டுமே அனுமதி.

மேலும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் எதுவாக இருந்தாலும் சென்னையில் இரண்டு இடங்களுக்கு மட்டுமே அனுமதி. ஆனால், முதல்வரின் உண்ணாவிரதம் என்றால் கடற்கரையில் அனுமதி. அதுவும் மக்கள் போராட்டத்திற்கு மைக் வைக்கக்கூட அனுமதி இல்லை. ஆனால் முதல்வருக்கோ குளிர்சாதன பெட்டிகள் கூட வைத்துக்கொள்ளலாம் உண்ணாவிரத பந்தலில். இது பாகுபாடா அல்லது இதுதான் சட்டமா? தீண்டாமை கொடுமைக்கு எதிராக போராடிய மக்களை பிரச்சனைகளை உருவாக்கும் வன்முறைக்காரர்கள் என்று சித்தரித்த அரசு, உயர் சாதிக்காரர்களுக்கும், தீண்டாமை வடிவங்களுக்கும் பாதுகாப்பு அளித்த பாகுபாட்டை சட்டம் ஒழுங்கை காப்பாற்ற எடுத்த முயற்சியென கலைஞர் வர்ணிக்கலாம். ஆனால், அரசியல் அமைப்பு சட்டம் அங்கீகரிக்குமா?எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் திமுக வினரால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை மக்கள் நேரடியாக கண்டது சென்னை மாநகராட்சி தேர்தலில்தான்.

கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை சட்டை என்றால் அது ரவுடிகளின் சீருடையே என்ற அளவிற்கு மாற்றியது திமுக தான் என்பதை மக்கள் அறிவர். இப்படி பாழாய்ப்போன சட்டம் ஒழுங்கை சரிசெய்வேன் என வாக்குறுதியோடு கலைஞர் மீண்டும் கிளம்பியுள்ளார். அவர் சொல்வதை போன்று கடத்தல்களையும், மிரட்டல்களையும், அபகரிப்புகளையும் தடுக்கவேண்டுமெனில் அவர் செய்யவேண்டியது ஒன்றுதான் அமைச்சர்களையும், அவர்களின் அடியாட்களாய் உள்ள குற்றவாளிகளையும் சிறையில் அடைக்கவேண்டியதுதான். கலைஞர் செய்வாரா?

(நன்றி: சாவித்திரி கண்ணன் எழுதிய “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்”)

Pin It