கென்யா. கண்ணாடி பாட்டில்களால் கட்டப்பட்ட ஒரு சமுதாய மையத்தில் ஜூலியானா லஷிரோ (Juliana Loshiro) தன் மாணவர்கள், கிராம முதியோர் குழுவின் முன் நிற்பது வழக்கமான ஒரு காட்சி. அரை வட்ட வடிவில் அமர்ந்திருந்த அவர்கள் தங்கள் ஆசிரியர் லஷீரோ யார்க்கண்ட் (Yaakunte) மொழியில் கற்பிக்கும் எளிய சொற்கள், வாழ்த்துகளை கேட்டு திரும்பிச் சொல்கின்றனர், கற்கின்றனர். இண்ட ஆதிவாசிகளின் தாய்மொழியான யார்க்கண்ட் யாக்கு (Yaaku) என்றும் அழைக்கப்படுகிறது.Juliana Loshiroஅழியும் ஆபத்தில்...

வினோதம் என்றாலும் முதியோருக்கு கூட யாக்கு மொழி தெரியாது. ஒரு மாணவணின் தாத்தா பாட்டி மொழியைக் கற்றுத் தருவதற்கு முன்பே இறந்து விட்டனர். அவனுடைய தாய் ஒரு மாசாய் (Maasai) இனப் பெண். அவருக்கு இந்த மொழி தெரியாது. “அதனால் மொழி இழக்கப்பட்டது” என்று அந்த வகுப்பிற்கு தான் வந்ததன் காரணத்தை ஒரு மாணவன் கூறுகிறான். 28 வயதான லஷீரோ வட கென்யாவில் இந்த மொழியை சரளமாகப் பேசும் சிலரில் ஒருவர்.

இப்போது ஒன்பது பேருக்கு மட்டுமே தெரிந்த யாக்கு மொழி அழியும் தீவிர ஆபத்தில் உள்ளது என்று யுனெஸ்கோ உலக மொழிகள் அட்லெஸ் பட்டியலிட்டுள்ளது. 2010ல் யுனெஸ்கோ இந்த மொழியை அழியும் மொழியாக அறிவித்தது. ஆனால் லஷீரோ தன் மொழி, கலாச்சாரத்தை மீட்டெடுத்து அதற்கு ஒரு வருங்காலத்தை உருவாக்கிக் கொடுக்க உறுதி பூண்டுள்ளார். “எங்கள் மொழியை எங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறோம். புதிய தலைமுறைக்கு பாரம்பரிய அறிவை கடத்துகிறோம்” என்கிறார் அவர்.

லஷீரோ கென்யா லேக்கிபிய கவுண்ட்டியில் (Laikipia county) கூரி கூரி (Kuri Kuri) என்ற இடத்தில் நம்பிக்கை (Hope) என்ற பெயருடன் அமைந்துள்ள சமுதாய மையத்தில் குழந்தைகள், முதியோர் உட்பட 300 பேருக்கு வாரம் இரு முறை லாக்கு மொழியைக் கற்றுத் தருகிறார். ஆனால் இந்த பாடங்கள் ஒரு மொழியை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கும் அப்பால் யார்க்கண்ட் கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள அடர்ந்த, மிகப் பெரிய காடுகளில் ஒன்றான மியூக்ககோடோ (Mukogodo) காடு யாக்கு மக்களின் பாரம்பரிய வீடு. ஆரம்பத்தில் வேட்டைக்காரர்களாக இருந்த இந்த மக்கள் 300 சதுர கிலோமீட்டர்/74,000 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த காட்டை வேட்டை, சடங்குகள், தாவரங்கள் மற்றும் தேனை சேகரிக்கப் பயன்படுத்தி வருகின்றனர். “மொழியை இழந்துவிட்டால் நாம் கலாச்சாரத்தை, காட்டை இழந்து விடுவோம்” என்று லஷீரோ கூறுகிறார்.

வீடுகள் இங்கு மர மேற்கூரைகள், பூச்சிகளின் ஓவியங்கள் வரையப்பட்ட சுவர்களுடன் காணப்படுகின்றன. மொழியைப் பாதுகாக்கும் இவர் காட்டின் தாவர, விலங்குகள் பற்றிய அறிவையும் பாதுகாக்கிறார். இதன் மூலம் வருங்கால யாக்கு மக்கள் இவற்றை அழியாமல் பாதுகாக்கும் வலிமையைப் பெறுவர் என்று நம்பும் இவர் ஒரு வயது பையனின் தாயும் ஆவார். ஒவ்வொரு வாரமும் தன் மாணவர்களை காட்டிற்கு அழைத்துச் சென்று சீடர் (cedar) என்றும் அழைக்கப்படும் காட்டு ஆலிவ் (wild olive) போன்ற தாவரங்களை நடுகிறார்.

மரங்களுடன் வளரும் ஒரு சொற்காடு

இது வரை இவர்கள் 10,000 மரக் கன்றுகளை நட்டுள்ளனர். 50,000 விதைப் பந்துகளை விநியோகித்துள்ளனர். மரங்களில் யார்க்கண்ட் மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட சொற்களுடன் உள்ள லேபிள்கள் பொருத்தப்படுகின்றன. லஷீரோ இதை ஒரு சொற்காடு (word forest) என்று அழைக்கிறார். மரங்கள் வளரும்போது அவற்றுடன் சேர்ந்து மொழியும் வளர்கிறது. லஷீரோ யார்க்கண்ட் மொழிப் பாடல்களை கற்றுத் தருகிறார். கென்யாவின் பெரும்பாலான காடுகளை நிர்வகிக்கும் கென்ய வனத்துறையால் (KFS) இக்காடு பராமரிக்கப்படவில்லை.

