peoplewatch electionதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

மானிட சமூகத்தை மீறல்களில் இருந்து மனித உரிமைகளே பாதுகாக்கின்றன என்பது வெளிப்படை. அய்க்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு அகில உலக மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration of Human Rights, 1948) மூலம் மனித உரிமைகளை வரையறுத்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் 1993ஆம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் மனித உரிமைகளை வரையறுத்துள்ளது.

குறிப்பாக வாழ்வுரிமை, சுதந்திர உரிமை, சமத்துவ உரிமை, தனி மனித மாண்புரிமை ஆகிய உரிமைகளை மனித உரிமைகளாக பறைசாற்றியுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய தலையாய கடமை அரசுகளுக்கு உள்ளது. இந்த உரிமைகளைப் போராடிப் பெறுவது குடிமைச் சமூகங்களின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மனித உரிமைகள் சார்ந்த கோரிக்கைகள் இடம்பெறுவது அவசியமாகும். இதனைக் கட்சிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதும், சுட்டிக்காட்டுவதும், வலியுறுத்துவதும் மனித உரிமை அமைப்புகளின் கடமையாகும்.

அந்த வகையில் கீழ்க்கண்ட மனித உரிமை சார்ந்த கோரிக்கைகளைத் தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்கும் தருணத்தில் இக்கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்குமாறு வேண்டுகிறோம். இக்கோரிக்கைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1. உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி தமிழ்நாட்டில் புதிய காவல் சட்டம்:

1996-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பிரகாஷ் சிங் (IPS Rtd) என்பவர் தொடர்ந்த வழக்கில் 2006ஆம் ஆண்டு வழங்கப் பெற்ற காவல் சீர்திருத்தங்கள் சார்ந்த தீர்ப்பில் உள்ள ஏழு கட்டளைகளில் கீழ்க்கண்ட ஆறு கட்டளைகளைத் தமிழ்நாட்டில் செயற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

1.1. காவல்துறைக்கென மாநிலப் பாதுகாப்பு ஆணையம் (State Security Commission) அமைத்து, மாநில காவல்துறை சுதந்திரமாகச் செயற்படும் சூழல் உருவாக்கப்படும்.

1.2. காவல்துறைத் தலைமைப் பதவியான டி.ஜி.பி. நியமனம் வெளிப்படையானதாகவும், பதவிக் காலம் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாகவும் இருக்கும்.

1.3. அனைத்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், காவல் உயர் அதிகாரிகள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் பணிமாற்றம் செய்யப்பெறாமல் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பொறுப்பில் இருப்பார்கள்.

1.4. சட்டம் - ஒழுங்கு பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு இரண்டும் தனித் தனிப் பிரிவுகளாக்கப்படும்.

1.5. காவல்துறையின் அனைத்து நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு, இதர நடவடிக்கைகள் யாவற்றையும் செயற்படுத்த தன்னிச்சையான காவல் நிர்வாக வாரியம் (Police Establishment Board) அமைக்கப்படும்.

1.6. காவல்துறையினர்க்கு எதிராக வரும் புகார்களை விசாரித்து , உரிய நடவடிக்கை எடுக்க மாநில/மாவட்ட அளவிலான காவல் புகார் ஆணையங்கள் (Police Complaint Authority) ஏற்படுத்தப்படும்.

1.7. இத்துடன் 2013-இல் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட காவல் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்று, ஒரு புதிய காவல் சட்டம் கொண்டு வரப்படும் முன், இப்போதுள்ள காவல் சட்டம் 1861-இல் இருக்கக்கூடிய காலனிய ஆட்சிக்காலத்துக் காவல் சட்டத்தைத் தூக்கிவிட்டு, நிபுணர்களை நியமனம் செய்து, மாவட்டந்தோறும் மக்களிடையே விவாதம் நடத்தி பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், மக்களின் அடிப்படை உரிமைகள், சனநாயக நெறிசார்ந்த ஒரு முழுமையான காவல் சட்டத்தைக், கால தாமதமின்றி உருவாக்கி, ஆறு மாத காலத்திற்குள் தமிழ்நாட்டில் செயற்படுத்துவோம்.

2. காவல் சித்திரவதை, காவல் மரணம், சட்டவிரோதக் காவல் பலப்பிரயோகம், போலி மோதல் சாவுகள்:

நாடு முழுவதும் காவல் நிலைய சித்திரவதைகள், காவல் மரணங்கள், சட்டவிரோதக் காவல் பலப்பிரயோகங்கள்,போலி மோதல் சாவுகள் போன்ற மனித உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இத்தகைய மக்கள் விரோத செயற்பாடுகள் நீட்சி பெறாமல் திருத்துவதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்:

2.1. காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்வதை அனுமதிக்காமல். “சித்திரவதை மீதான முழு சகிப்புத்தன்மை” (zero tolerance on torture) என்ற ஒழுக்கநெறி அனைத்துக் காவல் நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

2.2. காவல்துறையினரின் அத்துமீறல் மீதான புகார்களின் மீது கட்டாயமாக ஒரு வெளிப்படையான, நேர்மையான, உரிய விசாரணை விரைவாக மேற்கொள்ளப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

2.3. காவல்துறையினரின் அத்துமீறல் மீதான புகார்களை ஒரு தன்னிச்சையான, சுதந்திரமான, நேர்மையான “மாவட்டக் காவல் புகார் ஆணையத்தின்” விசாரணைக் குழு விரைந்து விசாரணை செய்யும். ஒரு தன்னிச்சையான விசாரணைக் குழு மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையின் இறுதியில் குற்றம் நிருபிக்கப்பட்டால், அவ்வழக்கு மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

காலதாமதமின்றிக் குறிப்பிட்ட வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் வழக்கை முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வழக்கில் மனுதாரர், சாட்சிகள் ஆகியோர்க்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள “சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம்-2018” படி உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இவற்றுக்கான முயற்சிகள் முழுமையாக மேற்கொள்ளப்படும்.

