1932 செப்டம்பர் 30 ஆம் தேதி பம்பாய் இந்துக்களின் கூட்டம் ஒன்று கவாஸ்ஜி ஜெஹாங்கீர் மண்டபத்தில் பண்டித மாளவியா தலைமையில் நடைபெற்றது; கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல்வேறு மாகாணக் கேந்திரங்களில் கிளைகளுடன் கூடிய ஓர் அகில இந்திய தீண்டாமை எதிர்ப்புக் கழக்த்தை அமைப் பதே இக்கூட்டத்தில் நோக்கம். கழகத்தின் தலைமை நிலையம் டில்லியில் இருக்கும்.

ambed 350 2திரு. ஜி.டி. பிர்லா தலைவராகவும், திரு. அமிர்த லால் வி. தாக்கர் பொதுச் செயலாளராகவும் இருப்பார்கள். அகில இந்திய தீண்டாமை எதிர்ப்புக் கழகம் திரு. காந்தியின் மூளையி லிருந்து உதித்த திட்டம். புனா ஒப்பந்தத்தின் நேரடி விளைவாக அவரது ஊக்குவிப்பிலிருந்து இது பிறந்தது. இது எப்படி இருந்தாலும் அது பிறந்தது முதலே அதனைத் தனது குழந்தையாக வரித்துக் கொண்டார். திரு. காந்தி செய்த முதல் காரியம் அதன் பெயரை மாற்றிய தாகும்.

1932 டிசம்பர் 9 ஆம் தேதி பத்திரிகைகளுக்கு விடுத்த ஓர் அறிக்கையில் இந்த அமைப்பு இனிமேல் தீண்டப்படாதோருக்கான சேவைக் கழகம் என அழைக்கப்படும் என மக்களுக்கு அறிவித்தார். ஆனால் இந்தப் பெயரும் திரு. காந்திக்கு ஏற்புடையதாக, சிறந்ததாகத் தோன்றவில்லை. வேறொரு பெயரை அவர் தேடிவந்தார். முதலாக, அதற்கு ஒரு புதிய பெயரை சூட்டத் தீர்மானித்தார்.

ஹரிஜன சேவா சங்கம் என அதனை அழைத்தார். தீண்டப்படாதோருக்கு சேவை செய்வதில் ஈடுபட்டிருப்போரின் கழகம் என்று இதற்குப் பொரு ளாகும். தீண்டப்படாதவர்களை ஹரிஜன் என்று வழக்கமாக திரு. காந்தி அழைப்பதால், இது இயல்பேயாகும். ஆனால் இந்தப் பெயர் மாற்றம் சைவர்களுக்கும்  வைஷ்ணவர்களுக்கும் இடையே ஒரு சர்ச்சையைக் கிளர்த்தி விட்டது. ஹரி என்பது விஷ்ணுவின் நூறுபெயர்களில் ஒன்று. அதேபோல் ஹரன் என்பது சிவனின் நூறு பெயர்களில் ஒன்று. ஹரிஜன் என்ற பெயரைத் தேர்ந்தெடுப்பதில் குறுகிய மனப்பான்மையுடம் பாரபட்சத்தோடு திரு. காந்தி நடந்து கொண்டுவிட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தீண்டப் படாதவர்கள் ஹரஜனங்கள் என்று அழைக்கப்பட வேண்டுமென்று சைவர்கள் வாதிட்டனர். திரு. காந்தி இதில் விட்டுக் கொடுக்க வில்லை; இந்தப் புதிய அமைப்பு தோன்றியதன் முதல் பலனாக தீண்டப் படாதவர்கள் ஒரு புதிய பெயரைப் பெற்றனர்.

1932 நவம்பர் 3 ஆம் தேதி திரு. பிர்லாவும் திரு. தாக்கரும் இந்த அமைப்பின் வேலைத் திட்டத்தையும் அந்த வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஓர் அறிக்கையை வெளியிட்டனர்.

வேலைத்திட்டம் குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

“சனாதனிகளில் நியாய உணர்வு படைத்தவர்கள் சம பந்தி போஜனங்களையும் கலப்புத் திருமணங்களையும் எதிர்க்கும் அளவுக்கு தீண்டாமை அகற்றப்படுவதை எதிர்க்க வில்லை என்று கழகம் கருதுகிறது. குறியிலக்கு எல்லைக்கு அப்பாற் சென்று சீர்திருத்தங்களை மேற்கொள்வது கழகத் தின் நோக்கம் இல்லையென்பதால் இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுவது விரும்பத்தக்கதாக இருக்கும்.

அதாவது தீண்டாமையின் ஒவ்வொரு எச்சமிச்சத்தையும் அகற்று வதற்கு இணங்குவிப்பு முறையைக் கைக்கொண்டு சாதி இந்துக்களிடையே கழகம் பாடுபடும்; அதிலும் முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களை கல்வி, பொருளாதார, சமூக ரீதியில் கைதூக்கி விடுவது போன்ற ஆக்கபூர்வமான நோக்கமே அதன் பணியின் பிரதான திசைவழியாக இருக்கும்; தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதற்கு இதுவே பெரும் பங்குப்பணி ஆற்ற முடியும். இத்தகைய பணி ஆற்றப்படும் போது மிகவும் தீவிரமான சனாதனிகூட அதன்பால் பரிவும் ஒத்துணர்வும் காட்டாமல் இருக்க முடியாது. இப்படிப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்காகத்தான் பிரதானமாக கழகம் அமைக்கப்பட்டது. சாதி முறையை ஒழித்துக்கட்டுதல், சம பந்தி விருந்து போன்ற சமூக சீர்திருத்தங்கல் கழகத்தின் செயற்பாட்டு எல்லைக்கு அப்பாற்பட்டவை.”

இந்த வேலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு வசதியாக ஒவ்வொரு மாகாணத்தையும் பல யூனிட்டுகளாகப் பிரிப்பது என்றும், ஒவ்வொரு யூனிட்டையும் ஊதியம் பெறும் ஊழியர்கள் பொறுப்பில் விடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஒரு யூனிட் என்பது ஒரு மாவட்டத்தின் எல்லைக்குட்பட்டதாகவும் இருக்கலாம், இல்லாத தாகவும் இருக்கலாம். இரண்டு மாவட்டங்களை அல்லது மாகா ணங்களை இணைத்தும் அது உருவாக்கப்படலாம்.

ஓர் வருடத்திற்கான ஒரு பொதுவான வரவு செலவுத் திட்டப் பட்டியலையும் அந்த அறிக்கை வகுத்தளித்தது. அது பின்கண்ட முறையில் அமைந்திருந்தது:

“செலவினத்தில் மூன்றில் இரண்டு பங்குக் குறையாமல் ஆக்க நலப் பணிக்கு, எஞ்சிய மூன்றிலொரு பங்கு ஊழியர்களுக்கும் அவர்களது படிகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டும். ஊதியம் பெறும் இரண்டு ஊழியர்கள் குறைந்தபட்ச பணியாளர் குழாமாகக் கருதப்பட வேண்டும்; அவர்கள் மாதம் 15 முதல் 29 நாட்கள் கிராமங்களில் சென்று பணியாற்ற வேண்டும்.

அலைந்து திரிந்து பணியாற்றும் இரண்டு ஊழியர்களுக்குப் பராமரிப்புப் படிகள் = 30+20=50x12=600

இரண்டு ஊழியர்களுக்குப் பயணச் செலவுகள் = 2x10x12x =240

ஊழியர்கள் சம்பந்தமான சில்லறைச் செலவுகள் = 2x10x12x =240

பள்ளிக்கூடப் புத்தங்கள், உபகாரச் சம்பளங்கள், பரிசுகள்,கிணறுகள் பராமரிப்பு, ஹரிஜனப் பஞ்சாயத்துகள் அமைப்பு = 2000

மொத்தம்  = 3,080

நாடு முழுவதற்குமான வரவு-செலவுத் திட்டம்

இந்தியா முழுவதற்கும் செலவிடப்படக்கூடிய குறைந்தபட்ச மொத்த தொகையை தோராயமாக இங்கு தந்துள்ளோம். பணியின் பிரம்மாண்ட தன்மையைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது இந்த வரவு-செலவுத் திட்டம் மிதமானதேயாகும்; தேவையான நிதியைத் திரட்டுவது பொதுமக்களுக்கு எவ்வகையிலும் கடினமாக இருக்காது. இந்த நிதிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு பைசாவும் மதிப்பு வாய்ந்த பங்களிப்பாக இருக்கும்; எனவே இந்த சீரிய லட்சியத்திற்குத் தங்க ளால் இயன்ற நன்கொடை வழங்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு மாகாணத்திற்கும் எத்தனை யூனிட்டுகள் இருக்க வேண்டும் என்பது ஒரு தற்காலிக யோசனையே ஆகும். இது விஷயத்தில் இறுதி முடிவு மாகாணக் குழுமங்கள்தான் எடுக்க வேண்டும்.

“பல்வேறு மாகாணங்களிலும் குறைந்தபட்சம் கீழ்க்கண்ட எண்ணிக்கையுள்ள யூனிட்டுகள் தேவைப்படும் என்று கணக்கிடப் பட்டுள்ளது; ஒவ்வொரு மாகாணத்தின் மாவட்டங்களின் எண் ணிக்கையும் யூனிட்டுகளி எண்ணிக்கையும் கீழே தரப்பட்டுள்ளன:

மாகாணத்தின் பெயர் மாவட்டங்களின் எண்ணிக்கை யூனிட்டுகளின் எண்ணிக்கை
அசாம் 11 6
ஆந்திரா - 6
வங்காளம் 26 15
கல்கத்தா நகரம் 1 3
பீகார் 16 16
பம்பாய், பம்பாய் நகரம், நகர்ப்புற மாவட்டம் 1 3
மகாராஷ்டிரம் 10 8
குஜராத், பரோடா, கத்தியவார், கட்ச் மற்றும் இதர சமஸ்தானங்கள் 5 மற்றும் சமஸ்தானங்கள் 10, மத்திய மாகாணங்கள், பேரார் (மராத்தி 9 7
மத்திய இந்திய சமஸ்தானங்கள் 11 8
டில்லி மாகாணம் 1 2
காஷ்மீர் 1 1
மலபார், கொச்சி, திருவாங்கூர் 4 10
மைசூர், பம்பாயையும் சென்னையையும் சேர்ந்த கர்நாடக மாவட்டங்கள் 8 10
நிஜாமின் ராஜ்யம் 14 10
ஒரிசா நிலப்பிரபுத்வ சமஸ்தானங்கள் 5+22 சமஸ்தானங்கள் - 8
பஞ்சாப், வ,மே,எ, மாகாணம் மற்றும் பஞ்சாப் சமஸ்தானங்கள் 32+7 39 10
ராஜபுதன சமஸ்தானங்கள், ஆஜ்மீர்- மேர்வார் சமஸ்தானம்   18
பிர் மாவட்டம் 19 9
சிந்து 8 5
தமிழ்நாடு 13 8
ஐக்கிய மாகாணங்கள் 48 24
மொத்தம்   184

184 யூனிட்டுகளுக்கு மொத்தம் செலவு 3,000x184 = 5,52,000

மத்திய மற்றும் மாகாண அலுவலகங்கள் மத்திய அலுவலகம், 1000x12 = 12,000

மாகாண அலுவலகங்கள் 4000x12 = 48,000

மொத்தம் 60,000 ஒட்டு மொத்தம் 6,12,000 அல்லது உத்தேசமாக 6,00,000  

மத்திய நிதியிலிருந்தும் அதேபோன்று மாகாணங் களிலும் மாவட்டங்களிலும் திரட்டப்படும் நிதிகளிலிருந்தும் இந்தக் கொள்கை பெறப்பட வேண்டும்.

