firabendயார் அந்த ஃபையராபென்ட்? அறிவியலின் நான்கு எதிரிகளுள் முக்கியமான எதிரிதான் இந்த பால் ஃபையரபென்ட், ஒரு ஜெர்மானிய ஆஸ்திரியர். இவர் தன் வாழ்நாளில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட ஐந்திற்கும் அதிகமான ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது முதன்மைப் பாடப்பிரிவு, அறிவியல் தத்துவவியல் (எது அறிவியல், அறிவியல் ஆராய்ச்சிகள் எப்படி செய்யப்படவேண்டும் என்பனவற்றைப் பற்றிப் படிப்பது; Philosophy of Science). நிரூபிக்கப்படக்கூடியதுதான் (Verifiability) அறிவியல் என்றிருந்ததை, பொய்யாக்கப்படுவதற்கு வாய்ப்பில்லாத (Falsifiability) எதுவுமே அறிவியல் அல்ல என்ற ஒரு புரட்சிகரமான கருத்தை (கார்ல் பாப்பர், ஃபையரபென்டின் குரு) உடைத்து அறிவியலுக்கென்று ஒரு அளவுகோல் இருந்திருந்தால் கோப்பர்நிகஸ் பூமி மையமல்ல என்ற உண்மையை அறிவியல் மூலம் கொண்டுவந்திருக்கமுடியாது, ஆகையால் அறிவியலுக்கு வரையறை கொடுப்பதை எதிர்த்தார். இதை அவர் “முறைகளுக்கு எதிராக (Against Method)” என்ற ஒரு சர்ச்சைகளை கிளப்பிய புத்தகத்தில் தொகுத்திருக்கிறார். அந்தப் புத்தகத்திற்கு எதிரான கருத்துக்களுக்கு தன் பதிலை, “கட்டற்ற சமூகத்தில் அறிவியல் (Science in a Free Society)” என்ற தன் புத்தகத்தில் கூறுகிறார். அதன் இரண்டாவது பகுதியின் 4-வது மற்றும் 7-வது சிறுபகுதியினை அப்படியே மொழிபெயர்த்துக் கொடுத்தால் நாம் தற்காலத்தில் தமிழகத்தில் முகங்கொடுக்கும் சில கேள்விகளுக்குப் பதிலாக அமையும் என்று நம்பி, கொடுக்கிறேன். குறிப்பாக, கூடங்குளம் அணுஉலை, தேனி நியூட்ரினோ, நெடுவாசல் ஹைட்ரோகார்பன், என்று எதுவாக இருந்தாலும் கேட்கும் ஒரே கேள்வி, “போராடுபவர்களெல்லாம் அறிவியல் தெரிந்தவர்கள்தானா?” என்பதே. இந்தக் கேள்விதான் இச்சிறு கட்டுரையின் மையம்.

“உண்மை“யையும் வல்லுநர் முடிவுகளை மிஞ்சும் சனநாயக தீர்ப்பு (4):

இந்தக் கேள்வி இரண்டு அம்சங்களை உள்ளடக்கியது. ஒன்று, விடுதலைப் பெற்ற ஒரு சமூகத்தின் ஒரு குடிமகளின் உரிமையும், மற்றொன்று அதனால் வரும் (பாதகமானவையாவும் இருக்கலாம்) விளைவுகளுமே அவை.

மக்களாட்சியில் ஒரு தனிமனிதன் எழுத, வாசிக்க, அவளுக்குப் பிடித்த ஒரு கருத்தை முன்னெடுத்துச் செல்ல முழு உரிமை உண்டு. அவளுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் அவள் விருப்பப்பட்ட மருத்துவ முறைகளை, அதாவது ஆங்கில மருத்துவமுறையோ, சித்தமருத்துவ முறையோ, அல்லது நம்பிக்கைசார் மருத்துவமுறையையோ தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எந்தவொரு கருத்தையும் ஏற்றுக்கொள்ள அவளுக்கு எந்த அளவு உரிமை உண்டோ, அதே போன்று அதை பிரச்சாரம் தனியாகவோ குழுவாகவோ (பொருளாதார வலிமையைப் பொருத்து), செய்யவும் உரிமை உண்டு. இந்த உரிமை அவளுக்கு இரண்டு காரணங்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன. முதலாவது. ஒவ்வொருவரும் தான் உண்மையென்று (அல்லது சரியென்று படுவதை) நம்புவதை தொடா்ந்து முன்னெடுக்கவும், இரண்டாவது பல மாற்றுத் தீர்வுகளை எடுத்து வைக்கும் போதுதான் உண்மையான தீர்வை நோக்கி செல்லமுடியும் என்ற எண்ணத்தினடிப்படையிலும்தான். இதற்கான காரணங்களை தன்னுடைய “முறைகேடான“ கட்டுரையான “On Liberty”-யில் ஜான் ஸ்டூவர்ட் மில் எடுத்துவைத்திருக்கிறார். அவற்றை மேலும் முன்னேற்றக்கூடாத அளவுக்கு தெளிவாக எடுத்துவைத்திருக்கிறார்.

