மூவாயிரமாண்டு இலக்கிய இலக்கணப் பழமையும் தொடர்ச்சியான வரலாறும் கொண்ட தமிழ் இனத்தின், மொழியின் எழுச்சி என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில்தான் தோற்றம் பெற்றது. ஈராயிரமாண்டு ஆரிய மேலாதிக்கமும் எழுநூறு ஆண்டுக்கால அன்னிய அரசாட்சியும் ஆட்சி, அதிகார, பண்பாட்டு ஆதிக்கங்களால் தமிழகத்தில் வந்துபுகுந்த உருது, மராட்டி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் முதலான மொழிக்கலப்பும் பழந்தமிழர்களின் மொழி இன மாண்புகளை அடையாளந் தெரியாமல் சிதைத்துவிட்ட சூழலில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியில் நம்மவர்களுக்கு வாய்த்த மேற்கத்திய கல்வி மற்றும் சிந்தனைகளின் பரவலே தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது.

தமிழ் மறுமலர்ச்சி என்பது தொடக்கத்தில் தமிழ்மொழி குறித்த பெருமிதங்களைப் பதிவு செய்வதாகவும் ஆரிய, சமஸ்கிருத மேலாதிக்கத்தை மறுதலிப்பதாகவுமே கருக்கொண்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் (1856) இராபர்ட் கால்டுவெல் எழுதி வெளியிட்ட “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற மொழியாய்வு நூல் ஆரிய மொழியிலிருந்து வேறுபட்ட தனித்தன்மை வாய்ந்த தொன்மையான மொழிக்குடும்பம் திராவிட மொழிக்குடும்பம் என்ற கருத்தாக்கத்தினை முன்வைப்பதோடு அம்மொழிக் குடும்பத்தின் மூலமொழி தமிழே என்றும் நிறுவியது. கால்டுவெல்லின் ஆய்வினை மெய்ப்பிக்கும் வகையில் அந்நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உ.வே.சாமிநாதய்யர், சி.வை.தாமோதிரம் பிள்ளை முதலானவர்களால் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகச் சங்க இலக்கியங்கள் பதிப்பாக்கம் பெற்று வெளிவந்தன. சற்றேறக்குறைய இதே காலக்கட்டத்தில் சிந்துவெளி அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்பட்டு சர் ஜான் மார்ஷல், ஹீராஸ் பாதிரியார் போன்ற நடுநிலை ஆய்வாளர்களால் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்ற கருத்து வலிமையாக முன்வைக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் கருக்கொண்ட திராவிட மொழி, திராவிட நாகரிகம் முதலான சிந்தனைகளே இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலுப்பெற்றுத் தமிழ் மறுமலர்ச்சி இயக்கமாக மலர்ச்சி பெற்றது.

தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் வழியமைத்துக் கொடுத்தவர்களாக இராமலிங்க அடிகளார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற் கலைஞர் முதலான அறிஞர்களைக் குறிப்பிட முடியும். இவர்கள் தொடங்கிவைத்த தமிழ் மறுலர்ச்சி இயக்கச் சிந்தனைகளின் விளைவாகத் தோன்றிய இயக்கமே மறைமலையடிகளார் கண்ட தனித்தமிழ் இயக்கம். தமிழ் மறுமலர்ச்சி இயக்கம், தனித்தமிழ் இயக்கம் முதலான தமிழ் இயக்கங்களின் முழுமைபெற்ற வடிவமே இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்த்தேசிய இயக்கம்.

