மீனவர் படுகொலை இனிமேலும் தொடர நடக்கும் சதிகள்

காலச்சுவடு பத்திரிக்கை வெளியிட்டுள்ள “பாக் நீரிணையைச் சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதக் கூடாது” டாக்டர் வி. சூரியநாராயண் பேட்டி, (http://www.kalachuvadu.com/issue-135/page20.asp) தமிழின மீனவர் படுகொலைகளை பிரச்சனையின் மையப்புள்ளியில் இருந்து நுணுக்கமாக திசைதிருப்புவதுடன், மீனவர் படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக ”மீன்பிடிஉரிமை” பிரச்சனையே இதற்கு அடிப்படை என்று சித்தரிக்கிறது.

suryanarayanதமிழக மீனவர் படுகொலை மட்டுமல்லாது, ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை எதிர்த்து தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய-இலங்கை அரசின் தமிழின விரோத கருத்தாக்கதிற்கு பங்களிப்பு செய்த மிகமுக்கிய நபர் டாக்டர் வி.சூரியநாராயண். தமிழீழம் அமைக்கப்படக்கூடாது; அது நடைபெறுவது சாத்தியப்படக்கூடாது என்று இந்து நாளிதழ் முதற்கொண்டு கட்டுரைகளை, பேட்டிகளை தொடர்ந்து வெளியிட்டு வருபவர். இந்திய அரசு உதவியுடன் இயங்கும் தெற்காசிய ஆராய்சி நிறுவனம் மூலம் அறிவுசீவி தளத்தில் பணியாற்றி வருபவர். கச்சத்தீவு ஒப்பந்தம் முடிவு பெற்ற ஒன்று; எல்லை ஒப்பந்தம் மாற்றியமைக்க முடியாதது; தமிழக மீனவர்களே தொடர்ந்து குற்றம் செய்பவர்கள்; கடத்தல்காரர்கள் என்று சொல்வதோடு, தொன்றுதொட்டு இலங்கைத் தமிழர் பகுதியுடன் தொடர்பு வைத்து இருப்பவர்களை 'கள்ளத்தோணிகள்' என்றும் கொச்சைப்படுத்துபவர்.

தமிழின மீனவர்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து மாணவர்கள் முதல் பெண்கள் அமைப்பு வரை அனைவரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடிய இந்த காலகட்டத்தில், 'தமிழக மீனவர்களை குற்றப்பரம்பரையாக' சித்தரிக்க விரும்பும் இந்திய-இலங்கை மற்றும் தமிழக உயர்சாதியினுடய சதியாக காலச்சுவடில் இப்பேட்டி வெளியாகியுள்ளது. மீனவர் சமூகத்திடம் இருந்து அல்லது பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து அல்லது அவர்களுக்காக போராடுபவர்களிடம் இருந்து கருத்துக்கள் பதியப்படாமல், அதிகாரவர்க்கத்தை அண்டி பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கும் ஒருவரிடம் இருந்து கருத்துக்கள் பதியப்படுவது ஒரு விபத்து அல்ல; இது தெளிவாக தேர்ந்து எடுத்து செய்யப்பட்ட ஒரு கருத்து திணிப்பாகத்தான் பார்க்க முடிகிறது. இதை இந்த பேட்டியின் வடிவமும், திசையும் மிக விளக்கமாக நிரூபிக்கின்றன.

இந்த பேட்டியில் வைக்கப்படும் வாதங்களை ஒரு சராசரி தமிழ் மீனவரே எதிர்கொள்ள முடியும் என்று இருக்க, இந்தப் பேட்டியை வெளியிடும் அரசியலை நாம் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. இந்தப் பேட்டியில் மிக கவனமாக, மீனவர் படுகொலையில் வென்றெடுக்க வேண்டிய நீதி பற்றிய விவாதம் வைக்கப்படவில்லை. 25 வருடங்களாக இந்திய கடல் எல்லையில் நடைபெறும் தமிழக மீனவர் கொலைகளைப் பற்றிய கேள்விகளும் பதில்களும் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன. கச்சத்தீவு ஒப்படைத்தலைப் பற்றிய சூரியநாராயணின் விளக்கத்தினை எந்த ஒரு விவாதத்திற்கும் உட்படுத்தாமல் நழுவிக்கொண்டு செல்கிறது உரையாடல். படுகொலைகளை விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் கோரி சென்னை உச்ச நீதிமன்றத்தில் நடக்கக்கூடிய வழக்குகளைப் பற்றிய கேள்விகள் இல்லாமல் செல்கிறது இந்த பேட்டி. முன்னதாக சூரியநாராயண் போன்றோர்களால் நியாயப்படுத்தப்பட்ட 'புலிகளுக்கு பொருட்கள் கடத்தியதால் தான் பலியாகிறார்கள்', ‘ புலிகள் தான் மீனவர்களை கொல்கிறார்கள்’ என்கிற பழைய வாதம் இப்பொழுது ஏன் பேசப்படவில்லை என்பது போன்ற கேள்விகள் கவனமாக தவிர்க்கப்பட்டு இருக்கின்றன. இதனால் இந்தப் பேட்டியை கள்ளத்தனம் மிக்க ஒன்றாக பார்க்க வேண்டி உள்ளது.

ஒருவேளை இந்தக்கட்டுரைக்குப் பிறகு வரக்கூடிய இதழில் தமிழக மீனவர்களின் நியாயத்தையும், அதை ஒட்டி நடைபெறக்கூடிய போராட்ட சக்திகளின் முன்னெடுப்புக்களையும் பற்றி விரிவாகப் பேசப்படுமானால், தமிழர்கள் இந்த புத்தகத்தினைத் தொடர்ந்து படிப்பதில் நியாயம் இருக்கும் என்று நம்புகிறோம். காலச்சுவடு தமிழர்களின் நியாயத்தை மறுக்காது என்கிற நம்பிக்கையையும் நாங்கள் இழக்கவில்லை.

காலச்சுவடு என்று மட்டுமல்லாமல் பல்வேறு முன்னணி பத்திரிக்கைகள் இப்பொழுது இந்த இரு அரசுகளின் சதியை உள்வாங்கி, மிகத் தீவிரமாக பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். இதில் ஓர் அவசரமும் தெரிகிறது.

தமிழகத் தேர்தல் முடிந்த பிறகு இந்தப் படுகொலைகள் வழக்கம்போல தொடரப் போகிறது. அதன் பின்னர் வழக்கம் போல தமிழக அரசு கடிதம் எழுதப் போகிறது. மீனவர் படுகொலையைக் கண்டித்து அதிமுக ஜெயலலிதா இதுவரை எந்த ஒரு பெரிய போராட்டத்தையும் நடத்தவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். பாமக-வோ கம்யூனிஸ்டுகளோ இதை எடுத்துப் போராடாததை நாம் கண்டுகொள்ள வேண்டும். கொலை செய்யப்படுவதற்காக நமது மீனவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நமது மீனவர்களின் தலையின் மீது தொங்கிகொண்டு இருக்கும் கத்தியின் அபாயத்தின் அடிப்படையில்தான் நாம் இந்தப் பிரச்சனையை விவாதிக்க வேண்டும்.