தீண்டாமையை ஒழித்துக்கட்டுவதற்காகவும், ஹரிஜங்களின் மேம்பாட்டிற்காகவும் ஆறு லட்சம் ரூபாய் திரட்டி நாடு முழுவதும் செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இந்தத் திட்டம் அதிலும் குறிப் பாக தீண்டப்படாதோரின் மேம்பாட்டுப் பணி பயனுறுதியுடை யதாக இருக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் ஐந்தாண்டுக் காலத்துக்கு அது நீடிக்க வேண்டும். சமஸ்தானங்கள் உட்பட 22 மாகாணங்களுக்கு இத்திட்டம் வியாபிக்கப்பட்டிருப்பதை யும், 4 கோடி ஹரிஜனங்கள் இந்த நாட்டின் வாழ்கின்றனர் என்பதையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்க்கும்போது இது மிகச் சிறிய வரவு-செலவுத் திட்டமேயாகும்”.

ஹரிஜன சேவா சங்கத்தின் பணிக்கு வேண்டிய நிதியைக் திரட்டும் பொருட்டு திரு. காந்தி ஓர் அகில இந்திய சுற்றுப் பய ணத்தை மேற்கொண்டார்; அது 1933 நவம்பர் 7ல் தொடங்கி 1934 ஜுலை 29ல் முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சம் ரூபாய் வசூ லாயிற்று ( ஹரிஜன, ஆகஸ்டு 3,1934) . இந்தச் சுற்றுப்பயணத்தின் நோக்கம் தீண்டப்படாதோரின் நலனின்பால் இந்துக்களிடையே வளர்ச்சி ஆர்வத்தைக் கிளர்த்தி விடுவதும் அத்துடன் நிதி வசூலிப்பதுமாதலால் திரு. காந்தி தமது சுற்றுப்பயணத்தின் பெரும்பகுதியைக் கால்நடையாகவே மேற் கொண்டார். இந்தப் பயணத்துடனும் திரு. காந்தியின் நண்பர்கள் அளிக்கும் வருடாந்திர நன்கொடையுடனும் சங்கம் தனது பணியைத் தொடங்கிற்று.

ஹரிஜன சேவா சங்கம் 1932 செப்டம்பர் முதல் செயல் பட்டு வருகிறது. தீண்டப்படாதோரின் பரிதாபகரமான அவலை நிலை கண்டு திரு. காந்தியின் ஆன்மா அடைந்த வேதனைக்கும், அவர் களது மேம்பாட்டில் அவர் கொண்டுள்ள ஆர்வத்துக்கும் அக்கறைக் கும் இந்த சங்கம் மேன்மைமிக்க, மதிப்புவாய்ந்த சான்றாகக் கருதப்படுகிறது. சங்கத்தின் பொதுச் செயலாளர் பல அமெரிக்கர்களை டில்லியிலுள்ள சங்க இல்லத்தில் அன்போடு வரவேற்றிருக்கிறார்; அவர்களை இல்லம் முழுவதிலும் அழைத்துச் சென்று, தீண்டப் படாதோரின் நலனுக்காக, நல்வாழ்வுக்காக திரு. காந்தி எத்தகைய ஈடு இணையற்ற சமூக சேவை புரிந்திருக்கிறார் என்பதைக் காட்டி யிருக்கிறார்.

மிதித்துத் துவைக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு புரியப்பட்டிருக்கும் எத்தகைய ஆக்கநலப் பணியையும் எல்லோரும் வரவேற்கத்தான் வேண்டும்; இதல் எள்ளளவும் ஐய மில்லை. ஆனால் இதுபற்றி ஒருபோதும் எத்தகைய விமர்சனமுமே செய்யக்கூடாது என்று இதற்குப் பொருள் அல்ல. இது எவ்விதத் திலும் ஏற்கத்தக்கதல்ல. சங்கம் தொடக்கக் காலத்தில் எத்தகைய பணியைச் செய்து வந்திருக்கிறது என்பதை ஆராய்வது முற்றிலும் நியாயமானதே. சங்கத்தின் ஆண்டு அறிக்கைகளைப் படிப்போர் சங் கத்தின் பணி ஒரளவு நன்கு வரையறுக்கப்பட்ட வழிகளில் அமைந் திருப்பதைக் காண்பார்கள்.

கல்வித்துறையில் இளங்கலை, தொழில்நுட்பம், தொழில் பயிற்சி முதலான வகுப்புகளுக்கு உபகாரச் சம்பளங்கள் ஏற்படுத்தித் தாழ்த்தப்பட்ட மக்களிடையே உயர் கல்வியை ஊக்குவிக்க சங்கம் முயற்சி எடுத்துள்ளது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் உப காரச் சம்பளங்கள் அளிக்கிறது. கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளி களிலும் பயிலும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சங்கம் மாணவர் இல்லங்களையும் அமைத்துத் தந்திருக்கிறது. மேலும், சுற்றுப்புறங்களில் பொதுப்பள்ளிக்கூடங்கள் இல்லாத இடங் களிலும் தீண்டாதோர் குழந்தைகளுக்கு இடம் அளிக்க மறுக்கும் பொதுப் பள்ளிக்கூடங்கள் இருக்கும் இடங்களிலும் தாழ்த்தப்பட்ட இனக் குழந்தைகளுக்குத் தனியாகத் தொடக்கக் கல்விப் பள்ளிக் கூடங்களை அது அமைத்துத் தந்திருக்கிறது. சங்கத்தின் கல்வித் துறை நடவடிக்கையில் இது மிக முக்கியமான பகுதியாகும்.

அடுத்ததாகச் சங்கத்தின் ஆக்கநல நடவடிக்கைகளைக் குறிப் பிட வேண்டும். தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு வழங்கப்படும் மருத் துவ உதவி இந்தப் பிரிவில் வருகிறது. சங்கத்தைச் சேர்ந்த தீவிர ஊழி யர்களால் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது; அவர்கள் ஹரிஜனக் குடியிருப்புகளுக்குச் சென்று தாழ்த்தப்பட்டோரிடையே உள்ள நோயாளிகளுக்கும் உடல் நலிவுற்றோருக்கும் மருத்துவ உதவி அளிக் கின்றனர். தீண்டாதோர்களுக்கென சில மருந்தகங்களையும் சங்கம் நடத்துகிறது. இது சங்கத்தின் ஒரு சிறு நடவடிக்கையே ஆகும்.

சங்கத்தின் ஆக்கநல நடவடிக்கைகளில் மிகவும் முக்கிய மானது தண்ணீர் சப்ளை சம்பந்தப்பட்டது எனலாம். (1) தாழ்த்தப் பட்டோர் பயன்படுத்திக் கொள்வதற்காக புதிய கிணறுகளை அகழ் வதன் மூலமும் அல்லது குழாய்க்கிணறுகளை அமைப்பதன் மூலம் மும் (2) பழைய கிணறுகளைத் தூர்வாரி பழுதுபார்ப்பதன் மூலமும் (3) தீண்டாதோருக்கான கிணறுகளை வெட்ட செய்வது அல்லது பழுதுபார்க்கச் செய்வதன் மூலமும் சங்கம் இப்பணியைச் செய்கிறது.

சங்கம் மேற்கொண்டுள்ள மூன்றாவது நடவடிக்கை பொரு ளாதாரம் சம்பந்தப்பட்டது. சங்கம் தொழில்பயிற்சிக் கூடங்களை நடத்துவதாகத் தெரிகிறது. இங்கு பயிற்சி பெற்ற அநேக கைவினை ஞர்கள் சொந்தமாகத் தொழில் நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. எனினும் தீண்டாதோர்களிடையெ வெற்றிகரமாக கூட்டுறவுச் சங்கங்களை அமைத்து அவற்றைக் கண்காணித்து வருவதில் சங்கம் கணிசமான பணி, ஆற்றியுள்ளது என்று அறிக்கைகள் கூறிகின்றன.

 II

சங்கத்தின் பலவேறு நடவடிக்கைகளை மேலே சுருக்கமாக விவரித்தோம். இந்த விவரங்களிலிருந்து தீண்டப்படாதோரின் நல னுக்காக, நல்வாழ்வுக்காக சங்கம் ஏராளமான பணம் செலவழித்து வந்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் என்ன? தீண்டப்படாதவர்களை மேம்படுத்தும் பணிக் காக பொதுவாக சங்கம் செலவிடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட தொகையே ஆண்டொன்றுக்கு ரூபாய் 6 லட்சம்தான். ஆனால் சங்கம் உண்மையில் எவ்வளவு செலவழித்து வருகிறது. 1941 மே மாதம் சங்கச் செயலாளர் சமர்ப்பித்த தமது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:

“கடந்த 8 ஆண்டுகளில் சங்கத்தின் பல்வேறு கிளை  களும் மத்திய அலுவலகமும் ஹரிஜனப் பணிக்காக முறையே  24,25,700 ரூபாயும், 3,41,667 ரூபாயும் செலவிட்டுள்ளன.  பிரச்சினையின் தேவைகளையும் பரிமாணங்களையும் கருத் திற் கொண்டால் இது மிக அற்பத் தொகையேயாகும்.”

இந்த அடிப்படையில் சங்கத்தின் செலவினம் வருடம் ரூபாய் 3,45,888ஐ எட்டுகிறது; சங்கம் திரட்ட முடியும் என்று நம்பிக்கை கொண்ட தொகையில் இது 50 சதவிகிதமேயாகும். சங்கத்தின் ஆதர வாளர்கள் பூதக் கண்ணாடி வைத்துப் படம் பிடித்துக் காட்டுவது போல் அது அத்தனை பெரிதல்ல என்பது இதிலிருந்து தெரியவரும். சங்கம் மிகவும் மோசமான முறையிலேயே, இழுபறியான நிலை யிலேயே இயங்கி வருகிறது.

5 கோடி மக்கட் தொகை கொண்ட தீண்டப் படாதவர்களுக்கு வருடம் ரூ. 3 லட்சம் கொண்ட வரவு-செலவுத் திட்டம் என்பது தீண்டப்படாதோர் பெருமகிழ்ச்சி கொண்டு ஆர வாரிக்கக்கூடிய விஷயம் ஒன்றுமல்ல. பல்வேறு மாகாணங்களிலும் காங்கிரஸ் அரசாங்கங்கள் பதவியிலிருந்தபோது பெருந்தொகைகளை மான்யமாக அளித்திருக்கவில்லை என்றால் சங்கம் இந்த அளவுக்குக் கூடப் படாடோபம் காட்டிக் கொண்டிருந்திருக்க முடியாது.

சங்கத்தின் மோசமான நிதிநிலைமைக்கு அதனைக் குறைகூற முடியாது. குற்றம் இந்துக்கள் மீதுதான் உள்ளது. தீண்டப்படாதோரின் மேம்பாட்டில் இந்துக்கள் எந்த அளவுக்கு அக்கறையின்றி இருக்கின் றனர் என்பதை சங்கத்தின் மோசமான நிலையிலிருந்து, தேக்க நிலை யிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அரசியல் பணிகளுக்காக அவர்கள் 1 கோடி ரூபாய் வாரி வழங்கியுள்ளனர்; இதுதான் திலகர் சுயராஜ்ய நிதியாகப் பெயர் பெற்றுள்ளது. இதுமட்டுமன்று, பொது ஆக்க நலப் பணிக்கென அண்மையில் அவர்கள் 1 கோடி 15 லட்சம் ரூபாய் அள்ளித் தந்துள்ளனர்; இது கஸ்தூரிபாய் நினைவு நிதியாக உரு வெடுத்துள்ளது. இவற்றுடன் ஒப்பிடும்போது ஹரிஜன சேவா சங்கத் துக்கு இந்துக்கள் அளித்துள்ள நிதி மிகமிக சொற்பமேயாகும்.

