ஹவாயில் ஸ்கூல் மாணவர்களுக்கு இடையில் சட்டென்று இந்த பழம் பிரபலமடைந்தது. இதன் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன என்கிறீர்களா? இதோ அந்த சுவாரசியமான கதை. இந்தப் பழங்களை திராட்சையைப் போல உள்ளங்கையில் வைத்துக் கொள்ள மரமேறவோ கிளைகளைப் பிடித்து உலுக்கவோ எட்டாத உயரத்தில், உச்சியில் இருக்கும் பழங்களை ஏறிப் பறிக்கவோ வேண்டியதில்லை. இடைவேளைகளில் மரத்திற்கு அருகில் வந்தாலே போதும்.

Jabuticabaமரத்தின் அடியில் இரும்பு போல கறுப்பு நிறத்தில் பழுத்திருக்கும் பழங்களை கையால் அனாயாசமாக எட்டிப் பறிக்கலாம். தரையில் இருந்தபடியே கை எட்டும் தூரத்தில் இருக்கும் பழங்களைப் பறிக்க முடியும் என்றால் மாணவர்களுக்கு அதைவிட வேறு மகிழ்ச்சி என்ன இருக்கிறது? பழங்களின் மேல் தோலை உரித்து வெள்ளை நிற உட்பகுதியில் இருக்கும் இனிப்பான சதைப்பற்றுள்ள பாகத்தை சுவைத்து தின்ற பின் விதைகளைத் துப்பி விடலாம்.

1900களில் பழத்தின் இத்தகைய பண்புகளே அங்கு அதை வேகமாக புகழ் பெறச் செய்தது. அப்போது தென்னமெரிக்காவில் இருந்து இப்பழம் ஹவாய்க்கு வந்தது. அனைவரின் நாவையும் மனதையும் கவர்ந்தது. அழகான நிறம். மரத்தின் அடியில் ஏராளமான பழங்கள். இதுதான் ஜபோட்டிகாபா (Jaboticaba) என்ற மர திராட்சை. சுலபமாக வாயில் நுழையாத ஒரு பெயர். போர்ச்சுகல் போன்ற சில நாடுகளில் இது ஜபூட்டிகாவா (Jabuticaba), ஜபுட்டி (Jabuti) என்றும் அழைக்கப்படுகிறது.

இதென்ன பெயர் என்று பலரும் நினைக்கலாம். இப்பெயருக்கு பின்னால் சுவையான ஒரு கதை உள்ளது. ஆமைகள்தான் இப்பழத்திற்கு பெயர் வைத்தது! பிரேசிலில் காலனித்துவ ஆட்சி தொடங்கும் முன்பு டுபி (Tupi) என்ற பிரதேசவாசிகளின் பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்தனர். இவர்களின் பேச்சு மொழியும் இதுவே. இன்றும் இவர்கள் இந்த மொழியையே பேசுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள், கப்பல் ஓட்டுபவர்கள், நதிகளைச் சார்ந்து வாழ்பவர்கள்.

ஆமைகளையும் அவற்றின் முட்டைகளையும் சேகரிப்பது இவர்களின் முக்கியத் தொழிலாக இருந்தது. அமேசான் மழைக்காடுகளில் தோன்றிய இவர்கள் மெதுவாக தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்து அட்லாண்டிக் கரையில் நிரந்தரமாகக் குடியேறினர். டுபி மொழியில் உள்ள ஒரு சொல்லே ஜபோட்டி. இதன் பொருள் ஆமைகள் அதிகம் காணப்படும் இடம் (The place where tortoises are found). டுபி மொழியில் இதன் பொருள் ஜபோட்டிகாபா.

பழத்திற்குள் இருக்கும் வெண்ணிற சதைப்பற்றுள்ள பகுதியை ஆமைகளின் உடலில் உள்ள கொழுப்பு போல (Like Turtle fat) என்பதைக் குறிக்கிறது. இவ்வாறு ஆமைகளுடன் தொடர்புபடுத்தி இப்பழம் அழைக்கப்படுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. பெரும் எண்ணிக்கையில் பழங்கள் உதிர்ந்து விழும் மரங்களுக்கு அடியில்தான் ஆமைகள் ஒன்று கூடுகின்றன. அவை கூட்டமாக காணப்படும் இடங்களில் இந்த பழ மரங்கள் இருக்கும்.

தாவரத்தின் சிறப்புகள்

இது ஆமைகளுக்கு மிகப் பிடித்தமான பழம். தென்னமெரிக்காவில் சிவப்பு நிறப் பாதங்களுடன் உள்ள ஆமைகள் (red footed tortoises) வாழ்கின்றன. இவை அளவில் சிறியவை. இவற்றை மக்கள் செல்லப் பிராணிகளாக வளர்க்கின்றனர். இவற்றின் முக்கிய உணவு புற்கள், பூக்கள், பழங்கள்.