25 ஆண்டுகளாக 539 மீனவர்களை படுகொலை செய்த ஒரு அன்னிய அரசினை எவ்வாறு சட்டத்தின் முன்னிறுத்தி நீதி வழங்கச்செய்வது பற்றி இதுவரை ஆதிக்க சாதியினரால் நடத்தப்படுகின்ற எந்த ஒரு முன்னணிப் பத்திரிக்கையும் விவாதங்களை ஆரம்பிக்கவில்லை. இதை மெளனமாக இவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதே இதன் பின்னுள்ள அரசியல். இதற்கு அறம்மறந்த தமிழ் அறிவுசீவிகளும் உடன் நிற்பது தமிழினத்திற்கே வாய்த்த ஒரு கெடுவாய்ப்பாகும். இந்த படுகொலைக்கான நியாயத்தை சாமானிய தமிழன் தனித்து நின்று வெல்ல வேண்டிய சூழலை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த நியாயத்தை உடைக்கும் சதியையும், கருத்துப் பரப்பலையும் எதிர்கொள்வதே இன்றைய தமிழ்ச் சூழலில் முக்கிய வேலையாய் மாறி இருப்பது உலகின் எந்த ஒரு இனத்திற்கும் நடைபெற்று இருக்காது என்றே நம்புகிறோம். 

மீனவர் படுகொலை திரிபின் அரசியல்  

தமிழக மீனவர் படுகொலை சமூதாயத்தில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தை கொந்தளிப்புகளை சமாளிக்கவும், படுகொலை பற்றிய விசாரணையை திசை திருப்பவும் பெரும் முயற்சிகள் இந்திய இலங்கை அரசால் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி தமிழக மீனவன் தொடர்ந்து இந்திய கடல் எல்லையைக் கடந்து மீன்பிடிப்பது மட்டுமல்லாமல் இலங்கை மீன்வளத்தை சுரண்டுகிறான் என்கிற வாதம் சிறிது சிறிதாக வைக்கப்படுகிறது. இந்த சதியை நடத்துவதற்கு காரணமாக இருக்கும் பல்வேறு காரணங்களை நாம் நுணுக்கமாக கவனிப்போம்.

இந்தப் படுகொலைகள் இரு அரசுகளுக்கும் ஒரு பெரிய உள் நாட்டு மற்றும் வெளியுறவு சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிந்திருக்கும் இந்த அரசுகள் இந்தப்படுகொலையை திசை திருப்ப முயற்சிக்கின்றன. இந்தப் படுகொலை இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை பெரிதும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. மிக முக்கியமாக இந்திய இலங்கை அரசுகளின் வெளியுறவுக் கொள்கையில் நடந்த குளறுபடிகள், ஈழ-தமிழக மக்களுக்கு எதிராக நடைபெற்ற மற்றும் நடைபெற்று கொண்டு இருக்கும் நகர்வுகள் வெளிஉலகில் விமர்சனத்திற்கு உள்ளாகும்.

விடுதலைப்புலிகள் இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று சொல்லி நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கான இந்திய அரசின் திட்டம், அதை நடத்தி முடித்த இலங்கை அரசு என இருவரின் அடிப்படை கருதுகோள்களும் மக்களிடத்தில் உடைந்து போகும். இந்தியர்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து காப்பற்றவே இலங்கை அரசின் குற்றங்களுக்கு துணை நிற்க வேண்டி இருந்தது என்ற பொய்யும் உடைந்து போகும்.

இரு கரைகளில் இருக்கும் தமிழர்களிடத்தில் பிரிவினையை நுழைக்க வேண்டிய தேவைகள் இரு அரசுகளுக்கும் இருக்கிறது. ஈழ விடுதலைப்போருக்கு பிறகு வடஈழ தமிழ் மீனவர்களை மீன்பிடி தொழிலுக்கு அனுமதிக்கும் சூழலில் இருக்கும் இலங்கை அரசு, இந்த சதியை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இரு தமிழர்களும் இணைந்து இருப்பது இனவெறி இலங்கைக்கு எதிரான ஒன்றாக இருக்கும்; மேலும் அந்த அரசை அச்சுறுத்தவே செய்யும்.

ஒருவேளை இந்தப் தமிழக மீனவர் படுகொலைகளைப் பற்றிய நியாயத்திற்காக தமிழர்கள் உலக அளவில் போராட்டங்களையோ வழக்குகளையோ நடத்த ஆரம்பித்தால், சந்திரிகா முதல் ராஜபக்சே வரை சர்வதேச விசாரணை செய்யப்படும் நிலை ஏற்படும் என்பதை இரு அரசும் உணர்ந்து உள்ளன. அப்படியொரு விசாரணை நடந்தால் இலங்கை அரசு குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாகும்.

கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமான ஒன்று, அது இலங்கைக்குச் சொந்தமானதல்ல என்பது மக்களிடத்தில் கொண்டு செல்லப்பட்டு பொது விவாதம் நடத்தப்படுமானால் தில்லி அரசு தலைகுனிவது மட்டுமல்ல, இந்திய கடல் எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தி இந்திய மக்களைக் கொன்றது நிரூபணமாகும். இவ்வாறு 539 மீனவர்கள் கொல்லப்பட்டது என்பது இந்தியாவின் மீது இலங்கை படையெடுத்ததற்கு ஒப்பாகும். இத்தகைய அத்துமீறலை ஏன் இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்கிற கேள்வியை இது எதிர்கொள்ளும். 

இது மட்டுமல்லாது தமிழக கடற்கரையோரத்தில் திட்டமிடப்பட்டுள்ள கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், விளையாட்டு பொழுது போக்கு அரங்குகள் தமிழக மீனவன் தொடர்ந்து மீன்பிடி தொழிலில் இருந்தால் நிறைவேற்றப்படுவது கடினமாகும். இந்த திட்டத்திற்காக போடப்பட்டுள்ள சென்னை முதல் ராமநாதபுரம் வரை நீளும் கிழக்கு கடற்கரை சாலை, கடற்கரையோர ஒழுங்கு சட்டத்தில் கொண்டு வரப்பட உள்ள சட்ட திருத்தம் (CRZ Notification 2010) என அனைத்து முயற்சிகளும் தமிழக மீனவர் போராட்டங்கள் மற்றும் ஆதரவு போராட்டங்களால் வீணாகும்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ள மீன்பிடி உரிமையை எதிர்த்து எதிர்காலத்தில் மீனவர் சமூகம் போராட வராமல் தடுக்க வேண்டும். அவர்களை 'குற்றப்பரம்பரையாக' சித்தரித்து, மீன்பிடி தொழிலில் இருந்து வெளியேற்ற வேண்டும். மீனவர்களை வேறு தொழிலுக்கு மாறச்செய்வது மூலமாக மீன்பிடி உரிமைகளை பெருமுதலாளி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உலக வர்த்தக மைய ஆணைப்படி அளிப்பது, மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள பெட்ரோலிய எண்ணை வளங்களைப் பங்கு போடும்போது, பிற்காலங்களில் மீனவர் சமூகத்திடம் இருந்து சிக்கல் வருவதைத் தடுத்தல் போன்ற பல்வேறு காரணிகள் இதில் உள்ளன. (மன்னார் வளைகுடாவில் எண்ணை எடுக்கும் ஒப்பந்தம் போட்டுள்ள கைர்ன் எனெர்ஜி என்கிற இங்கிலாந்து-இந்திய சார்புடைய நிறுவனத்தை, எண்ணை எடுத்தல் பணியில் எவ்வித அனுபவமும் இல்லாத வேதாந்தா நிறுவனம் விலைக்கு வாங்க முயற்சி செய்வதை நாம் சற்று கவனத்தில் வைக்க வேண்டும். இந்த வேதாந்தா நிறுவனத்தில் மிக முக்கிய பங்குதாரராக இருப்பவர் இந்திய அரசின் உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி சிதம்பரம் என்பது கூடுதல் தகவல். --மேலும் இந்த வேதாந்தா நிறுவனம் தான் ஸ்டெர்லைட் ஆகவும் செயல்படுகிறது http://www.sterlite-industries.com/about_us/default.aspx ---. இந்தியா, ரஸ்யா உட்பட பல நாடுகள் இலங்கை அரசுடன் ஆழ்கடல் எண்ணை தொழிலுக்கு ஒப்பந்தம் போட்டு உள்ளன.)

