தமிழின் அகராதி ஆக்க வரலாறு நீண்ட பின் புலத்தைக் கொண்டது. தமிழில் அகராதி உருவாக்கம்,  தொல்காப்பியத்தில் உருக்கொண்ட பின்னர் நிகண்டு களாக வடிவம் பெற்றதின் தொடர்ச்சியாக, அகராதி என்னும் தனி நிலையை அடைந்து நிகழ்ந்துவருகின்றது. தமிழ் உரையாசிரியர்களின் உரைகூறும் முறைகளிலும் அகராதிக்குரிய கூறுகள் வெளிப்பட்டிருக்கின்றன.

தமிழ் அகராதி வளர்ச்சி வரலாற்றில், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வட்டார வழக்குச் சொல்லகராதி உருவாக்கமும் நடந்தது. 1882இல் வெளிவந்த பெஸ்கியின் தமிழ் - லத்தீன் அகராதி அன்றைய வழக்குச் சொற்களுக்கான அகராதியாகவே அமையப்பெற்றிருந்தது.

வட்டார வழக்கு என்பதற்கு, ஒலிப்பு முறை, சொல் அமைப்பு, இலக்கண அமைப்பு ஆகிய கூறுகளின் அடிப்படையில் பொதுமொழியிலிருந்து சற்றே வேறுபடுவதும், ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சார்ந்தவர்களால் மட்டுமே பேசப்படுவதுமான மொழிவழக்கு என்று ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ விளக்கம் தருகின்றது (ப. 1194).  இவற்றைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஒரு குறிப்பிட்ட மக்களால் பேசப்பட்டு, புரிந்துகொள்ளப் படும் மொழி வகையை வட்டாரமொழி என வரை யறுத்துக்கொள்ளலாம். இவ்வகை மொழியில் வழங்கும் சொற்களையே வட்டார வழக்குச் சொற்களாக அடையாளப்படுத்துகின்றனர். வட்டாரச் சொல் எது என்பதற்குக் கீழ்வரும் ஒரு குறிப்பு இன்னும் மேலதிகப் புரிதலை வழங்குகின்றது. 

பொது வழக்கில் இருக்கும் ஒரு சொல், பொதுப் பொருளிலிருந்து வேறுபட்டு வழங்குதல், ஒரு சொல் குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டுமே வழங்க / புரிந்து கொள்ளப்படுதல், பொது வழக்குச் சொல்லாக இருப் பினும் திரிந்து, உச்சரிப்பில் வேறு சொல் போலத் தோற்றம் தருதல் என மூன்று நிலைகளில் இருப்பது வட்டாரச் சொல்லாகும் (பெருமாள் முருகன் அகராதி, ப. 15).  

‘நீர் இறைத்தல்’ என்ற சொல்லிற்குக் கிணற்றி லிருந்து நீரை இறைத்தல், அதாவது நீரை எடுத்தல் என்ற பொருள் பொதுவழக்கில் வழங்குகின்றது. இதே சொல் கொங்கு வட்டாரப் பகுதியில் நீரை அள்ளித் தரையில் தெளித்தல் என்ற பொருளைத் தந்து வழங்கி வருகின்றது.  இச்சொல் பொதுவழக்கில் இருக்கும் பொருளில் வழங்காமல், வேறு பொருளில் வழங்கிவரும் சொல்லாக உள்ளது.  இதுவே வட்டார வழக்குச் சொல்லாகும்.

வட மாவட்டப் பகுதிகளில் (குறிப்பாகத் திருவண்ணா மலை) ஆரம்பப் பருவநிலையில் உள்ள தவளையினை ‘முண்டா குஞ்சி’ என்ற சொல்லால் சுட்டும் வழக்க மிருக்கின்றது. ‘தலபிரட்ட’ என்ற வழக்கும் அரிதாகக் காணப்படுகின்றது. கொங்கு வட்டாரத்தில் தலப் பிரட்ட என்பதோடு ‘கொரத்திக் குட்டி’ என்ற இன்னொரு சொல்லிலும் சுட்டப்படுகின்றது. இவ் வகைச் சொற்கள் குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டுமே வழங்க, புரிந்துகொள்ளப்படுவதான சொற்களாக உள்ளன.