ஆக்கநலப் பணிகளின் தன்மை விஷயத்தில் சங்கத்துடன் ஒருவர் கருத்து வேறுபாடு கொள்ளலாம். சங்கம் செய்துவரும் பணி யின் பெரும்பகுதி எந்த ஒரு நாகரிக அரசாங்கமும் பொது வருமானத் திலிருந்து செய்யக் கடமைப்பட்டுள்ள பணியேயாகும். இங்கு இயல் பாகவே ஒரு கேள்வி எழுகிறது: இந்தப் பணியைச் செய்யும்படி யும், பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாத நிதியை இதுபோன்ற அவசரமாக செய்ய வேண் டிய பணிகளுக்குச் செலவிடும்படியும் அரசாங்கத்தை சங்கம் ஏன் கேட்கக் கூடாது?

இவ்வாறு செய்வதால் சங்கத்தின்மீது தீண்டப்படாதவர்கள் எவ்விதத்திலும் பகைமை கொள்ள மாட்டார்கள். எனினும் இத்தகைய பகைமை வேறு வகையில் இருந்து வரவே செய்கிறது என் பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதற்கான சந்தர்ப்ப சூழ்நி லைமைகளையும் காரணங்களையும் விளக்கி இந்தியன் சோஷியல் ரிபார்மர் பத்திரிகையில் 1944 அக்டோபர் 11 ஆம் தேதி இதழில் ஒருவர் எழுதியுள்ளார் (இது சம்பந்தமான அவரது கருத்து 1944 செப்டம்பர் 26 ஆம் தேதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. தீண்டப்படாதோர் சிலர் திரு.காந்தியைச் சந்தித்து ஹரிஜன சேவா சங்கத்தின் நிர்வாகக் குழுவில் தீண்டப்படாதோரின் பிரதிநிதிகளையும் நியமிக்கும்படி அவரை வலியுறுத்தினர். திரு. காந்தி இவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். இதை எழுதியவர் திரு. கே. நடராஜன்தான் என்று நம்பப்படுகிறது.). அவர் கூறுவதாவது:

”ஹரிஜனங்களை தூதுக்குழு ஒன்று சேவாகிராமத்தில்  காந்திஜியைச் சந்தித்தது; ‘ஷெட்யூல்டு வகுப்பினர்’ எனும் தலைப்பின் கீழ் வரும் சாதியினரைச் சேர்ந்த உறுப்பினர் களுக்கும் ஹரிஜன சேவா சங்கத்தினர் நிர்வாக அமைப்பில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று தூதுக் குழு வினர் அப்போது அவரை வேண்டிக் கொண்டனர். சங்கம் ஹரிஜனங்களுக்கு உதவுவதற்கு அமைக்கப்பட்ட ஓர் அமைப்பேயன்றி அது ஒரு ஹரிஜன அமைப்பல்ல, எனவே அவர்களது வேண்டுகோளை ஏற்பதற்கில்லை என்று காந்திஜி பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஹரிஜனங்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை வட்டமேசை மாநாட்டின் காந்திஜி எதிர்த்தார்; அவர் கள் இந்துக்கள், எனவே இந்துப் பொது அமைப்பிலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தப் கூடாது என்று இதற்கு அவர் காரணம் கூறினார். பின்னர் எரவாடா ஒப்பந்தத்தில், குறிப்பாக இந்துக்களின் பங்கிலிருந்து ஹரிஜனங்களுக்கு இடங் கள் ஒதுக்க அவர் ஒப்புக்கொண்டார். இந்தக் கோரிக்கையை ஒப்புக்கொள்ளும் நகல் திட்டம் பம்பாயில் பண்டித மதன் மோகன் மாளவியா தமைமை வகித்த பொதுக்கூட்டத்தின் ஒப்புதலுக்கு வந்தபோது, கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து பின்கண்டவாறு கூறினார்: தீண்டாமை என்னும் இழுக்கை, அழுக்கை இந்து சமுதாயத்திலிருந்து துடைத்தெறிவதற்கு (பண்டிட்ஜி யோசனை கூறுயது போல்) பெரும் நிதி திரட்ட வேண்டிய அவசியமில்லை.

அதற்குப் பதில் இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி (கூட்டத்திற்கு ஏராளமான பெண்கள் வந்திருந்தனர்) இதர இந்துக்களை வரவேற்பது போன்று ஹரிஜனங்களையும் தங்கள் இல்லங்களில் வரவேற்க இங்கு வந்துள்ளா ஒவ்வொரு வரும் உறுதிபூண்டால் இந்தப் பிரச்சினைக்கு உடனடி யாக முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும். இச்சமயம் கூட்டத்திற்கு வந்திருந்த பம்பாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் எழுந்து அந்த நபரைப் பார்த்து பின்வருமாறு அமைதியாகக் கூறினார்:

‘நீங்கள் எதார்த்த உண்மையைச் சொன்னீர்கள். ஆனால் இவர்களில் எவரும் இதைப் பின்பற்றத் தயாராக இல்லை.’ அவர் கூறியதிலிருந்து இதுதான் ஹரிஜன சேவா சங்கத்தின் அடிப்படையான பலவீனம் என்பது எனக்குப் புரிந்தது. இதன் விளைவு என்ன? ஹரிஜன சேவா சங்கத் திலிருந்து அனுகூலம் பெரும் கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் டாக்டர் அம்பேத்கரை தீவிரமாகப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர்; அவரைப் போலவே சாதி இந்துக்களிடம் மிகுந்த வெறுப்பும் பகைமையும் கொண்டுள்ளனர். இதற்கு எத்தனையோ உதாரணங்களை என்னால் தரமுடியும்.

ஆனால் அவ்வாறு செய்வது நிலைமையை மேலும் மோச மாக்கவே செய்யும். எல்லா முக்கிய ஸ்தல ஸ்தாபன, மத்திய அமைப்புகளிலும் ஹரிஜன ஆண்களுக்கும் பெண்களுக் கும் இந்துக்களுடன் சேர்ந்து இடமளித்து, கொள்கையை உருவாக்குவதில் அவர்களுக்குப் பங்களிப்பதன் மூலம் இந்த வெறுப்பை, பகைமையைத் தவிர்க்கலாம். இவ்வாறு ஹரி ஜனங்களுடன் ஒன்று கலந்து செயல்படாமல் அவர்களுக்கு சேவை செய்வது என்ற கருத்தே சமூக சீர்திருந்த உணர் வுக்கு முற்றிலும் முரணானது.

ஹரிஜனங்களின் மேம்பாட் டுக்கான ஆரம்பக்கால இயக்கங்களில் பங்கெடுத்துக் கொண் டவன் நான். என் பணியின்போது நான் சந்தித்த எவர் களிடமும் இத்தகைய பகைமை உணர்வு கிளர்த்தி விடப் பட்டிருப்பதைக் காணவில்லை. இதற்குக் காரணம் இந்த இயக்கத்தைக் கட்டி உருவாக்கியவர்கள் - தாழ்த்தப்பட் டோரின் நல்வாழ்வுக் கழகம் பிரதானமாக மனத்திற் கொண்டே இதனைக் கூறுகிறேன் – தாழ்த்தப்பட்டோர்களின்பாலுள்ள தங்கள் நோக்கில் எத்தகைய பாரபட்சத்தையும் கைக்கொள் வதில்லை என்று சமய உணர்வோடும், சமூக உணர் வோடும் உறுதிபூண்டவர்கள். தாழ்த்தப்பட்ட இன மக்களின் பிரதிநிதிகளை ஹரிஜன சேவா சங்கத்தில் சேர்க்க இய லாது என்று காந்திஜி கூறியது முற்றிலும் தவறு என்றே கருதுகிறேன். சங்கம் நிறுவப்பட்டபோது டாக்டர் அம்பேத் கர் அதில் ஓர் உறுப்பினராக இருந்ததை என் நண்பர் ஒருவர் இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு நினைவுப்படுத்துகிறார்.”

சாதி இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையே பகைமை நிலவுவதற்கான காரணங்களை விளக்கவும், சங்கத்தின் உண்மையான சொரூபத்தைத் தோலுரித்துக் காட்டவும் எனக்கு வாய்ப்பு அளிப்பதாலேயே இதனி இங்க் மேற்கோள் காட்டினேன்.

III

சங்கத்தின் நிர்வாகத்தில் தீண்டப்படாதோருக்கும் பங்களிக்க வேண்டும் என்று இந்தியன் சோஷியல் ரிபார்மர் பத்திரிகையில் எழுதியவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சங்கத்தின் மத்திய நிர்வாகக் குழுமத்தில் தீண்டப்படாதவர்கள் ஒருபோதும் இடம் பெற்றிருக்கவில்லை என்றே இந்த அறிக்கையைப் படிப்பவர்கள் எண்ணக்கூடும். ஆனால் இதுதவறு. ஆனால் உண்மை என்னவென்றால், சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது, தீண்டப்படாதோரின் பிரபல தலைவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மத்தியக் குழுமத்தில் இடம் பெற்றிருக்கவே செய்தனர். 1932 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி திரு. பிர்லாவும் திரு. தாக்கரும் வெளியிட்ட ஓர் அறிக்கையில் மத்தியக் குழுமத்தில் இடம் பெற்றிருப்பவர்களின் பெயர்களை வெளியிட்டிருந்தனர். அவர்கள் வருமாறு:

“திரு. ஜி.டி. பிர்லா, டில்லி மற்றும் கல்கத்தா; சர்  புருஷோத்தம்தாஸ் தாகூர்தாஸ், பம்பாய்; சர் லல்லுபாய்  சாமல்தாஸ், பம்பாய்; டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், பம்பாய்  சேட் அம்பாலால் சாராபாய், ஆமதாபாத், டாக்டர் பி.சி. ராய்,  கல்கத்தா, லாலா ஸ்ரீராம், டில்லி; ராவ் பகதூர் எம்.சி. ராஜா  சென்னை; டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், திருச்சிராப்பள்ளி;  ராவ் பகதூர் சீனிவாசன், சென்னை; திரு. ஏ.வி. தாக்கர்,  பொதுச் செயலாளர், டில்லி.”

மொத்தமுள்ள 8 உறுப்பினர்களின் 3 பேர் தீண்டப்படாதோர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மேலே உள்ள பட்டியலில் இருந்து தெரியவரும். குழுமத்திலிருந்து நான் விலகிய பிறகு மற்ற இருவர் அதாவது ராவ் பகதூர் எம்.சி. ராஜாவும், ராவ் பகதூர் சீனிவாசனும் கூட விலகிவிட்டனர். சங்கத்திலிருந்து இவர்கள் தங்களைத் துண்டித்துக் கொண்டதற்கு காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. சங்கத்துடன் எனக்கிருந்த பிணைப்பை அறுத்துக் கொண்டதற்கான காரணங்களை நான் எடுத்துரைப்பது சரியானதும் முறையானது மாகும்.

புனா ஒப்பந்தத்திற்குப் பிறகு மறப்போம், மன்னிப்போம் என்ற ரீதியிலேயே செயல்பட்டு வந்தேன். திரு. காந்தியின் பல நண்பர்கள் என்னைக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவருடைய நேர்மையை ஏற்றுக்கொண்டேன். அந்த உணர்வோடுதான் சங்கத் தின் மத்தியக் குழுமத்தில் இடம்பெற ஒப்புக் கொண்டேன்; அது மட்டுமல்ல, சங்கத்தின் நடவடிக்கையில் எனக்குரிய பங்கை ஆற்ற வும் ஆர்வத்தோடு இருந்தேன். உண்மையைக் கூறுவதானால், சங்கத் தின் வேலைத் திட்டம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது குறித்து திரு. காந்தியுடன் விவாதிக்கவும் விரும்பினேன். அவ்வாறு செய்வதற்கு முன்னர் மூன்றாவது வட்டமேசை மாநாடில் கலந்து கொள்ள நான் லண்டனுக்கு அழைக்கப்பட்டேன். இந்நிலைமையில்,  

சங்கத்தின் வேலைத் திட்டம் பற்றிய எனது கருத்துகளை பொதுச் செயலாளர் திரு. ஏ.வி. தாக்கருக்குக் கடிதம் மூலம் தெரிவிப்பதே உகந்ததும் சிறந்ததும் ஆகும் என்று கருதினேன். அதன்படி கப்பலில் இருந்தவாறு பின்கண்ட கடிதத்தை அவருக்கு எழுதினேன்:

 எம்/என் “விக்டோரியா”,  

போர்ட் சைய்த்,

 நவம்பர் 4, 1932.

அன்புள்ள திரு. தாக்கர் அவர்களுக்கு,

லண்டனுக்குப் புறப்படுவதற்கு முன்னர் தாங்கள் கொடுத்த தந்தி கிடைக்கப் பெற்றேன். ராவ் பகதூர் சீனிவாசனை மத்தியக் குழுமத்திலும், திரு. டி.வி. நாயக்கை பம்பாய் மாகாணக் குழுமத் திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் தெரிவித்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதாக தந்தியில் தெரிவித்திருந்தீர்கள். இந்தப் பிரச்சினை சமூகமாக்த் தீர்க்கப்பட்டு விட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இனி தீண்டாமை எதிர்ப்புக் கழகத்தின் (இந்தக் கழகம் பின்னால்ஹரிஜன சேவா சங்கம்எனப் பெயர் சூட்டப்பட்டது.) வேலைத் திட்டத்தை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வகுக்க முடியும் என்று நம்புகிறேன். கழகம் தனது வேலைத் திட்டத்தை வகுப்பதில் எத்தகைய கோட்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மத்தியக் குழுமத்தின் உறுப்பினர்களுடன் விவா திக்கும் வாய்ப்பு கிட்டினால் நலமாக இருக்கும் என்று விரும்பி னேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிகக் குறுகிய கால முன்னறிவிப் பில் லண்டனுக்குப் புறப்பட வேண்டியிருப்பதால் அந்த வாய்ப்பைத் தவறவிட வேண்டியவனாக இருக்கிறேன். எனினும், குழுமத்தின் பரிசீலனைக்கு முன்வைப்பதற்காக என் கருத்துகளை இந்தக் கடிதத் தின் மூலம் தங்களுக்கு எழுதியுள்ளேன்; இப்போதைய நிலைமை யில் இதுவே சிறந்த வழியாகத் தோன்றுகிறது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்தும் பணியை, கைதூக்கி விடும் பணியை அணுகுவதற்கு இரண்டு வேறுபட்ட வழிகள் இருக்கின்றன என்பது என் கருத்து. ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்றால் அவரது சொந்த நடத்தையே இதற்குக் காரணம்; அவர் வறுமையிலும் வெறுமை யிலும் வாடுகிறார் என்றால் அவர் தீயொழுக்கமுடையவராக வும் பாவாத்மாக இருப்பதுவுமே இதற்குக் காரணம்.

இது ஓர் எண்ணப்போக்கு, அனுகுமுறை, ஊகம். இந்த ஊகத்தின் அடிப் படையில் செயல்படும் சமூக ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட வேலைத் திட்டத்தின் மூலம் இத்தகையோரிடம் ஒழுக்கத்தை, சிறந்த பண்பை ஊட்டி வளர்ப்பதில் தங்களது முயற்சிகளையும் வள ஆதாரங்களையும் ஒருமுகப்படுத்துகின்றனர்; அவர்கள் வகுத்தளிக்கும் திட்டத் தில் குடிப்பழக்கத்தை ஒழித்துக்கட்டுதல், உடற்பயிற்சி, கூட்டுறவு, நூலகங்கள், பள்ளிக்கூடங்கள் முதலியவை அடங்கும்; தனிநபரை ஒழுக்க சீலர்களாக உருவாக்க இது உதவும் என்பது அவர்களது கணிப்பு.

எனது அபிப்பிராயத்தில், இந்தப் பிரச்சினையை அணுகு வதற்கு வேறொரு மார்க்கமும் இருக்கிறது. ஒரு தனி நபருடைய கதிப்போக்கு அவருடைய சுற்றுக் சூழலுடன், அவர்க் வாழும் சந்தர்ப்ப சூழ்நிலை களுடன் பிரிக்க முடியாதபடிப் பின்னிப் பிணைந்துள்ளது, அவர் இல்லாமையிலும் கல்லாமையிலும், கொடிதினும் கொடி தான இடும்பையிலும் ஆழ்ந்து. அமிழ்ந்து உழல்கிறார் என்றால் அதற்கு அவருடைய சுற்றுக்சூழல் உகந்ததாக, இசைந்ததாக, நல் லிணக்க முடையதாக இல்லாததே அதற்குக் காரணம் என்பது என் சித்தாந்தம்.

மேற்கூறிய இரண்டு கருத்துக்களில் இரண்டாவதாகத் தெரி விக்கப்பட்ட கருத்து மிகச் சரியானது என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. முதலில் தெரிவிக்கப்பட்ட கருத்துப்படி இங்கொரு வரும் அங்கொருவருமாக ஒரு சில தனிநபர்களை வேண்டுமானால் அவர்கள் சார்ந்துள்ள இனத்தவரின் தரத்துக்கு மேலே உயர்த்தலாம், ஆனால் அந்த இனம் முழுவதையும் உயர்த்த முடியாது. எனது அபிப்பிராயத்தில் தீண்டாமை ஒழிப்புக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கம் அங்குமிங்குமாக ஒரு சில தனிநபர்களுக்கோ அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குறிப்பிட்ட இளைஞர்களுக்கோ உதவுவதற்காக அல்ல, அதற்கு மாறாக, அந்த இனம் முழுவதையும் உயர்மட்டத்திற்கு உயர்த்துவதே அதன் லட்சியம். எனவே, தனி நபர் நல்லொழுக்கத்தை, நற்பண்பை ஊட்டிவளர்க்கும் ஒரு திட்டத்தில் கழகம் தனது சக்தியைச் சிதறடிப்பதை நான் விரும்பவில்லை.

தாழ்த்தப்பட்ட இனத்தவரின் சமூக சூழ்நிலையில் மாற் றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தில் குழுமம் தனது சக்தி முழு வதையும் ஈடுபடுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். பொதுப் படையான முறையில் என் கருத்துக்களைக் கூறிவிட்ட பிறகு, கழகம் மேற்கொள்ள வேண்டிய பணிகுறித்து சில உருப்படியான யோசனை களை இப்போது முன்வைக்க விழிகிறேன்.

1. சிவில் உரிமைகளுக்கான இயக்கம்

கிராமக் கிணறுகளில் தண்ணீர் எடுத்தல், கிராமப் பள்ளிக் கூடங்களில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தல், கிராமச் சாவடியில் பிரவேசித்தல், பொதுஜனப் போக்குவரத்து வசதிகளைப் பயன் படுத்துதல் போன்ற பல்வேறு சிவில் உரிமைகள் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்குப் பெற்றுத்தரக் கழகம் முதல் காரியமாக அகில இந்தியாவிலும் ஓர் இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

கிராம அளவில் இத்தகைய ஒரு திட்டத்தை நிறைவேற்றினால் இந்து சமுதாயத்தில் தேவையான சமூகப் புரட்சியை அது தோற்று விக்கும்; இத்தகைய சமூகப்புரட்சி ஏற்படவில்லையேல் தாழ்த்தப் பட்ட வகுப்பினர் சமத்துவ சமூக அந்தஸ்தைப் பெறுவது ஒருபோதும் சாத்தியமாகாது. சிவில் உரிமைகளுக்கான இந்த இயக்கம் நடத்தப் படும்போது எத்தகைய இன்னல் இடுக்கண்களை, சோதனைகளை வேதனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கம் என்பதை குழுமம் அறிந்திருக்க வேண்டும். இங்கு அனுபவ ரீதியாக என்னால் பேச முடியும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கழகமும். சமூக சமத்துவக் கழகமும் பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த கொலாபா, நாசிக் மாவட் டங்களில் இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்த முற்பட்டபோது என்ன நடந்தது என்பதை அந்த அமைப்புகளின் தலைவனாகிய நான் அறிவேன்.

முதலாவதாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் சாதி இந்துக் களுக்கும் இடையே சண்டைகள் மூளும்; மண்டைகள் உடையும்; இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும்; பரஸ்பரம் கிரிமினல் வழக்கு கள் தொடரப்படும். இந்தப் போரட்டத்தில் தாழ்த்தப்பட்ட இனத்  தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இந்த இரு மாவட் டங்களிலும் நடைபெற்ற சமூகப் போராட்ட வரலாறு இதை நிரூ பிக்கிறது; நியாயம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பக்கம் இருந்த போதிலும், போலீசும் மாஜிஸ்ட்ரேட்டும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்களது உதவிக்கு வந்ததில்லை. இரண்டாவதாக, தாழ்த்தப் பட்ட மக்கள் தங்களுக்கு இணையான அந்தஸ்தைப் பெற முயல் கிறார்கள் என்பதைக் காணும் மறுகணமே கிராமங்கள் ஊர்க் கட்டுப் பாட்டையும், பகிஷ்காரத்தையும் பிரகடனம் செய்யும்.

சிவில் உரிமைகளுக்கான இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமாயின் கழகம் எதிர்ப்பட வேண்டியிருக்கும் எத்தனை எத்தனையோ இக்கட்டுகளில் இடர்களில் இரண்டை மட்டுமே இங்கு கூறினேன். தங்களது உரிமைகளுக்காகப் போராடுவதற்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் தூண்டி ஊக்குவிக்கக்கூடிய, அவர் களுக்கு ஆக்கமும் வலிவும் அளிக்கக்கூடிய, இப்போராட்டத்தி னின்று எழும் சட்டப்பிரச்சினைக்கு வெற்றிகரமாகத் தீர்வு காணு வதற்கு உதவக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு தொண்டர் படையை கிராமப் புறங்களில் கழகம் உருவாக்கி வளர்ந்து வலுப்படுத்துவது அவ சியம். இந்தப் போராட்டத் திட்டம் சமூகக் கொந்தளிப்புகளையும் குழப்பங்களையும் வன்முறைக் கலவரங்களையும் கொண்டதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, இதனைத் தவிர்க்க முடியும் என்று நான் கருதவில்லை. குறைந்த முயற்சியுள்ள மற்றொரு வழி ஒன்றிருப்பதையும் நான் அறிவேன். ஆனால் தீண்டாமையை வேரோடு அடி சாய்ப்பதற்கு அது உதவாது.

சாதி இந்துக்கள் பெரும்பாலோரிடம் பகுத்தறிவாதக் கருத் துக்கள் சந்தடியின்றி சிறிது சிறிதாக ஊடுருவதற்கு வழிசெய்வதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விமோசனம் ஏதும் கிட்டிவிடாது. ஏனென்றால் முதலாவதாக, எல்லா மனித ஜீவன்களையும் போலவே சாதி இந்துவும் தாழ்த்தப்பட்ட இனத்தவரிடம் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் தனது மரபுவழிவந்த பழக்கத்தையே பின்பற்று கிறான். யாரோ தீண்டாமையை எதிர்த்து உபதேசம் செய்கிறார் என்பதற்காக சாதாரணமாக மக்கள் தமது இரத்தத்தில் ஊறிப்போன தமது வழக்கமான போக்கை விட்டுவிட மாட்டார்கள்.