ஒரு மொழியின் மறுமலர்ச்சி என்பது அந்த மொழியைப் பேசும் மக்களின் தொன்மையான பண்பாட்டு அடையாளங்களை நினைவூட்டுவதோடு அந்த தேசிய இன விடுதலைக்கான உந்துசக்தியாகவும் செயல்படும். ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டில் உருவான தேசிய இனங்களின் மறுமலர்ச்சி, ஐரோப்பாவில் பல தேசிய அரசுகள் எழுவதற்கு வழிகோலின என்பதே வரலாறு தரும் உண்மை. ஆனால் தமிழகத்தில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உருவாகி மலர்ந்த தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனைகள் தமிழ்த் தேசிய இன விடுதலையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லவில்லை. கால்டுவெல் உருவாக்கிய திராவிட மொழிக்குடும்பம் என்ற கருத்துரு, தமிழ் மொழி, இன விடுதலையைக் கருவிலேயே தீய்த்துவிட்டது. தமிழகத்தில் தோன்றிய திராவிட இயக்கங்களும், திராவிட நாடு என்ற அபூதக் கற்பனையை முதலீடாக வைத்தே தமது அரசியலை நடத்தின. ஆரிய மாயையிலிருந்து மீட்டெடுத்த திராவிட மாயை அதினினும் மேலாக நம்மை ஆழக்குழியில் அழுத்தியது. திராவிட மாயையிலிருந்து இன்னமும் மீள முடியாதவாறு தமிழினம் சிக்கித் தவிக்கும் அவலமே இன்றைய உண்மைநிலை. ஆரிய மாயை, திராவிட மாயை இரண்டிலிருந்தும் தமிழினம் விடுபடவேண்டிய காலத்தின் கட்டாய நெருக்கடியில் நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு கைவிளக்கே துரை மாலிறையனாரின் தமிழ் எழுச்சி விருத்தம்.

பாவலர் துரை.மாலிறையன், மரபார்ந்த தமிழ்ப் புலமை மரபின் இன்றைய அடையாளம் என்ற பெருமைக்குரியவர். திருத்தக்க தேவர் தொடங்கிவைத்த விருத்தக் காப்பிய மரபுக்கு உயிர்கொடுத்த கவிச் சக்கரவர்த்திக் கம்பரின் பெயரர் இவர். நல்லாசிரியர் என ஊரும் நாடும் போற்றிப் புகழும் பெருமைமிகு பேராசானாகிய இவர் எழுதிய ஏழு காப்பியங்களும் பல நூற்றாண்டுகள் கழிந்தாலும் இவரின் பெருமை பேசும். அறக்கட்டளைகள் நிறுவி சமூகத் தொண்டாற்றுவதில் முழுஈடுபாடு காட்டும் பாவலர் அவர்கள், பகுத்தறிவுப் பகவலன் பெரியாரின் பெருந்தொண்டர் என்பதோடு மிகச் சிறந்த மனித நேய, மத நல்லிணக்க மாமணி என்ற சிறப்பிற்கும் உரியவர். அண்மையில் தமிழ் எழுச்சி குறித்த சிந்தனைகளைத் தொடர்ந்து எழுதிவரும் பாவலரின் ஒரே பெருவிருப்பு தமிழ் மொழி, இன விடுதலையே.

'தமிழ் எழுச்சி விருத்தம்' என்னும் இந்நூல் தமிழின் நால் வகைப் பாக்களின் இனங்களான தாழிசை, துறை, விருத்தம் முதலானவற்றுள் விருத்தம் என்ற பாவினத்தால் ஆனதோர் பாத்தொகுப்பாகும். பாடுபொருள் தமிழ் எழுச்சி என்ற ஒன்றே ஆயினும் பாடல் வடிவத்தால் வெளிவிருத்தம், ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், வஞ்சி விருத்தம் என்ற நால்வகை விருத்தப்பா இனத்தாலும் பல்வேறுபட்ட யாப்புக் கோர்ப்புகளாலும் கட்டப்பட்டுள்ளது இந்நூல்.

அகவற்பா, வஞ்சிப்பா, கலிப்பா, பரிபாடல் என்று தொடங்கிய பழந்தமிழ்ப் பாடல் வடிவங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வெண்பாவாக வளர்ச்சி பெற்றது. சிலம்பு படைத்த இளங்கோவடிகள் அகவல் பாவில் காப்பியம் செய்தாலும் பல புதிய இசைப்பா மற்றும் யாப்பு வடிவங்களுக்கும் தமது காப்பியத்தில் இடமளித்தார். பக்தி இலக்கியம் படைத்த நாயன்மார்களும் ஆழ்வார்களும் புதிய விருத்தப் பாக்களின் ஒலிநயம் மற்றும் நெகிழ்ச்சித் தன்மையால் ஈர்க்கப்பட்டு விருத்தப்பா வடிவினைப் பரவலாகக் கையாளத் தொடங்கினர். திருத்தக்க தேவரே விருத்தப்பாவை காப்பிய யாப்பாக்கிப் பெருமைப் படுத்தினார். அவரைத் தொடர்ந்து பன்னீராயிரம் பாடல்களை விருத்த யாப்பில் புனைந்து கவிச் சக்கரவர்த்தி கம்பர் விருத்தப் பாடல்களுக்குச் சாகாவரம் வழங்கினார்.