இவ்வகைச் சொற்களோடு ஒளி நிலையில் மாறுபட்டு வழங்கும் சொற்களையும் வட்டார வழக்குச் சொல்லாகவே கருதுகின்றனர். உதாரணமாக எங்கள் ஊரில் முடிவெட்டும் தொழிலைக் குறிக்கும் சொல்லாகப் ‘பரேரி’ என்ற சொல் வழங்குகின்றது. இச்சொல் தஞ்சைப் பகுதியில் ‘பரியாரி’ என்று வழங்கி வருகின்றன (‘பரியாரி’ என்றால் ‘வைத்தியர்’ என்று பொருள்). இச்சொல் ஒலி நிலையில் வேறுபட்டிருந்தாலும் பொருள் நிலையில் வேறுபட்டிருக்கவில்லை. கொங்கு பகுதியில் முடி வெட்டுதல், துணி துவைத்தல் ஆகிய தொழிலைச் செய்பவர்களை ‘ஏகாலி’ என்ற ஒரே சொல்லால் சுட்டும் வழக்கமிருக்கின்றது. வட மாவட்ட பகுதியில் துணி துவைக்கக்கூடியவர்களை மட்டும் ‘ஏகாலி’ என்று சுட்டும் வழக்கமிருக்கின்றது. ‘வண்ணான்’ என்பதும் இங்கு வழங்குகின்றது. இவ்வாறு ஒலி நிலையிலும் பொருள் நிலையிலும் மாறுபட்ட வளமையான சொற்கள் பல தமிழில் வழங்கிவருகின்றன. இவ்வகைச் சொற்களையே வட்டார வழக்குச் சொற்கள் என அழைக்கின்றனர். இந்த வட்டாரச் சொற்கள் மாறிவரும் சூழலுக்கேற்ப வழக்கொழிந்து மறையும் தன்மைகொண்டவையாக உள்ளன.

சூழலுக்கேற்ப வழக்கொழிந்து மறைந்துபோகும் தன்மைகொண்டதாக வட்டார மொழிச் சொற்கள் உள்ள நிலையில் மிக வேகமாக மறைந்துவருகின்றன.  குறிப்பாகத் தொழில் முறைச் சொற்கள் வேகமாக மறைந்துவிடுகின்றன. வேளாண், மட்பாண்டம், தச்சு, சலவை, மீன்பிடி முதலானத் தொழில் முறைகளில் அறிவியல் சாதனங்கள் மிக வேகமாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.  சில தொழில்கள் போதிய வருவாய் இன்மையாலும், சமூக அங்கீகாரமின்மையாலும் கைவிடப்பட்டுவிட்டன. இவ்வகைக் காரணங்களால் அந்தத் தொழில் சார்ந்து வழங்கிவரும் சொற்கள் காலப்போக்கில் மறைந்துவிடும் நிலை ஏற்படுகின்றது.

வழக்கிழந்து மறைந்துபோகும் தன்மைகொண்ட வழக்குச் சொற்களைத் தொகுத்துத் தமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதி ஒன்றை முதன் முதலில் உருவாக்கியவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள். 1982இல் அன்னம் வெளியீடாக வெளிவந்த அவ்வகராதி வட்டார வழக்குச் சொல்லகராதி என்று பொதுப்பொருளில் இருந்தாலும், அது நெல்லை வட்டார மொழிச்சொற்களை மட்டும் கொண்ட அகராதியாக இருந்தது.

1982இல் கி. ரா. அவர்களால் ஏற்பட்ட வட்டார வழக்குச் சொல்லகராதி உருவாக்க மரபின் தொடர்ச்சி யாகச் சில வட்டார வழக்குச் சொல்  அகராதிகள் தமிழில் உருவாக்கப்பட்டு வெளிவந்தன. 1982ஆம் ஆண்டிலிருந்து தமிழில் வெளிவந்துள்ள வட்டார வழக்குச்சொல் அகராதிகள்  குறித்த விவரங்கள் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன.