தனது வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சாதி இந்துவை நினைக்கும்படி செய்தால்தான், உணரும்படி நிர்ப்பந் தித்தால்தான் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு விடுதலை கிட்டும்; விமோசனம் கைகூடும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? தொன்று தொட்டு அவன் கைக்கொண்டு வரும் நீதிநெறியற்ற போக்குக்கு எதிராக, வாழையடி வாழையாக அவன் பின்பற்றிவரும் நயப்பண் பற்ற நடத்தைக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்க வேண்டும். இந்த நெருக்கடி அவனைச் சிந்திக்க வைக்கும். எப்போது அவன் சிந்திக்க ஆரம்பிக்கிறானோ அப்போது அவன் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பாள்.

பகுத்தறிவுவாதக் கருத்துக்களை ஓசையின்றி, ஆடம்பர ஆர்ப் பாட்டமின்றி சாதி இந்துக்களிடம் ஊடுருவச் செய்வது போன்ற இதர வழிகளிலுள்ள பெருங்குறைபாடு என்னவென்றால், அவை ‘நிர்ப்பந்தப்படுத்துவதோ’ அல்லது நெருக்கடியைத் தோற்றுவிப் பதோ இல்லை என்பதுதான். மஹத்தில் சௌதார் குளம், நாசிக்கில் காலாராம் கோவில், மலபாரில் குருவாயூர் கோவில் ஆகியவை சம்பந்தமாக எடுத்துக்கொள்ளப்பட்ட நேரடி நடவடிக்கைகள் சீர்திருத்தவாதிகள் லட்சக்கணக்கான நாள் உபதேசம் செய்தும் ஒருபோதும் செய்ய முடியாதவற்றை ஒரு சில நாள்களிலேயே சாதித்துள்ளன.

எனவே, தாழ்த்தப்பட்ட மக்களின் சிவில் உரிமை களைப் பெற்றுத் தருவதற்கு இந்த நேரடி நடவடிக்கை இயக்கத்தை தீண்டாமை எதிர்ப்புக் கழகம் மேற்கொள்ள வேண்டும் என்று நான் பெரிதும் வலியுறுத்துகிறேன். இந்த இயக்கம் எதிர்ப்படக் கூடிய சிரமங்களை நான் அறிவேன்; இந்த இயக்கம் வெற்றிபெற வேண்டுமானால் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பாக உள்ள சக்திகள் நம் பக்கம் இருக்க வேண்டும் என்று எனது கடந்தகால அனுபவம் பறைசாற்றுகிறது. இதனால்தான் இந்த இயக்கத்தின் வீச்சிலிருந்து கோவில்களை விலக்கி விட்டு, சிவில் உரிமை களை மட்டுமே இங்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த உரிமையைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்.

2. சமத்துவ வாய்ப்புரிமை

 தீண்டாமை எதிர்ப்புக் கழகம் செய்ய வேண்டும் என்று நான் விரும்பும் இரண்டாவது பணி தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமத்துவ வாய்ப்புரிமையைப் பெற்றுத்தர அது பாடுபட வேண்டும் என்பதாகும். தாழ்த்தப்பட்ட இனத்தவர்களின் ஏழ்மைக்கும் துன்ப துயரங்களுக் கும் சமத்துவ வாய்ப்பின்மையே பெரும்பாலும் காரணம்; அதே சமயம் சமத்துவ வாய்ப்பு இல்லாததற்கு தீண்டாமையே காரணம். காய்கறிகள், பால், வெண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்வது போன்றவை சாதாரணமாக எல்லோரும் செய்யக்கூடிய ஜீவனோ பாயத் தொழில்களாகும். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் இந்தத் தொழில்களைக் கிராமங்களிலும் இன்னும் சொல்லப்போனால் நகரங்களிலும் கூட செய்ய முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு சாதி இந்து இப்பொருள்களை இந்து அல்லாதவனிடமிருந்து வாங்குவான்; ஆனால் தாழ்த்தப்பட்டவரிடமிருந்து வாங்க மாட் டான். வேலை வாய்ப்புத் துறையில் அவனது நிலமை இன்னும் மிகவும் மோசம். அரசாங்க இலாகாக்களில் கயமைத்தனமான முறை யில் பாரபட்சம் காட்டப்படுகிறது. காவலர் அல்லது தகவலாளர் வேலை கூடத் தரப்படுவதில்லை.

அமெரிக்காவில் நீக்ரோவைப் போன்று இந்தியாவில் தாழ்த் தப்பட்ட இனத்தவன் சுபிட்ச காலத்தில் கடைசியில் வேலைக்கமர்த் தப்படுகின்றன. அல்லற் காலத்திலோ முதலில் வேலைநீக்கம் செய்யப் படுகிறான். அப்படியே ஒருக்கால் அவனுக்கு வேலை கிடைத்தால் கூட அவனது வருங்கால வாய்ப்பு வசதிகள் என்ன? பம்பாயிலும் ஆமதாபாத்திலுமுள்ள பஞ்சாலைகளில் மிகக் குறைந்த ஊதியம் தரப்படும் பிரிவுகளில்தான் அவனுக்கு வேலைத்தரப்படுகின்றது. அங்கு அவன் மாதம் 25 ரூயாய்தான் ஊதியம் பெறுகிறான்.

அதிக ஊதியம் கிடைக்கக்கூடிய நெசவுப் பிரிவு போன்ற பிரிவுகளின் கதவுகள் அவனுக்கு நிரந்தரமாக மூடப்படுள்ளன. ஆலையிலுள்ள எந்த ஒரு பிரிவின் தலைவர் பதவியும் சாதி இந்துவுக்கே ஒதுக்கப்பட் டுள்ளது; தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தொழிலாளியோ அவன் எவ்வளவு நீண்டகாலம் சேவை செய்திருந்தாலும், மிகுந்த அனுபவம் கொண்டவனாக இருந்தாலும், சிறந்த திறமை வாய்ந்தவனாக இருந் தாலும் சாதி இந்துக்கு ஓர் அடிமைபோல்தான் அவனுக்குக் கீழ் பணி யாற்ற வேண்டும். நூல் சுற்றும் அல்லது முறுக்கேற்றும் பிரிவு களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன மக்கள் நூற்றுக்கணக்கானோர் என்னிடம் வந்து ஒரு புகாரை தெரிவித்தனர்; அதாவது மேஸ்திரிகள் மூலப்பொருள்களை எல்லாப் பெண்களுக்கும் சமத்துவமான முறை யில் அல்லது நியாயமான விகிதாசார முறையில் விநியோகிப் பதற்குப் பதிலாக எல்லாவற்றையும் சாதி இந்துப் பெண்களுக்கே கொடுத்துவிட்டுத் தங்களைக் கண்டு கொள்வதே இல்லை என்று குற்றம் சாட்டினர். சமத்துவ வாய்ப்புரிமை பெறுவதில் முக்கியமாக இந்துக்களிடம் தீண்டப்படாதோர் எத்தகைய அவதிக்கு உள்ளாகின் றனர் என்பதற்கு ஒரு சில உதாரணங்களையே இங்கு தந்துள்ளேன்.

தீண்டாமை எதிர்ப்புக் கழகம் இந்தப் பிரச்சினையை எடுத்துக் கொள்வது உகந்ததும் உசிதமானதும் என்று கருதுகிறேன்; இதற்கு எதிராகப் பொதுமக்கள் கருத்தைத் திரட்டுவதும், இத்தகைய பார பட்சப் போக்குகளைக் கடைப்பிடிப்போர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்குக் குழுக்களை அமைப்பதும் அவசியம் என்றும் எண்ணுகிறேன். பஞ்சாலைகளில் நெசவுப் பிரிவுகளைத் தாழ்த்தப் பட்ட இன மக்களுக்குத் திறந்துவிடும் பிரச்சினைக்கு கழகம் தீர்வு காண வேண்டும் என்று முக்கியமாக விரும்புகிறேன். தாழ்த்தப்பட்ட இன மக்கள் பெருமளவில் வேலைவாய்ப்புகள் பெற இது துணை புரியும். இந்துக்கள் நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்களிலும், கம்பெனி களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவளித்து, அவர்களது தகுதி களுக்கு ஏற்ப அலுவலகங்களில் பல்வேறு தரங்களில் வேலைக் கமர்த்திக் கொள்ள வேண்டும்.

3. சமூகக் கூட்டுறவு

இறுதியாக, சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்பால் காட்டும் அருவருப்பை அகற்றிடக் கழகம் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்; ஏனென்றால் இவிவிரு பிரி வினரும் முற்றிலும் வேறுபட்ட, மாறுபட்ட, தனித்தனி அமைவு களாக இவ்வளவு தூரம் பிரிந்து நிற்பதற்கு, விலகி இருப்பதற்கு இதுவே காரணம். இவ்விரு பகுதியினரிடையேயும் நெருங்கிய தொடர்பை வளர்ப்பதுதான் இக்குறிக்கோளை எய்துவதற்கு சிறந்த மார்க்கம் என்பது என் கருத்து. தொடர்ந்த நீடித்த பங்கெடுப்புதான் ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்ள முற்படும்போது ஏற்படும் இந்த அந்நிய உணர்வை வெற்றி கொள்ளத் துணைபுரியும். தாழ்த்தப்பட்ட இனத்தவரை விருந்தாளிகளாக அல்லது பணியாளர் களாக சாதி இந்துக்களின் இல்லங்களில் அனுமதிப்பதைப்போல் இக்காரியத்தை மிகவும் பயனுள்ள முறையில் செய்யக் கூடியது வேறு எதுவும் இல்லை என்பது என் அபிப்பிராயம்.

 இவ்விதம் உருவாக்கப்படும் உயீர்த் தடிப்பு மிக்க தொடர்பு பொதுவான, தோழமை நிறைந்த வாழ்வைப் பழக்கப்படுத்தும்; நாம் அனைவரும் எதற்காக அயராது பாடுபட்டு வருகிறோமோ அந்த ஒற்றுமை ஏற்பட இது வழிவகுக்கும், ஆனால் வளைந்து கொடுக்கும் பாங்குடைய அநெக சாதி இந்துக்கள் இதற்குத் தயாராக இல்லாதது எனக்கு வருத்தத்தையும் வேதனைனையும் அளிக்கின்றது.

“இந்திய நாட்டையும் உலகையும் குலுக்கிய மகாத்மாவின் பத்து நான் உண்ணாவிரதத்தின்போது ஒரு வினோதமான வேலை நிறுத்தம் நடைபெற்றது. வில்லே பார்லியிலும் மஹத்திலும் தங்கள் எசமானர்கள் தீண்டாமை விதிகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு தீண்டாதோருடன் கூடிக் குலாவுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டி அவர்களுடைய சாதி இந்து வேலைக்காரர்கள் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர். இந்த நிலைமையில் இந்தப் பிரமுகர்கள் தங்களது பணியாட்களுக்குப் பதில் தாழ்த்தப்பட்ட இனத்தவரை அவர்களது இடங்களில் வேலைக்கமர்த்தி வேலை நிறுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள், அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிப்பார்கள் என்றே நான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் இவ்வாறு செய்வதற்குப் பதிலாக அவர்கள் சனாதன சக்திகளிடம் சரணடைந்து, அவர்களது கரங் களை வலுப்படுத்தினர். தாழ்த்தப்பட்ட இனத்தவர்களின் இத்தகைய சந்தர்ப்பவாத நண்பர்கள் எந்த அளவுக்கு உதவியாக இருப்பார்கள் என்பதை நான் அறியேன்.

நாம் கஷ்ட காலத்தில் அவதிப்படும்போது, சிரம தசையில் உழலும்போது நம்மிடம் ஏராளமானோர் அனுதாபம் காட்டலாம். ஆனால் அந்த அனுதாபத்தை அவர்கள் உதட்டளவில் நிறுத்திக் கொண்டு, வேறு எதுவும் செய்யவில்லை என்றால் அந்த அனுதாபத் துக்கு அர்த்தமே இல்லை, அதுகுறித்து நாம் ஆறுதல் அடைவதற்கு எதுவும் இல்லை. இதைத்தான் தீண்டாமை எதிர்ப்புக் கழகத் துக்கும் சொல்ல விரும்புகிறேன். அமெரிக்காவில் நீக்ரோக்களின் விடுதலைக்காக வடபகுதி வெள்ளையர்கள் தங்களது உற்றார் உற வினர்களாக தென்பகுதி வெள்ளையர்களையே எதிர்த்துப் போராடினார்கள்.

இவ்வாறே, தாழ்த்தப்பட்ட இன மக்களின் அனுதாபிகள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் சாதி இந்துக்களும் நீக்ரோக்களுக் காகப் போராடிய அமெரிக்க வடபகுதி வெள்ளையர்களைப் போல், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக தங்களுடைய சொந்த உற் றார் உறவினர்களையும் எதிர்த்து நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராடச் சித்தமாக இருக்க வேண்டும்; அதற்கு அவர்கள் தயாராக  இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்படும் வரை அவர்களது நேர்மை குறித்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் மனநிறைவு அடைய மாட்டார்கள்.

இது ஒருபுறமிருக்க, நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுப்போல் தீண்டப்படுபவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையே தொடர்பையும் சமூக உறவையும் உருவாக்கி வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை இந்துக்களின் மனத்தில் ஆழமாகப் பதியச் செய்வதற்கும் கழகம் நடவடிக்கை எடுத்துக் கொள்வது மிக முக்கியம் என்றும் கருதுகிறேன்.

4. உருவாக்கப்பட வேண்டிய அமைப்பு

தீண்டாமை எதிர்ப்புக் கழகம் தனது திட்டத்தைச் செயல் படுத்துவதற்கு மிகப்பெரிய ஊழியர் படை ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். சமூக ஊழியர்கள் நியமனம் என்பது ஒரு சின்ன விஷயமாகக் கருதப்படக்கூடும். என்னைப் பொறுத்தவரையில், இப்பணியில் ஈடுபடுத்துவதற்கு ஒரு சரியான அமைப்பினைத் தெரிந்தெடுப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறேன். பணம் தருவதாக இருந்தால் எந்த ஒரு குறிப்பிட்ட பணியையும் செய்வதற்கு எப்போதும் ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால் கழகத்தின் லட்சியம் நிறைவேறுவதற்கு இந்தத் கூலிப்படையினர் பயன்பட மாட்டார்கள். இது எனது உறுதியான கருத்து. அன்பு காட்டுபவர்களே சேவை செய்ய முடியும் என்பது டால்ஸ்டாயின் அருள் வாக்கு. தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இத்தகைய சோதனையில் தேறச் கூடியவர்கள் என்பது என் அபிப்பிராயம்.

எனவே, யாரைத் தேர்ந்தெடுப்பது, யாரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்கம் போது கழகம் இந்த அம்சத்தைக் கருத்திற்கொள்ள வேண் டும் என்று விரும்புகிறேன். சமூக சேவையைக் கடைசிப் புகலிட மாகக் கொள்ளாத தாழ்த்தப்பட்டோரிடையே சில கடைந்தெடுத்த கயவர்கள் இருக்கிறார்கள் என்று இங்கு நான் சொல்ல வரவில்லை. ஆனால் பொதுவாகக் கூறுமிடத்துத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஊழியர் தமது பணியை அன்பின் உழைப்பாகக் கருதுவார் என்பதை நிச்சயமாக நம்பலாம்; இத்தகைய நேரிய மனோபாவம் கழகத்தின் வெற்றிக்கு இன்றியமையாதது.

இரண்டாவதாக, இனம் அல்லது நோக்கம் போன்ற கட்டுப் பாடுகள் ஏதுமின்றி ஏதேனும் ஒருவகையான சமூக சேவையில் ஏற் கனவே ஈடுபட்டுள்ள சில அமைப்புகள் இருக்கின்றன; இத்தகைய அமைப்புகள் குறிப்பிட்ட உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டு தீண்டாமை எதிர்ப்புக் கழகத்தின் பணியையும் தனது பணிகளுடன் சேர்த்துச் செய்ய முன்வரக் கூடும். இத்தகைய ‘தவணைமுறை’ சேவையானது விரும்பும் பலனைத் தராது என்பதில் எனக்கு எத் தகைய ஐயப்பாடும் இல்லை.

ஒரு குறிப்பிட்ட பணியில் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்தக்கூடிய அமைப்புதான் நமக்குத் தேவை. தாம் மேற்கொண்ட லட்சியத்தில் முழு ஆர்வ ஈடுபாடு கொள்ளும் பொருட்டு தம்மைக் ஒரே நோக்குடையவையாக ஆக்கிக் கொள்ளும் அமைப்புகளும் நிறுவனங்களும் தான் நமக்கு வேண்டும். இவ்வகையில் யாருக்கேனும் பணி ஒதுக்கப்பட வேண்டியிருப்பின் தாழ்த்தப்பட்ட இன மக்களின் சேவைக்குத் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொள்ள முன்வருபவர்களுக்கே அப்பணி ஒதுக்கப்பட வேண்டும்.

இக்கடிதத்தை முடிக்கும் முன் ஒன்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஒன்றாக இணைத்துப் பிணைக்கக்கூடியது அன்பே தவிர சட்டமல்ல என்று பால்போர்தான் கூறினார் என்று நினைக்கிறேன். இந்தக் கருத்து இந்து சமுதாயத் துக்கு அப்படியே அட்சரம் பிசகாது பொருந்தும் என்று கருது கிறேன்.

சாதி இந்துக்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் சட்டத் தால் பிணைக்க முடியாது; அதிலும் குறிப்பாக தனி வாக்காளர் தொகுதிகளுக்குப் பதிலாக கூட்டு வாக்காளர் தொகுதிகளை உரு வாக்க வகை செய்யும் எந்தத் தேர்தல் சட்டத்தாலும் அவர்களை ஒன்றுபடுத்த முடியாது, பின்னிப் பிணைக்க முடியாது. அவர்களைப் பிணைக்கக்கூடிய சக்தி ஒன்றே ஒன்றுக்குத்தான் உண்டு. அதுதான் அன்பு.

எனது அபிப்பிராயத்தில் குடும்ப எல்லைகளுக்கு அப்பால் நியாயத்தால், நீதியால் மட்டுமே அன்பின் கதவுகளைத் திறந்து விடமுடியும்; ஆகையால் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பால் நியாயப் போக்கோடு, நேர்மை உணர்வோடு நடந்துகொள் ளும்படிப் பார்த்துக் கொள்வதும், தவறினால் அவ்வாறு நடந்து கொள்ளுமாறு அவர்களை நிர்ப்பந்திப்பதும் தீண்டாமை எதிர்ப்புப் கழகத்தின் அசைக்க, மறுக்க முடியாத கடமையாக இருத்தல் வேண்டும்.

 உங்கள் உண்மையுள்ள.

 பி.ஆர். அம்பேத்கர்.

குறிப்பு:

பொதுமக்கள் என் கருத்துகளைத் தெரிந்து கொள்வதற்காக வும் அவற்றை அவர்கள் பரிசீலிப்பதற்காகவும் இந்தக் கடிதத்தைப் பத்திரிகைகளில் வெளியிடுகிறேன்.

பெறுநர் ஏ.வி.தாக்கர் அவர்கள், பொதுச் செயலாளர், அகில-இந்தியத் தீண்டாமை எதிர்ப்புக் கழகம், பிர்லா மாளிகை, புதுடில்லி.

IV

என் யோசனைகளின்பால் எத்தகைய கவனமும் செலுத்தப் படாதது எனக்கு வியப்பாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், இக்கடிதம் கிடைக்கப்பெற்றதாகக் கூட தகவல் இல்லை! எனவே, இதற்கு மேலும் சங்கத்தில் அங்கம் வகிப்பதில் பயனில்லை என்று அதிலிருந்து துண்டித்துக் கொண்டு விட்டேன். நான் இல்லாத போது சங்கத்தின் நோக்கங்களும் குறிக்கோள்களும் அடியோடு மாறிவிட்டதைக் கண்டேன். 1932 செப்டம்பர் 30 ஆம் தேதி பம்பாய் கவாஸ்ஜி ஜிஹாங்கீர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தின் சங்கத் தின் நோக்கங்கள் பின்வருமாறு இருக்க வேண்டும் என்று தீர் மானிக்கப்பட்டது:

“தீண்டாமையை எதிர்த்துப் பிரசாரம் செய்வதிலும்,  எல்லாப் பொதுக் கிணறுகளையும், தர்ம சத்திரங்களையும், சாலைகளையும், பள்ளிக்கூடங்களையும், சுடுகாடு  களையும், இடுகாடுகளையும், சகல பொதுக் கோவில்களை  யும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்து விடுவதற்கு  கூடிய விரையில் நடவடிக்கை எடுப்பதிலும் எத்தகைய நிர்ப்  பந்தத்தையோ, வன்முறையையோ பயன்படுத்தக்கூடாது;  இந்தக் குறிக்கோளை அடைவதற்கு அமைதி வழியில்  இணங்க வைக்கும் முறையையே கைக்கொள்ள வேண்டும்.”

ஆனால் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 3 ஆம் தேதி திரு. ஜி.டி. பிர்லாவும், திரு. ஏ.வி. தாக்கரும் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர்:

“சனாதனிகளில் நியாய உணர்வு படைத்தவர்கள் சம பந்தி போஜனங்களையும் கலப்புத் திருமணங்களையும் எதிர்க்கும் அளவுக்கு தீண்டாமை அகற்றுப்படுவதை எதிர்க்க வில்லை என்று கழகம் கருதுகிறது. குறியிலக்கு எல்லைக்கு அப்பாற் சென்று சீர்திருத்தங்களை மேற்கொள்வது கழகத் தின் நோக்கம் இல்லையென்பதால் இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுவது விரும்பத்தக்கதாக இருக்கும். அதா வது, தீண்டாமையின் ஒவ்வொரு எச்சமிச்சத்தையும் அகற்று வதற்கு இணக்குவிப்பு முறையைக் கைக்கொண்டு சாதி இந்துக்களிடையே கழகம் பாடுபடும்; அதிலும் முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களை கல்வி, பொருளாதார, சமூக ரீதியில் கைதூக்கிவிடுவது போன்ற ஆக்கப்பூர்வமான நோக்கமே அதன் பணியின் பிரதான திசைவழியாக இருக்கும்; தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதற்கு இதுவே பெரும் பங்குப்பணி ஆற்ற முடியும். இத்தகைய பணி ஆற்றப்படும் போது மிகவும் தீவிரமான சனாதனிகூட அதன்பால் பரிவும் ஒத்துணர்வும் காட்டாமல் இருக்க முடியாது. இப்படிப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்காகத்தான் பிரதானமாக கழகம் அமைக்கப்பட்டது. சாதிமுறையை ஒழித்துக்கட்டுதல், சமபந்தி விருந்து போன்ற சமூக சீர்திருத்தங்கள் கழகத்தின் செயற் பாடு எல்லைக்கு அப்பாற்பட்டவை.”

இங்கு ஆரம்பக் குறிக்கோள்களிலிருந்து ஸ்தாபனம் முற்றிலும் விலகிச் சென்றிருப்பததைக் காண்கிறோம். தீண்டாமை ஒழிப்பு என்பது வேலைத்திட்டத்தில் ஏதோ பெயரளவுக்குத்தான் இடம் பெற் றிருந்தது. நிர்மாணப் பணி ஸ்தாபனத்தின் பிரதானப் பகுதியாயிற்று. ஸ்தாபனத்தின் குறிக்கோள்களிலும் நோக்கங்களிலும் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டது ஏன் என்ற கேள்வி இங்கு எழுகிறது. இது முற்றி லும் உசிதமான கேள்வியாகும். திரு. காந்திக்குத் தெரியாமலோ அல்லது அவரது அனுமதியின்றியோ ஸ்தாபனத்தின் குறிக்கோள் களிலும் நோக்கங்களிலும் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்க முடி யாது. ஆரம்பகால வேலைத்திட்டம் திரு. காந்திக்கு மிகவும் இக் கட்டானதாக, தொல்லைக் கொடுக்கக் கூடியதாக இருந்தது என்பதே இதற்கு ஒரே காரணமாக இருக்க முடியும் என்பதை எவரும் எளிதில் காணலாம்.

தீண்டாமை ஒழிப்பு என்பது மிகவும் கவர்ச்சியான கோஷமாக இருக்கலாம்; மேடைப் பேச்சுக்கும் பெரிதும் ஏற்றதாக இருக்க லாம். ஆனால் ஒரு வேலைத் திட்டம் என்ற முறையில் அது இந்துக் களிடையே திரு. காந்தியின் செல்வாக்கை வெகுவாக குறைக்கவே செய்யும். இவ்விதம் தமது செல்வாக்கை இழக்க அவர் தயாராக இல்லை. அதனால் அவர் நிர்மாணத் திட்டத்தையே பெரிதும் விரும்பினார். இதில் எல்லா அனுகூலங்களும் உண்டு; பிரதிகூலங் கள் எதுவுமில்லை. இந்துக்கள் இதுகுறித்துக் கவலைப்படவில்லை. இந்துக்களில் வெறுப்புக்கு, சினத்துக்கு, எரிச்சலுக்கு ஆளாகாமல் திரு. காந்தி இதனைப் பின்பற்ற முடியும். நிர்மாணப் பணி வேலைத் திட்டத்தில் இத்தகைய பாதகமான அம்சம் ஏதும் இல்லை. அதற்கு மாறாக அதனைப் பரிந்துரைப்பதில் மிகுந்த அனுகூலம் இருக்கிறது.

சுதந்திரமான முறையில் தீண்டப்படாதவர்கள் கட்டி வளர்ந்துள்ள இயக்கத்தை அழித்தொழிக்கும் சாத்தியக்கூறை அது பெற்றுள்ளது; புனா ஒப்பந்தத்தை ஏற்க இணங்கியதன் காரணமாக தீண்டப்படாத வர்களின் கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்க 1932ல் திரு. காந்தி நிர்ப்பந்திக்கப்பட்டார். இந்நிலைமையில் நிர்மாணப் பணியின் அருமை பெருமைகளைக் கூறி திரு. காந்தி எவ்வளவோ நாடகமாடி னார்; ஆசை வார்த்தைகளைக் காட்டினார்; காங்கிரஸ்காரர்களும் முழு ஈடுபாட்டுடன் இதையேதான் விரும்பினர். இது தீண்டப்படாத வர்களை காங்கிரஸ்காரர்களாக அதுவும் மிகவும் நயமான முறை யில் மாற்றமுடியும். நிர்மாணப் பணி வேலைத்திட்டம் கருணையால் தீண்டப்படாதவர்களைக் கொல்லக் கூடிய ஒரு திட்டமாக மாறக்கூடிய சாத்தியக் கூறு இருந்தது; அபாயம் இருந்தது. உண்மையில் இவ்வாறுதான் நடைபெறவும் செய்தது.

இந்துக்களையும் காங்கிரஸ்காரர்களையும் எதிர்க்கக்கூடிய எந்த ஓர் இயக்கத்தையும் தீண்டப்படாதவர்கள் மேற்கொள்ளவதைச் சகித்துக் கொள்ள ஹரிஜன சேவா சங்கம் தயாராக இல்லை; அத்தகைய ஓர் இயக்கத்தை ஒழித்துக் கட்ட, வேரோடு வேரடி மண்ணோடு ஆழக் குழுதோண்டிப் புதைக்க அது முனைத்து ஈடுபட்டிருந்தது. சங்கத்தின் குறிக்கோள்களிலும் நோக்கங்களிலும் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் விளைவுகள் இவ்வாறுதான் இருக்கும் என்பதை முன்னுணர்ந்து நான் சங்கத்திலிருந்து வெளியேறினேன்.

தீண்டப்படாதோரின் முதல் கோஷ்டியினர் சங்கத் திலிருந்து வெளியேறிய பிறகு அவர்களிடத்தில் இதர தீண்டப்படா தோர்களை நியமிக்க திரு. காந்தி எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ள வில்லை. அதற்குமாறாக, சங்கத்தின் நிர்வாகம் முற்றிலும் காங் கிரஸ் இந்துக்களின் கைகளுக்கு மாறுவதற்கு தங்குதடையின்றி அனு மதிக்கப்பட்டது. உண்மையில், சங்கத்தின் நிர்வாகத்திலிருந்தும் அதனை வழிநடத்திச் செல்லும் பொறுப்பிலிருந்தும் தீணடப்படாத வர்களை அகற்றுவதே இப்போது சங்கத்தின் தலையாக கொள்கையாயிற்று.

தீண்டப்படாதோரின் தூதுக்குழு ஒன்று திரு. காந்தியைச் சந்தித்து நிர்வாகக் குழுவில் தீண்டப்படாதவர்களையும் நியமிக்கும் படி விடுத்த வேண்டுகோளை அவர் அப்பட்டமாக நிராகரித்ததி லிருந்து இதனைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் ( தீண்டப்படாதோரின் தூதுக்குழு திரு. காந்தியை சந்திதத்து இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் வேறு பல தூதுக்குழுக்களும் அவரைச் சந்தித்துள்ளன. இப்போது கிட்டிய அதே பலன்தான் அப்போதும் கிட்டியது).இவ்வாறு தம்மை சந்திக்க வரும் தூதுக்குழுவினருக்கு ஆறுதலளிப் பதற்கு திரு. காந்தி ஒரு புதிய சித்தாந்தத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். அவர் கூறினார்:

“தாழ்த்தப்பட்டோருக்கான நல்வாழ்வுப் பணி என்பது தீண்டாமை பாபத்திற்கு இந்துக்கள் செய்ய வேண்டிய பிராயச்சித்தமாகும். மேலும் சங்கத்திற்கு வசூலிக்கப்பட்ட பணமும் இந்துக்கள் தந்ததேயாகும். இந்த இரண்டு கண்ணோட்டங்களிலிருந்தும் பார்க்கும்போது இந்துக்கள் மட்டுமே சங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என்பது தெளிவு. தார்மிக ரீதியிலும் சரி, உரிமை அடிப் படையிலும் சரி சங்க நிர்வாகக் குழுவில் தீண்டப்படாதோர் இடம் கோரமுடியாது. “திரு. காந்தி இந்த சித்தாந்தத்தின் மூலம் தீண்டப் படாதோரை எந்த அளவுக்குப் புண்படுத்தி விட்டார்.

அவமதித்து விட்டார் என்பதை உணரவில்லை. பணம் இந்துக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாகும், ஆதலால் அது எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்று கூறுவதற்கு தீண்டப்படாதவர்களுக்கு எந்த உரிமை யும் இல்லை என்பது திரு. காந்தியின் கருத்தானால் சுயமரியாதை யுள்ள தீண்டப்படாத எவரும் அவருக்கு எவ்வகையிலும் தொல்லைக் கொடுக்க மாட்டார்கள்.

அப்படியே இத்தகைய தயவுக்காக அவரை நாடி தேடிச் சென்றிருப்பவர்கள் அதிர்ஷ்டவசமாக வேறு யாருமல்ல; அரசியலை தங்கள் பிழைப்புக்கு ஆதாரமாக்க் கொண்டுள்ள வேலை யில்லாத வெறும் வீணர்களே, சோம்பேறிகளேயாவர். இது எப்படி யிருப்பினும், திரு. காந்தி கூறுவது சங்கத்தின் வேலைத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றத்துக்கு அளிக்கப்படும் ஒரு நொண்டிச் சமாதானமே தவிர வேறல்ல் என்பதை அவர் உணரவேண்டும். சங்கத்தின் ஆரம்பக்காலக் கண்ணோட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பதை அவர் விளக்க வில்லை. இங்கு ஒரு கேள்வி கேட்பது பொருத்தமானதாகும்: சங்கத் தின் நிர்வாகக் குழுவில் தீண்டப்படாதவர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதில் திரு. காந்தி ஏன் ஒருசமயம் ஆர்வமாக இருந்தார். ஏன் இப்போது அவர்களை விலக்கி வைப்பதில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்?

V

ஹரிஜன சேவா சங்கம் போலவே தீண்டப்படாதோருக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் தாழ்த்தப்பட்டோர் நல் வாழ்வுக் கழகத்திடம் தீண்டப்படாதோர் எத்தகைய பகைமை உணர் வையும் காட்டவில்லை என்று இந்தியன் சோஷியல் ரிபார்மரில் கடிதம் எழுதியவர் குறிப்பிட்டிருப்பது சரியானதே. கழகத்தின் பணியை மேம்படுத்தும் திசைவழியில் இந்துக்கள், தீண்டப்படா தோர் ஆகிய இரு சாராருமே மிகுந்த நல்லிணக்கத்தோடு செயல் பட்டனர் என்பதில் ஐயமில்லை.

ஆனால் தாழ்த்தப்பட்டோர் நல் வாழ்வுக் கழகம் தனது நிர்வாகக் குழுவில் சில குறிப்பிட்ட எண் ணிக்கையில் தீண்டப்படாதோரை எப்போதும் இடம்பெறச் செய்து வந்ததே இதற்குக் காரணம் என்று அவர் கூறியிருப்பது சரியல்ல. ஏனென்றால் தாழ்த்தப்பட்டோர் நல்வாழ்வுக் கழகத்துக்கும் தீண்டப் படாதோருக்கும் இடையே ஏன் பகைமை உணர்வு ஒருபோதும் இருந்ததில்லை என்பதற்கான காரணமும் தீண்டப்படாதோருக் கும் சங்கத்துக்கும் இடையே ஏன் அத்தகைய பகைமை உணர்வு இருந்தது என்பதற்கான காரணமும் முற்றிலும் வேறுபட்டது. தாழ்த்தப்பட்டோர் நல்வாழ்வுக் கழகத்தின் பணிக்குப் பின்னால் அரசியல் நோக்கம் ஏதும் இல்லாதிருந்ததும், ஆனால் சங்கத்துக்கு அத்தகைய நோக்கம் இருந்தது என்பதுமே அந்த வேறுபாடாகும்.

சங்கம் அரசியலிலிருந்து அறவே விலகி நிற்க வேண்டும் என்பதே ஆரம்பத்தில் நோக்கமாக இருந்தது என்பது உண்மையே. 1932 நவம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் பின்வரு மாறு கூறப்பட்டிருந்தது:

”சங்கம் கட்சி சார்பற்ற முறையில் பணியாற்றக் கூடிய  தாக இருக்க வேண்டும். எவ்வகையான அரசியல் அல்லது  சமயப் பிரசாரத்துடனும் அதனை சம்பந்தப்படுவத்துவதில்லை  என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மாகாண நிர்  வாகக் குழுத் தலைவர்களும் மத்திய நிர்வாகக் குழுத் தலை  வர்களும் தங்களுடைய முழுநேர ஊழியர்களைத் தேர்ந்  தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தக்  குறிக்கோளை மனத்திற் கொண்டு சங்கத்தின் எல்லா முழு  நேர ஊழியர்களும் அரசியலிலோ அல்லது எத்தகைய  வகுப்புவாத அல்லது சமயப் பிரசாரத்திலோ ஈடுபடாமல்  இருப்பது அவசியம்.”