இதை மனதில் வைத்து, அவள் தனிப்பட்ட விதத்திலோ அல்லது வரிகட்டியோ ஒரு நிறுவனத்தோடு இணைந்து செயல்படும்போது அவளின் சொல் அதன் முடிவுகளில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். அதாவது, நாட்டுடைமையாக்கப்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அவளது வரியினால் ஆதரிக்கப்படும் எந்த நிறுவனமாயிருந்தாலும், அது அறிவியல் உயர் கல்வி நிறுவனமாயிருக்கட்டும் அல்லது ஆரம்பக் கல்வி நிறுவனமாயிருக்கட்டும், அவளது வார்த்தை அங்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கலிஃபோர்னாயாவின் குடிமக்கள் தங்கள் பள்ளிகளில் ஜாதகம், பாட்டிவைத்தியம் என்பவைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் அவைகளைத்தான் கற்றுக் கொடுக்கவேண்டும். வல்லுநர்களின் கருத்துக்களும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்தான் ஆனால் அவைகள்தான் இறுதியாக இருக்கக்கூடாது. இறுதி வார்த்தை என்பது சாமானியர்களின் கருத்துக்களையும் கருத்தில் எடுத்துக்கொள்ளும் அப்படிப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளின் முடிவுதான்!

ஆனால் சாமானியர்களுக்கு இந்த முடிவுகளையெடுக்கும் அளவுக்கு அறிவு இருக்கிறதா? அவைகள் பெருந்தவறுகளுக்கு வழிவகுத்துவிடாதா? ஆகையால், இப்படிப்பட்ட முடிவுகளை வல்லநர்களின் கையில் ஒப்படைத்து விடுவதுதானே உகந்ததாயிருக்கும்?

நிச்சயமாக, மக்களாட்சியில், இல்லை!

சனநாயகம் என்பது முதிர்ச்சியடைந்த மக்களின் சங்கமமேயொழிய அனைத்துமறிந்த ஒருவரால் வழிநடத்தப்படும் ஆட்டுமந்தைகள் அல்ல. முதிர்ச்சி என்பது தெருவில் கிடக்காது எடுத்துக்கொள்வதற்கு, அது கற்றுக்கொள்ளப்படும் ஒன்று. இதை இக்காலத்தில் இருக்கிற பள்ளிகளில் கற்றுக்கொள்ளப்பட முடியாது. ஏற்கெனவே எடுத்த புளித்து, உலுத்துக் காய்ந்து போன முடிவுகளோடு எதிரெதிர் மாணவர்களை நிறுத்திக் கற்றுக்கொடுப்பதுதான் இந்தப் பள்ளிகள் செய்யும் செயல். இனிமேல் எடுக்கப்போகும் முடிவுகளை, அதனை எடுக்கும் செயல்பாடுகளில் மாணவர்களைப் பங்கேற்கவைத்துக் கற்றுக்கொடுப்பதுதான் முதிர்ச்சியை உண்டாக்கும். முதிர்ச்சி என்பது சிறப்பு அறிவை விட சிறந்தது. அறிவியலாளர்களின் நைசான பம்மாத்துக்களோடு முரண்பட்டாலும் இந்த முதிர்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, சிறப்பு அறிவை எவ்வாறு பயன்படுத்துவது, இவைகளின் நம்பகத்தன்மை என்ன, அவைகளால் ஒட்டுமொத்த மனுக்குலத்திற்குமான நன்மை என்ன என்ற முடிவுகளை எடுத்துத்தான் ஆகவேண்டும். அறிவியலாளர்கள் அறிவியலைத்தாண்டி நன்மை பயக்கக்கூடியது எதுவும் இருக்காது என்று நம்புகிறார்கள். ஆனால் அதற்காக மக்களாட்சிக் குடிமக்கள் அறிவியலாளர்களின் நம்பிக்கையில் துயில் கொள்ளமுடியாது. ஒரு காரியம் வெற்றியாக அமைவதைத் தடுத்தாலும், வளர்ச்சியை பாதித்தாலும், அந்த அதிமுக்கியமான முடிவுகளில் சாமானியர்களின் பங்கேற்பு நிச்சயம் இருக்கவேண்டும்.