fishermen_334இந்த சதியின் அடிப்படை: 'படுகொலைக்கான நியாயத்தை தமிழர்களுக்கு வழங்க வேண்டியதில்லை. ஏனெனில் தமிழக மீனவர்கள் கடலெல்லை கடந்து மீன்பிடிப்பவர்கள் என்பது மட்டுமல்ல; சட்டத்திற்குப் புறம்பாக மீன்வளத்தை சுரண்டக்கூடிய ஆழ்கடல் இழுவலை மீன்பிடித்தலை இலங்கை எல்லைக்குள் செய்பவர்கள், எனவே இவர்கள் குற்றவாளிகள், இவர்களே தண்டனைக்கு உரியவர்கள், இலங்கை கடற்படையொ இலங்கை அரசோ அல்ல'. இந்த வாதத்திற்கான அடிப்படைக் கூறுகளை கருத்து தளத்தில் இந்த அரசுகள் திணிக்க ஆரம்பித்து இருக்கின்றன.

இந்த வாதங்கள் மிக கவனமாக நாளிதழ்களிலும், தனிப்பட்ட சிந்தனையாளர் வட்டம் வழியாகவும், அரசுசார் அறிவுசீவிகளின் மூலமாக கட்டுரைகளாகவும், பேட்டிகளாகவும் வெளிப்பட ஆரம்பித்து இருக்கின்றன. இந்த சதிக்கு தமிழர் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், இந்திய விரிவாதிக்கத்தினை ஆதரிப்பவர்கள் துணைக்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு இரு அரசுகளின் சதிக்கு துணை நின்று இப்போராட்டத்தை வலுவிழக்கச் செய்வதன் மூலம் இந்த நிறுவனங்கள், தனி நபர்கள், பத்திரிக்கையாளர்கள், அறிவுசீவிகள் அடையக்கூடிய பலன்கள் நமக்கு தெரியப்போவது இல்லை. பலன்கள் இல்லாமல் இவர்கள் வேலை செய்ததும் இல்லை. ஆனால் நாசிப்படைக்கு தேவையான கருத்து ஆயுதங்களை பரப்பியவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்பது உலகம் அறியும்.

மீனவர் படுகொலை திரிபு சதியின் உள்ளடக்கம்

இரு அரசுகளீன் இம்முன்னெடுப்புகள் 'தமிழின எதிர்ப்பு' என்கிற குற்றச்சாட்டிலிருந்து இலங்கை அரசைக் காப்பது, இனப்படுகொலை அரசாக இலங்கை அரசு அறிவிக்கப்படுவதில் இருந்து மீட்பது போன்ற பணிகளுக்கு பெரிதும் அவசியமான ஒன்று. இவ்வாறு செய்யப்படாவிடில் இலங்கையோடு சேர்ந்து இந்திய அரசும் படுகொலை அரசாக அறிவிக்கப்படும் கட்டாயமும் ஏற்படும்.

இந்திய அரசு எதிர்கொண்டு இருக்க கூடிய சவால்களான, சட்டவிரோத கச்சத்தீவு ஒப்பந்தம், கச்சத்தீவு ஒப்படைப்பு, தமிழக மீனவர் படுகொலைகளை தடுக்கத் தவறியது, மீனவர் கொலையாளிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்காதது, மீனவர் நலன் கருதாமல் எல்லைகளைப் பிரித்தது என்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு படுகொலையின் போதும் போலியாய் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தது, இலங்கை கடற்படைக்குப் பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் கப்பல்கள் வழங்கியது, எந்த ஒரு படுகொலையின்போதும் இந்திய கடலோரக்காவல்படை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது என பல்வேறு செயல்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கிக்கொள்ள நேரும் என்பதை அறிந்து கொண்டது இந்திய அரசு. இதிலிருந்து தப்புவதற்குத்தான் இலங்கை அரசுக்கு தோள்கொடுக்க செய்யும் முயற்சியாக பல்வேறு தளங்கள் வழியாக கருத்துப்பரப்பலை இந்திய அரசு செய்கிறது.

இந்த கருத்துப்பரப்பலின் துவக்கம் பத்திரிக்கை தளத்தில் வழக்கம்போல ‘தி-இந்து’ பத்திரிக்கை வாயிலாக வந்தபோதிலும், இந்து பத்திரிக்கை அதன் முக்கியத்துவத்தை இலங்கை விசயத்தில் இழந்ததை கருத்தில் கொண்டு, பிற பத்திரிக்கை வாயிலாகவும் இதைச் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கதையாக்கம் ஆங்கில நாளிதழ்களின் வாயிலாக வெளியிடப்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டு சூழலில் இலங்கை இனப்படுகொலையை கண்டித்து நடக்கும் போராட்டங்களை வெளிக்கொணரும் ஒரு முக்கிய நாளிதழாக இருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் அதன் கொழும்பு நிருபர் வழியாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதாவது தமிழகத்தில் இலங்கை பற்றிய தகவல்களை அளிக்கக்கூடிய நம்பகமான பத்திரிக்கை வாயிலாக வெளிக்கொணர வேண்டிய தேவை இரு அரசுகளுக்கும் இருந்தன. 

அதனையொட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் கொழும்பு பத்திரிக்கையாளராக செயல்பட்டு வரும் பி.கே.பாலச்சந்திரன் வழியாக தொடர்ந்து இந்த சதியை வலுப்படுத்தும் செய்திகள் வெளியிடப்பட்டு கொண்டு இருக்கின்றன. இந்த செய்தியின் சாராம்சம் 'இந்திய தமிழ் மீனவர்களின் மீன்பிடி தொழில் இலங்கை மீன்பிடித் தொழிலுக்கு எதிராக இருப்பது மட்டுமன்றி இதுவே தமிழக மீனவர் படுகொலைக்கு காரணமாக அமைகிறது' என்பதாகும். இந்தச் செய்திகள் ராசபக்சே அரசின் கருத்தை மையப்படுத்தி அதே சமயம் யாழ்பாணம் சார்ந்தவர்கள் வழியாக செய்தி சேகரிக்கப்பட்டதானதொரு தோற்றத்தில் இந்த செய்திகள் வெளிவந்து இருந்தன.

இரு வாரங்களுக்கு (பிப்ரவரி மாதம் கடைசி வாரம்) முன்பு வடஇலங்கையில் பிடிக்கப்பட்ட இலுவைக் கப்பல்கள் திமுக அமைச்சர் டி.ஆர் பாலுவிற்கு சொந்தம் என செய்தி வெளியிட்டு அதற்கு மான நஷ்ட வழக்கு தொடருவோம் என்று பாலு குறிப்பிட்டபிறகு உடனடியாக பின்வாங்கி அந்தச் செய்தியை சந்தேகக் குறியுடன் தான் வெளியிட்டோம், இந்தச் செய்தியை யாழ்பாணத்தில் உள்ள ஒரு கிறித்துவ மதபோதகர் சொன்னதன் அடிப்படையில் வெளியிட்டோம் என்று சமாதானம் சொல்லி பின்வாங்கியது. இத்தகைய தர்மசங்கடமான நிலையை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு ஏற்படுத்தியவர் திரு. பி.கே. பாலச்சந்திரன்.