2.4. அனைத்துக் காவல் நிலையங்களிலும் “சித்திரவதைச் சட்ட விரோதமானது - சித்திரவதை தண்டிக்கப்படும் குற்றம் - புகார் அளிக்க மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரை அணுகுங்கள்“ என்ற வாசகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய முழு விவரத்துடன் கூடிய விளம்பரப்பலகை நிறுவப்படும்.

2.5. மாவட்ட / தாலுகா சட்ட உதவி ஆணைக்குழு மூலம் அந்தந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் காவல் நிலைய வழக்கறிஞர் (Police Station Duty Counsel) நியமனம் செய்யப்படும்.

2.6. மேற்குறிப்பிட்ட காவல் நிலைய வழக்கறிஞர்கள் முறையாகச் சிறப்புப் பயிற்சி பெற்ற இளம் வழக்குரைஞர்களாக இருப்பார்கள். இவர்கள் மூலம் அனைத்துக் காவல் நிலையங்களையும் கண்காணிக்கச் செய்ய ஆவன செய்யப்படும். மேற்படி காவல் நிலைய வழக்கறிஞர்கள் நாளொன்றுக்குக் காலை, மாலை, இரவு என மூன்று முறைக் காவல்நிலையம் சென்று கண்காணிப்பார்கள். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல் நிலைய வழக்கறிஞர்களின் புகைப்படத்துடன் கூடிய பெயர், தொடர்பு எண் ஆகியவை எல்லோர்க்கும் தெரியும்படி ஓரிடத்தில் நிறுவப்படும்.

2.7. காவலர்களின் அத்துமீறல்கள் மீதான புகார்களைப் பெற்றதும், உடனடியாக மாவட்டத் தலைவர்க்கும், தாலுகா தலைவர்க்கும் அனுப்பி அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

2.8. கடந்த 2018ஆம் ஆண்டு பரம்வீர்சிங் சைனி எதிர் பல்ஜித் சிங் மற்றும் பலர் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோகிங்டன், எப்.நாரிமன், கே.எம்.ஜோசப், அனிருதா போஸ் அடங்கிய அமர்வு 2.12.2020 அன்று இந்தியாவிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் வருகிற 27.1.2021க்குள் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை நடைமுறைப்படுத்த “நிலையான இயக்க நடைமுறையை” (standard operating procedures) உருவாக்கி முழுமையாகச் செயற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2.9. மக்களுக்குத் தேவைப்படும் சி.சி.டி.வி கேமரா காட்சிப் பதிவுகளை மாவட்டக் காவல் புகார் ஆணைக்குழு அல்லது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாகப் பெற்று மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

2.10. ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் நிறுவப்படும் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்கும் பணியில் பல உயர் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுவார்கள்.

2.11. சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் மரணத்திற்குப் பிறகு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி “காவல்துறை நண்பர்கள்” (Friends of Police) அமைப்பு கலைக்கப்பட்டது. ஆனால் சமூகக் காவல் பணியைக் (community poice) கொண்டு செல்ல அரசு விரும்பினால், ஏற்கெனவே சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஊர்க்காவற் படை (Home Guard) அமைப்புடன் இணைத்து அதன் ஒரு பகுதியாகச் செயற்படும்.

2.12. குற்றம் சுமத்தப் பெற்றவரை நீதிமன்றக் காவலுக்காகக் குற்றவியல் நடுவர் முன் நேர்நிறுத்தும் முன் மேற்கொள்ளப்பெறும் மருத்துவ பரிசோதனைக்கு “நிலையான இயக்க நடைமுறை” (standard operating procedures) உருவாக்கப்படும். மருத்துவர்கள் தன்னிச்சையானவர்கள் அவர்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குபவர்கள் அல்ல என்பது “நிலையான இயக்க நடைமுறையுடன்” (standard operating procedures) இணைக்கப்படும்.

2.13. குற்றம் சுமத்தப்பெற்றவரைக் காவல் நிலையத்தில் இருந்து கொண்டு சென்று, குற்றவியல் நடுவர் முன் நேர் நிறுத்தி, சிறையில் அடைக்க ஒப்புதல் பெற்ற பின் மத்திய சிறை, மாவட்ட சிறை, கிளைச் சிறை, மகளிர்க்கான சிறப்புச் சிறை ஆகியவற்றில் அடைக்க வரும்போது காயங்கள், கடுமையான காயங்கள் இருந்தால், குறிப்பாக அவர்கள் இரவில் கொண்டு வரப்பட்டால் அவரகளைச் சிறையில் அடைக்க அனுமதிக்காமல், தாமதமின்றி உடனடியாகத் தரமான சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்பது “நிலையான இயக்க நடைமுறையுடன்” (standard operating procedures) இணைக்கப்படும்.

குற்றம் சுமத்தப்பட்டவரைக் காவல் நிலையத்திலிருந்து சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லும்போது யாருடைய வாகனத்தில், யாருடைய பயணச்செலவில், யாருடைய பாதுகாப்பில் செல்கிறார் என்பது “நிலையான இயக்க நடைமுறையுடன்” (standard operating procedures) இணைக்கப்படும்.

2.14. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது மாவட்ட மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் மத்திய சிறைச்சாலை, மாவட்ட சிறைச்சாலை, மகளிர் சிறப்பு சிறைச்சாலை ஆகியவற்றில் இருப்பதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும்.

