திரு. காந்தி “கடைசிப்போர்” துவக்கப்பட்டாய் விட்டது. மும்முரமாக ஆங்காங்கு வேலைகள் நடைபெறுவதாக பத்திரிகைகளில் காணப்படுகின்றன.
தொண்டர்களும் வந்து குவிவதாக பத்திரிகைப் பிரசாரங்கள் பக்கம் பக்கமாய் பறக்கின்றன. பத்திரிகைப் பிரசாரங்களை பார்க்கும் வாலிபர்களுக்கு ரத்தம் துடிக்கின்றது.
அவர்களுக்கு தாமும் போய்ச் சேர்ந்து கொள்ளலாமா என்கின்ற பதட்டம் நாக்கில் தண்ணீர் ஊறுகின்றது, “இந்த போர் சீக்கிரம் அடங்கிப் போகும்” “தோல்வி ஏற்பட்டு விடும்” என்று கருதி இதிலிருந்து விலகியவர்களும் பரிகாசம் செய்தவர்களும் இந்த பத்திரிகை ஆர்ப்பாட்டங்களைப் பார்த்து “ஜெயித்து விடும் போல் இருக்கின்றதே.
நமக்கு நோகாமல் கிடைக்கக்கூடிய தேசபக்தன் பட்டமும் தேசீய வீரன் பட்டமும் வீணாய்ப் போய் விடும் போல் இருக்கின்றதே இனி எப்படியாவது உள்ளே புகுந்து கொள்ளலாமா” என்று பலர் மன விசாரத்துடன் கஷ்டப்படுகின்றனர். இந்த நிலையில், நமக்கும் பல மிரட்டுதல் மொட்டைக் கடிதங்களும் யோசனை கூறும் நண்பர்கள் கடிதங்களும் வந்த வண்ணமாய் இருக்கின்றன.
இந்த இயக்கத்தில் நாம் ஈடுபடாததாலும் அதைப் போற்றியாவது எழுதாமல் இருப்பதாலும் மற்றும் அதைக் கண்டித்து எழுதுவதாலும் இத்துடன் எனது செல்வாக்கு ஒழிந்து சுயமரியாதை இயக்கமே அடக்கிப் போகும் என்றும் நமது எதிரிகள் சந்தோஷப்பட்டுக் கொண்டுமிருக்கின்றனர்.
எப்படி இருந்தாலும் சரி. உப்புக் காய்ச்சும் சட்ட மறுப்பு வெற்றி பெற்று தெருத் தெருவாய் உப்பு மலை மலையாய்க் குவித்துக் கிடந்தாலும் சரி, அதோடு வெள்ளைக்கார ராஜாங்கமே ஒழிந்து இந்திய ‘பூரண சுயேச்சை’ அடைந்து இங்கிலாந்து தேசமும் நமது கைக்கு வருவதாயிருந்தாலும் சரி. இந்த உப்புக் காய்ச்சும் காரியத்தையோ இது சம்பந்தமான சட்டமறுப்புக் காரியத்தையோ நாம் சிறிதும் ஒப்புக்கொள்ளவே மாட்டோம் என்பதை தைரியமாய்ச் சொல்லுவதோடு இதனால் இந்தியாவுக்கு ஒரு வளைந்து போன குண்டு ஊசியளவு நன்மை கூட ஏற்படாது என்றும் கோபுரத்தின் மீதிருந்து கூறுவோம்.
மேலும் இம்மாதிரி வெறும் அர்த்தமற்ற ஆவேசக் கிளர்ச்சி எவ்வளவு வெற்றி பெற்றாலும் பாமர மக்கள் தினம் தினம் பத்திரிகைகளில் எழுச்சியான சேதிகளை படித்து அவ்வப்போது ஆனந்தமடைந்து கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் ஏற்படாது என்று நாம் இப்போது சொல்லுவதை பத்திரமாய் ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்திருந்து பரீட்சித்து பார்க்கப் பிரார்த்திக்கின்றோம்.
மேலும் இக்கிளர்ச்சியானது வெறும் வாண வேடிக்கை போல் நடக்கும் போது அடையும் மகிழ்ச்சியோடு முடிந்து விடப்போவதுடன் கிளர்ச்சி அடங்கிய பிறகு ஒரு ஆயிரக்கணக்கான தேசபக்தர்கள் புதிதாகவோ அல்லது இரண்டு தரம் மூன்று தரம் சிறை சென்ற தேசீய வீரராகவோ ஏற்பட்டு அடுத்து வரும் தேர்தல்களுக்கு ஏஜண்டுகளாக ஆவதைத் தவிர வேறு எவ்வித பலனையும் அளித்து விட முடியாது.