'யாழ்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண்சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்றவர்களுக்கு கண்பார்வை பறிபோனதை' குறித்து செய்தி வெளியிட்டபோது இலங்கை அரசிடம் இருந்து எந்தவித மறுப்பு அறிக்கையும் வருமுன்பே பி.கே பாலச்சந்திரன் தாமாகவே 'வவுனியாவில் அப்படியாருக்கும் சிகிச்சை முகாமில் பார்வை பறிபோகவில்லை' என செய்தி வெளியிட்டு இருந்தார். அதாவது குற்றச்சாட்டு 'யாழ்பாணம் முகம்' என்று இருக்க, இவர் 'வவுனியா முகாம்' என்று செய்தி வெளியிட்டு இலங்கை அரசைக் காப்பாற்ற முயன்றவர். இந்தி திரைப்பட விழாவிற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய போது 'சிங்கள திரைப்பட உலகிற்கு தமிழர்களும் நெருங்கியவர்கள். முதல் சிங்களப்படம் தமிழரால் தான் எடுக்கப்பட்டது' என்று வரலாற்றுத் துணையுடன் அதற்கான எதிர்ப்பரசியலை நுணுக்கமாக வைத்தவர். தமிழகத்தில் இருந்து எப்போதெல்லாம் சிங்கள அரசிற்கு எதிர்ப்புக் குரல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் பதிவு செய்யப்படுகிறதோ அதற்கு அடுத்த நாளே அது பொய்ச் செய்தி அல்லது ஆதாரமற்ற ஒன்று என்ற வகையிலான ஒரு செய்தியை சிங்கள அரசின் குரலை தனது குரலாய் வைக்கிறவர். இலங்கையில் நடந்த வரலாறு காணாத மழை, வெள்ளத்தை இந்தப் பத்திரிக்கையில் செய்தியாக வெளிவராமலேயே செய்தவர். இவ்வாறு இவருக்கு எதிராக எண்ணற்ற ஆதாரங்களை வைக்க முடியும்.

ஆராய்ச்சியாளர் திரு. சூரியநாரயண்

தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய இலங்கை உறவுகளையும் குறிப்பாக மீனவர் சமூகத்தை பற்றியும் அரசு சார்பு நிறுவனங்களிடத்தில் பேசி, எழுதி வருபவர். அரசு சார்பான இவரது கருத்துக்கள் இவரை மக்களுக்கு எதிர்நிலையிலேயே வைத்து இருக்கிறது. பல்வேறு தரவுகளுடன், உண்மைகளுடன் இந்திய-இலங்கை அரசின் நலனை மிக நுணுக்கமாக இணைத்து செயல்படுபவர். ஒரு தொண்டு நிறுவனம் எவ்வாறு அரசின் நிலைப்பாட்டினை மக்களிடத்தில் எடுத்துச் சென்று குழப்புகின்றதோ அவ்வாறு செயல்படுபவர். இவரின் செயல்பாடுகள் நமக்கு அரசின் நிலைப்பாட்டினை எடுத்து உரைத்து விடுகிறது. சமீபத்தில் இவர் எழுதிய கட்டுரைகளைப் பார்த்தால் இவரினைப் புரிந்து கொள்வது எளிது.

சனவரி 2011, 28 அன்று இவர் எழுதிய கட்டுரையில் யாழ்ப்பானத்தில் 1983 அன்று பிடிக்கப்பட்ட மீன்பிடி அளவை பற்றி குறிப்பிடும்போது 48,776 டன் என்றும், இது 2000இல் 2211 டன்னாக குறைந்து விட்டது என்றும், இதே போன்று மன்னார் பகுதியில் 11796 ஆக இருந்த மீன்பிடி 2002இல் 3614 டன்னாக குறைந்து விட்டது என்றும் எழுதுகிறார். 1983க்குப் பிறகு தமிழீழ மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டது இல்லை என்கிற செய்தியை கவனமாக மறைக்கிறார். (2008இல் மன்னாரில் 32,760+ ஆக இருந்த தமிழர்கள் மே 18, 2009ற்குப் பிறகு 480+ ஆகக் குறைந்தது குறித்து எங்கும் இவர் குறிப்பிட்டது இல்லை. அதாவது இவரின் ஆராய்ச்சி மக்களின் நலன் சார்ந்து இருந்த்து இல்லை) இந்தக் குறிப்பின் மூலம் 'இவ்வாறு தமிழீழ மீனவர்களின் மீன்பிடி வாழ்வு தமிழக மீனவரின் இழுவலை மீன்பிடி தொழிலால் பின்னுக்குத் தள்ளப்பட்டது' என்று வாதம் செய்கிறார். அதாவது இலங்கை கடற்படை தடை செய்ததால் பின்னுக்கு தள்ளப்படாத மீனவர் வாழ்வு, தமிழக மீனவர்களினால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது என்று ஆரம்பிக்கிறார். (http://www.southasiaanalysis.org/papers44/paper4304.html)

இத்தகைய புள்ளிவிவரங்களைத் தரக்கூடியவர், கொல்லப்பட்ட தமிழக மீனவர் பற்றி பேசும்பொழுது மட்டும் '100க்கும் அதிகமான மீனவர்கள் கொல்லப்பட்டனர், 330 மீனவர்கள் காயம் அடைந்தனர், 50 படகுகள் சேதம் அடைந்தன' என்று தவறான மற்றும் குறைத்து மதிப்பிடக்கூடிய தகவலைத் தருகிறார். தமிழக மீனவர்கள் தமிழீழ மீனவர்களின் சிரமங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று அங்கலாய்க்கிறார். படுகொலையை கண்டிக்கும் தொனியில் ஆரம்பித்த இவர், தமிழீழ மீனவர்களின் வாழ்க்கையைக் காக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பில் தமிழகம் உள்ளதாக கட்டுரையை முடிக்கிறார். படுகொலைக்கான காரணம், கொலையாளியைக் கண்டறிவது என்பது போன்ற கேள்விகள் காலச்சுவடைப்போலவே கவனமாக தவிர்க்கப்படுகின்றன. இவரைத்தான் காலச்சுவடு கண்டறிந்து பேட்டி எடுத்துள்ளது.

தொண்டு நிறுவனங்களும் நெய்தல் நிலத்திற்கு வர இருக்கும் சீரழிவுகளும்

மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க அவர்களை மட்டுப்படுத்தவும், ஒன்றாக இணைய விடாமல் தடுப்பதும், திசைதிருப்புவதுமான பணியை கடற்கரை சார்ந்த தொண்டு நிறுவங்கள் செய்கின்றன.  

காலச்சுவடு பேட்டியில் மீனவ நண்பனாக, சூரியநாராயன் முன்வைக்கும் தொண்டு நிறுவனங்களின் மக்கள் விரோத நடவடிக்கைகள், மக்கள் சார்ந்து இயங்கும் போராளி அமைப்புகளுக்கும், நேர்மையான சிந்தனையாளர்களுக்கும் தெரிந்த ஒன்றே. இவர் குறிப்பிடப்படக்கூடிய எம்.எஸ்.சாமிநாதன் ஆய்வு நிறுவனம், தென்னிந்திய மீனவர் அமைப்புகளின் கூட்டமைப்பு (திருவனந்தபுரம்) பல்வேறு எதிர் நடவடிக்கைகளை செய்து வருகின்றன. எம்.எஸ்.சாமிநாதன் ஆய்வு நிறுவனம் ஈழப்போருக்கு பிந்தைய இலங்கை அரசின் இனப்படுகொலை திட்டமான 'வடக்கின் வசந்தம்' திட்டத்தில் வன்னிப்பகுதியில் விவசாய மற்றும் கடல்சார் ஆராய்ச்சி, மறுசீரமைப்பு வேலைகளில் இலங்கை அரசுக்கு துணையாக வேலைசெய்த நிறுவனம்.

