solai sundaraperumalஅஞ்சலி - சோலை சுந்தரபெருமாள் (9.05.53 - 12.01.21)

வண்டல் நில உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களது மொழியையும் பேசியவர்களில் சி.எம்.முத்து, சோலை சுந்தரபெருமாள் ஆகிய இருவர் முதன்மையானவர்கள். முன்னவர் மேலத்தஞ்சை எனில் பின்னவர் கீழத்தஞ்சை.

மக்கள் மொழி என்பது ஒருபடித்தானது அல்ல. ஆதிக்கச் சாதியின் மொழியும் ஒடுக்கப்பட்ட சாதியின் மொழியும் ஒன்றாக இருக்கவியலாது. இவர்கள் இருவரும் பிற்பட்ட சாதிகளில் பிறந்தவர்கள்.

இருப்பினும் பொருளாதார வசதிகளற்ற மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்கள். எனவே இவர்களது மொழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடமிருந்தது.

இவர்களது படைப்புகளில் இனவரைவியல் கூறுகள் இருப்பினும் அவற்றை உயர்த்திப் பிடித்தவர்களல்லர். சாமான்ய, ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான கரிசனத்தை இவர்களது எழுத்துகளில் வெளிப்படுத்தினர். அவர்களில் ஒருவராகவே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.

இந்த ஆளுமைகளில் ஒருவரான சோலை சுந்தரபெருமாள் ஜனவரி 12 (12.01.2021) அன்று காலமானார். பொருளாதாரப் பின்புலமற்ற மிகச்சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் (09.05.1953) சோலை. இவரது தந்தையார் சுப்பிரமணியப்பிள்ளை இப்பகுதிகளில் ‘பெரிய கொத்தனார்’ என அழைக்கப்பட்டவர். நூற்றுக்கணக்கான கொத்தனார், மேஸ்திரிகளை உருவாக்கியவர். சோலை சிறுவயதில் தாயை இழந்தவர்; பிழைப்பிற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டவர்.

இந்த இன்னல்களுக்கு மத்தியில் எழுத்தைத் துணையாகக் கொண்டு தொடர்ந்து இயங்கியவர். தொடக்கத்தில் கவிதைகள் மூலமே படைப்புலகில் நுழைந்த சோலை இது நமக்கு ஒத்துவராது என்று உணர்ந்தவுடன் சிறுகதைகளை வட்டார மொழிகளில் எழுதத் தொடங்கியவர்.

பொன்னியின் காதலன் (மரபுக்கவிதை), தெற்கே ஒரு இமயம் (புதுக்கவிதை) ஆகியன இவரது தொடக்ககாலக் கவிதைத் தொகுப்புகள்.இவரது முதல் குறுநாவல் ‘கலைமகள்’ (1987) இதழிலும், சிறுகதை ‘தலைமுறைகள்’ (1989) ‘தாமரை’ இதழிலும் வெளியானது.

முதல் நாவல் ‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ (1990). அவரது வாழ்வின் இறுதிப்பகுதியில் நாவல் வடிவத்தின் மீதே ஈர்ப்பு கொண்டிருந்தார். அவரது வாழ்காலத்தில் சிறிதும் பெரிதுமாக 10 நாவல்களையும் சுமார் 80 சிறுகதைகளையும் சில குறுநாவல்களையும் எழுதியவர்.

“கழுதை ஏருக்கு ஒத்து வந்தாலும் வரும், காவனூரான் ஒத்து வரமாட்டான்”, “அம்மையப்பன், குளிக்கரை அம்புட்டுகிட்டு முழிக்கிற”, என்று சொலவடைகளில் தனது ஊரைப்பற்றிய விமர்சனங்களை வைத்திருப்பார். திருவாரூர் அம்மையப்பன் அருகிலுள்ள காவனூர் என்னும் ஊரில் பிறந்ததால் தனது இயற்பெயரில் சோலையை இணைத்துக் கொண்டார் (கா-சோலை).

திருவாரூர் கோயிலுக்கான நந்தவனம் தனது ஊர் என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பார். கலியபெருமாள்கள் நிறைந்த ஊரில் முதல்வகுப்பு சேரும்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர் வேறு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டபோது என்னைப் ‘பொறிச்ச முறுக்கு’ என்று அழைப்பார்கள் அந்தப் பெயரையே வைக்கலாம் என்று சொன்ன கள்ளமில்லாக் குழந்தைப்பருவம் சோலை சுந்தரபெருமாளுடையது.