2.15. ஒவ்வொரு கிளைச்சிறைக்கும் “வருகை மருத்துவர்கள்” (visiting doctors) நியமனம் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்படும். இவர்கள் அனைத்துவகை சிறைவாசிகளையும் பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள். ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் காவல்துறை உயரதிகாரிகள் கவனத்திற்கும், மருத்துவத்துறை உயரதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு செல்வார்கள்.

2.16. அறவழியில், அமைதியான முறையில் ஊர்வலம், போராட்டம் போன்றவை நடக்கும் போது காவல்துறையினர் சட்டத்திற்குப் புறம்பான பலப்பிரயோகம் செய்யாமல் முழுமையான சகிப்புத்தன்மையைக் காவலர்கள் பின்பற்றும் நடைமுறைகள் உருவாக்கப்படும். சனநாயக நெறிமுறைகளுக்குட்பட்டு போராடும் உரிமை அனைவர்க்கும் உள்ளது. இதனை மறுக்கும் நிலை முற்றிலும் தவிர்க்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தங்கள் கருத்துரிமையை வெளிப்படுத்தும் விதமாக “போராடுவதற்கான இடங்கள்” ஒதுக்கப்பட்டு அவர்களது கருத்துகள், கோரிக்கைகள் கவனமாகப் பதிவு செய்யப்படும்.

2.17. இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோர், சாலை விதிகளை மீறி நடப்போர், கொரோனா காலத்து முகக்கவசம் அணியாதோர் போன்றோர் மீது சட்டத்திற்குப் புறம்பான பலப்பிரயோகம் செய்யாமல் முழுமையான சகிப்புத்தன்மையைக் காவலர்கள் பின்பற்றும் நிலை உருவாக்கப்படும். இது தொடர்பாக காவலர் பயிற்சிக் கல்லூரி, மாவட்டக் காவல் பயிற்சி நிலையம் ஆகியற்றில் காவலர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்படும்.

2.18. சந்தோஷ் எதிர் மதுரை மாவட்ட ஆட்சியர் வழக்கில் மதுரைக் கிளை சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் (W.P(MD)No.12608 of 2020 and W.M.P(MD)Nos.12224 and 12225 of 2020) உடற்கூறாய்வு எப்படி நடத்தப்பெற வேண்டும் என்று கீழ்க்கண்ட விரிவான கட்டளைகளை அறிவுறுத்தியுள்ளது. இதனை முழுமையாக செயல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2.18.1. உடற்கூறாய்வின் போது தமிழ்நாடு மருத்துவ சட்டத் தொகுப்பு (Tamil Nadu Medical Code) பிரிவு 621ஐ மருத்துவர்கள் கட்டாயம் பின்பற்றுவார்கள்.

2.18.2. தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, இறந்தவரின் உறவினர்களின் / நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க காணொளி மூலம், உடற்கூறாய்வு செய்வது பதிவு செய்யப்படும்.

2.18.3. இறந்தவரின் உடலை உடற்கூறாய்வு செய்யும் போது, உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க காணொளிப் பதிவு செய்யப்படும் என்ற “அறிவிப்பு பலகை” சவக்கிடங்கில் நிறுவப்படும்.

2.18.4. சவக்கிடங்கு, உடற்கூறாய்வு செய்யப்படும் அரங்கு ஆகியவற்றின் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு முற்றிலும் இயங்கக் கூடிய நிலையில் காட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்படும். இதனை உயரதிகாரிகள் முறையாகக் கண்காணிப்பார்கள்.

2.18.5. உடற்கூறாய்வு செய்யப்பெறும் அனைத்து மருத்துவமனைகளிலும் அதற்கான உபகரணங்கள், கருவிகள் மற்றும் ஆறு மாத காலத்திற்கான நுகர்பொருட்கள் இருப்பதை அரசு உறுதி செய்யும்.

2.18.6. அரியனா மாநிலத்தில் உருவாக்கப்பட்ட மெட்லிபிஆர் என்ற இணையவழி அடிப்படையிலான முறையைத் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில், தனியார் மருத்துவமனைகள் 2021, சனவரி 1ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2.18.7. அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் தகுதிவாய்ந்த மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். தெரிவு செய்யப்பெறும் மருத்துவ அதிகாரிகளின் தகுதி, கடமை, பொறுப்பு ஆகியவற்றைத் தடயவியல், குற்றவியல், மருத்துவ இயல் உள்ளிட்ட தடயவியல் துறை பரிந்துரைக்கும் பிற துறைகளைச் சார்ந்த நிபுணர்குழுவின் உதவியுடன் அரசு வரையறுக்க வேண்டும். ஆறு மாத காலத்திற்குள் அரசு, நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும், ஓராண்டிற்குள் தேவையான மருத்துவ அதிகாரிகளைப் பணியமர்த்த வேண்டும்.

2.18.8. அனைத்து மத்திய சிறை, மாவட்ட சிறை, மகளிர் சிறப்பு சிறை ஆகிவற்றில் தகுதி வாய்ந்த முழு நேர மருத்துவ அதிகாரிகளை (24x7) ஆறு மாத காலத்திற்குள் அரசு நியமிக்க வேண்டும்

2.19. தமிழ்நாட்டில் சட்டவிரோத மோதல் சாவுகள் நடைபெற இனிமேல் அனுமதிக்க மாட்டோம். மோதல் சாவுக்கெதிராக முழுமையான சகிப்புத்தன்மையைக் காவல்துறைப் பின்பற்றும் என உறுதி அளிக்கிறோம். காவல் மரணத்தின் போது எந்த அதிகாரி மீது புகார் அளிக்கப்படுகிறதோ, அவர் மீது 302 IPC இன் படி கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்படுவார்.