தமிழக கடல் சார்ந்து வெகு காலமாக செயலாற்றி வரும் எம் எஸ் சுவாமிநாதன் பவுண்டேசன், மீனவர் மறுவாழ்வு, கடல் சார் ஆராய்ச்சி என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கான தரவுகளை தயாரிப்பதுமான பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் மீனவர் மறுவாழ்விற்கான ஆதார தொழில் வளர்ச்சி பற்றி பேசி வருவதுடன் அதற்கான களப்பணிகளை செய்கிறது. http://mssrf.org/news/csr/Bill%20to%20protect%20fishermens%20traditional%20rights%20on%20anvil,%20%20Dec%2027,%202010.pdf http://mssrf.org/news/mss/Sea%20water%20as%20a%20social%20resource%20significance%20of%20Vedaranyam%20Salt%20March,%20the%20hindu,%20dec%2026,%202010.pdf ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கடல்சார் ஆராய்ச்சிக்கான பெரும் நிதிஉதவியும், தொழில் ஒப்பந்தமும் அரசால் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. (இதைப் பற்றி வேறொரு தருணத்தில் விரிவாக விவாதிப்போம்.)

மீனவர் படுகொலைகளின் காரணமாக பிற்காலத்தில் வரக்கூடிய சிக்கல்களை சந்திப்பதற்காக வெகு காலத்திற்கு முன்பே தன்னார்வக் குழுக்களை மீனவ சமூகத்திடம் இந்திய அரசு விதைத்து வைத்து உள்ளது. இந்த வகையில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு நிறுவனம் தென்னிந்திய மீனவர் சங்கங்களின் சம்மேளனம் (சிப்ஸ்) SIFFS நிறுவனம் (http://www.asiantribune.com/node/3016). இந்த நிறுவனத்தினர் இருதரப்பு மீனவர் பேச்சு வார்த்தைகள், புரிதல்கள் என்கிற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை ஈழத்தமிழ் மீனவர்கள் பிரதிநிதிகள் என்று சொல்லி இலங்கை-டக்ளஸ் அரசினால் மிரட்டப்பட்ட மீனவர்களைக் கொணர்ந்து பத்திரிக்கைகளுக்குப் பேசவைத்தனர். (http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1008/21/1100821001_1.htm) இதில் அவர்கள் 'தமிழக மீனவர்களால்தான் தங்கள் வாழ்வு பாதிப்பதாக' பேசவைக்கப்பட்டனர். உடன் வந்திருந்த தமிழக மீனவர்கள் பேசவிடாமல் தடுக்கப்பட்டனர். இந்தக் கூட்டம் ராமேசுவரம், நாகப்பட்டினம், சென்னை என்று மூன்று நகரங்களில் நடந்தது. சென்னையில் மட்டும் இந்த சதியை அறிந்த தமிழக மீனவர்கள், கூட்டத்தினுள் நுழைந்து கேள்விகளை வைத்தார்கள். தமிழக மீனவர் படுகொலையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்றதற்கு அவர்கள் ‘அதை நாங்கள் வன்மையாக

கண்டிக்கிறோம், இதற்கும் அதற்கும் தொடர்பில்லை’ என்றதோடு மட்டுமல்லாமல் 'தமிழக மீனவர்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள்' என்றார்கள்.

ஆனால் இதைப்போன்ற மக்கள் எதிர் பின்புலம் கொண்ட நிறுவனங்களைத் தான் சூரியநாராயண் மீனவர்களை காக்கும் அமைப்புகள் என்று போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகிறார். இந்த நிறுவனங்களின் அரசியல் தெரிந்தும் காலச்சுவடு மேற்கொண்டு கேள்விகள் வைக்கவில்லையா அல்லது அவர்களுக்கு உண்மையே தெரியாதா என்பதை அவர்களே விளக்க வேண்டும். சூரியநாரயணனை கண்டுபிடித்து கூட்டிவந்தவர்களுக்கு இது தெரியாமலா இருக்கும் என்பது எமது ஐய்யம்.

இழுவைப்படகுகளும், மீன்பிடி வளங்களும்

இழுவைப்படகுகள் மீன்வளத்தை அடியோடு நாசப்படுதுகின்றன என்பது உண்மை. இழுவைப் படகுகள், தமிழக பாரம்பரிய மீன்பிடிப்பவர்களுக்கும் பெரிய படகு முதலாளிகளுக்குமான பிரச்சினை. இவ்வாறே இலங்கை மீனவருக்கும், தமிழக மீனவருக்கும் இடையேயும் இப்பிரச்சினை இருக்கிறது. ஆக இழுவைப் படகுகள் காரணமாகத்தான் படுகொலைகள் நடத்தப்பட்டன என்றால் ஏன் இதுவரை இழுவைப்படகு மீனவர்கள் கொல்லப்பட்டது இல்லை? ஏன் அவர்கள் வெறுமனே கைது மட்டுமே செய்யப்படுகிறார்கள்; சுடப்படுவது இல்லை...? ஏன் இது வரை சுட்டுகொல்லப்பட்ட மீனவர்கள் அனைவரும் மீன்வளத்திற்கு எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத பாரம்பரிய மீனவர்களாக இருக்கிறார்கள்?

இனி இலங்கை மீனவர்கள், கடந்த மீனவர்கள் கைதின்போது கொடுத்த பேட்டியைப் பார்ப்போம் - இராமேஸ்வரம் மீனவர்கள் 106 பேரை சிறை பிடித்த பிறகு, ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஈழத்து மீனவர் கூட்டுறவு அமைப்பின் தலைவர் தவரத்தினம் ஒரு செய்தியைக் கூறியுள்ளார், (http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1102/21/1110221047_2.htm)

“தமிழ்நாட்டு மீனவர்கள் எங்கள் கடல் பகுதியில் வந்து மீன் பிடிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. காரணம் இரு பகுதி மீனவர்களும் இந்த கடற்பகுதியை தங்களுக்குப் பொதுவானதாகவே கருதி மீன் பிடித்து வந்துள்ளனர். யாழ்ப்பாணத்து மீனவர்களாகிய நாங்கள், தமிழ்நாட்டில் இருந்து இழுவைப் படகில் வந்த, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதையே எதிர்த்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல, “இப்படி இழுவைப் படகில் வந்து பெரும் வலைகள் வீசி, அடியோடு மீன் வளத்தை வாரிச் செல்வதால் எங்கள் வாழ்வு எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே எடுத்துக் கூறியுள்ளோம். கடல் மீன் வளத்தை அழிக்கும் இப்படிப்பட்ட (Trawler Fishing) இழுவைப் படகு மீன் பிடித்தலை நாங்கள் எப்போதோ நிறுத்திக் கொண்டுவிட்டோம். எனவே இப்பிரச்சனை பெரிதாவதற்கு முன்னர் தீர்வு காண வேண்டும்” என்று தமிழக மீனவர்களுக்கு அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

 தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி, ஆந்திர பகுதியில் இருந்தும் இப்படிப்பட்ட இழுவைப் படகுகளில் வந்து தங்கள் கடற்பகுதியில் நன்றாக உள்ளே வந்து மீன் பிடிக்கும்போதும் சிறிலங்க கடற்படை அவைகளைக் கண்டுகொள்வதில்லை என்று ஈழத்து மீனவர்கள் கூறுகின்றனர். மாறாக, இந்த ஆண்டில் மட்டும் இரண்டு, மூன்று தடவை இப்படிப்பட்ட இழுவைப் படகுகள் யாழ்ப்பாணம் பகுதிக்கு நெருக்கமாக வந்து வலை வீசி இழுத்துச் சென்றதில், ஈழத்து மீனவர்கள் விரித்திருந்த பல வலைகளை அறுத்துச் சென்று விட்டன. அது குறித்து புகாரும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்க கடற்படை அதைக் கண்டுகொள்வதில்லை. 

