மனிதனின் நுகரும் ஆற்றல் முன்பு நினைத்திருந்ததைவிட மிக வேகமாக செயல்படுகிறது. இந்த புதிய ஆய்வில் பங்கேற்ற சிலர் வாசனைகளை முன்பு கருதப்பட்டதை விட பத்து மடங்கு அதிக வேகத்துடன் உணர்ந்தனர். நுகரும் திறனுக்காக மனிதன் மூக்கை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வாசனைகளின் வரிசையை மனிதன் ஒரு எளிய நுகர்தல் மூலம் பெற முடியும் என்று இந்த ஆய்வு எடுத்துக் காட்டியுள்ளது.smelling 500“வேதிச்சூழலில் ஒவ்வொரு நுகர்தலும் மனித உள்ளுணர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது. பல வாசனைகளின் கலவையாக அவற்றிற்கு இடையில் காணப்படும் வேறுபாடுகளைத் தெளிவாக உய்த்து உணர்வதற்கு பதில் வாசனைகள் நம்மால் ஒரு நறுமணமாக மட்டுமே கண்டறியப்படுகிறது. அது வெவ்வேறு நேரங்களில் வந்தடையும் வாசனைகளாக இல்லாமல் ஒற்றை நறுமணமாக மட்டும் அது உணரப்படுகிறது” என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும் சீன அறிவியல் அகாடமியின் ஆய்வாளருமான டாக்டர் வென் ஷு (Dr Wen Zhou) கூறுகிறார். ஒவ்வொரு நுகர்தலின்போது ஏற்படும் வாசனையும் அந்தந்த நேரத்தில் பிரித்தறியப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு சில விநாடிகள் வேறுபாடு காணப்படுகிறது.

வெவ்வேறு நிறங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பிரித்து உணரும் புலன் திறன் போல வாசனைகளைப் பிரித்து உணரும் திறன் நமக்கு உள்ளது என்பதை இந்த ஆய்வு விவரிக்கிறது. ஒற்றை மோப்பத்தில் வித்தியாசமான நறுமணப் பொருட்களின் வரிசையை துல்லிய நேரத்தில் வெளியிடும் ஓர் அமைப்பை ஆய்விற்காக உருவாக்குவது மிகக் கடினமான பணியாக இருந்தது என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர்.

என்றாலும் விஞ்ஞானிகள் இதற்கான செயல்முறையை ஒரு கருவியின் உதவியுடன் உருவாக்கியது பற்றி விவரித்துள்ளனர். இக்கருவியில் வெவ்வேறு வாசனை தரும் பொருட்கள் அடங்கிய இரண்டு பாட்டில்கள் குலுக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டன.

மூக்கிற்கு அருகில் வைத்து நுகரும் வகையில் வேறுபட்ட நீளம் உடைய சோதனைக் குழாய்கள் இவற்றுடன் பொருத்தப்பட்டு ஆராயப்பட்டது. இந்தக் குழாய்கள் நுண்ணிய வால்வுகளைக் கொண்டிருந்தது. இந்த வால்வுகள் ஒரு எளிய மோப்பத்தின் மூலம் திறந்து பின் மூடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் ஒரு முகர்தலில் இரண்டு வெவ்வேறு நறுமணங்கள் சிறிய கால இடைவெளியில் மூக்கை சென்றடையும்.

ஒரு முகர்தலிற்கான இந்த கால இடைவெளியின் மதிப்பு துல்லியமாக18 மில்லி விநாடிகள். இந்த ஆய்வுகளில் 229 பேர் பங்கேற்றனர். ஆய்வின்போது ஆப்பிள் பழ வாசனை மற்றும் மலரின் நறுமணம் ஆகிய இரண்டு வாசனைகளை நுகரும்படி செய்யப்பட்டது. பாட்டில்கள் குலுக்கப்பட்டபோது ஒரு வாசனை நுகரப்பட்டு 120 முதல் 180 மில்லி விநாடிகள் கழித்து மற்றொன்று பங்கேற்பாளரின் மூக்கைச் சென்றடைந்தது.

பங்கேற்பாளர்கள் கருவியை இரண்டு முறை நுகருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். வாசனைகளின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டதா இல்லையா என்று கண்டறியுமாறு சொல்லப்பட்டது. 952 பரிசோதனைகளில் 597 முறை பங்கேற்பாளர்கள் வாசனைகளை சரியாகக் கண்டறிந்தனர். 63% முடிவுகள் ஒரே மாதிரியாக இருக்கும்படி பரிசோதனைகள் அமைக்கப்பட்டன. மற்ற 70 பங்கேற்பாளர்கள் எலுமிச்சை மற்றும் வெங்காயத்தின் வாசனையை ஒத்த நறுமணத்தை நுகருமாறு செய்யப்பட்டது.

இந்த சோதனைகளை நல்ல முறையில் மேற்கொண்டவர்கள் இரண்டு வேறுபட்ட நறுமணங்கள் 40-80 மில்லி விநாடிகள் என்ற மிகக் குறைந்த கால இடைவெளியில் சென்றடைந்தபோதும் அவற்றை சரியாக உணர்ந்தனர். இந்த கால இடைவெளி முன்பு நினைத்ததை விட பத்து மடங்கு குறைவானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரு வாசனைகள் ஒரே முறையிலும் மாற்று முறையிலும் நுகரும்படி செய்யப்பட்டபோது மனிதரின் அபார நுகர் திறனை இது வெளிப்படுத்துகிறது என்று கருதப்படுகிறது.

வாசனைகளின் வரிசை மாறியபோது அது பற்றி பங்கேற்பாளர்கள் கூறினர். என்றாலும் முதலில் வரும் வாசனையை கண்டறிவது அவர்களுக்குக் கடினமாக இருந்தது. எலுமிச்சை மற்றும் வெங்காய வாசனைகள் வீசியபோதும் கால இடைவெளி 160 மில்லி விநாடிகளாக இருந்தபோதும் நேர்மறை முடிவுகள் அதிகமாகக் கிடைத்தன. வாசனைகளின் வரிசை அது பற்றிய கருத்தை உருவாக்குகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

ஒட்டுமொத்தத்தில் இரண்டு வாசனைகளுக்கு இடையில் காணப்படும் வேறுபாடுகள் அவற்றில் உள்ள உள்ளடக்கப் பொருட்களைப் பொறுத்து அமைவதில்லை. மனிதரின் நுகரும் சக்தி பற்றிய இந்த புதிய ஆய்வு நம் ஐம்புலன்களின் செயல்திறன் பற்றி வருங்காலத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/oct/14/human-sense-of-smell-is-faster-than-previously-thought-study-suggests?

சிதம்பரம் இரவிச்சந்திரன்