எல்லா வழக்குகளையும் மாநில மனித உரிமை ஆணையம் மூன்று மாதத்திற்குள் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும். ஒவ்வொரு வழக்கிலும் சிறப்பு புலனாய்வுக் குழு நியமனம் செய்து, மூன்று மாதத்திற்குள் புலனாய்வு அளிக்கப்பெறும் அறிக்கை மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

2.20. மாநில மனித உரிமை ஆணையம், காவல்துறை, சிறப்பு புலனாய்வுக் குழு ஆகியவை நடத்தும் விசாரணையில் குற்றம் சுமத்தப்பெற்ற காவல் அதிகாரிகள் தப்பிக்க எவ்வித முகாந்திரமும் இல்லா நிலையை உருவாக்குவோம்.

2.21. காவல் சித்திரவதை, காவல் மரணம், மோதல் சாவுகள் போன்றவற்றை விசாரிக்கும் மாநில மனித உரிமை ஆணையம், குற்றம் சுமத்தப்பட்ட காவல் அதிகாரியை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரை நேரடியாகக் கண்காணித்து அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும். அனைத்து சட்ட விரோதக் காவல் மரணங்கள், மோதல் சாவுகள் போன்றவற்றில் உயர் அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் செய்யும் குற்றத்திற்குப் பொறுப்பேற்று பதில் அளிக்கக் கடமைப்பட்டவர்களாக இருப்பார்கள்.

3. அமைதியாகக் கூடுவதற்கும், சங்கமாவதற்கும் உரிமை : (Freedom of Assembly and Association)

சமீபத்தில் தமிழகத்தில் மக்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக அறவழியில் அமைதியான முறையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இவர்கள் மீது காவல்துறையைப் பயன்படுத்திக் கொடூரமாக நடத்திய தாக்குதல், துப்பாக்கிச்சூடு போன்றவற்றால் ஏற்பட்ட கொடுங்காயங்கள், உடலுறுப்பு இழப்பு, உயிரிழப்பு ஆகியவற்றைத் தமிழ்நாடு அறியும். கூடங்குளம் அணு உலை, நியுட்ரினோ, ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவற்றிற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நாடறியும்.

சனநாயகச் சமூகத்தில் ஒவ்வொருவரும் தமது உரிமைகளைப் பெறுவதோடு பிறரது உரிமைகளை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். உரிமைகளைப் பற்றிப் பேசும் போது போராட்டம் என்பது அடிப்படை உரிமையாகிறது. அமைதியான வழியில் மக்களால் நடத்தப்படும் போராட்டம் இல்லாமல் சனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது என்பதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.

3.1. ஊர்வலம், உண்ணாநிலை, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்ற அமைதியான கூடுகைக்கு அனுமதி அளிப்பது, சனநாயக நாட்டில் அடிப்படை உரிமை ஆகும். கோடிக்கணக்கில் முதலீடு செய்து தொழிற்சாலை ஆரம்பிக்க இணையவழி (online) நடைமுறை பின்பற்றப்படும் நவீன உலகில், அறவழியில், அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது சனநாயக நெறிமுறைக்கு ஏற்புடையதன்று. எனவே போராட்டம் நடத்த முன்அனுமதி பெற விண்ணப்பிக்க நேரடியாக அல்லது அரசால் உருவாக்கப்பெற்ற இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை உருவாக்கப்படும்.

வரையறுக்கப்பெற்ற நாட்களுக்குள் இதற்கான உரிய பதில் அளிக்கப்படும். அவ்வாறு பதில் வரவில்லையெனில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று பொருள்படும். அனுமதி மறுக்கப்பட்டால் யார்க்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற அனைத்து விவரங்கள் அடங்கிய SOP உருவாக்கப்படும். இதனைச் சார்ந்த அனைத்து முழு விவரங்களும் அதில் அடங்கியிருக்கும்.

3.2. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நூறு பேர் வரை அமைதியாகக் கூடி, குறிப்பிட்ட நேரத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கும் நடைமுறை கொண்டு வரப்படும். மேற்படி அதிகாரிகளின் அலுவலக வளாகங்களில் போராட்டம் நடைபெறுவதற்காக ஒதுக்கப்படும் இடத்தை “மக்கள் கருத்துரிமை மேடை” என பெயரிட்டு, இதன் மூலம் உயிர்ப்புள்ள சனநாயகத்தை நிலைபெறச் செய்வதற்கான சூழலை உருவாக்குவோம். இந்த கருத்துரிமை மேடை அருகே அமர்வதற்கான இடம் நிழல் தரும் வசதியுடன் இருக்க வேண்டும். இதற்கான பதிவு செய்யும் முறை மாவட்ட ஆட்சியர்/ மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணைய வழியிலோ இருக்க வேண்டும்.

3.3. தமிழ்நாட்டில் அரசு சாரா அமைப்புகள், அறக்கட்டளைகள் போன்றவை வெவ்வேறு பெயர்களில் மனித சமூகத்திற்கான சேவைப் பணிகளைச் செய்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் கொரோனோ காலகட்டத்தில் நிறை வேற்றப்பட்டுள்ள “தமிழ்நாடு பொது அறக்கட்டளை சட்டம்-2020”இன் படி அரசு அதிகாரிகள் மேற்படி அறக்கட்டளைப் பணிகளில் தலையீடு செய்வதற்கு வழி செய்கிறது.

இச்செயல் தன்னார்வ அமைப்புகளின் தன்னிச்சையான பொதுச் சேவைகள், சமூகச் செயற்பாடுகள், சேவைப் பணிகள் போன்றவற்றைப் பாதிக்கும் என்பதால் உடனடியாக இச்சட்டத்தைத் திரும்பப் பெறுவோம்.