உலகின் மீன்பிடிதேவை பற்றி நாம் சிறிது தெரிந்து கொள்வது அவசியம். உலகின் மீன்பிடித் தேவை வளர்ந்து கொண்டே இருக்கிறது; மீன்பிடி வளங்கள் அழிந்து கொண்டே செல்கின்றன. கிட்டத்தட்ட மத்திய தரைக்கடலில் மீன்களே இல்லது போய் உள்ளது. நோர்வே சார்ந்த மீன்பிடிபடகுகள் ஆயிரக்கனக்கான மைல்கள் கடல் கடந்து மீன்பிடி செய்யவேண்டி உள்ளது. மீன் தேவை என்று பார்த்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒரு நாட்டிற்கு சராசரியாக வருடம் ஒன்றிற்கு 1.1 லிருந்து 1.2 மில்லியன் டன் மீன் தேவை உள்ளது. அந்த நாடுகளில் மீனவர்கள் பிடிக்கும் மீன் அளவிற்கு எடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் கட்டுப்பாடு இல்லாத மீன்பிடித்தல் காரணமாக அந்நாடுகளில் மீன்வளம் இல்லாது அழிந்துபோகும் நிலைஏற்படும். இந்தியாவின் சராசரி மீன் தேவை கிட்டதட்ட 5.2 மில்லியன் டன் ஆகிறது. (ஆனால் இந்தியாவில் மீன்பிடித்தலுக்கு தனி அமைச்சர் கிடையாது என்பது உபரி செய்தி. விவசாய அமைச்சகத்தின் கீழ் இது செயலாற்றுகிறது. http://dahd.nic.in/ ) சீனாவிற்கு இது 47 மில்லியன் டன் ஆகிறது. (அதாவது இந்திய அளவை விட பத்து மடங்கு, ஐரோப்பிய ஒன்றியத்தை விட 50 மடங்கு)

இந்த மீன்பிடி தேவைகளை அந்த அந்த நாடுகள் தங்களின் கடல் பகுதியில் இருக்கும் மீன்பிடித்தல் மூலம் எட்டிவிட முடியாது. எனவே அடுத்த நாட்டு கடல்பகுதிகளில் மீன்பிடி உரிமை வேண்டி ஒப்பந்தம் போடுகின்றன. இந்த தேவைகளை பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாக நிறைவேற்றிக்கொள்கின்றன. இந்த அடிப்படையில் தான் வன்னிப்பகுதியிலும் முல்லைத் தீவு பகுதியிலும் சீனாவிற்கு இலங்கை மீன்பிடி உரிமையை வழங்கியுள்ளது. இந்தியாவும் தன்னுடய 300 கி.மீ அளவிலான கடல்வளப் பொருளாதார மண்டலத்தை பன்னாட்டு நிறுவங்களுக்கு வழங்கவும் உள்ளது. (அல்லது வழங்கி உள்ளது) இத்தகைய பிரகாசமான வருங்காலத்தை எப்படி கட்டுமரத்தில் வந்து மீனுக்கு கொக்கி போடும் மீனவரிடம் விட்டுவைப்பது என்பதே இந்த அரசுகளின் வருங்கால கவலை. தமிழக மீனவனின் கடல் வளத்தை பன்னாட்டு நிறுவனத்திடமும், இலங்கை அரசிடமும் கொடுத்து விட்டு எம்.எஸ் சாமிநாதன் நிறுவனம் சொல்லிக்கொடுகின்ற மறுவாழ்வு (அல்லது மாற்று பொருளாதார வழி) மூலமாக கடற்கரையில் அப்பால் மீனவர்கள் நிற்பதை தான் இவர்கள் விரும்புகிறார்கள். இதற்கான வேலைகளை இவர்கள் எப்பொழுதோ ஆரம்பித்து விட்டார்கள். இவர்களின் இணையத்தின் வழி பலதகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

fishermen_500

மீனவர் படுகொலையை திரிக்கும் தொடர்ச்சியான இந்த திரிபு கதைகள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள் 2009 போருக்கு வெகு காலத்திற்கு முன்பே வகுக்கப்பட்டு விட்டன. 2008 நவம்பர் மூன்றாம் வார இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அந்த பத்திரிக்கையின் அன்றைய தலைமை ஆசிரியர் ஆதித்ய சின்ஹா எழுதிய கட்டுரையில் ‘தமிழக மீனவர்கள் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதால்தான் இலங்கை அரசு கொல்கிறது. எனவே அவர்களை வேறு லாபம் தரக்கூடிய தொழிலுக்கு மாற்றுவது அவசியம். ஆனால் மீனவர் பிரச்சனை மூலமாக அரசியல் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள் அவ்வாறு செய்வார்களா' என்று நீண்ட மைய பக்க கட்டுரையை எழுதி உள்ளார். இதன் தொடர்ச்சி பல்வேறு நபர்களால் பல்வேறு தளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

எல்லை கடந்து மீன்பிடித்தலும், பாரம்பரிய மீனவர் படுகொலைகளும்.

இதுவரை கொல்லப்பட்ட மீனவர்கள் அனைவரும் பாரம்பரிய மீனவர்களே. சூரிய நாரயணன் வர்ணிப்பது போல இழுவைப் படகுகளால் இலங்கை மீன்வளத்தை நாசமாக்கியவர்கள் அல்ல. கடந்த 2006ம் வருடம் இந்திய அரசுக்கு மீனவர் படுகொலை குறித்து கருணாநிதி எழுதிய கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் படுகொலைக்கு உள்ளானவர்கள் அனைவரும் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்தவர்கள் என்றும் தமிழக அரசு குறிப்பு சொல்கிறது. (Press Note No.130 Dated 22-9-2006

D.O.Letter No.16804/FS 6/2006 Dated: 22. 09.2006

http://www.tn.gov.in/pressrelease/archives/pr2006/pr220906/pr220906_130.pdf

What is pertinent to note is that all the four fishermen were fishing within the Indian territorial waters, south east of Vedaranyam (at 5 lengths depth) ….

Unfortunately, now the Sri Lankan Navy has started preventing the fishermen of Tamil Nadu from fishing in our own territorial waters…..

…Governor's address to the Legislative Assembly on 24th May 2006 incorporated the following "Necessary measures will be undertaken to safeguard the traditional fishing rights of fishermen of Tamil Nadu to undertake fishing activities near Katchathivu and to remove the difficulties faced by them"…

 I am sure you are also aware of the fact that the Legislative Assembly of Tamil Nadu had passed a resolution in 1991 on this issue wherein the Tamil Nadu Legislative Assembly called upon the Government of India to take all urgent action and efforts necessary to get back Katchathivu and restore it to the Indian territory apart from moving the Sri Lankan Government to pay compensation for families of fishermen killed by the Sri Lankan Navy as well as those who have lost their belongings in the attacks by them..)