1.            1982 வட்டார வழக்குச் சொல்லகராதி - கி. ராஜநாராயணன்

2.            1989       வழக்குச் சொல்லகராதி - புலவர் இரா. இளங்குமரன்

3.            1989       வட்டார வழக்குச் சொற்களும் விளக்கங்களும் - லேனா தமிழ்வாணன்

4.            1990       செட்டி நாட்டில் செந்தமிழ் வழக்கு - சுப. சண்முகம்

5.            1991       கொங்குத் தமிழ் - டி.எம். காளியப்பா

6.            2000       கொங்கு வட்டாரச் சொல்லகராதி - பெருமாள் முருகன்

7.            2001       ஜீவா தொகுத்த வழக்குச் சொல்லகராதி - கே. ஜீவபாரதி, வே. எழில்முத்து.

8.            2003       கோவை மாவட்ட வழக்குச் சொல்ல கராதி - ச. மகாலட்சுமி

9.            2004       கொங்கு நாட்டுத் தமிழ் - புலவர் மணியன்

10.          2004       நெல்லை வட்டார வழக்குச் சொல்ல கராதி - ப. முருகையா

11.          2004       நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்ல கராதி - அ.க. பெருமாள்

12.          2006       செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி  - வே. பழநியப்பன்

13.          2007       நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்

14.          2008       கொங்கு வட்டார வழக்குச் சொல்ல கராதி - இரா. இரவிக்குமார்

tamil book 600இந்த அகராதிகளுள் புலவர் இரா. இளங்குமரன், லேனா தமிழ்வாணன், கே. ஜீவபாரதி ஆகியோர் உருவாக்கிய அகராதிகள் பெயரளவில் மட்டுமே வட்டார வழக்கு அகராதி என்று உள்ளனவே தவிர, அவைகள் ஒரு குறிப்பிட்ட வட்டார மொழிக்கான அகராதிகளாக இல்லை. அது மரபுத் தொடர்களுக்கான அகராதிகளாகவே அமையப்பெற்றுள்ளன.  இவற்றுள் கே.ஜீவபாரதியும் வே.எழில்முத்துவும் சேர்ந்து தொகுத்துப் பதிப்பித்து வெளியிட்ட ‘ஜீவா தொகுத்த வழக்குச் சொல்லகராதி’ என்பது ஜீவா தொகுக்கவில்லை என்றும், அவை ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் தொகுக்கப் பெற்றது என்றும், அவற்றை ஜீவா அவர்கள் சேதுப்பிள்ளையிடமிருந்து குறிப்பிற்காகப் பெற்றார் என்ற கருத்தும் உண்டு. இவற்றையே ஜீவபாரதியும் எழில்முத்துவும் பின்னாளில் வெளியிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மிக அதிகமாகக் கொங்கு வட்டார மொழிச் சொற் களைக் கொண்ட ஐந்து அகராதிகள் வெளிவந்துள்ளன. அகராதியின் பதிவமைப்பு, சொற்களுக்குத் தரும் பொருள் விளக்கம் ஆகியன அகராதிகள்தோறும் வேறு பட்டிருந்தாலும் பெரும்பான்மையான அகராதிகள் கி.ரா.வின் அகராதியை உருமாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளமை பதிவு செய்ய வேண்டிய செய்தியாகும்.

இலக்கணக் குறிப்பு தருதலும், ஒன்றிற்கு மேற் பட்ட பொருள்வரின் எண் வரிசை முறையினைக் கையாளுதலும் அகராதியின் முக்கிய கூறுகளாகும்.  இம்முறையினைத் தி. மகாலட்சுமி, பெருமாள் முருகன் இருவரும் முறையாகப் பின்பற்றியுள்ளனர். ப. முருகையா, கண்மணி குணசேகரன் இருவரும் சொற்களுக்கு இலக்கண வகையைத் தந்துள்ளனர். ஆனால், எண் வரிசை முறையினைப் பின்பற்றவில்லை. பழநியப்பா, புலவர் மணியன், சுப. சண்முகம், டி.எம். காளியப்பா ஆகியோர் உருவாக்கிய அகராதிகள் மேற்கண்ட இரண்டு முறைகளையும் பின்பற்றி உருவாக்கப்பட வில்லை.

பெரும்பாலான அகராதி ஆசிரியர்கள் நாட்டுப் புறவியல் துறை சார்ந்தவர்கள் என்பதால், சொற்களுக்குத் தரும் பொருள்விளக்கம் மண்சார்ந்த தன்மையை, அதன் வாசனையைக் கொண்டிருக்கின்றன.

வட்டார வழக்குச் சொல் அகராதிகள் பெரும் பாலனவற்றில் வட்டாரம் சார்ந்த படைப்பில் இடம் பெற்றுள்ள சொற்களைத் தொகுத்துத் தரப்பட்டுள்ள மையை இங்குச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வட்டார வழக்கு அகராதிகளை உருவாக்கிய பெரும் பாலான ஆசிரியர்கள் வட்டாரம் சார்ந்த எழுத்துகளிலும் ஆய்வுகளிலும் கவனம் செலுத்தக்கூடியவர்கள் என்பது இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். தமிழில் வட்டார வழக்குச் சொல் அகராதி உருவாக்கத்திற்கு, வட்டார அளவில் நேரடியான கள ஆய்வை மேற் கொண்டு, அந்த மொழியைக் கூர்ந்துநோக்கிச் சொல் தேர்வை மேற்கொள்ளும் முயற்சி இதுவரை நடைபெற வில்லை என்பது இங்குப் பதிவுசெய்யப்பட வேண்டி யுள்ளது.

படைப்புகளில் இடம்பெற்றுள்ள வட்டார வழக்குச் சொற்களை மட்டுமே தொகுத்து வட்டார வழக்குச்சொல் அகராதி உருவாக்கப்பட்டுள்ளமை அத்துறையில் செய்ய வேண்டிய பணிகளுள் ஒரு பகுதி மட்டுமே ஆகும். இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிரம்ப உள்ளன.

எந்த நிறுவத்தின் உதவியுமின்றி, சுய ஈடுபாட்டின் காரணமாக வட்டார வழக்கு அகராதிகளை மேற் கண்டவர்கள் உருவாக்கியுள்ளனர். இவர்களின் முயற்சி வட்டார வழக்கு அகராதி உருவாக்கத்தின் முன்னோடிப் பணியாகும்.  இவர்கள் தொட்டுச் சென்ற பாதையை நோக்கி இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய தேவையுள்ளது.

மேற்கண்ட அகராதிகளில் மட்டுமன்றி கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுள்ள வட்டாரப் பொருண்மை சார்ந்த ஆய்வுகளிலும் (முனைவர், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள்) வழக்குச் சொற்களை ஆய்வாளர்கள் தொகுத்தளித்துள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகத் ‘தமிழ்ப் பேரகராதி’, க்ரியாவின் ‘தற்காலத் தமிழ் அகராதி’ ஆகியனவற்றிலும் பல வழக்குச் சொற்கள் பதிவாகியுள்ளன. இவைகளில் இடம்பெற்றுள்ள சொற்களையும் தொகுத்து வகைப் படுத்த வேண்டிய கடமை நமக்கு உண்டு.

எழுத்தில் இடம்பெற்றுள்ள சொற்களைத் தொகுத்து அகராதி உருவாக்கிய முதன் முயற்சியி லிருந்து, களஆய்வு மூலமாகச் சொற்களைத் திரட்டி மொழியியல் அடிப்படையில் அமைந்த வட்டார வழக்குச் சொல்லகராதியை உருவாக்கும் பணி தமிழ் ஆய்வுலகம் செய்ய வேண்டிய ஒன்றாகும். இந்தப் பெரும் பணிக்குரிய குறிப்புகளை முன்னைய வட்டார அகராதி உருவாக்கத்தினர் நமக்கு விட்டுச்சென்றுள்ளனர். இதைத் தமிழ் ஆய்வாளர்கள் விரைந்து செய்ய வேண்டும். காலமும் சூழலும் மாறிக்கொண்டே இருக்கின்றன. சொற்களும் வழக்கிழந்துகொண்டே வருகின்றன.

துணைநின்றவை

1) பதிப்பாசிரியர் குழு. 2008. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (திருத்திய பதிப்பு) சென்னை: க்ரியா

2) பெருமாள் முருகன். 2000.  கொங்கு வட்டாரச் சொல்லகராதி, ஈரோடு: குருத்து வெளியீடு.

Pin It