3.4. சங்கங்கள் பதிவுச் சட்டத்தில் 2010 ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு “மனித உரிமை” என்ற வார்த்தையை அமைப்புகள் பெயரில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இச்செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டம், அய்க்கிய நாட்டவையின் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தம் (The United Nation International Covenant on Civil and Political Rights-ICCPR-1966), அய்க்கிய நாட்டவையின் மனித உரிமைக் காப்பாளர்க்கான பிரகடனம் (The United Nation Declaration on Human Rights Defenders-1998) ஆகியவற்றிற்கு எதிரானது என்கிற கருத்துகள் முன்வைக்கப்படுவதை அறிகிறோம்.எனவே சங்கங்கள் பதிவுச் சட்டத்தில் 2010ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தை திரும்பப் பெறுவோம்.

4. மனித உரிமை ஆணையங்கள்:

மனித உரிமைகளைப் பாதுகாக்கும் உயரிய நோக்கில் ஆணையங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டில் மாநில மனித உரிமை ஆணையம், மாநில பெண்கள் ஆணையம், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு தகவல் ஆணையம் ஆகியவற்றில் நீண்ட காலமாகக் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

மேலும் பட்டியல்படுத்தப்பட்ட சாதியினர் ஆணையம், பட்டியல்படுத்தப்பட்ட பழங்குடியினர் ஆணையம், கையால் மலம் அள்ளுதல்-தூய்மைப்பணியாளர் ஆணையம் போன்றவை தமிழ்நாட்டில் இன்னும் உருவாக்கப்பெறவில்லை. இவற்றை சட்டரீதியாக உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை அறிகிறோம்.

மேற்கூறப்பெற்றவற்றுள் ஒரு சில ஆணையங்கள் மத்திய அரசின் சட்டத்தாலும், மற்றவை மாநில அரசின் சட்டத்தாலும் உருவாக்கப்பெற்றவை. இருப்பினும் இவை அனைத்தும் மனித உரிமை நிறுவனங்கள் என்ற வகையில் உள்ளன. இவை யாவும் அய்க்கிய நாடுகள் அவையின் “பாரிஸ் கொள்கை வழிகாட்டுதலின்படி” (Paris Principles) தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும், பன்மைத்துவத்தோடும், போதுமான நிதி ஆதாரத்தோடும், சுதந்திரமான விசாரணை செய்வதற்கான அதிகாரத்தோடும், சர்வதேச மனித உரிமைத் தர நிர்ணயங்கள் வலியுறுத்துகிற, தகுதி வாய்ந்த தலைவர் மற்றும் உறுப்பினர்களோடு கட்டமைக்கப் பெற வேண்டிய அவசியம் உள்ளது என்பதை அறிகிறோம்.

இந்நிறுவனங்களின் பணி நியமனங்களில் தரமான, அந்தந்த ஆணையத்திற்கேற்ற பன்முக நிபுணத்துவம் பெற்ற, சமூகத்தின் பலதரப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களை, வெளிப்படையாக விளம்பரம் செய்து, ஒரு தன்னிச்சையான தெரிவு செய்யும் குழுவை உருவாக்கி, அதில் அரசுசாரா பிரதிநிதிகள் இடம் பெற்று, வெளிப்படையாகத் தலைவர் / உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இவர்கள் முழுநேரப் பணியாளர்களாக இருப்பார்கள்.

தன்னிச்சையாகச் செயல்படுகிற ஆணையங்களாக, முழுநேர அலுவலர் / நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயற்படுகிற ஆணையமாக இவை இருக்கும். இந்த ஆணையங்களில் பொறுப்பில் உள்ளவர்கள் கட்சி சார்பற்றவர்களாக நியமிக்கப்படுவார்கள்.

5. மனித உரிமைக் கல்வி:

5.1. அய்க்கிய நாடுகள் அவையின் “மனித உரிமைக் கல்விக்கான பத்தாண்டுகள் (1995 – 2004) எனும் திட்டம் இத்துடன் மனித உரிமைக் கல்விக்கான உலகளாவிய திட்டம் (World Program on Human Rights Education - Phase I, II, III and IV) ஆகியவை பள்ளிகள், கல்லூரிகள், அனைத்து துறைகள், குறிப்பாகக் காவல்துறையினர், இளைஞர்கள் ஆகியோரிடையே மனித உரிமைக் கல்வியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ் அய்க்கிய நாட்டவை விடுத்துள்ள அறைகூவலை ஏற்று உறுப்பு நாடுகள் பலதரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், தமிழகத்தில் தான் முதன் முதலில் மனித உரிமைக் கல்வி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே முதன் முறையாக மனித உரிமைக் கல்வியை ஓர் பாடத்திட்டமாக உருவாக்கி அதனைத் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றில் மாநில அரசு அனுமதியுடன், மக்கள் கண்காணிப்பகம் எனும் அமைப்பின் மனித உரிமைக் கல்வி நிறுவனம் தமிழில் நடைமுறைப்படுத்தியது.

மேலும் அதன் தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டு SSA திட்டத்தின் கீழ் “பெண் குழந்தைகள் பாதுகாப்புக் கல்வி” எனும் பாடத்தை தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 11 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பள்ளிகளில் அந்த அமைப்பின் ஒத்துழைப்புடன் அரசு தற்காலிகமாகச் செயல்படுத்தியது.