தொல்காப்பியர் தமது செய்யுளியலில் விருந்து என்பதோர் இலக்கிய வகைமையைச் செய்யுள் வனப்புகளில் ஒன்றாக அறிமுகம் செய்வார்.

விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே       (தொல். செய்: 231).

புதிதாகக் கட்டப்படும் செய்யுள் யாப்பினை விருந்து என்கிறது தொல்காப்பியம். விருத்தம் என்ற சொல் விருந்து என்ற சொல்லின் அடியாகத் தோன்றியது என்று கொள்வதே பொருத்த முடையது. பொருந்து- பொருத்தம் என்றாவது போல், திருந்து- திருத்தம் என்றாவது போல், விருந்து- விருத்தம் என்றானது. விருத்தம் என்பது தமிழ்ச் சொல்லே. விருத்தம் என்பதற்கு முதுமை என்று பொருள் கொண்டு அது வடசொல்லாகும் என வலிந்து பொருள் கொள்வது பிழையாகும்.

       பாவலர் துரை. மாலிறையன் அவர்கள் இந்நூலின் முன்னுரையில் தமது நோக்கம் குறித்து எழுதியுள்ள பகுதியினை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:

தமிழ் எழுச்சி விருத்தம்என்னும் இந்நூல் இக்காலத் தமிழர்களைத் தட்டி எழுப்பிவிடும் என்னும் நம்பிக்கை எனக்குச் சிறிதும் இல்லை. ஏன்? உங்களுக்கும் கூட இருக்காது என்பது எனக்குத் தெரியும். என்ன செய்வது? உள்ள உணர்ச்சிகளின் கொந்தளிப்புகள் எப்படியாவது வெளிப்பட்டே ஆதல் வேண்டும். அதற்கு ஒரு கருவிதான் தமிழ் உணர்வின் வழி வெளிப்படும் பாட்டுணர்வு. தற்காலத் தமிழ் நிலை என்னை எழுதத் தூண்டுகிறது. வாழும்வரை தமிழ் மக்கட்கு உணர்வெழுச்சிப் பற்றி எழுதிவிட்டு மறைவோமே என்னும் நோக்கம்தான் இந்த விருத்தப் பாக்களின் தோற்றம்.

தற்காலத் தமிழ்நிலை என்னை எழுதத் தூண்டுகிறது என்றும் உள்ள உணர்ச்சிகளின் கொந்தளிப்புகளே இப்பாடல்கள் என்றும் நூலாசிரியர் குறிப்பிடுவதிலிருந்தே இந்நூலின் நோக்கம் நமக்குத் தெளிவாகப் புலப்படும். தமிழ் எழுச்சி என்பது தமிழர்களுக்கான எழுச்சி, தமிழ் இனத்திற்கான எழுச்சி, தமிழடிமைத் தனத்திற்கு எதிரான எழுச்சி, தமிழ்நில மீட்சிக்கான எழுச்சி என்பதனைப் பாவலர் பாடல்கள் தோறும் நம்மை நாடியும் சாடியும் எழுதியுள்ளார்.

தமிழ் எழுச்சி விருத்தம் மூன்று நிலைகளில் தமிழர்க்கு எழுச்சி ஊட்டுகின்றது. இந்நூலில் ஆசிரியர் எடுத்துரைக்கும் கருத்துக்களின் அடிப்படையில் இந்நூலின் பாடல்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

  1. காக்கும் பாக்கள்
  2. தாக்கும் பாக்கள்
  3. ஆக்கும் பாக்கள்

காக்கும் பாக்கள்: தமிழரின் பழம் பெருமைகளையும் நாடாண்ட சீர்த்தி மற்றும் கீர்த்திகளையும் மொழியின் வளப்பங்களையும் தமிழ்ப் பண்பாட்டின் மேன்மைகளையும் கைவிடாது காப்பாற்றுமாறு வேண்டிக் கொள்ளும் பகுதிகள் இவ் வகைப்பாட்டில் அடங்கும்.

