tamil oldமேற்படி காட்டப்பட்டுள்ள ‘யதேச்சை' என்னும் சொல் பெருவழக்காக சமூகத்தில் உள்ளது.

நான் ‘யதேச்சையா’ போனேன், வந்தேன், செய்தேன், பேசினேன் என பல சொல்லாடல்களைக் கூறலாம்.

இது தமிழ்ச் சொல்லன்று. இதற்கு தமிழில் ‘தற்செயல்’ என பொருள்படும். இது வட மொழியிலிருந்து வந்துள்ளது.

‘ஆசீவக’ கோட்பாடுகளை வகுத்தவர்களில் ஒருவரான ‘பூரணர்’ எனும் அறிஞர், வினை மறுப்புக் கோட்பாடு என்பதே ‘தற்செயல் கோடுபாடுதான்’ என்கிறார்.

இத்தற்செயல் கோட்பாட்டை, வடமொழியாளர் "யதிருட்டாவாதம் அல்லது யதிருச்சவாதம்" என்கின்றனர் என பேராசிரியர். க.நெடுஞ்செழியன் 'ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்' எனும் தன் நூலில் குறிப்பிடுகிறார்.

மேலும், எல்லாம் தற்செயலாக நடைபெறுகின்றன என்று கூறுபவர்கள் 'யதிருச்சவாதிகள்' என ‘சரக சம்கிதை’ கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

‘யதிருச்ச’ என்னும் இவ்வடசொல் திரிந்து தமிழிலில் ‘யதேச்சை’ என புழக்கத்திற்கு வந்துள்ளது என்பதை நாம் அறியலாம்.

‘சிலப்பதிகார காப்பியம்’, தற்செயல் கோட்பாட்டினடிப்படையில்தான் இளங்கோவடிகள் எழுதியுள்ளார், ஊழினடிப்படையில் எழுதப்பட்ட காப்பியமன்று எனக் கூறி, அக்காப்பியத்திலிருந்து சில சான்றுகளையும் காட்டியுள்ளார்; மேற்படி நூலில் பேராசிரியர். அவற்றை முழுமையாக அறிய அந்நூலைப் படிக்க வேண்டும்.

நானும் அந்நூலை ‘யதேச்சையாக’ படித்ததால்' இவையாவும் எனக்கு தெரியவந்தது. மற்றவர்கள் ‘தற்செயலாகப்’ படிக்கலாமே!

- ப.தியாகராசன்

Pin It