கீற்றில் தேட...

காட்டில் இருந்து உணவை சேகரித்தும் வேட்டையாடியும் வாழ்ந்து வந்த மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கியது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துதான் என்று கருதப்படுகிறது. மக்கள்தொகைப் பெருக்கமும் இயற்கையாகக் கிடைத்த உணவுகள் கிடைக்காமல் போனதும் மனிதனுக்கு உணவை உண்டாக்க புதிய வழிகளைத் தேட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது. இது விவசாயத்திற்கு வழிவகுத்தது. மனிதன் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் உலகின் பல பகுதிகளில் வேளாண்மை செய்யத் தொடங்கினான் என்று கருதப்படுகிறது.tea estate 438ஒரு இடத்தில் கோதுமை என்றால், மற்றொரு இடத்தில் நெல், வேறொரு இடத்தில் கிழங்குகள் என்று இவ்வாறு பலதரப்பட்ட உணவுமுறைகளைப் பின்பற்றும் நாகரீகங்கள் உருவாயின. ஒவ்வொரு சமூகமும் பின்பற்றும் விவசாய முறைகள், உணவு முறைகள் அவர்களின் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக மாறின. காலப்போக்கில் பல கலாச்சாரங்கள், பயிர்கள், அதில் உண்டான முன்னேற்றங்களை ஒருவருக்கொருவர் பகிரத் தொடங்கியதுடன் இதில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்பட்டன.

வரலாற்றில் நடந்துள்ள பல குடியேற்றங்கள், இடம்பெயர்தல்கள் இத்தகைய பரிமாற்றங்களை அதிகரிக்கச் செய்தது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492ல் அமெரிக்காவைச் சென்றடைந்தார். இது வேளாண்துறையில் மைல்கல்லாக மாறியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் புதிய உலகம் என்று அழைக்கப்பட்டன. கொலம்பஸிற்குப் பிறகு இந்த உலகிற்கும் பழைய உலகிற்கும் இடையில் 1800 பயிர்கள் பரிமாறப்பட்டன.

பிரேசிலில் இருந்து

பயிர்கள், விலங்குகளின் இடம்பெயர்வு கண்டங்கள் விட்டுப் பயணித்தன. இது உலக மக்களின் உணவுமுறைகள், வறுமை, பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக்கிழங்கு 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்ச்சுகீஸ் வியாபாரிகள் வழியாக இந்தியாவிற்கு வந்தது. ஆனால் இது ஓர் உணவுப்பயிர் என்ற முறையில் பிரபலமடைய பல காலம் பிடித்தது. கேரளாவில் ஸ்ரீவிசாகம் திருநாள் என்ற அரசர் தன் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் மக்களை இக்கிழங்கை அதிகம் பயிர் செய்ய ஊக்குவித்தார். குறைந்த காலத்தில் இது ஒரு விலை குறைந்த உணவுப்பயிர் என்ற நிலையில் சாமான்ய மக்களிடையே புகழ் பெறத் தொடங்கியது.

தானியங்களின் பற்றாக்குறை மரவள்ளிக் கிழங்கு ஒரு உணவுப் பயிர் என்ற நிலையில் விரைவில் புகழ் பெறக் காரணமானது. நெல்லைப் பயிர் செய்ய வயல்கள் தேவை. மழையைச் சார்ந்தே அது வளரும். 1970களுக்குப் பிறகு உணவு தானியங்கள் வட இந்தியாவில் இருந்து வரத் தொடங்கியதால் இது ஒரு உணவு என்ற நிலைக்குரிய பயன்பாடு குறைந்தது. என்றாலும் ஏக்கர் அடிப்படையில் அதிக கார்போஹைடிரேட்டைத் தரும் பயிராக இது உள்ளது.

இதன் தொழிற்துறை பயன்கள் இன்றும் அதிகம். ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பயணம் செய்த இது இப்போதும் அங்கு முக்கிய உணவாக உள்ளது. இன்று அங்குதான் இது அதிகம் பயிரிடப்படுகிறது. வெட்டுக்கிளி தொல்லையை வெற்றி கொண்ட பயிர் என்ற நிலையிலும் இது புகழ்பெற்றது. பல நாடுகள் இதில் இருந்து பெருமளவில் உயிரி எரிபொருளைத் தயாரிக்கின்றன.