பள்ளிகளில் சாதியப் பாகுபாடு, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, வகுப்பறை வன்முறை, அரசியல் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கடமைகள், ஆசிரியர்களுக்கு எதிரான கொடூர வன்முறை போன்றவை குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டுமென்றால் மனித உரிமைக் கல்வியை முழுமையான தனிப்பாடமாக அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டு வருவது அவசியம் என்பதை அறிகிறோம். இதனை முழுமையாக செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

5.2. தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களிலும், தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளிலும் இளங்கலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டில் மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி இணைந்த பாடத்திட்டத்தை உருவாக்கி ஒருங்கிணைந்த கல்வியைப் பயிற்றுவிப்போம்.

6. மனித உரிமை நீதிமன்றங்கள்:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1993இன் படி மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களை ஏற்படுத்துவோம். இந்த நீதிமன்றங்கள் முழுநேரம் செயல்படக்கூடிய நீதிமன்றங்களாக, ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் ஒரு முழுநேர நீதிபதியும், ஒரு முழுநேர அரசு வழக்கறிஞரும் நியமிக்கப்பட்டு அதற்கான போதிய நிதி ஒதுக்கீடும் செய்யப்படும். இதன் மூலம் மனித உரிமைகள் சார்ந்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும், பாதிபுற்றோர்க்கு நிவாரணமும் வழங்கி, தண்டனை விலக்கு (Impunity Free Tamil Nadu) முழுமையாக ஒழிக்கப்பட்ட தமிழ் நாட்டை உருவாக்குவோம்.

7. தேசியக் கல்விக் கொள்கை-2020:

தேசியக் கல்விக் கொள்கை – 2020ஐ நடுவண் அரசு வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்துள்ளது. இதைத் தமிழ்நாட்டின் மீதான பண்பாட்டுப் படையெடுப்பாகத் தான் பார்க்க முடியும். புவியியல் நோக்கில் இந்தியா ஒரு துணைக்கண்டம். அரசியல் நோக்கில் பல்வேறு மாறுபட்ட பண்பாடுகளைக் கொண்ட பல மாநிலங்களை உள்ளடக்கிய ஓர் அரசுக் கட்டமைப்பு.

ஆகவே இந்தியா முழுமைக்கும் ஒரே கல்விக் கொள்கை என்பதே சமுக அறிவியலுக்கும், குடியாட்சியத் தத்துவத்துக்கும் மக்கள் நலனுக்கும் புறம்பானது ஆகும்.

பெரும்பாலும் மொழிவழி மாநிலமாக அமைந்துள்ள இந்தியா முழுமைக்குமான ஒற்றைத் தேசியக் கல்விக் கொள்கை என்பதே திணிப்பு தான். வெறும் மொழித் திணிப்பு மட்டுமன்று, இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு. இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு நாடாக வரையறுக்காமல் மாநிலங்களின் ஒன்றியமாகவே (UNION OF STATES) வரையறுக்கிறது.

a. தேசியக் கல்விக் கொள்கை – 2020இல் மாற்ற வேண்டியவற்றை விட முற்றிலுமாகப் புறந்தள்ள வேண்டிய அவசிய நிலை உள்ளது. ஆகவே, தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கை – 2020ஐ முற்றிலும் நடைமுறைப்படுத்த மாட்டோம்.

b.பொதுப் பட்டியலில் இருந்து கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது அவசியம். இதற்கான சட்ட ரீதியான, அரசியல் ரீதியான முன்னெடுப்புகளை உறுதியாக மேற்கொள்வோம்.

8. நீட் தேர்வு:

நீட் முதலான தேர்வுகள் வெறும் நுழைவுத் தேர்வுகள் மட்டும் அல்ல. அவை தகுதியையும் நுழைவையும் ஒருங்கே தீர்மானிப்பவை. இதன் பொருள் என்ன? தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் பள்ளியிறுதி ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.

நீட் முதலானவற்றில் அவற்றுக்கு இடமும் இல்லை, மதிப்பும் இல்லை. பழைய முறைப்படி 12 ஆண்டுகள் அல்லது இந்தக் கல்விக் கொள்கை சொல்லும் 11 ஆண்டுகள் படித்த படிப்பும், அதன் வழி பெற்ற மதிப்பெண்களும் பட்டப்படிப்பில் நுழைவதற்குப் பயன்பட மாட்டா.

ஒரே ஒரு தேர்வில் பெறப்படும் மதிப்பெண் மட்டுமே மாணவரின் உயர்கல்விக்கு வாழ்வா? சாவா? என்பதைத் தீர்மானிக்கும். சமூகநீதி, சமத்துவம் என்று ஒப்புக்குச் சொல்லிக் கொள்ளும் இந்தக் கல்விக் கொள்கையின் திட்டங்கள் சமூக நீதியையும், சமத்துவத்தையும் ஆழக் குழி தோண்டிப் புதைக்க முற்படுகின்றன என்பதே மெய்மை ஆகும். ஆக, மருத்துவக் கல்விக்கான தேசியத் தகுதி நுழைவுத் தேர்வு (NEET) முறையினை தமிழகத்தில் முழுமையாகத் திரும்பப்பெறுவோம்.

9. குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்:

குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுக்காக்கும் சட்டம் 2012 கூறுகிறது. ஆனால் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் தான் குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிற மாவட்டங்களில் மகிளா நீதிமன்றங்களே குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களாகச் செயல்படுகின்றன. அங்கே ஏற்கெனவே தேங்கி இருக்கிற ஆயிரக்கணக்கான வழக்குகளோடு இவ்வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படுவதால் 90% போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவோம்.

10. ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கொள்கை முடிவு:

தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள துறைமுக நகரான தூத்துக்குடியைக் கடந்த இருபது ஆண்டுகளாக மாசுபடுத்தி, அதை எதிர்த்து அறவழியில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 17 பேர் கொல்லப்பட்டதற்கு / இறந்ததற்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி, தூத்துக்குடி நகரை விட்டு அதை முற்றிலுமாக அப்புறப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். மேலும் தமிழக மண்ணில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் வேறிடத்தில் தொடங்க அனுமதியோம் என்கிற உறுதியை அளிக்கிறோம். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் அதில் பணிபுரிந்த தொழிலாளார்க்கு ஏற்பட்ட வேலையின்மைக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்துவோம்.

அறவழியில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 17 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தினை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஒரு நபர் ஆணையம் கடந்த 2½ ஆண்டு பதவியில் இருந்தும் தனது பணியை முடிக்கவில்லை. அதுபோல் சி.பி.ஐ யும் தனது புலனாய்வை இதுவரை நிறைவு செய்யவில்லை.

மேலும் குற்றவாளிகளின் பெயரைக் கூட சி.பி.ஐ தனது இரண்டு முதல் தகவல் அறிக்கையிலும் சேர்க்கவில்லை. தேசிய மனித உரிமை ஆணையமும் தன்னிச்சையாக எடுத்த வழக்கை விசாரணை செய்து தன்னுடைய புலனாய்வுக் குழுவை அனுப்பி அந்த அறிக்கையை இரகசியமாக வைத்துக் கொண்டு அரசு அளித்த பரிந்துரையை வைத்து வழக்கை முடித்துக் கொண்டது.

ஆகவே, மூன்று மாதத்தில் குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிவதற்கு நீதிமன்றத்தில் உரிய சட்டத்தலையீடு செய்து சி.பி.ஐ. விசாரணைக்குப் பதிலாக “சிறப்பு விசாரணைக் குழுவை” நியமனம் செய்து தமிழக மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறுவோம்.

மேலும் இறந்தவர்களின் , குடும்பங்களுக்கு, காயமடைந்தோர்க்கு சட்டரீதியான இழப்பை மதிப்பீடு செய்து மூன்று மாத காலத்திற்குள் வழங்குவோம். மேலும் துப்பாக்கிச் சூட்டில் பாதிப்புற்றோர்க்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்காமல் எல்லோர்க்கும் பொத்தாம் பொதுவாகத் தலையாரி வேலை வழங்கப்பட்டுள்ளது.

இதில் சிலர் முதுகலைப் பட்டதாரிகள், சிலர் தொழில் நுட்பம் படித்தவர்கள். எனவே துப்பாக்கிச் சூட்டில் பாதிப்புற்றோர்க்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க ஆவன செய்யப்படும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக அறவழியில், அமைதியாகப் போராடியோர் பலர் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் யாவும் திரும்பப் பெறப்படும். இதே போன்று கூடங்குளம் அணு உலை, நியுட்ரினோ, ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவற்றிற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் யாவும் திரும்பப் பெறப்படும்.

11. கொடுங்கோன்மைச் சட்டங்கள்:

மனித உரிமைக் காப்பாளர்கள் மீது UAPA சட்டம், தேசிய புலனாய்வு முகமை, தேசத் துரோகச் சட்டம் உள்ளிட்ட கொடுங்கோன்மைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பிணையில் வெளிவர முடியாமல் சிறையில் அடைக்கும் போக்கு தொடர்கிறது என்பதை அறிகிறோம். இதுபோன்ற சட்டங்கள் மனித உரிமைகளுக்கு எதிரானது.

ஏற்கெனவே 1995ஆம் ஆண்டில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பொறுப்பில் இருந்தவர் தடா போன்ற சட்டங்களை நீக்க வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் வேண்டினார். அதன்படி அது நீக்கப்பட்டது.

பின்னர் 2000ஆம் ஆண்டில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பொறுப்பில் இருந்த நீதியரசர் J.S.வர்மா அவர்கள் பொடா போன்ற சட்டம் தேவையில்லை என்று நிலைப்பாடு எடுத்தார். தற்போது தடா, பொடா சட்டங்களில் இருந்த மோசமான அம்சங்களை UAPA சட்டத்தில் சில திருத்தம் செய்து இணைத்து அதன் மூலம் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பலர் தமிழகத்தில் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுகிற வகையில் சுதந்திர உரிமையை, கருத்துரிமையை, அமைதியாகக் கூடும் உரிமையை மறுக்கிற வகையில், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை முடக்குகிற நோக்கில் கொடுங் கோன்மைச் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்து முடக்குகிற முறையை முற்றிலும் தவிர்க்கும் வகையில் மாநில அரசு தனது நிலைப்பாட்டினை நடுவண் அரசுக்குத் தெரிவிக்கும். தமிழகத்தில் UAPA சட்டம், தேசிய புலனாய்வு முகமை, தேசத் துரோகச் சட்டம் உள்ளிட்ட கொடுங்கோன்மைச் சட்டங்கள் செயல்படுத்தப்படாது என்கிற நிலைப்பாடு எடுக்கப்படும்.

12. திருத்தப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டம்:

சமீபத்தில் திருத்தப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டம், இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும், பாரம்பரிய பன்மைத்துவத்திற்கும் விழுந்த பலத்த அடியாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையும், அடிப்படை உரிமைகளும் இந்தியா ஒரு சமயச்சார்பற்ற நாடு என்பதைத் தெளிவாக உறுதிபட வலியுறுத்துகிறது. இதனை மீறுகிற வகையில் நடுவணரசு இச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இச்சட்டத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறுவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுத்து இச்சட்டத்தைத் தமிழ் நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்கிற உறுதியை அளிக்கிறோம்.