இது யாக்கு சமூகத்தால் பராமரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் சூழல் பாதுகாப்பு முயற்சிகள் அதிக அளவில் அங்கீகரிக்கப்பட்டுவரும் நிலையில் ஆதிவாசிகளின் பாரம்பரிய அறிவு சூழல் மண்டலங்களை பாதுகாக்கவும் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடவும் உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த காட்டின் கதை ஒரு வெற்றிக் கதை. வன உயிரினங்களின் எண்ணிக்கை, பன்முகத் தன்மை, மரங்களின் பசுமைப் பரப்பு, நீர் வளம் போன்றவை இங்கு மேம்பட்டுள்ளன என்று கென்ய வனத் துறை கூறுகிறது.

சிறு வயதில் பெற்றோரை இழந்து ஏழாவது வயது முதல் தன்னை வளர்த்து ஆளாக்கிய பாட்டி ஸ்டீவன் லெரிமென் (Stephen Leriman) அவர்களிடம் இருந்தே லஷீரோ இந்த மொழியைக் கற்றார். ஒவ்வொரு நாளும் ஸ்டீவன் பத்து சொற்களைக் கற்றுத் தருவார். அடுத்த நாள் அச்சொற்களை திரும்பச் சொல்லவில்லையென்றால் தண்டணை கிடைக்கும். ஒரு நாள் மூன்று சொற்களை மறந்துவிட்டதால் உணவு இல்லாமல் தூங்கியதாக அவர் தன் இளமைக் காலத்தை நினைவு கூர்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் மாற்றங்கள் இந்த மொழியை அழிவின் விளிம்பிற்கே அழைத்துச் சென்றது. யாக்கு மக்கள் மாசாய் என்ற இடையர் இனத்தைச் சேர்ந்த மக்களுடன் அருகருகே வாழ்ந்தனர். கால்நடைகள் இல்லாமல் வேட்டையை மட்டுமே சார்ந்து வாழும் இவர்களை மாசாய் மக்கள் உற்றுநோக்கினர். யாக்கு பெண்கள் அருகாமை மாசாய் ஆண்களை திருமணம் செய்துகொண்டபோது பெண் வீட்டார் கால்நடைகளை சீதனமாகப் பெற்றனர்.

யாக்கு தந்தையர் வழக்கமாக பெறும் தேனடைகளை விட கால்நடைகளை சீதனமாகப் பெறவே அதிகம் விரும்பினர். “மாசாய் சமூகத்துடனான உறவுகள் வலுவாக பிணைக்கப்பட்டன. இதனால் யாக்கு மக்கள் அந்த சமூகத்துடன் ஒன்றிணைந்தனர். மா(Ma) மொழிக்காக யாக்கு மொழி கைவிடப்பட்டது” என்று கென்யாட்டா (Kenyatta) பல்கலைக்கழக மொழியியல் ஆசிரியர் கெனத்துங்கா (Kenneth Ngure) கூறுகிறார். கென்யாவில் 40 ஆதிவாசி இன மக்கள் வாழ்கின்றனர்.

மொழியுடன் சூழல் காக்க ஒரு இணைய தளம், ஒரு செயலி

கென்யாவில் 70 பாரம்பரிய மொழிகள் பேசப்படுகின்றன. இதில் ஏழு மொழிகள் இருபதாம் நூற்றாண்டில் அழிந்தன. இப்புதிய இயக்கம் யார்க்கண்ட் மொழியை அழிவில் இருந்து மீட்கும் என்று முப்பதாண்டுகளாக யார்க்கண்ட் மொழித் தகவல்களை பதிவு செய்யும் ஆசிரியர் மானசே ரக்ஸோல் மாட்டஞ்ஜ் (Manasseh Rux Ole Matunge) கூறுகிறார்.

யார்க்கண்ட் மொழிக்காக ஒரு இணைய தளத்தை உருவாக்குதல், மொழியை சுலபமாகக் கற்க உதவும் வகையில் டிஜிட்டல் வடிவத்தில் ஒரு செயலியை உருவாக்குதல், யார்க்கண்ட் மொழியில் அமைந்த சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் கதைகளுடன் உள்ள ஒலிப்பதிவு சேகரத்தை ஏற்படுத்துதல், தொடக்கப் பள்ளிகளுக்காக ஒரு கல்வித்திட்டத்தை உருவாக்குதல் போன்ற மற்ற முயற்சிகளிலும் லஷீரோ ஈடுபட்டு வருகிறார்.

லஷீரோ 40 குழந்தைகளை தன் மொழித்திட்டத்தில் சேர்ப்பதை இலட்சியமாக கொண்டு செயல்படுகிறார். ஐந்தாண்டு வகுப்புகளுக்குப் பிறகு அவர்கள் யார்க்கண்ட் மொழியை சரளமாக பயன்படுத்தத் தொடங்குவர். இதனால் குழந்தைகள் மொழியுடன் கடைசியில் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்வர். லஷீரோவின் சூழலுடன் இணைந்த மொழி காக்கும் இந்த பெரு முயற்சிகள் வருங்காலத்தில் வெற்றி பெறும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/global-development/2024/oct/01/kenya-endangered-languages-extinction-yaaku-yaakunte-maasai-forest?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.