உருளைக்கிழங்கின் கதை

பெருவைத் தாயகமாகக் கொண்ட உருளைக் கிழங்கின் கதை சுவாரசியமானது. ஐரோப்பியருடைய பட்டினியை மாற்ற இது உதவியது. மக்காச்சோளம் ஆப்பிரிக்காவைக் காப்பாற்றியது. உருளைக்கிழங்கு விவசாயம் ஒரு நாட்டை பெரும் துயரத்தில் ஆழ்த்திய கதையும் உண்டு. அயர்லாந்ந்தில் ஏற்பட்ட ஐரிஷ் உருளைக்கிழங்கு பஞ்சம் (Irish Potato femine) என்பதே அது. இதில் அந்நாட்டவர் லட்சக்கணக்கில் உயிரிழந்தனர். இதைத் தாக்கிய ஒரு நோயே இதற்குக் காரணம்.

மரவள்ளிக் கிழங்கும் மக்காச்சோளமும் ஆப்பிரிக்காவின் வரமாக மாறியபோது கரும்புப் பயிரின் விவசாயம் அடிமை வியாபாரம் மற்றும் சுரண்டலின் கதையைச் சொல்கிறது. ஐரோப்பியர்கள் காலனி நாடுகளில் விரிவாக்க நினைத்த பல தோட்டப் பயிர்களின் கதையும் இதுபோலவே.

ஆப்ப்ரிக்காவில் இருந்து கறுப்பினத்தவர் மற்றும் பல ஏழை காலனி நாடுகளில் இருந்து மற்ற இனத்தவரை தோட்ட வேலைக்காக கொண்டுபோய் அடிமைகளாக்கினர், வேலை வாங்கினர். இவ்வாறே மேற்கிந்தியத் தீவுகளில் இந்தியர்கள் போய்ச் சேர்ந்தனர். அவர்களின் வாரிசுகளே இன்று அந்நாட்டின் குடிமக்கள்.

தென்னிந்தியாவிற்கு கோதுமை வந்த கதை பயிர் பரிமாற்றத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு. 60களில் இந்திய சீனப் போரும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை, உணவுப் பங்கிடுதல், ரேஷன் நடைமுறையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை, அமெரிக்கா மாவு, மைதா, பசுமைப் புரட்சியால் வட இந்தியாவில் இருந்து வந்த கோதுமை ஆகியவை தென்னிந்தியாவில் பரவத் தொடங்கின. ராணுவத்தினர் கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்திகளை உண்டு பழகியிருந்தனர்.

இப்போது கோதுமை பல வீடுகளிலும் உணவில் ஒரு வேளை பயன்படும் ஒன்றாக மாறியுள்ளது. அமெரிக்காவில் இருந்து வந்ததே பரோட்டா. எதிர்காலத்தில் அரிசியின் பயன்பாடு குறைந்து கோதுமையின் பயன்பாடு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கோதுமையுடன் ஒப்பிடும்போது நெல்லுக்கு நீர் அதிகம் தேவை. இதனால் வட இந்தியா காலப்போக்கில் நெல்லைப் பயிர் செய்வதைக் கைவிடும் என்று ஆய்வுகள் கூறுகிண்றன.

தென்னமெரிக்காவில் இருந்து இரப்பர் வந்தது. இதில் ஏற்பட்ட சவுத் அமெரிக்கன் லீஃப் ப்ளைட் என்ற நோய் இதைப் பிறந்த மண்ணில் இருந்து விரட்டியது. இன்று தாய்லாந்து இதை அதிகம் உற்பத்தி செய்கிறது. தென்னமெரிக்க நாடுகள் இன்று இதை இறக்குமதி செய்யும் நாடுகளாக உள்ளன.

அஸ்ஸாம் தேயிலையின் நாடு என்று கருதப்பட்டாலும் இந்தியாவில் இது 18ம் நூற்றாண்டிற்குப் பிறகே வணிகரீதியில் பயிர் செய்யப்படலாயிற்று. காபியின் வரவிற்குப் பின்னால் வேறுபட்ட ஒரு கதை உண்டு. அரேபியாவிற்கு தீர்த்தயாத்திரை சென்ற பாபா அபுதான் என்ற துறவி தன் ஊன்றுகோலில் மறைத்து வைத்து இதை மைசூருக்குக் கொண்டுவந்தார்!

மனித ஆரோக்கியத்திற்கு மிக மோசமான தீங்கை ஏற்படுத்திய புகையிலை தென்னமெரிக்காவில் இருந்து வந்தது. அந்நிய நாடுகளில் இருந்து சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மிளகாய், வாலன் புளி, அன்னாசி, கோக்கோ, வானிலா, ஜாதி, கிராம்பு, பப்பாளி, ஃபாஷன் ப்ரூட், மங்குஸ்தான், ரங்கோட்டான், நிலக்கடலை, தக்காளி, சீமைச்சேம்பு, காய்ச்சல் கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போல பல குளிர்காலக் காய்கறிகள், நூற்றுக்கணக்கான அலங்காரத் தாவரங்கள், கலப்பின நேப்பியர், கினி புல் போன்ற ஏராளமான பயிர்கள் இந்தியாவிற்கு வந்தன.