இந்திய அரசு தொடர்ந்து செவிமெடுக்கவில்லை என்பது மட்டுமல்ல எல்லை பாதுகாப்புப் படையையும் மீனவர் நலன் கருதி செம்மைப்படுத்தவில்லை. இது மட்டுமல்லாது இந்திய அரசு இலங்கை அரசுக்கு கடற்படைக்குத் தேவையான நவீன படகுகளை போருக்கு கொடுத்துதவியது, அதன் தமிழர் எதிர்ப்பு நிலைப்பாடாய் சர்வதேச சமூகத்தின் முன் வைக்கப்பட வேண்டும். இதற்கான ஆதரங்கள் தமிழக அரசின் செய்தி குறிப்பிலேயே தெரிவிக்கப்படுகிறது.

http://www.tn.gov.in/pressrelease/archives/pr2008/pr080308/pr080308_22.pdf

….. I would therefore once again like to draw your attention to the D.O.letter from me dated 30.3.2007 wherein I had requested for

(i) enhanced presence of Coast Guard and Navy for intensive sea and air patrolling with additional man power, and state-of the art Vessels and Aircrafts, and

(ii) the entire sea patrolling of Tamil Nadu Coast to be brought under one single command irrespective of East or West Sea Coast,as presently there is some confusion in this matter.

ஒருவேளை மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி இருந்தால் கூட அவர்கள் உலகெங்கும் மீனவர்கள் எவ்வாறு அயல் நாட்டால் நடத்தப்பட வேண்டுமோ அவ்வாறே நடத்தப்படவேண்டும் என்பது எவரும் கேட்கும் கேள்வி. இதை தமிழக அரசும் இந்திய அரசிடம் வைக்கிறது.

( http://www.tn.gov.in/pressrelease/archives/pr2008/pr080308/pr080308_22.pdf

….Needless to add that we have repeatedly instructed our fishermen from crossing the IMBL but the fishermen are guided by the availability of fish which, as you know, is available in plenty near Katchathivu - which has from time immemorial been the traditional fishing ground of fishermen of Tamil Nadu. However my request is

that even in cases where the fishermen have strayed into Sri Lankan waters, the men should be treated as per International Laws and norms and not through violence and bullets// தமிழக அரசு சார்பாக கருணாநிதி..)

சென்ற ஆண்டு 2010 ஜூன் மாதம் NDTV தொலைக்காட்சியில் வெளியான மீனவர் படுகொலை பற்றிய ஆவணப்படத்தில் (Blood on Water) சென்னையைச் சார்ந்த, முன்னாள் காவல் துறை அதிகாரி பி.எஸ்.ராகவன் மீனவர் படுகொலைக்கான காரணமாய் 'தமிழக மீனவர்களின்' பேராசையே காரணம் என்று வாதிட்டார். இவர்களின் பேராசை காரணமாக அதிக அளவில் மீன் பிடிக்க முற்பட்டு உயிரை இழக்கிறார்கள் என்று கூறினார். (http://www.ndtv.com/video/player/ndtv-special-ndtv-24x7/blood-on-water/143808 )

இந்த திரிபுப் பிரச்சாரம் தற்போது வெகுதீவிரமாக முன் எடுக்கபட்டு வருகிறது. கடந்த பெப்ரவரி 2011 இரண்டாவது வாரத்தில் வெளிவந்த இந்தியாவின் அறிவுசீவிகள் பங்களிப்பு செய்யும் மிக முக்கியமான பத்திரிக்கையான எகனொமிக் பொலிடிகல் வீக்லி பத்திரிக்கை, மிகுந்த அதிர்ச்சிகரமான முறையில் தமிழ் மீனவர் படுகொலையைப் பற்றிய தலையங்கத்தில் இந்திய அரசின் தமிழ் எதிர்ப்பு நிலையை அறிவுசீவித்தனத்துடன் ஆதரித்து இருந்தது. தமிழக மீனவர் படுகொலையை பற்றி பேசும்போது 'போருக்குப் பின் படுகொலை வெகுவாக குறைந்துவிட்டது' என்கிற நிம்மதி தோரணையில் எழுதப்பட்டிருந்தது. மீனவர்கள் எல்லை கடப்பதாலும், இழுவைப் படகுகளாலும் இந்த படுகொலைகள் நடப்பதாக நியாயப்படுத்தியிருந்தது. மேலும் இந்த மீனவர் படுகொலை பெருமளவு தமிழ்நாட்டில் தமிழ் சாவனிசத்தை வளர்த்தெடுக்க தமிழ் அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது என்றும் எழுதப்பட்டிருந்தது. (http://beta.epw.in/newsItem/comment/189398/

மனித உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து எழுதி லாப நோக்கில் இல்லாமல் செயல்படும் இந்தப் பத்திரிக்கையில் இப்படியொரு தலையங்கம் வந்துள்ளது நாம் கவலை கொள்ள வேண்டிய ஒன்று. இந்தப் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியரை பற்றி அறிந்து கொள்ள முற்பட்டபொழுது நமக்குத் தெரிவது, இதன் ஆசிரியர் ராம்மனோகர் ரெட்டி இந்த பத்திரிக்கைக்கு முன்பாக இந்து நாளிதழில் பொருளாதரம் குறித்த பகுதியின் ஆசிரியர் என்பதாகும். http://www.outlookindia.com/article.aspx?234453. தமிழர் எதிர்ப்பு அரசியலின் மையப்புள்ளியாக இந்து நாளிதழ் இருப்பது என்பது தமிழர்கள் மட்டுமே அறிந்த ரகசியமாக உள்ளது.

தமிழர் விரோத சதிகளின் மையம்.

இம்மாதிரியான வாதங்கள் தொடர்ச்சியாக சென்னையைச் சார்ந்து இயங்கக்கூடிய தெற்காசிய ஆலோசனை குழு, பாதுகாப்பு ஆலோசனைக்கான மையம், டொபிகல் ஸ்ட்டடிஸ் செண்டர் போன்ற முன்னாள் இந்திய அரசு அதிகாரிகள் குறிப்பாக உயர்சாதி, இந்திய அதிகாரவர்க்கம் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்ந்தவர்களால் வைக்கப்படுகிறது. இந்த குழுக்கள் இந்திய இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையையும், மக்களுக்கு எதிரான கருத்து வாதங்களையும், ஆலோசனைகளையும் தொடர்ந்து வைத்துக் கொண்டு வருகின்றன. தமிழ் ஈழவிடுதலைப் போரை பயங்கரவாதமான ஒன்றாக சித்தரித்ததில் இவர்களின் கடும் உழைப்பு உண்டு. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொடர்வேலைகளை செய்து வருகிறார்கள். இவர்கள் இந்திய அரசின் தெற்காசிய வெளியுறவுக் கொள்கையை வழிநடத்துவதில் பெரும் பங்கு ஆற்றிக் கொண்டு இருப்பவர்கள். குறிப்பாகக் கூறுவதென்றால், லெப்.ஜென. வி.ஆர்.ராகவன், ராமன் (முன்னால் இந்திய ரா உளவு துறை), பேரா. சூரியநாராயண், கலோனல். ஹரிஹரன் (முன்னால் ராணுவ உளவுத்துறை அதிகாரி), சத்யமூர்த்தி, கமோடோர். வாசன் (முன்னால் ராணுவ அதிகாரி- இவர் டுப்லின் நகரில் நடந்த இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தில் இலங்கை அரசு பங்கு பெற மறுத்தபோது, இந்து பத்திரிக்கை ஆசிரியர் ராமினால் தொடர்பு கொள்ளப்பட்டு இலங்கை அரசுக்காக வாதாடியவர்) போன்றோரை குறிப்பிட்டுச் சொல்ல இயலும்.

இவர்கள் தங்கள் கருத்துக்களை மக்கள் மன்றத்தில் வைப்பவர்கள் அல்ல. இப்படிப்பட்டவர்களின் கருத்துக்கள், டெல்லி அதிகார வர்க்கத்தின் கருத்துக்களை அல்லது திட்டத்தை ஊடகம் வழியாக பிரதிபலிப்பதாகவோ அல்லது அரசிற்கு வேண்டிய கருத்துத் தரவுகளை அளிப்பதாகவோ இருக்கும். இப்படி செயல்படுபவர்களை ஓர் ஊடகம் தனது தளத்தில் செயல்பட அனுமதிக்கும்போது அவர்களின் நேர்மை மீது நமக்கு சந்தேகம் வருவது இயற்கையே. (இவர்களில் பெரும்பாலானோர் இந்திய அமைதிகாப்புப் படையில் இருந்தவர்கள் அல்லது தமிழீழவிடுதலைப்புலிகளால் ராஜதந்திர, ராணுவ நகர்வுகளில் தோற்கடிக்கப்பட்டவர்கள்.)