அறம்பொருள் முதல்என அருள்திருக் குறளை

நிறம்இனம் மொழிபல நிலையினர் எவர்க்கும்

உறுநலம் தருகிற உயர்தமிழ் மறையைத்

தருதமிழ் வளத்தினைத் தலைவணங் கிடுவோம்.

தாக்கும் பாக்கள்: தமிழன் வடமொழி, ஆங்கிலம் முதலான பிறமொழியின் மீதும் பண்பாட்டின் மீதும் மோகம் கொண்டு தமிழ்மொழி, இன உணர்வற்று அடிமையாய், பேதையாய், பித்தனாய்த் திரியும் நிலைமையைத் தாக்கிக் கடிந்துரைக்கும் பாடல்கள் இவ் வகைப்பாட்டில் அடங்கும்.

       அஞ்சியே தாழ்வான் எவர்க்கும்

அடங்கியே வாழ்வான் எதற்கும்

கெஞ்சிக் கிடப்பான் உரிமை

கேட்கத் தயங்கிப் பிறர்கை

நஞ்சும் கொடுத்தால் குடிப்பான்

நலங்கள் யாவும் விடுப்பான்

எஞ்சும் புகழை இழப்பான்

எவன்சொல் அவன்தான் தமிழன்

ஆக்கும் பாக்கள்: தமிழை வளர்க்க, தமிழன் எழுச்சியுற, தமிழ்நிலம் மீட்சிபெற நாம் இனி செய்ய வேண்டியன யாவை என்ற சிந்தனையும் இன்றைய நவீன அறிவியல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ் நிலைபெற மேற்கொள்ள வேண்டிய ஆக்க பூர்வமான பணிகள் மற்றும் அணுகுமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கும் பாடல்கள் இவ் வகைப்பாட்டில் அடங்கும்.

ஆளவந்தார் தமிழாலே ஆள வேண்டும்

அருந்தமிழை ஒழிக்குமனம் மாள வேண்டும்

நீளவந்த பகைஎவையும் நீங்க வேண்டும்

நீக்கமறத் தமிழ்எங்கும் ஓங்க வேண்டும்

சூள்அமைந்த தமிழ்எழுச்சிப் பொங்க வேண்டும்

சுற்றிஎழும் ஏய்ப்புநிலை மங்க வேண்டும்

வாள்அமர்ந்த மறவர்போல் தமிழர் வேண்டும்

வளமார்ந்த தமிழ்க்கெனவே வேண்டு நெஞ்சே!

இந்நூற் பாடல்களைக் காக்கும் பாக்கள், தாக்கும் பாக்கள், ஆக்கும் பாக்கள் என வகைப்பாட்டு நோக்கில் மூன்றாகப் பகுத்தாலும் மூன்று பொருண்மைகளும் பெரும்பாலான பாக்களில் ஒன்றோடு ஒன்று பொருள்நிலையில் பின்னிப் பிணைந்தே பாடப்பட்டுள்ளன என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். பாடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் மிகுதியான பாடல்கள் தாக்கும், ஆக்கும் பொருண்மைகள் கலந்தே அமைந்துள்ளன.

       பாவலர் துரை. மாலிறையனாரின் பேச்சும் மூச்சும் தமிழால் நிறைந்தது என்பதனை நூலின் பக்கங்கள் தோறும் நாம் கண்டுணர முடியும். ஏன்? நாம் தாய்மொழியின் நலம்நாடுதல் வேண்டும் என்பதற்கு ஒரு பாடலில் விடை தருகின்றார்.

தம்மொழி தாழ்வுற வாழ்வுறல் இனிமையோ?

தாய்நிலம் அதை ஏற்குமோ?

தாய்மொழி இன்றியார் தரையிலே வாழ்பவர்?

தாமிதை எண்ணி டாரோ?

