இவர் பரிணாமக் கொள்கையை நம்பியவர். அதுதான் உயிரின் தோற்றத்தை விளக்கும் அறிவியல், உயிர்கள் எதுவும் கடவுளால் படைக்கப்படவில்லை என்பதை துணிச்சலுடன் உலகிற்கு அறிவித்தவர். இவரை கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எனக் குற்றம் சாட்டினார்கள் மதவாதிகள். உலகில் நடப்பதை யாரும் முன்கூட்டியே கூற முடியாது என்றார். அனைத்திற்கும் அறிவியல் மூலமே விடை காண முடியும் எனக் கூறினார். அவர் தான் கிறிஸ்டியானி நஸ்லின் வால்ஹார்ட்!

Christiane Nüsslein Volhardஇவர் 1942 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாள், ஜெர்மன் நாட்டில் உள்ள மெம்டிபர்க் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை சிற்பி, தாயார் ஓவியர் ஆவர். இவரின் தாயார் இசையிலும் மிகுந்த ஆற்றல் பெற்றவர். தாயார் மூலம் சிறு வயதிலேயே புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொண்டார் கிறிஸ்டியானி!

கிறிஸ்டியானி பள்ளியில் படிக்கும்போது தாவரங்கள் மற்றும் விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மேலும், எதிர்காலத்தில் தான் ஓர் உயிரியல் அறிஞராக வேண்டும் என விருப்பம் கொண்டார்.

ஜெர்மன் இலக்கியம், கணிதம், உயிரியல் முதலிய பாடங்களில் மிகவும் ஆர்வம் கொண்டு கற்றார். மேலும், மரபியல், பரிணாமம் குறித்த தகவல்களைத் தேடி படித்தார். சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு பற்றியும், விலங்குகளின் நடவடிக்கைகள் குறித்தும் அறிந்துகொள்ள பல புத்தகங்களைத் தேடிப் படித்தார். பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ‘விலங்குகளின் மொழிகள்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றி விலங்கியல் ஆசிரியரின் மனதில் இடம் பிடித்தார்.

பிராங்க்ளின் பல்கலைக் கழகத்தில் 1962 ஆம் ஆண்டு சேர்ந்து உயிரியல் படித்தார். பின்னர், டூபின்கண் பல்கலைக் கழகத்தில் உயிர் வேதியியல் பிரிவில் சேர்ந்தார். நுண் உயிரியல், மரபியல் பாடங்களில் ஆர்வம் செலுத்தினார். இவர் பல உயிரியல் அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டார். புரோட்டீன் பயோசிந்தசிஸ் மற்றும் டி.என்.ஏ.முதலியவைகள் குறித்து ஆழ்ந்து ஆராய்ந்தார்.

ஹென்ஸ் செக்காலர் என்ற வேதியியல் அறிஞரின் ஆய்வுக் கூடத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அங்கு, டி.என்.ஏ.வை ஒப்பிடுதல் மற்றும் ஆர்.என்.ஏ, டி.என்.ஏ பாலிமர்களைத் தூய்மைப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தார்.

மூலக்கூறு உயிரியலில் மிகுந்த அனுபவம் பெற்றதுடன், டி.என்.ஏ. தொழில் நுட்பத்தை நன்கு அறிந்தார். செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் குறித்து மேலும் கற்றறிந்தார்.

மரபியல் குறித்து ஆராய்ச்சி செய்து டூபின்கன் பல்கலைக் கழகத்தில் 1973 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். இவர் 1975 ஆம் ஆண்டு EMBO-வின் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். இதில் இரண்டு ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு முதுகலை டாக்டர் பட்டமும், ஆராய்ச்சிக்கான விருதும் பெற்றார்.

இவர் வால்ஹார்ட் என்பவரை மணம் புரிந்து கொண்டார். அது முதல் தமது பெயரை நஸ்லின் - வால்ஹார்ட் என மாற்றிக் கொண்டார். டூபின்கணில் உள்ள மாக்ஸ் பிளாங் நிறுவனத்தின் வைரஸ் ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார்.

இவரது ஆர்வம் பூச்சிகள் குறித்த ஆய்விற்குத் திரும்பியது. ஃபெரிபர்க்கில் உள்ள புகழ்பெற்ற பூச்சிகளின் கருவியல் ஆய்வகத்திற்குச் சென்று, ட்ராசோபெல்லா பூச்சியின் கருவளர்ச்சி, அதன் லார்வா முதலியவைகள் குறித்து ஆராய்ந்தார்.

அய்ரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வுக் கூடத்தில் சேர்ந்து, கிருமி, செல், பாவியல் பாகுபாடு முதலியவைகள் குறித்து ஆய்வுகளைச் செய்தார். மேலும், கருவில் ஏற்படும் மாற்றங்களையும், குரோமோசோமில் ஏற்பட்ட மாற்றங்களையும் கண்டறிந்து வெளியிட்டார்.

மாக்ஸ் பிளாங்க் கழகத்தின் விஞ்ஞானப் பிரிவு உறுப்பினராக 1985 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். சிறிது காலத்தில் உயிரியல் துறையில் மரபியல் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.

வரி மீன்களில் உள்ள ஜீன்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். தமது ஆய்வுக் கூடத்தில் ஏழாயிரம் மீன் தொட்டிகளை வைத்து, மாணவர்கள், தொழில் நுட்ப வல்லுநர் முதலியவர்களின் உதவியோடு மூன்று ஆண்டுகள் ஆய்வுகளைச் செய்தார். ஆய்வின் முடிவில், வரி மீன்களின் ஜீன்களில் மாற்றங்கள் ஏற்பட்டதைக் கண்டறிந்தார். இதன் மூலம் முதுகெலும்புள்ள உயிரினங்களில் ஏற்படும் வளர்ச்சியைக் கண்டறிய என்பதை அறிவியல் உலகிற்கு அறிவித்தார்.

இவர் மூலக்கூறு உயிரியலில் மேற்கொண்ட ஆய்விற்காக உலகின் பெரிய பரிசான நோபல் பரிசு 1995 ஆண்டு வழங்கப்பட்டது. இவர், எட்வர்டு லூயிஸ், எரிக் வைசென்ஸ் ஆகியோருடன் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார். இவர்களின் கண்டுபிடிப்பானது கரு வளர்ச்சியை ஜீன்கள் எப்படி கட்டுப்படுத்துகின்றன என்பதைப் பற்றியதாகும். கிறிஸ்டியானி முதன் முதலில் நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் பெண்மணி ஆவார்.

இவர்களது ஆய்வைப் பற்றி, நோபல் பரிசுக் குழு, “இக்கண்டுபிடிப்பு பல அறிவியலாளர்களுக்கு மேலும் ஆய்வு செய்வதற்கு உதவும் எனவும், பழப்பூச்சியின் கருவில் மேற்கொண்ட ஆய்வானது மனித உயிர்களின் பிறவிக் குறைபாடுகள் எப்படி ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிய உதவும்” என அறிந்து புகழாரம் சூட்டினர்.

- பி.தயாளன்

Pin It