australian streetஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் சில நகர மரங்கள் அதிதீவிர வெப்பத்தால் மற்ற மரங்களை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. புவி வெப்பம் அதிகரித்து வரும் இக்காலத்தில் நகர மரங்கள் நகரச்சூழலைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. பருவநிலை தாறுமாறாகின்ற சூழ்நிலையில் ஆண்டில் அதிக வெப்பம் நிலவும் மாதங்கள் அதிகரித்துவருகின்றன. குளிர், மழை போன்றவை காலம் தப்பி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

வெப்ப உயர்வால் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சில இடங்கள் வறட்சி, வெப்பத் தாக்குதலின் பிடியில் சிக்கித்தவிக்கின்றன. உலகமயமாக்கலால் கிராமங்கள் நகரங்களாகி வருகின்றன. நகரங்கள் பெருகும்போது அங்கு உருவாகும் சூழல் சீர்கேடுகளைச் சமாளிக்க நகர மரங்கள் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. காலநிலை மாற்றத்தின் பாதிப்பால் இவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியமாகியுள்ளது.

இவை நகரங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன. நீரை ஆவியாக்கி இயற்கையான குளிர்ச்சியை நிலைநிறுத்துகின்றன. காற்றில் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துகின்றன. நான்கில் மூன்று மடங்கிற்கும் கூடுதலாக வெப்பத் தாக்குதல்களால் நிகழும் மனித மரணங்களைத் தடுக்கின்றன. ஆனால் சில மரங்கள் மிக அதிக வெப்பத்தால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. நகரங்களில் மரங்களை நட்டால் மட்டும் போதாது.

தொடர்ந்து அவை பராமரிக்கப்பட வேண்டும். கடல் நீரோட்டங்களால் நிகழும் எல் நினோ (El Niño) நிகழ்வு சீரழிந்துள்ள பூமியில் வெப்பத் தாக்குதல்களை அதிகரிக்கச்செய்யும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 2019-2020 காலத்தில் அதிதீவிர வெப்ப உயர்வால் ஆஸ்திரேலியாவில் நகர மரங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டன என்று ஆராயப்பட்டது.

பெரிய, மெல்லிய இலைகள் உள்ள ரெட் மேப்பிள் (Red Maple) போன்ற மரங்கள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றன. தடிமனான இலைகள் உள்ள ஆஷ் (Ash), சீன எல்ம் (Chinese Elm) போன்றவை வெப்பநிலையை ஒழுங்குபடுத்திக் கொள்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. உயிரியலில் காலநிலை மாற்றம் (Global Change Biology) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள இந்த ஆய்வுக்கட்டுரை, எரிக்கும் வெப்பத்தில் இருந்து மரங்கள் காப்பாற்றப்பட நீர் ஊற்றுவது மிக முக்கியம் என்று கூறுகிறது. நன்கு நீரூற்றப்பட்டவை இலைத்துளைகளைத் திறந்து நீரை வெளியேற்றுகின்றன; இலைகள் கருகாமல் தடுக்கப்படுகின்றன.

பூமி வெப்பமடைந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் வெப்ப அலை வீச்சுகள் வாடிக்கையாகி விட்டன. இது நகர மரங்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்குகிறது. வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கக் கூடிய மரங்களை நட்டு வளர்ப்பது அவசியம். மரங்களின் அடியில் நீர் தேங்கி நிற்கும் வகையில் குழிகள், பள்ளங்கள் அமைப்பது, மரங்களைச் சுற்றி மழையில் நன்கு வளரக் கூடிய செடிகளுடன் உள்ள தோட்டங்களைச் சிறிய அளவில் அமைப்பது, சிறிய தாவரங்களைச் சுற்றி நட்டு வளர்க்கலாம்.

"இது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் அதிக நீர் கிடைக்கும்போது மண்ணை ஈரத்துடன் வைத்திருக்க உதவுவதுடன், நீர் பூமிக்குள் இறங்கி கோடையில் மரங்கள் காய்ந்துபோகாமல் பாதுகாக்க உதவும்" என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முன் எப்போதையும் விட இன்று கிராமம், நகரம் என்று வேறுபாடில்லாமல் மரங்கள் மனித நலனுக்கு மிக அவசியத் தேவை என்பதால், இந்த ஆய்வு முடிவுகள் நகர மரங்கள் பாதுகாக்கப்பட பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.