அரசுப்பள்ளியில் தொழிலாசிரியராகப் பணியேற்று, இறுதியில் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு (2011) பெற்றார். இன்றும் பள்ளி நூலகங்களை நன்றாகப் பூட்டி வைத்திருப்பதுதான் நடைமுறை. இவர் ஆசிரியராகப் பணியாற்றிய காலங்களில் பள்ளி நூலகப் பொறுப்பை ஏற்று அவற்றை மாணவர்களுக்காகத் திறந்துவிட்டவர். அதன்மூலம் தனது வாசிப்பையும் அகலப்படுத்தினார்.

இவரது தொடக்கக்காலப் படைப்புகள் வழக்கமான ஒன்றாகவே இருந்தன. நீரில் அழும் மீன்கள், மரத்தைத் தாங்கும் கிளைகள், நெறியைத் தொடாத நியாயங்கள் என முரண்களைச் சுட்டுவதாக அமைந்தவை. ‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ என்ற தலைப்பையும் இதன் தொடர்ச்சியாக அவதானிக்கலாம்.

பிற்காலத்தில் அவரது எழுத்து உருமாற்றம் பெறத்தொடங்கின. ‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ (1990) நாவலிலிருந்துதான் இவர் தனது படைப்புகளை முன்னிலைப்படுத்தினார். ‘ஒரே ஒரு ஊர்லஞ்’ (1992) அடுத்து வந்த நாவல் கிராமிய வாழ்வியலுடன் புராணங்களை கேள்விக்குட்படுத்தியது.

இவரது படைப்புகளில் நிலப்பிரபுத்துவப் பார்வையினடிப்படையில் பெண் கதைமாந்தர்கள் படைக்கப்பட்டனர். பெண்களைப் பற்றிய பாலியல் சித்தரிப்புகளும் இதே வகையினமாக இருப்பதை பல இடங்களில் விவாதித்துள்ளோம். அடித்தட்டு மக்களின் புழங்கு மொழிகளில் காணப்படும் கொச்சைகள் / வசைகள் என்று சொல்லப்படுபவற்றை வெகு இயல்பாகத் தனது படைப்புகளில் பயன்படுத்துவார்.

தனது தாயாரின் பெயரில் (கமலம் பதிப்பகம்) பதிப்பகம் தொடங்கி தனது படைப்புகளை வெளியிட்டு வந்தார். ‘செந்நெல்’ (1999) வரைக்கும் இதே நிலைதான். அதன்பிறகு காவ்யா, நிவேதிதா புத்தக பூங்கா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் மூலம் நூல்கள் வெளியானபிறகு இவரது எழுத்துகள் பரவலாகச் சென்றன.

அரசியல் புரிதலுடன் மக்களின் பேச்சுமொழி, கதைசொல்லியின் மொழி இரண்டிற்கும் வேறுபாடற்ற நடையில் தனது படைப்பாக்கங்களைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொண்டார். இதே மொழியில் தமது முன்னோர்களின் கதைகளையும் (நஞ்சை மனிதர்கள் - 1998), தலித்களின் வாழ்வியலையும் (தப்பாட்டம் - 2002, செந்நெல் - 1999) பேசினார். வண்டல் மண், மக்கள், வாழ்வியல், மொழி, வேளாண்மை, அடையாளங்கள் ஆகியவற்றின் மீது பெருத்த ஈர்ப்பைக் கொண்டிருந்தார்.

பெருந்திணை (2005), பால்கட்டு (2014), எல்லை பிடாரி (2015)ஆகிய நாவல்களும் இதனைச் சுற்றியே புனையப்பட்டன. இவற்றின் மூலம் வண்டல் மண் மற்றும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளைப் பேசினார். முன்னத்தி ஏர், தூறு, பால்கட்டு, மடை. பொலி, பட்டா, உழவு, வயல், நாற்றங்கால், மேலாக்கு, மரக்கால், நெல், கோக்காழி, வியர்வை போன்ற வேளாண் சொற்கள் இவரது படைப்பில் இரண்டறக் கலந்திருந்தன.

இந்தத் தலைப்புகளில் கதைகளையும் முன்னுரைகளையும் எழுதினார். வண்டல் மற்றும் வேளாண் சமூகத்தை மையமாகக் கொண்டே இவரது எழுத்துகள் மையங்கொண்டிருந்தன. உலகமயத்தின் கொடிய கரங்கள் வண்டல் மண்ணை கபளீகரம் செயவதைச் சினத்துடன் தனது நாவல்களில் பதிவு செய்தார்.

தனது படைப்பு வாழ்வின் முன்பகுதியில் சிறுகதைகள் அதிகம் எழுதினார். பிற்பகுதிகளில் நாவல் எழுதத் தொடங்கியதால், சிறுகதை வடிவத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் நாவல்களில் சொல்ல வாய்ப்பில்லாத சங்கதிகளை மட்டும் சிறுகதைகளாக எழுதி வருவதையும் ‘கப்பல்காரர் வீடு’ முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

மண் உருவங்கள் (1991), வண்டல் (1993), ஓராண்காணி (1995), ஒரு ஊரும் சில மனுசர்களும் (1996), வட்டத்தை மீறி (2000), மடையான்களும் சில காடைகளும் (2006), வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும் (2010), கப்பல்காரர் வீடு (2014), முத்துக்கள் பத்து (அம்ருதா வெளியீடு) என ஒன்பது சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார்.

இதில் சில கதைகள் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெறுகின்றன. அடிக்கல், காத்திருக்கிறாள் போன்ற கதைகள் குறுநாவல் தொகுப்பிற்கு மாறிவிடுகின்றன. தமிழ்ப் பாடநூல் சர்ச்சைக்குள்ளான ‘மண்ணாசை’ வட்டத்தை மீறி தொகுப்பில் (காவ்யா வெளியீடு) இடம்பெற்றுள்ளது. ‘மனசு’ (1994), குருமார்கள் (2006) ஆகியன இவரது குறுநாவல் தொகுப்பாகும்.

தி.ஜா., க.நா.சு., கு.ப.ரா., மௌனி, கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்களின் எழுத்துகளே தஞ்சைத் தமிழ் வகையினத்தில் அடக்கும் நிலையில் அடித்தட்டு மக்கள் மொழியை (வண்டல் மொழி) கவனங்கொள்ளச் செய்ததில் இவரது பங்கு முக்கியமானது. அதற்காகப் பல்வேறு போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் இவர் சந்திக்க வேண்டியிருந்தது.

இவரது சிறுகதை (மண்ணாசை) பத்தாம் வகுப்பு துணைப்பாட நூலிலிருந்து நீக்கப்பட்டபோது போராடி மீண்டும் இணைக்க வேண்டியிருந்தது. அதற்கு இடதுசாரி இயக்கங்களும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் அவருக்கு துணை நின்றனர்.

இன்றும்கூட தமிழ்ப் பாடநூல்களில்,

“தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடை உ.வே.சாமிநாதையர், மௌனி, தி.ஜானகிராமன், தஞ்சை பிரகாஷ், தஞ்சை இராமையா தாஸ், தஞ்சாவூர்க் கவிராயர் ஆகியோர்”, (பக்.75, ஒன்பதாம் வகுப்பு - தமிழ்) எனக் குறிப்பிடப்படுகின்றனர். இப்பட்டியலில் க.நா.சு., கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் போன்றோருக்குக் கூட இடமில்லை.

சி.எம்.முத்து, சோலை சுந்தரபெருமாள் போன்றோரை மீண்டும் பாடநூலில் இணைக்கப் போராட வேண்டிய நிலையில்தான் உள்ளோம். ‘செய்தி’ எனும் தி.ஜானகிராமனின் கதை இப்பாடநூலில் வெளியாகியுள்ளது. இவர், “தஞ்சை மண் வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்”, என்றும் சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையை மாற்றுவதற்காக சோலை பலவழிகளில் முயன்றார். தொடர்ந்து போராட வேண்டிய தேவையையும் இது உணர்த்துகிறது.

வெறும் எழுத்தாளராக மட்டும் இல்லாமல் நிறைய வாசிக்கவும் செய்தார். பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ், ராகுல சாங்கிருத்யாயன், டி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, அலைகள் வெளியிட்ட வேதங்கள் மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு நூல்களை வாசித்து விவாதித்துக் கொண்டே இருந்தார்.

வெண்மணி குறித்த ‘குறத்தியம்மன்’ (2016) நாவல் வெளியானபோது என்னிடம் வாங்கிவரச் சொல்லி வாசித்தார். வீடும் பள்ளி நூலகமும் அவரது வாசிப்பிடமாக மாறிப்போனது. பணி ஓய்வுப் பாராட்டில் கூட கணையாழிக்குப் பதிலாக நூல்களையே கேட்டுப் பெற்றார்.

தஞ்சை வட்டாரப் பார்ப்பன மரபை மாற்றி அடித்தட்டு மக்கள் மரபாக மாற்றுவதற்கு தனது எழுத்துகளை மட்டும் நம்பியிராமல், பிற குறிப்பிடத்தக்க பணிகளையும் மேற்கொண்டார். கரிசல் இலக்கியம் போன்று வண்டல் இலக்கியத்திற்கும் உரிய அங்கீகாரம் வேண்டும் நோக்கில் தமது செயல்பாடுகளைக் கட்டமைத்துக் கொண்டார்.

அதற்கேற்ற வகையில் தமது எழுத்துகளையும் அரசியல் பாதையையும் தெரிவு செய்தார். இதில் வெற்றி கிடைத்ததா என்பதைவிடவும் முன்னோடி முயற்சியாக இலக்கிய வரலாற்றில் நிலைத்திருக்கும். முதலில் கலை இலக்கியப் பெருமன்றத்திலும் பின்னர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து செயலாற்றினார்; கலை இலக்கியப் பெருமன்றத்துடனும் அதன் தோழர்களுடன் நட்பைப் பேணினார். வல்லிக்கண்ணன், தி.க.சி., பொன்னீலன் போன்றோருடன் நெருக்கமாக இருந்தார்.

தஞ்சை வட்டார எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் விதமாக இரு சிறுகதைத் தொகுதிகளைத் தொகுத்தார். பழைய தஞ்சைப் புவியியல் எல்லைக்குட்பட்ட பலவகையான எழுத்தாளர்களின் சிறுகதைகள் இவை. இதன்மூலம் அவர்களை அறிமுகம் செய்ததோடு, தமது எழுத்துகளை ஒப்பிடவும் வாய்ப்பை உண்டாக்கினார்.

தொகுதி - 01: தஞ்சை சிறுகதைகள் - ஓர் ஆய்வு (கா.சி.வேங்கடரமணி முதல் யூமா.வாசுகி வரையிலான இலக்கியவாதிகளின் தேர்வு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு (1999).

தொகுதி - 02: தஞ்சை கதைக் களஞ்சியம் - உ.வே.சாமிநாதய்யர் முதல் சிவக்குமார் முத்தய்யா வரையிலான சிறுகதையாளர்களின் கதைகள் (2000).

தஞ்சை வட்டார வழக்குச் சொல்லகராதியைத் தொகுக்கும் முயற்சி மேற்கொண்டார். தனது இறுதிக்காலத்தில் நாவல் எழுதும் பணிகளைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு இவற்றில் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டார். இது இன்னும் வெளியாகவில்லை; அச்சில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவரது வண்டல் பெருங்கனவுகளுள் ஒன்றாக இது இருந்தது. இதனால் அவரது இறுதி நாவல் எல்லை பிடாரி (2015) என்றானது. அவரது மொத்த சிறுகதைகள் (இரு தொகுதிகள்), குறுநாவல்கள் ஆகிய தொகுப்புகளை வெளியிட முயன்றார். அவற்றையும் தஞ்சை வட்டார வழக்குச் சொல்லகராதியையும் அச்சில் பார்க்காமல் மறைந்துவிட்டார்.

வண்டல் இலக்கியம் குறித்த கருத்தரங்குகள், அமர்வுகள் நடத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு வண்டல் மொழியைக் கடத்த விரும்பினார். திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகப் பணியை ஏற்றதன் வழி இதன் முன்னெடுப்புகளை செய்ய முடியும் என்று கருதினார்.

வண்டல் குறித்த வகையினங்களைத் தொகுக்கவும் சேகரிக்கவும் விரும்பினார். அதனடிப்படையில் ‘வண்டல் உணவுகள்’ நூலை எழுதினார். வண்டல் நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தார். வாய்மொழி வரலாறுகளைத் தொகுக்கும் முயற்சி மேற்கொண்டார்.

வெறும் வட்டார மொழிவழக்கு என்று பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை என்பதையும் உணர்ந்த அவர், அதன் மூலம் அரசியல், சமூக மாற்றங்களை உண்டாக்க விரும்பினார். ‘குருதிப்புனல்’ நாவல் வழியே இந்திரா பார்த்தசாரதி ஏற்படுத்தியிருந்த சித்தரிப்புகளை மாற்ற முயன்று ‘செந்நெல்’ (1999) நாவலை எழுதினார்.

இந்நாவல் மார்க்சிஸ்ட் கட்சியின் பார்வையில் வெண்மணியை அணுகியது என்றபோதிலும் வெண்மணி குறித்த நாவல்களில் புதிய பாய்ச்சலை உருவாக்கிக் கொடுத்தது. இதன் பின்னர் எழுதப்பட்ட பாட்டாளியின் ‘கீழைத் தீ’, மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ போன்றவையும் சார்புப் பார்வையைக் கொடுப்பவையே. இருப்பினும் ‘குருதிப்புனல்’ அளவிற்கு மோசமானவை என்று சொல்ல இயலாது. அதற்கான முன்னெடுப்பை இந்நாவல் ஏற்படுத்தியது என்று கூறலாம். இந்நாவல் ஆங்கிலத்தில் (Red Paddy) மொழிபெயர்க்கப்பட்டது.

50 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்புகளுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும், கொல்லப்பட்டோரின் வாரிசுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கருத்துகள் மேலோங்கிவரும் நிலையில் சோலையின் ‘செந்நெல்’ முயற்சியின் வலிமை விளங்கும்.

1990களின் இறுதியில் வெண்மணிப் படுகொலை குறித்த கள ஆய்வு மேற்கொண்டார். இதன் பிறகே ‘செந்நெல்’ நாவலை எழுதினார். இதில் சில நாட்கள் நானும் பங்கு பெற்றேன். அப்போதுதான் வெண்மணி குறித்த செய்திகளை ஓரளவு உள்வாங்க முடிந்தது.

இதைப்போலவே தப்பாட்டம் (2002), மரக்கால் (2007), தாண்டவபுரம் (2011) ஆகியவற்றையும் கள ஆய்வுகள், விரிவான வாசிப்புகளுக்குப் பின்னே எழுதுவதையே வழக்கமாகக் கொண்டார். இதுகுறித்து பலருடன் விவாதிப்பதையும் கலந்துரையாடுவதையும் தொடர் வழக்கமாகக் கொண்டிருந்தார். புதிய செய்திகள், சிந்தனைகள் என ஓயாது தேடல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், திராவிடம் போன்றவற்றைப் போலவே சைவக் கருத்தியல்கள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். சைவத்தை பார்ப்பனிய இந்துத்துவத்திற்கு எதிரான கருவியாகக் கணித்தார். வேளாண்மைக்கு எதிரானவை, வணிக சமயங்கள் என அவைதீக சமயங்களான சமண, பவுத்த மதங்களை தீவிரமாகவும் விமர்சிக்கவும் செய்தார்.

இவைகள் பார்ப்பனியத்தால் உள்வாங்கப்பட்டதால் அவற்றை எதிர்க்க முடியாமற் போனது என்றும், சைவமே பார்ப்பனியத்தை எதிர்க்கும் கருவியாக இன்றும் இருக்க முடியும் என்று நம்பினார். இருப்பினும் அதிலுள்ள நோய்மைகளை அகற்றவும் சீர்திருத்தவும் வேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தார்.

இவரது மரக்கால் (2007), தாண்டவபுரம் (2011) ஆகிய நாவல்கள் வெறும் நந்தனார், திருஞானசம்பந்தர் கதைகள் என்றில்லாமல் ஒருவகையில் சைவ மேன்மை பேசுவதாக இருப்பதன் காரணம் இதுவே. சில சைவ மடங்கள் இவற்றைத் தங்களுக்குச் சாதகமாக அணுகியதும் சி.அறிவுறுவோன் போன்ற தமிழ்த் தேசியர்களின் ஆதரவும் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

விமர்சகரும் ஆய்வாளருமான வே.மு.பொதியவெற்பன் (பொதிகைச்சித்தர்) எழுதிய நீண்ட விமர்சனங்களும் இவை குறித்தனவே. செந்நெல், தப்பாட்டம் ஆகிய நாவல்களுக்குப் பிறகு சோலையின் சிந்தனை மாற்றத்தின் விளைவாக இத்தகைய நாவல்கள் உருவாயின என்பதை அவதானிக்கலாம்.

‘செந்நெல்’ நாவல் மற்றும் அப்பண்ணசாமி (தென்பரை முதல் வெண்மணி வரை) நூல் தொடர்ச்சியாகவும் ‘வெண்மணியிலிருந்து...’ என்ற வாய்மொழி வரலாற்றைத் தொகுத்தார். 1936 இல் வெளியான மூவலூர் ஆ.ராமாமிர்தத்தம்மாளின் ‘மதி பெற்ற மைனர்’ (2002, சிவசக்தி பதிப்பகம்) நாவலை மீண்டும் பதிப்பித்தார். தமது தேடலில் கண்டடைந்தவற்றை ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.

தனது படைப்புகள் பற்றி வந்த விமர்சனங்களைத் தொகுப்பாக்கி வெளியிட்டார். இது படைப்பாளிகள் பலரும் செய்யாத முயற்சியாகும். வெறும் பாராட்டுரையாக மட்டுமல்லாமல் காத்திரமான எதிர் விமர்சனங்களுக்கும் முகம் கொடுத்தார். ‘செந்நெல்’ விமர்சனங்களைத் தொகுத்து ‘செந்நெல் கட்டுரைகள்’ (கமலம் பதிப்பகம், ஆகஸ்ட் 2000) என்ற குறுநூலை வெளியிட்டார். இது பின்னர் ‘வெண்மணியும் 44 பிடி சாம்பலும்’ (பாரதி புத்தகாலயம்) என்ற பெயரில் வெளியானது. தப்பாட்டம் நாவலுக்கும் அதன் விமர்சனங்களை ‘தப்புச் சத்தங்கள்’ என்ற பெயரிலும் பின்னர் ‘அகமும் புறமும்’ (2006, வெளியீடு: நிவேதிதா புத்தக பூங்கா) என்ற பெயரிலும் கொண்டு வந்தார். மாலன், வெங்கட் சாமிநாதன் போன்ற எதிர்க் கருத்தியல் உள்ளவர்களின் விமர்சனங்களையும் விரும்பி ஏற்றார்.

படைப்பாளியே தமது படைப்புகளைச் சுமந்து திரிவதும் கூவி விற்க வேண்டியிருப்பதும் தமிழ்ப் படைப்புலக அவலங்களுள் ஒன்று. இந்த நிலை இல்லாதிருந்திருக்குமேயானால் அவரிடம் சற்றுக் கூடுதலான படைப்புகள் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் எழுதுவதையும் அவற்றைக் கொண்டு சேர்க்கவும் ஓயாமல் உழைத்தவர் சோலை.

நமது குடும்பங்களில் நடைபெறுவதைப் போன்ற வழக்கமான சில சிக்கல்களால் அவர் பெரிதும் துவண்டு போயிருந்தார். இது அவரது உடல்நலத்தை மேலும் கெடுத்தது என்றே சொல்ல வேண்டும். தமது இறுதிக் காலத்தில் அவரது உடல்நலம் எழுத்துப் பணிகளைச் செய்யவிடாமல் முடக்கியது. அவரைக் காண்பது துயரமான ஒன்றாகிப் போனதால் தவிர்க்க வேண்டியதாயிற்று.

அவரது எழுத்துகள் காரணமாக நிறைய எதிர்ப்புகளையும் வழக்குகளையும் கூட சந்தித்துள்ளார். தமிழக அரசு, பாரத ஸ்டேட் வங்கி, கோவை லில்லி தேவசிகாமணி, திருப்பூர் தமிழ்ச் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் விருதுகளை அவரது படைப்புகளுக்காகப் பெற்றுள்ள போதிலும், அவர் எதிர்பார்த்த உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். சில முறை இறுதிச் சுற்றுவரை சென்று சாகித்திய அகாதமி விருதை இழந்ததாகக் கேள்விப்பட்டதுண்டு. எழுத்தாளன் தனது எழுத்துகளின் அங்கீகரிப்பிற்காகக் காத்திருப்பதும் தமிழ்ச் சூழலின் கொடுமைகளுள் ஒன்று.

அவரது ‘மரக்கால்’ நாவல் குறித்து ‘சஞ்சாரம்’ இதழில் (மார்ச் 2008) விமர்சனம் எழுதியிருந்தேன். அவரது எழுத்துகளைப் பற்றி நேரடியாக பலமுறை விவாதம் செய்திருக்கிறேன். விமர்சனங்களுக்கு உரிய மதிப்பை வழங்குவார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு தமது நிலை குறித்து விளக்கமளிப்பார். ஓயாது விவாதிப்பதும் தொடரியக்கமும் அவரது வாழ்நாள் பணியாக இருந்தது. இந்தக் கட்டுரைக்கு விளக்கமளிக்க சோலை இன்று நம்மிடம் இல்லை என்பது கடக்க முடியாத பெருந்துயராக உள்ளது.

- மு.சிவகுருநாதன்

Pin It