 இந்த ஊடகங்கள் இவ்வாறு செயல்படுவதற்கான காரணத்தை அறிவதைக்காட்டிலும், இந்த மாதிரியான திரிபு முயற்சிகள் தமிழக அறிவுசீவி வர்க்கத்தை மேலும் மனிதகுல விரோதிகளாக செயல்பட ஊக்குவிப்பதாக அமையும் என்கிற கவலையே எங்களை ஆட்கொண்டு உள்ளது. இந்தப் பேட்டி தீவிரமாக எதிர்கொள்ளப்படவேண்டிய ஒன்றே. காலச்சுவடு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இதைப்பற்றிய ஒரு ஆழமான விவாதத்தினை முன்மொழிவது ஒரு சிறந்த சனநாயக செயலாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

 கச்சதீவில் தமிழர்களுக்கான உரிமை இல்லையெனவும் கருத்து பரப்ப கடுமையாக முயற்சிப்பதுடன் கச்சதீவை ஒரு முடிந்து போன நிகழ்வு என பதிவு செய்வதில் இவர்கள் கவனமாக இருக்கிறார்கள். இதில் கச்சதீவு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறாமல் திருட்டுத்தனமாக இலங்கைக்கு கொடுக்கப்பட்டதாக ஒப்பந்த பரிமாற்றம் நடந்தாலும் அந்தப் பரிமாற்றம் சட்டப்படி செல்லுபடியாகாது என்று தெரிந்து இருந்தும், கச்சதீவு தமிழர்களுக்கே சொந்தம் என்கிற பாரம்பரிய உரிமையை மறைக்கவும் இது பேசப்படுகிறது. மேலும் அதில் உரிமை கொண்டாடுவது சட்டவிரோதம் என்றும் கூறுகிறார்கள். அதாவது இந்தியாவிற்கு சொந்தமில்லாத காசுமீரை சொந்தம் கொண்டாடுவதை எதிர்த்தால் அது தேசதுரோகம். ஆனால் இந்த நாட்டு தமிழ் மக்களுக்கு சொந்தமாக பாரம்பரியமாகவும், சட்டரீதியாகவும் சொந்தமாய் உள்ள நிலப்பரப்பை கேட்பது சட்டவிரோதமாம்.

கச்சதீவு உரிமை இவர்களுக்கு தொடர்ந்து நடுக்கம் கொடுக்கக் கூடியதாகவே இருந்து வந்துள்ளது. (சிவகங்கையில் ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய முனைந்த தோழர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களை விடுவிப்பது தொடர்பாக சிவகங்கை கலெக்டரிடம் பேசும்பொழுது அவர் சம்பந்தம் இல்லாமல் "கச்சதீவு முடிந்து போன ஒன்று, சர்வதேசிய அளவில் ஒப்பந்தம் இடப்பட்ட ஒன்றை திரும்பப் பெறமுடியாது" என்று பேசியது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.)

இவ்வாறு பேசுபவர்கள் எழுதுபவர்கள் ஒரு விசயத்தை கவனமாக பேச மறுக்கிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக படிக்கச் சென்று தங்கி இருக்கும் இந்திய மாணவர்கள் காலில் கட்டப்பட்டுள்ள எச்சரிக்கை மணியை எதிர்க்கிறார்கள். எல்லை கடந்து மீன்பிடிப்பது குற்றம் எனில்,  அதற்கான தண்டனை துப்பாக்கி சூடு எனில், இதே போல எல்லை கடந்து சட்ட விரோதமாக சென்று படிக்கும் இந்திய மாணவர்களை தமிழக மீனவர் போல் சுட்டுகொல்லச் சொல்வது தானே சரியானதாக இருக்கும். அமெரிக்காவில் இருக்கும் ஏழை மாணவர்களின் படிப்பு வாய்பை சுரண்டுகின்ற, அங்கு வேலை இல்லாமல்/ கொடுக்காமல் குற்றவாளிகளாய் நடத்தப்படுக்கின்ற கறுப்பு அமெரிக்கர்களின் பொருளாதார அடித்தளத்தை ட்ராளர் படகு போல சுரண்டுகின்ற இந்தியர்களை தமிழக மீனவர்களைப் போல சுட்டுகொல்ல வேண்டும் எனலாமா நாம்? இவ்வாறு ஒரு நடவடிக்கை எடுக்கச் சொல்லி அமெரிக்கத் தூதரகத்தை கேட்டு கொள்ளுமா தமிழ்ச் சமூகம்? அவ்வாறு செய்தால் அங்கு சட்ட விரோதமாக இருக்கும் இந்திய உயர்/ஆதிக்க சாதி, சமூகம் கதறி காலில் விழாதா?... இந்த நியாயத்தை காலச்சுவடோ, பொலிடிகல் வீக்லியோ, இந்து பத்திரிக்கையோ பேசுமா?..

ஆகவே காலச்சுவடு இதழின் கட்டுரையை கவனத்தில் எடுத்து படிப்பதுடன் இது தொடர்பாக அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து நாம் கவனித்து செயலாற்ற வேண்டியது அவசியம். மீனவர் படுகொலைக்கான நியாயம் வழங்கப்பட வேண்டும், இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டும், இந்திய இலங்கை கடல்சார் எல்லை ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட வேண்டும், கச்சத்தீவு கைப்பற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இவ்வாறு பரப்ப்படக்கூடிய சதிகளில் சிக்காமல் காப்பதும், போராட்டத்தை மேலும் வலுவுள்ளதாக நகர்த்த வேண்டும் என சக பெரியாரிய, தமிழ்த் தேசிய, தலித் மற்றும் மார்க்சிய லெனினிய அமைப்புகளை கேட்டுக்கொள்கிறோம். தொண்டு நிறுவனங்களின் சதி வலைகளில் இருந்து மீனவர் சமூகங்கள் மீட்கப்பட வேண்டும். வர இருக்கும் பன்னாட்டு நிறுவன பொருளாதர நலன் சார்ந்த மீனவர் எதிர்ப்புத் திட்டங்களை முறியடிக்கவேண்டும். மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தவோ, அதை திரிபுப்படுத்தவோ நடக்கும் எந்த ஒரு முயற்சியும் வலுவான கரத்தோடு எதிர்கொள்ளப்படவேண்டும். இந்த சதிகளை முறியடிக்க உங்களால் மட்டுமே முடியும்.

அனைத்து தளங்களிலும் இதை எடுத்துச்செல்வோம். மக்களிடத்தில் உரைப்போம், இம்மாதிரியான செய்திகள் வரும்பொழுது அதற்கான பதில்களை எதிரியின் முகத்தில் அறைவோம்.

நாம் வெல்வோம்.

மே பதினேழு இயக்கம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

9444146806

மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்:

இந்த கட்டுரையை அல்லது இதன் சாரம்சத்தை துண்டறிக்கையாக, நகலாக, கட்டுரையாக மீள்பிரசுரம் செய்து பரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.தேர்தல் முடிந்து அடுத்து நடக்க இருக்கும் மீனவர் படுகொலைக்கு முன்பு நாம் செயலாற்ற வேண்டியுள்ளது. 

Pin It