ஜபோட்டிகாபா மரத்திற்கு அருகில் ஒன்றுகூடவே இவை விரும்புகின்றன. பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட இது வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில் வளர விரும்பும் ஒரு பசுமை மாறா தாவரம். இதன் பழங்கள் பிரேசிலில் புகழ் பெற்றவை. மர திராட்சை என்ற பொருளில் இதற்கு பிரேசிலியன் க்ரேபெட் (Brazilian grapet) மரம் என்றும் பெயர் உண்டு. பழங்களின் நிறம் பர்ப்பிள்.

சாதாரண திராட்சைப் பழங்களை விட இதற்கு அதிக எடையும், அதிக அடர்த்தியும் உள்ளது. பழுக்காத பழங்கள் லேசான பச்சை நிறமுடையவை. இதன் காய்கள் பழுக்கும்போது அடர் பர்ப்பிள் நிறமாக மாறுகின்றன. சதைப்பகுதி ரோஸ் கலந்த பிங் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. ஒவ்வொரு பழத்திலும் பழுப்பு நிறத்தில் ஒன்று முதல் ஐந்து விதைகள் உள்ளன. பூக்கள், காய்கள் கிளைகளில் இல்லாமல் மரத்தின் தாய்த் தண்டிலேயே காணப்படுகிறது.

தண்டின் நுனி முதல் அடி வரை பூக்களும் காய்களும் தனித்து அல்லது கூட்டமாகக் காணப்படுகின்றன. பூக்களில் தேனீக்கள் அதிகமாக வாழ்கின்றன. இதன் அறிவியல் பெயர் ப்லினியா காலிப்ளோரா (Plinia Cauliflora)). பழக்குழம்பு, பழத்தின் சாற்றைப் புளிக்க வைத்து காடி, மதுபானம் தயாரிக்கப்படுகிறது. விளைச்சல் முடிந்து மூன்று நாட்களுக்குள் பழங்கள் புளிக்க ஆரம்பிக்கும். அதனால் அதற்குள் பழங்களை பறிக்க வேண்டும்.

பிரேசில் ஆதிவாசிகள் பழத்தை புளிக்க வைத்து மது பானம் தயாரிக்கப் பயன்படுத்தினர். இது பாரம்பரிய மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது. தொண்டை வீக்கம், ஆஸ்த்மா, வயிறு தொடர்பான நோய்களுக்கு இது மருந்து. பிரேசிலின் வட கிழக்கு பகுதியில் உள்ள மினாயிஸ் ஜெராயிஸ்ஸில் இதை தெருவோர வியாபாரிகள் பெருமளவில் விற்றதால் பழத்தின் பர்ப்பிள் கறை தெருக்கள், நடைபாதைகளில் காணப்படும்.

பல இனங்கள் பல்வேறு குணங்கள்

சில நகரங்களில் இந்த பழத்திற்காக ஆண்டுதோறும் ஒரு திருவிழா நடைபெறுகிறது. இதன் வளர்ச்சி மிக மெதுவானது. வளரும் இடத்திற்கேற்ப இதன் உயரத்தில் வேறுபாடுகள் ஏற்படுவதுண்டு. பிரேசிலில் இது 45 அடி உயரம் வரை வளர்கிறது. ஆனால் கலிபோர்னியாவில் இதன் உயரம் 15 அடி மட்டுமே. இப்போது சான் ப்ரான்சிஸ்கோவிலும் இம்மரம் வளர்கிறது. இதன் வளர்ச்சி மிக மெதுவாக நடைபெறுவதால் இதை போன்சாய் மரமாகவும் வளர்க்கலாம்.

சாதாரணமாக இது காய்க்க எட்டு ஆண்டுகள் ஆகும். ஆனால் ஒட்டு கன்றுகள் காய்க்க ஐந்தாண்டுகள் போதும். விதை போட்டு வளர்த்தால் ஐந்து முதல் பத்தாண்டுகளில் பலன் கிடைக்கும். பல இனங்களில் இத்தாவரம் காணப்படுகிறது.

மரத்தின் தண்டில் புற்று போல பழங்கள் வளர்ந்து பழுப்பதால் பிரேசில் மக்களுக்கு இது மிகப் பிடித்தமானது. பிரேசிலின் தென் கிழக்கு பகுதிகளில் ஒரு காலத்தில் இது செழுமையாக வளர்ந்திருந்தது. இப்பழங்களை பிரேசில்காரர்கள் தங்கள் நாட்டுக்கே சொந்தமானது என்று இன்றும் கருதுகின்றனர். அட்லாண்டிக் வனப்பகுதிகளின் பழம் என்றும் இது அறியப்படுகிறது.