ஒவ்வொரு சீர்திருத்தம் வரும் போதும் ஏதாவது ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு அதன் பயனை ஒரு சிலர் அடுத்து வரும் தேர்தலில் உபயோகித்துக் கொள்ளுவது இயற்கையாகி இதுவரை நடந்து வந்த சம்பவமுமாகும். அது போலவே இப்போதும் நடப்பதில் ஆச்சரியமில்லை. அன்றியும் பொதுவாகவே நாம் ஒன்று சொல்ல விரும்புகின்றோம், அதனால் பலருக்கு கோபமும் ஆத்திரமும் உண்டாகலாம். எனினும் நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.
சைமன் கமிஷனை இந்தியா ஒட்டுக்குமே பஹிஷ்க்கரிக்க வேண்டுமென்று கூச்சல் போட்டபோது, நாம் மாத்திரமே தான் அதை எதிர்த்து நமது அபிப்பிராயத்தை வலியுறுத்தினோம். தென்னாட்டு மக்களை பதினாயிரக்கணக்காக கூட்டி வைத்து மகாநாடு கூட்டி வரவேற்பு தீர்மானமும் செய்தோம். பிறகு எல்லா சட்டசபைகளும் எல்லா சமூக சபைகளும் ஒன்று இரண்டு தவிர மற்ற எல்லா அரசியல் சபைகளும் அதை வரவேற்று உபசாரமும் செய்து தங்கள் குறைகளையும் தேவைகளையும் தெரிவித்துக் கொண்டன.
ஆனாலும் அந்த சமயத்திலும் நமக்கு பல மொட்டைக் கடிதங்கள் மைலாப்பூர் தபாலா பீசிலிருந்தும் திருவல்லிகேணி தபாலாபீசிலிருந்தும் கும்பகோணம் தபாலா பீசிலிருந்தும் சுட்டு விடுவதாகவும், குத்தி விடுவதாகவும் கண்டு எழுதி வந்தன. அவற்றில் சில இரத்தத்தினால் கையெழுத்தும் செய்யப்பட்டிருந்தன.
அதுபோலவே ஜாதி மதபேத விஷயங்களிலும் பிரவேசித்து நமக்குப்பட்டதை வெளியில் எடுத்துச் சொல்லி வருவதில் பலர் ஆத்திரப்பட்டு கண்டபடி கடிதம் எழுதினார்கள். இப்பொழுதும் அது போலவே தான் பல இதைப் பார்த்து பிரமாதமாய்க் கோபித்து மொட்டைக் கடிதம் எழுதவோ அல்லது உண்மையிலேயே ஏதாவது காரியத்தில் செய்யவோ ஆன காரியங்கள் நடைபெறலாம். அன்றியும் நமது மகாநாட்டிற்கும் சற்று சங்கடம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். எப்படி ஆனாலும் சரி நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. நமக்குத் தோன்றியதைச் சொல்லிவிட்டு வந்ததை அனுபவிக்கத் தயாராயிருக்கிறோம்.
அதாவது திரு. காந்தியவர்களால் இந்தியா ஒருநாளும் ஒரு நன்மையையும் அடைய முடியாது என்பதே. அவர் காரியமெல்லாம் வாண வேடிக்கையைத் தவிர வேறொன்றுமே இல்லை என்பது நமது அனுபவ ஆராய்ச்சி முடிவு. உதாரணமாக இந்த 10 ´காலமாக இந்திய மக்கள் திரு காந்தியை மகாத்மாவாக - ஏன் அவதாரமாகவும் வணங்கி மரியாதை செய்தார்கள். அவர் கேட்டபடி யெல்லாம் ரூபாய்கள் கொடுத்தார்கள், சொன்னபடியெல்லாம் கூட்டம் கூட்டமாக கூடி ஜெயில் சென்றார்கள்.
கதர் முதலிய விஷயங்களில் கண்மூடித் தனமாய் பின்பற்றினார்கள். சர்க்காரும் அவரைக் கண்டு சிறிது அஞ்சினார்கள். இவ்வளவையும் கொண்ட அவரால் இந்தியாவுக்கு இதுவரை ஏற்பட்ட நன்மை என்ன? என்று கேள்க்கின்றோம். காந்தியார் ஆச்சிரமம் ஒரு பெரிய மடமாயிற்று.
அதற்கு ஆதாரமாக 2 லக்ஷம் 3 லக்ஷம் 10 லக்ஷம் என்கின்ற தொகை கொண்ட முதலுடன் ஆங்காங்கு கிளை மடங்கள் ஏற்பட்டது. இவைகளைத் தவிர மற்றபடி திரு. காந்தியார் அரசியல் தலைமை இந்தியாவில் ஏற்பட்டது முதல் இதுவரை ஏற்பட்ட லாபம் என்ன? என்று மறுபடியும் கேள்க்கின்றோம்.
இந்த 10 முயற்சியில் இந்தியாவின் வரி ஒரு தூசியளவாவது குறைந்த தென்று சொல்ல முடியுமா? மற்றும் அதற்கு எதிரிடையாக வரி அதிகமாயிற்று என்று நாம் புள்ளிகளுடன் ரூபிப்போம். உத்தியோகங்களோ சம்பளங்களோ குறைந்ததாகவாவது சொல்ல முடியுமா? மேலும் மேலும் அவைகள் ஒன்றுக்கு ஒன்றரையாகவும் இரட்டிப்பாகவும் ஏற்பட்டது என்று நம்மால் சொல்ல முடியும்.
பொருளாதார விஷயத்திலாவது இவரைச் சுற்றித் திரிந்த உத்தியோகஸ்தர்கள் வக்கீல்களைத் தவிர வேறு பாமர மக்கள் இந்த 10 வருஷத்தில் ஒரு சிறிதும் முற்போக்கடைந்ததாக சொல்வதற்கும் இல்லை. இவைகள் தான் இப்படி என்றால் மற்றப்படி சமூக துறையிலாவது ஏதாவது தக்க பலன் ஏற்பட்டதாக யாராவது சொல்ல முடியுமா? என்று கேள்க்கின்றோம்.
ஒருவித முன்னேற்றமும் ஏற்படாவிட்டாலும் இவ்விஷயங்களாகிய அரசியல் பொருளாதாரம் சமூகத் துறை ஆகிய மூன்று இனங்களிலும் திரு. காந்தியார் அபிப்பிராயமாவது சரியானது என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேள்க்கின்றோம்.
அரசியலில் அவரது கொள்கைகள் எல்லாம் அதாவது பஹிஷ்காரமும் சட்ட மறுப்பும் தோல்வி அடைந்து கொண்டே வந்திருக்கின்றது. பொருளாதாரத்திலோ கதர், கதர் என்று கதரிக் கொண்டிருப்பதைத் தவிர அதனால் பல பேர் அதிக நஷ்டமடைவதன் மூலம் சிலருக்கு தினம் 0 - 0 - 6, 0 - 0 - 9 பைசா வீதம் அற்பக்கூலி கிடைத்ததைத் தவிர வேறு ஒன்றையுமே காணோம். சமூகத் துறையிலோ வருணாசிரமும் புராணங்களும் காப்பாற்றப்படுவதற்கு ஆதரவளிக்கப் பட்டதைத் தவிர மடங்கள் ஏற்படுத்தப் பட்டதைத் தவிர வேறு ஒரு பலனும் ஏற்பட முடியவில்லை.
இந்த நிலையில் 10 வருஷம் கடந்து 11 வது வருஷத்தில் “நான் இரண்டிலொன்று பார்த்து விடுகின்றேன். இனித் திரும்பி வருவதில்லை” என்று தனது மனசலிப்பு மேலும் தோல்விகளின் மேலும் தவறுதல்களின் மேலும் கோபித்து கொண்டு சண்டி யுத்தத்திற்கு புறப்பட்டிருப்பதானது தற்கொலை செய்து கொள்ளப் போவது போலல்லாமல் வேறு என்ன பலனுக்கு அனுகூலமானதாயிருக்கின்றன.
திரு. காந்தியாரின் 11 நிபந்தனைகளை வெள்ளைக்காரர்கள் சுலபத்தில் ஒப்புக் கொண்டு விடுவார்களா? ஏதோ ஒரு விதத்திலாவது செல்வாக்கு இருக்கும் ஒருவரை திடீரென்று கைதி செய்தால் வீண் கலாட்டா ஏற்பட்டு விடுமோ என்கின்ற யோசனையின் பேரில் விட்டுப் பார்க்கலாம் என்பதைத் தவிரவும் திரு. காந்தியாரும் தானாகவே ஜெயிலுக்கு போகப் பிரயத்தனப்படுவதால் நாம் அதற்கு அனுகூலம் செய்யலாமா என்கின்ற யோசனையின் பேரிலும் சர்க்கார் சற்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். அல்லது நாளை மறுநாள் பிடித்தாலும் பிடிக்கலாம்.
அல்லது விட்டுவைத்துக் கொண்டு அரசாங்கத்தார் ஏதோ பயந்தவர்கள் போல் வேஷம் போட்டு யோக்கியப் பட்டம் பெறலாமா என்று சும்மா இருந்தாலும் இருக்கலாம். இவைகளினாலெல்லாம் இந்த சட்ட மறுப்பும் சத்தியாக்கிரகமும் யாருக்கு என்ன பயன் விளைவித்து விடும் என்பதுதான் இங்கு கவனிக்கத் தக்கதாகும்.
தவிறவும் மற்றொருபுறம் இவ்வளவு பெரிய தேசீயப் போரில் மக மதியர்களையாவது தாழ்த்தப்பட்ட வகுப்பாரையாவது கலந்து ஆலோசிக்கப் பட்டதா? அல்லது இந்து முஸ்லிம் பிரச்சனையைப் பற்றியாவது அல்லது “தீண்டாதார்” “உயர்ந்த ஜாதியார்” என்ற பிரச்சினையைப் பற்றியாவது யோசித்து ஏதாவது பரிகாரமோ சமாதானமோ செய்யப்பட்டதா? ஒன்றுமே இல்லையே! “முஸ்லீம்கள் பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் சரி, தாழ்த்தப்பட்டவர்கள் பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் சரி, நான் எனது காரியத்தை நடத்தித்தான் தீருவேன் என்று முடிவுகட்டி விட்டார்”.
இதனால் முஸ்லீம்கள் திரு. காந்தியும் காங்கிரசும் வகுப்புவாதிகள் என்றும் ஒரு வகுப்பை மற்றொரு வகுப்பு அடக்கியாள நினைப்பதே தேசீயமாயிருக்கிற தென்றும் உப்பு சத்தியாக்கிரகம் என்பது திரு. காந்தியாரின் சூதாட்டம் என்றும் அதில் எந்த முஸ்லீமும் ஏமாந்து போய் விழுந்து விட வேண்டாம் என்றும், சில முஸ்லீம்கள் தங்கள் விளம்பரத்திற்கு ஆக அதில் கலந்திருந்தாலும் அது முஸ்லீம் பிரதிநிதித்துவமாகாதென்றும் உருப்படியான வேலைகள் ஒன்றும் அதில் இல்லையென்றும் ஆகிய இந்த விபரங்களைக் கண்டு அகில இந்திய சென்ட்ரல் கிலாபத் கமிட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.
இது 8 கோடி முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையானவர்களின் அபிப்பிராயமல்லவா என்று கேள்க்கின்றோம். அது போலவே தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக பம்பாய் முதலிய இடத்து தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கு இருக்கும் இழிவை முதலில் நீக்கிவிட்டு பிறகு சத்தியாக்கிரகம் நடத்தலாம் என்று வழி மறிக்கின்றார்கள். இது 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பான்மையானவர்கள் அபிப்பிராயமல்லவா என்று கேள்க்கின்றோம்.
இந்தப்படி 14 கோடி மக்களின் சமூக ஆசைகளையும் குறைகளையும் அலட்சியம் செய்து விட்டு “நான் கடைசிப் போர் ஆரம்பித்து விட்டேன், தேசத்தின் மானத்தைக் காப்பாற்ற எல்லோரும் வாருங்கள்” என்றால் பொறுப்புள்ள மக்கள் யாராவது வருவார்களா? மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் சமூக இயல் ஸ்தாபனங்களையெல்லாம் தூசி போல் அலட்சியமாய் மதித்துக் கொண்டு ஒன்றையும் லட்சியம் செய்யாமல் “இரண்டில் ஒன்று பார்த்து விடுகின்றேன்” என்று சொன்னால் அதை யார் மதிப்பார்கள்? யார் அதில் கவலை செலுத்துவார்கள்? ஏதோ ஆவேசத்தில் பலவீனமுள்ள வாலிபர்கள் சிலர் அல்லது பலர் ஒரு 10 நாளைக்குக் கூட இருந்து கூச்சல் போடலாம். இதனால் ஏற்படும் பலன் என்ன? என்பதை யோசித்துப் பாருங்கள்.
பொதுவாக இந்தக் கிளர்ச்சி பாமர மக்களுக்குப் பெருத்த சங்கடத்தையும் நெருக்கடியான நிலைமையையும் கொண்டு வந்து விடப் போகின்ற தென்பதையும் இதனால் இன்னம் ஒரு 10 வருஷத்திற்கு நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டு, நாடு எல்லாத் துறையிலும் பிற்போக்கடைய நேரிடும் என்பதையும் தெரிவித்துத் தீர வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 13.04.1930)