மிளகிற்கு ஒரு மாற்றாக போர்ச்சுக்கல்லில் இருந்து மிளகாய் வந்தது. இப்போது ஆந்திராவில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. காபி, தேயிலை, புகையிலை, கோக்கோ, கஞ்சா போன்றவை நன்மைக்குப் பதில் அதிக தீமையையே செய்தன. 19ம் நூற்றாண்டிற்கு முன்பு நம் மக்கள் காபி, தேயிலை போன்றவற்றை அருந்தவில்லை. புகையிலையைப் பயன்படுத்தவில்லை.

மூன்றாம் உலக நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கவே இப்பயிர்களை தோட்டப்பயிராக விவசாயம் செய்யத் தொடங்கினர். இது அந்த நாடுகளின் உணவுப் பாதுகாப்பை ஆபத்திற்குள்ளாக்கியது. பிரிட்டிஷார் பணப்பயிர் விவசாயத்தை ஊக்குவித்ததே இந்தியாவில் பட்டினி அகலாமல் இருக்கக் காரணம் என்று கருதப்படுகிறது.

இராட்சசக் கொன்றை, வெங்காயத் தாமரை, ஆப்பிரிக்க பாசி, பார்த்தீனியம், மைக்கேனியா, லண்ட்ரானா, சிங்கப்ப்பூர் டெய்சி போன்றவை பிரச்சனைக்குரிய களைகளாக இன்றும் உள்ளன. இவற்றுடன் சேர்ந்து பல பூச்சிகள், நோய்கள் விருந்தாளிகளாக நுழைந்தன. ஆப்பிரிக்க நத்தை, ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஒரு மீனினம் இன்றும் பிரச்சனையாக உள்ளன.

முன்பு தென்னிந்தியாவில் இருந்து குறிப்பாக கேரளாவில் இருந்து ஏலம், மிளகு ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று இது மாறி விட்டது. இன்று மிளகு ஏற்றுமதியில் வியட்நாம், ஸ்ரீலங்காவே முதலிடத்தில் உள்ளன. ஏலம் விற்பனையில் குவாட்டமாலா, போர்ட்டரிக்கோ நாடுகள் உள்ளன.

மக்கள்தொகை வெடிப்பு

மக்கட்தொகைப் பெருக்கம் உணவு உற்பத்தியைப்ப் பாதிக்கும், இதனால் உலகில் பெரும் பஞ்சம் ஏற்படும் என்று 1798ல் தாமஸ் மால்கூஸ் என்ற அறிஞர் கூறினார். 10,000 ஆண்டுகளுக்கு முன்பு உலக மக்கள் தொகை வெறும் 50,000 மட்டுமே. கி பி 1804ல் இது 100 கோடி. 1960ல் 600 கோடி. தொடர்ந்து மக்கதொகை வெடிப்பு ஏற்பட்டது.

39 ஆண்டுகளுக்குள் 1999ல் 300 கோடியில் இருந்து 600 கோடியாக அதிகரித்தது. இக்காலத்தில் உணவு உற்பத்தி மும்மடங்காக அதிகரித்தது. இந்தியாவில் இக்காலகட்டத்தில் மக்கள் தொகைப்பெருக்கம் இரண்டரை மடங்கு அதிகமானது. உணவு உற்பத்தியில் நான்கு மடங்கு உயர்வு ஏற்பட்டது.

அயல்நாட்டு கால்நடை ரகங்கள், உற்பத்தித்திறன் அதிகமுள்ள புல் ரகங்கள், மேம்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம் போன்றவை வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டது. 2050ல் உலக மக்கட்தொகை இன்றுள்ள 800 கோடியில் இருந்து 1000 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு மனிதர்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்றால் உலக உணவு உற்பத்தி 60% அதிகரிக்க வேண்டும். குறைந்த அளவு நிலத்தில் இருந்து அதிக விளைச்சலை எடுக்க உதவும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் மட்டுமே இது சாத்தியமாகும். இதற்கு நடுவில் காலநிலை மாற்றம், மாசுபடுதல், நீர்ப்பற்றாக்குறை, புதிய நோய்கள் போன்றவை அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. உலகில் இன்று நிலவும் வறுமையையும் பட்டினியையும் முற்றிலும் அகற்ற நடைபெறும் முயற்சிகளில் விவசாயத் துறையில் ஏற்படப் போகும் புரட்சிகரமான மாற்றங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்