எடுத்துக்காட்டாக, போர் என்று வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்று பார்ப்போம். ஒரு ஏதேச்சதிகார நாடு முழு சுதந்திரமாக இதில் முடிவெடுக்கவோ செயல்படவோ முடியும். மனிதாபிமான அபிலாஷைகள் அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாது. பொருட்கள், புத்திசாலித்தனம், மனித ஆற்றல் – என்று இவைகள்தான் அந்த நாட்டின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். ஆனால் ஒரு சனநாயகத்தைக் கடைப்பிடிக்கும் நாடு அதன் வெற்றிவாய்ப்பைக் குறைத்தாலும் மனிதாபிமான அபிலாஷைகளைக் கணக்கிலெடுத்தே ஆகவேண்டும். அவ்வாறு வெகுசில சனநாயக அமைப்புகளே இருந்திருக்கின்றன, ஆனால் அவைகள்தான் நம் நாகரீகத்தை இந்த அளவுக்கு நகர்த்தியிருக்கின்றன. போர் மட்டுமல்ல, நம் சிந்தனைத் தளத்திற்கும் இது பொருந்தும்.  போரில் வெற்றி பெறுவது, அறிவியலில் முன்னேறுவது, உண்மையை அறிந்து கொள்வது என்று இவைகளையும் தாண்டி உலகத்தில் முக்கியமானவை இருக்கின்றன என்பதை உணரவேண்டும். முக்கிய முடிவெடுத்தல்களை அறிவியலாளர்களிடம் கொடுக்காமல் சாமானியர்களிடம் கொடுத்தால் வெற்றிவாய்ப்போ அல்லது வளர்ச்சியோ குறையும் என்பது உண்மை கிடையாது.

சாமானியர்கள் அறிவியலை மேற்பார்வையிட முடியும், வேண்டும் (7):

….. பள்ளியில் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை கற்றுக் கொடுக்கவேண்டுமா வேண்டாமா என்பதையும் அவர்களே முடிவு செய்யட்டும். அணுஉலைகள் பாதுகாப்பானவையா என்பதை அவர்களே முடிவு செய்யக்கூடிய அளவுக்கு அவர்களிடம் விவரங்கள் ஆவணங்கள் கொடுக்கப்படவேண்டும். அரசுகள் ஊட்டி வளர்க்கும் விஞ்ஞானபூர்வ மருத்துவமுறைகள் மட்டும்தானா அல்லது பாரம்பரிய மரபுசார் மருத்துவமுறைகளும் விருப்பப்படுவோருக்கு வழங்கலாமா என்பதையும் அவர்களே முடிவுசெய்யட்டும். இவைகள் எல்லாவற்றிலும் வல்லுநர்களின் வார்த்தை அல்ல, பிரச்சினையினருகே இருக்கும் சாமானியர்களின் வார்த்தையே இறுதியாக இருக்கவேண்டும்.

வீட்டுப்பாடம் மாதிரி கொஞ்சம் கவனத்தோடு அவர்கள் அறிக்கைகளை வாசித்தாலே வல்லுநர்களின் தவறுகளைப் புரிந்துகொள்ள சாமானியர்களால் முடியும். வல்லுநர்கள் குறுக்கு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும், அவர்கள் அறிக்கைகள் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே இருக்கவேண்டும் என்றுதான் சட்டம் கூறுகிறது. சட்டத்தின் இதன் நோக்கமே, அவர்கள் அவர்களது துறைகளில் அது சரியாக இருந்தாலுமே அவர்களும் தங்கள் கண்டுபிடிப்புகளே சிறந்தது என்றும், அதன் குறைபாடுகளை மூடி மெழுகியும் தவறு செய்யக்கூடிய மனிதர்களாயிருக்கிறார்கள் என்பதே. மேலும், சாமான்யர்களால் வல்லுநர்களின் அறிவை அறிந்து, அதிலுள்ள தவறுகளை சுட்டிக்காட்ட இயலும் என்பதையும் சட்டம் அங்கீகரிக்கிறது.

சட்டத்தின் இந்தப் பார்வை ஒவ்வொரு விசாரணையிலும் தெளிவாக நிருபணமாகிறது. கௌரவ பட்டங்களுக்குள்ளும், பல்கலைக்கழக நாற்காலிகளுக்குள்ளும், அறிவியல் சங்க தலைமைப் பதவிகளுக்குள்ளும் பதுங்கியிருக்கும் அறிவியல் வல்லுநர்கள், திறமையுள்ள ஒரு வழக்குறைஞரின் குறுக்கு விசாரணையில் பயந்து நெளியும்போது அவர்கள் தங்கள் அறிவியலை தங்களுக்கேற்றவாறு வனைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆம், அறிவியல் மனுக்குலத்தின் கூர்மையான இயற்கையான அறிவுக்கு எட்டாததல்ல! இந்த இயல்பான கூரிய அறிவு, அறிவியலைத் தாண்டி சமுதாயத்தைப் பாதிக்கும் மற்ற துறைகளுக்குள்ளும், குறிப்பாக வல்லுநர்களிடம் சிக்கியிருக்கும் துறைகளுக்கும் ஊடுருவ வேண்டும். – என்று அவருடைய வார்த்தையிலேயே முடித்துவிடலாம் என்று கருதி நிறைவு செய்கிறேன். நன்றி!

- பா.மொர்தெகாய்

Pin It