இதே போன்று தேசிய குடிமக்கள் பதிவேடு முறையில் மக்களின் குடியுரிமைக் கேள்விகுள்ளாகிறது. சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று அறிவிக்கப்படுவோரின் நிலை என்ன என்ற பெருங்கேள்வி எழுகிறது. இம்முறையைத் தமிழ் நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்கிற உறுதியை அளிக்கிறோம்.

13.தமிழக மனித உரிமைக் காப்பாளர் பாதுகாப்புக் கொள்கை:

அய்க்கிய நாட்டவையின் மனித உரிமைக் காப்பாளர்க்கான பிரகடனம் -1998, மனித உரிமைக் காப்பாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்துகிறது. சமீப காலமாக பெண்கள், ஆண்கள், திருநங்கைகள் உள்ளிட்ட மனித உரிமைக் காப்பாளர்கள் மீது காவல்துறை மட்டுமல்லாது, சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரும் தாக்குதல் நடத்துவது அதிகரித்து அவர்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மனித உரிமைக் காப்பாளர்க்கும், அவர்களது குடும்பத்தார்க்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. மேலும் மனித உரிமைக் காப்பாளர்கள் மீது போடப்படும் பொய் வழக்குகளை நடத்த உரிய சட்ட ஏற்பாடுகளும், பாதிப்புற்றோர்க்கு சிறப்பு மருத்துவ வசதிகளும் செய்து தர, மனித உரிமைக் காப்பாளர்களுடன் உரையாடி அதற்கேற்ப “தமிழக மனித உரிமைக் காப்பாளர் பாதுகாப்புக் கொள்கை” உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

14. தமிழக சிறைச்சாலைகள் சீர்திருத்த இல்லங்களாக மாற்றப்பட வேண்டும்:

14.1. தமிழக சிறைச்சாலைகளில் நாளுக்கு நாள் சிறைவாசிகளின் கூட்டம் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அளவுக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் 2014ஆம் ஆண்டு அர்னேஷ்குமார் எதிர் பீகார் மாநில அரசு வழக்கில் வழங்கிய தீர்ப்பில் “ஏழு ஆண்டுகள் அல்லது ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனை உள்ள குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேவையில்லாமல் கைது செய்து சிறையில் அடைக்கக் கூடாது” என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதை காவல்துறையும், நீதித்துறையும் பின்பற்றாததால், சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மேலும் ஏழ்மையில் வாடும் பலர் பிணை கொடுக்க ஆளில்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் வாடும் நிலை உள்ளது.

எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழக சிறைச்சாலைகளில் உள்ள விசாரணைக் கைதிகளை “விசாரிக்கும் குழு” (under trial review committee) ஒன்றை உருவாக்கி, உண்மை நிலையை ஆய்வு செய்து, அக்குழு அளிக்கும் பரிந்துரையின்படி விசாரணைக் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

14.2. அனைத்துச் சிறைச்சாலைகளிலும் முழு நேர சமூக நல அலுவலர் (Social Welfare Officer), மருத்துவர், உளவியலாளர் (Psychologist), வழக்கறிஞர் ஆகியோர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான அலுவலகம், உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சிறையிலிருக்கும் சிறைவாசிகளுடைய முழுமையான சீர்திருத்தத்திற்கு அர்ப்பணிப்போடு வேலை செய்யக் கூடியவர்கள் உள்ள துறையாக சிறைச்சாலை மாற்றப்படும்.

14.3. தண்டனைக் கைதிகள் சிறையினுள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு அதற்கான ஊதியம் பெறுகின்றனர். அத்தகைய ஊதியம் அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் வழங்கப்படும். இதன் மூலம் ஒருவர் சிறையில் இருக்கும் போதும், உழைத்துத் தங்கள் குடும்பத்திற்குப் போதுமான ஊதியம் அளிக்கக் கூடிய மாண்புமிகு சூழல் உருவாகும்.

நன்னடத்தை உள்ள சிறைக்கைதிகளின் தொழிற் திறனைக் கருத்திற் கொண்டு அவர்கள் அனுமதிக்கப்பட்ட வேலை நேரத்தில் வெளியில் சென்று பணிமுடித்து மீண்டும் சிறைக்குத் திரும்பும் நடைமுறையை உருவாக்க முயற்சிக்கப்படும்.

14.4. தமிழக சிறைச்சாலைகளில் “அரசு சார்பற்றப் பார்வையாளர்கள்” (non-official visitors) நியமனம் செய்யப்பட்டு சிறையில் நிலவும் மீறல்கள் குறித்து முறையாகப் பார்வையிடும் பணியைச் செய்வார்கள்.

14.5. தண்டனைக் கைதிகளுடைய குழந்தைகளின் கல்வியைக் கவனத்திற் கொண்டு, இது தொடர்பாக, நீதியரசர் முனைவர்.விமலா மற்றும் நீதியரசர் கிருஷ்ணவள்ளி ஆகிய இருவரும் (Crl.A (MD) No.253/2016 வழக்கில்) 08.01.2019 அன்று அளித்த தீர்ப்பின்படி தண்டனைக் கைதிகளின் குழந்தைகள் பள்ளிகளில் கல்வி பயில்வதற்கு உதவித்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ.2000 வழங்கப்படும்.

14.6. தமிழகத்தில் அதிகமான திறந்தவெளிச் சிறைகள் உருவாக்கப்பட்டு தகுதிவாய்ந்த, நன்னடத்தை உள்ள சிறைக் கைதிகளைத் தெரிவு செய்து அவர்கள் செய்த தவறை உணர்ந்து திருந்திய, தரமான குடிமக்களாக மாற்றப்பட்டு, மனந் திருந்திய நிலையில் விடுதலை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.

- மக்கள் கண்காணிப்பகம்

Pin It