பயன்களும் மருத்துவ குணங்களும்

பழத்தை அப்படியே சாப்பிடுவதுடன் பழக்குழம்பு, பழச்சாறு போன்றவை இதில் இருந்து பெருமளவில் தயாரிக்கப்படுவதால் இது பிரேசிலியன் மர திராட்சை என்று அழைக்கப்படுகிறது. அமேசான் மழைக்காடுகளில் ஒளிந்திருக்கும் அற்புதம் (Hidden wonder of the Amazon rainforest) என்ற பெயரும் இதற்கு உண்டு. பாரம்பரிய நாடோடிக் கதைகளில் கதாபாத்திரமான ஜபோட்டிகாபா அந்நாட்டின் ஒரு முக்கிய கலாச்சார சின்னமாக விளங்குகிறது.

சர்பத், பழக்குழம்பு, சட்னி, புட்டிங் போன்றவை இந்த பழத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் பழத்தில் ஆற்றல் 45.07 கலோரி, புரதம் 0.11 கிராம், கொழுப்பு 0.01 கிராம், கார்போஹைடிரேட் 12.58 கிராம், நார்ச்சத்து 0.08 கிராம், நிக்கல் 2.8 மில்லி கிராம், கோபால்ட் 30 மைக்ரோ கிராம், செலேனியம் 1.9 மில்லி கிராம், வைட்டமின் பி1. 0.04 மில்லி கிராம், பி2 0.09 மில்லி கிராம், நியாசின் 1.3 மில்லி கிராம், கால்சியம் 13.2 மில்லி கிராம் என்ற அளவில் உள்ளன.

உலர்ந்த பழத்தின் எடையில் 33.33 முதல் 52.79% வரை உள்ள பகுதியை உணவாக உண்ணலாம். பழத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட்டுகள், தாவர வேதிப்பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தவை. மனிதனின் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய, சுவாசக் குழாயை சுத்திகரிக்க, ஆஸ்த்மாவை குறைக்க ஜபோட்டிகாபா உதவுகிறது. இதில் ஆந்தோ சயனின்கள் உள்ளதால் மஞ்சள் காமாலை, முடக்குவாதம், வயிறு தொடர்பான கோளாறுகளுக்கு இது சிறந்த மருந்து.

சிறந்த தோல் பாதுகாப்பைக் கொடுக்கும் இப்பழம் கறுப்பு திட்டுகள், சுருக்கங்கள் போன்றவற்றை குறைக்கப் பயன்படுகிறது. முதுமையின் அடையாளமாகத் தோன்றும் இத்தகைய அறிகுறிகளை இப்பழம் தாமதப்படுத்துகிறது. முடி வளர்ச்சி, முடி உதிர்தலை தடுக்க இது உதவுகிறது. இதில் இருந்து முடி தொடர்பான பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதில் அடங்கியிருக்கும் பினாலிக் கூட்டுப்பொருட்கள், ஆந்தோ சயனின்கள் போன்றவை புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. ப்ரீ ரேடிகல்களின் செயல்களை தடுத்து செல்கள் வளர உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கும் இந்த பழம் உதவுகிறது. இதில் உள்ள தாவர வேதிப் பொருட்கள் லிப்பிடு அளவை ஒழுங்குபடுத்துகிறது. ட்ரை க்ளீசரைடுகள் உள்ளன. குறைந்த அடர்த்தி உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க இப்பழம் உதவுகிறது.

பழத்தில் உயர்ந்த அளவு டானின் உள்ளது. உணவுக் குழாயின் செயல்பாட்டுக்கு உதவும் நுண்ணுயிரிகளை அதிகரிக்க இதில் உள்ள தாதுக்கள் உதவுகின்றன. இரைப்பையின் அசைவுகளை சமநிலைப்படுத்த ஜபோட்டிகாபா பயன்படுகிறது. இதில் அடங்கியுள்ள கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் தாதுக்களுக்கு எலும்பு, பற்களைப் பாதுகாக்கும் திறன் உள்ளது. எலும்புகளில் அடங்கியுள்ள தாதுக்களை வலிமைப்படுத்தி அவற்றை விரைவில் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

சர்க்கரை நோய், உடற்பருமனைக் குறைக்க உதவுகிறது. ஆமைகள் பெயர் வைத்த இந்த அற்புதப் பழமும் மரமும் இயற்கையின் படைப்பில் மனிதனுக்கு கிடைத்த ஒரு வரம்!

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/agriculture/features/introducing-the-jaboticaba-fruit-and-benefits-1.10140290

&

https://en.wikipedia.org/wiki/Jabuticaba#:~:text=Jaboticaba%20trees%20are%20tropical%20to,growing%20in%20pots%20or%20transplanting

- சிதம்பரம் இரவிச்சந்திரன்