 ஆனால் இந்த அறிவிப்பு மதிக்கப்பட்டதை விட மீறப்பட் டதே மிக அதிகம். தீண்டப்படாதோரை காங்கிரஸ் அரவணைப்பில் கொண்டு வருவதற்கும், காங்கிரஸ் அரசியலை அவர்கள் ஏற்கக் செய்வதற்கும், குறிப்பாக அவர்களுக்கு செய்யப்படும் சேவை, அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும், காங்கிரசின்பால் அவர்கள் நன்றி உணர்வு கொள்ளச் செய்யும் சூழ்நிலையில் காங்கிரஸ் சித் தாந்தங்களை அவர்கள் மனத்திற் பதியவைப்பதற்கும் ஹரிஜன சேவா சங்கத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை, சபலத்தைத் தவிர்ப்பது சாத்தியமில்லாதிருக்கலாம். ஹரிஜன சேவா சங்கம் தீண்டப்படாதோருக்கு ஒரு சேவா நிலைய மாக இருப்பதோடு அதனை ஒர் அரசியல் பட்டறையாக்கியது அவசி யமாக இருக்கலாம்.

தீண்டப்படாதோரை அவர்களது வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயாரிப்பதும், அவர்க:ள் தங்களுக்கு விருப்ப மான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிப் பதும் தூய, பரிசுத்தமான, பரந்தமனப்பான்மை கொண்ட அறச் செயல் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்துக்கள் எவ்வளவு காலம் இந்த அறிச்சிந்தனையைக் கொண்டிருப்பார்கள்? இது நீண்டக்காலம் நீடிக்காது.

தீண்டப்படாதோரை தாங்கள் நடத்தும் முறை பாபகர மானது என்ற உணர்வு இந்துக்களிடம் இல்லாதபோது, இதற்காக அவர்கள் கழிவிரக்கம் கொள்ளாதபோது, கழுவாய் தேட முற்படாத போது சங்கத்திற்கு ஆதாரசுருதியாக உள்ள அருளிரக்க உணர்வு தேயவே செய்யும், வற்றவே செய்யும்; இந்த ஈகை உணர்வு வற்றவில்லை என்று காண்பிப்பதற்கு சங்கம் நல்விளைவுகளைக் காட்டியாக வேண் டும்; தீண்டப்படாதவர்கள் சுதந்திரமானவர்களல்ல, சமய மற்றும் அரசியல் விஷயத்தில் அவர்கள் இந்துக்களை எதிர்ப்பவர்களல்ல என்பதை இந்துக்களுக்கு மெய்ப்பித்தாக வேண்டும். எனது இந்த ஆய்வு அத்தனை மிகத் துல்லியமானதாக இல்லாதிருக்கலாம். எனி னும் ஹரிஜன சேவா சங்கம் ஓர் அரசியல் அமைப்பு என்பதையும் தீண்டப்படாதோர்களைக் காங்கிரஸ் பிடிக்குள் கொண்டு வரு வதே அதன் முழுமுதல் குறிக்கோள் என்பதையும் மறுக்க முடியாது. இது சம்பந்தமாக சில முக்கியமான உதாரணங்களை மட்டும் இங்கு தருகிறேன். 

ஹரிஜன சேவா சங்கம் தனது ஊழியர் மாநாடுகளை அவ்வப்போது நடத்துகிறது. “பல்வேறு மொழிவாரி மாகாணங்களில் நடைபெற்றுள்ள பணியின் முன்னேற்றத்தைப் பரிசீலிப்பதற்கும், இது சம்பந்தமான கருத்துகளையும் அனுபவங்களையும் பரிமாறிக் கொள்வதற்கும்” இந்த மாநாடுகள் நடத்துப்படுவதாக வெளிஉல கத்துக்கு கூறப்பட்டு வந்தது. ஆனால் இது சீரணிக்க, ஏற்கத்தக்க உண்மையல்ல என்று எல்லோருக்கும் தெரியும். உதாரணமாக 1939 ஜுன் முதல் வாரத்தில் புனாவில் நடைபெற்ற மாநாட்டை எடுத்துக் கொள்வோம். இந்த மாநாட்டில் என்ன தீர்மானம் நிறைவேற்றப் பட இருந்தது தெரியுமா? புனா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக் கும் வாக்களிப்பு முறையை மாற்ற வேண்டும் என்றும், குவிப்பு வாக்களிப்பு முறைக்குப் பதிலாக பகிர்ந்தளிப்பு வாக்களிப்பு முறை யைக் கொண்டுவர வேண்டும் என்றும் அரசாங்கத்தைக் கோரும் ஒரு தீர்மானத்தை இம்மாநாட்டில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.

புனா ஒப்பந்த சரணாகதிக்குப் பிறகு, பகிர்ந்தளிப்பு வாக் களிப்பு முறையை ஏற்க வேண்டுமென்று காங்கிரஸ் எவ்வாறு வலி யுறுத்தி வந்தது என்பதனையும். குவிப்பு வாக்களிப்பு முறை தீண்டப் படாதோருக்கு அபாயகரமானது, அது புனா ஒப்பந்தத்தை செல் லாக்காசாக்கி விடும் என்றெல்லாம் காங்கிரஸ் எவ்விதம் ஓயாது ஒழியாது பிரசாரம் செய்து வந்துள்ளது என்பதையும் நான் ஏற் கெனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆனால் இந்த முயற்சியில் காங்கிரஸ் படுதோல்வியைத் தான் தழுவியது.

காங்கிரஸ் செய்யத் தவறியதை சங்கம் செய்ய முனைந்து ஈடுபட்டது; பகிர்ந்தளிப்பு வாக்களிப்பு முறையை தீண்டப்படாதவர்கள் கடுமையாக, வன்மை யாக எதிர்க்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்திருந்தும் அந்த வாக் களிப்பு முறைக்கு ‘வாகாலத்து’ வாங்குவதில் தீவிரம் காட்டிற்று அதற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றவும் தீட்டமிட்டது. ஒரு கட்சி சார்பற்ற அமைப்பு நிறைவேற்ற எண்ணும் தீர்மானத்தின் லட்சணத்தைப் பாருங்கள்! மூக்கமுட்டக் குடிக்கும் ஒரு ‘மிடா’ குடிகாரன் தான் மதுவை கண்ணால் கூடப் பார்த்ததில்லை என்று கதைத்து மற்றவர்களை நம்பவைக்க முயன்ற கதையாகத்தான் இது இருக்கிறது. தீண்டப்படாதவர்கள் இதை எதிர்த்துப் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் சங்கம் இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றாதபடி தடுக்கப்பட்டது.

பம்பாயில் வசிக்கும் சில தீண்டப்படாத சமூகத்தினர் காங் கிரஸ்-எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்து வந்ததன் காரணமாக, ஹரிஜன சேவா சங்கத்தின் பம்பாய்க் கிளை அவர்கள் விஷயத்தில் பழிவாங்கும் கொள்கையை மேற்கொண்டது. இந்தச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்களும் ஏனைய கல்வி உதவிகளும் மறுக்கப்பட்டன. தீண்டப்படாதவர்களது அரசியல் இயக் கத்தின் ஈட்டிமுனையாக விளங்கும் மகர் சமூகம் நீண்ட நெடுங் காலமாக காங்கிரசை எதிர்த்துப் போராடி வந்துள்ளது; இதன் காரண மாக அந்த சமூகம் பல வழிகளும் பழிவாங்கப்பட்டு வந்தது; அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் தனது சமூகத்தினர் காங் கிரஸ் எதிர்ப்பு உணர்வுகளைத் தான் ஆதரிக்கவில்லை என்று மெய்ப் பித்தாலொழிய அவன் விஷயத்தில் பல்வேறு வகைகளிலும் பாரபட்சம் காட்டப்பட்டு வந்தது.

கடைசியாக இது சம்பந்தமாக நான் குறிப்பிட விரும்பும் நிகழ்ச்சி ஹரிஜன சேவா சங்கம் பொதுச் செயலாளரான திரு. ஏ.வி. தாக்கர் சம்பந்தப்பட்டதாகும். திரு. தாக்கர் பம்பாய் அரசாங்கத்தின் பிற்பட்ட வகுப்பினர் குழுமத்திலும் உறுப்பினர். இக்குழுமம் 1929ல் அமைக்கப்பட்டது. அது அவ்வப்போது கூடி தீண்டப்படாத வர்கள் மற்றும் ஏனைய பிற்பட்ட வகுப்பினர் சம்பந்தப்பட்ட விஷ யங்களில் ஆலோசனை கூறிவந்தது.

குழுமத்தின் கூட்டம் ஒன்றில் திரு. தாக்கர் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்; திண்டப்படாத மாணவர்களுக்கு அரசாங்கம் வழங் கும் உபகாரச் சம்பளங்கள் மகர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் களுக்கு அளிக்கப்படக் கூடாது என்று தமது தீர்மானத்தில் பரிந் துரைத்தார்; மகர் சமூகம் கல்வித்துறையில் வெகுதூரம் முன்னேறி விட்டது என்றும், அப்படியிருக்கும்போது அவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள் வழங்குவது தீண்டப்படாத சமூகத்தினருக்கும், பிற்பட்ட சமூகத்தினருக்கும் சேர வேண்டிய பங்கை அபகரிக்கும் கொடிய செயலாகும் என்றும் அவர் குதர்க்கவாதம் பேசினார்.

இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் உண்மை யானவைதானா எனக் கண்டறிய விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதன்படி நடைபெற்ற விசாரணையில் தீர்மானத்தின் கூறப்பட் டிருக்கும் விவரங்கள் தவறானவை என்பதும், மகர்கள் முன்னேறிய சமூகத்தினர் அல்ல என்பதும், உண்மையில் இதர தீண்டப்படாத சமூகங்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் கல்வித்துறையில் மிகவும் பின்தங்கியிருக்கின்றனர் என்பதும் துலாம்பரமாகத் தெரியவந்தது. காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் போக்குடைய மகர்களைத் தண்டிப்பதற்கு ஹரிஜன சேவா சங்கத்தின் பொதுச் செயலாளரே மேற்கொண்ட ஓர் அரசியல் சூழ்ச்சிதான் இந்தத் தீர்மானம் என்பது வெட்ட வெளிச்சமாயிற்று. 

இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன? ஹரிஜன சேவா சங்கம் என்பது பெயரளவில்தான் ஓர் அறச்சிந்தனை அமைப்பே தவிர, மற்றபடி தீண்டப்படாதவர்களை இந்துக்களுக்கு காங்கிர சுக்கும் பாதசேவை செய்பவர்களாக ஆக்குவதும், இந்துக்களது சமூக, சமய, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் நோக்கத்தோடு அவர்கள் தொடங்கும் எந்த இயக்கத்தையும் முளையிலேயே கிள்ளியெறிவதும்தான் சங்கத் தின் உண்மையான குறிக்கோளாகும் என்பதையும் இது காட்ட வில்லையா? எனவே, ஹரிஜன சேவா சங்கத்தை கருணையின் மூலம் தங்களைக் கொல்லும் மிகுந்த அருவருப்பு கொண்ட ஓர் இழிவான அமைப்பாக தீண்டப்படாதோர் கருதுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

 ("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 5)