தாய்மொழி இல்லாமல் நாம் உலகில் வாழ இயலுமா? நம்முடைய மொழிதானே நம் அடையாளம்? அடையாளத்தை இழந்து மனிதன் வாழ முடியுமா? மொழி அழிந்தால் நமது அறிவுத் தொகுதிகள் அனைத்தையும் இழந்து விடுவோமே. பல்லாயிரம் ஆண்டுக்காலத் தமிழனின் சிந்தனையும் பண்பாடும் அழிந்து போகுமே அதை உணரவில்லையா நீ? என வினாக்களை அடுக்கிக்கொண்டே போகிறார். உணர்ச்சி யூட்டல்தான் பாக்களின் முதன்மை நோக்கம் என்றாலும் இத் தொகுதியின் மிகுதியான பாடல்கள் நம்மை அறிவு பூர்வமாகச் சிந்தித்துச் செயலாற்றவும் முடுக்குகின்றன என்பது இத் தொகுதியின் தனிச்சிறப்பு.

       மொழியை வாழ்த்துவதே மொழி வளர்ச்சிக்கான ஒரே வழி என்று கருதிக் கொண்டிருந்த பழைய பார்வையிலிருந்து விடுபட்டு மொழி வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான அணுகுமுறைகளோடு முந்தைய பெருமைகளைச் சுட்டிக்காட்டி, இன்றைய இழிநிலையைக் கடிந்து இடித்துரைத்து நாளைய வளர்ச்சிக்கான தேவைகளை வலியுறுத்தி அதற்கான பாதை மற்றும் பயணத்தின் சவால்களை எடுத்துரைத்து, பாவேந்தரின் தமிழியக்கம் போல் தன்னளவில் ஒரு புதிய தமிழியக்கமாகப் படைக்கப்பட்டுள்ள இந்நூல் தமிழ் வளர்ச்சிக்கு ஒருகையேடு என்றால் அது மிகையன்று.

அழிந்துவரும் பல மரபுப்பாடல் வடிவங்கள் இந்நூலில் புதுவாழ்வு பெற்றுள்ளன. குறிப்பாக வஞ்சி விருத்தம், வெளி விருத்தம் முதலான விருத்த வகைகள் இந்நூலில் இடம்பெற்றுள்மை பாராட்டுக்குரியது.

  1. தமிழ் எழுச்சிக் குறள்
  2. தமிழ் எழுச்சி ஆத்திசூடி
  3. தமிழ் எழுச்சி முழக்கம்
  4. எழுச்சித் தமிழ்இயக்கம்
  5. எழு இளந்தமிழா
  6. தமிழ் எழுச்சி விருத்தம்

என்று தொடர்ச்சியாகத் தமிழின் எழுச்சி, தமிழனின் எழுச்சிக்காகப் பாடல்களைப் படைத்துவரும் நூலாசிரியர் தமிழ்மாமணி துரை. மாலிறையன் அவர்கள் தமிழுக்கு வாய்த்ததோர் தகைசால் மாமணி. மூச்சுள்ளவரை தமிழுக்காகவே எழுதுவேன், பேசுவேன் என்ற உறுதி பூண்டு அவர் ஆற்றிவரும் தமிழ்ப்பணி அளப்பரியது. இவரின் பெரும்பாலான நூல்கள் பரிசும் பாராட்டும் விருதுகளும் பெறுகின்றன என்றாலும் இவர் விருதுகளுக்காக எழுதுகின்றவர் இல்லை. தமிழின எழுச்சி, மீட்சியைத் தவிர வேறொன்றையும் எதிர்பார்த்து இவர் எழுதுவதில்லை. தன்னலம் கருதாது மொழிநலம் கருதுகின்ற துரை. மாலிறையன் போன்ற பாவலர்கள் வரலாற்றில் அரிது. தக்கவர்களைத் தகுதியறிந்துப் போற்றிப் பாராட்டிக் கொண்டாடுவதுதான் நமக்கான கடமை. இந்நூலையும் நூலாசிரியரையும் பாராட்டுவோம், கொண்டாடுவோம்.

முனைவர் நா.இளங்கோ, தமிழ்த் துறைத் தலைவர், தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி