doctorate india

இன்று, படித்தவர்களில் ‘முனைவர்’ பட்டம் பெற்றவர்கள் பலர் உள்ளனர்.

இந்தியாவை பொறுத்தமட்டில் ‘IAS’ என்பதுதான் உச்சம். குறிப்பிட்ட பாடங்களைப் படித்து பெறும் பட்டமல்ல; இஃது. பலவற்றையும் படிக்க வேண்டும். வேலைக்கான போட்டித்தேர்வு எழுதி, அதற்காக தரப்படுகின்ற ஓர் அடைமொழி எனவும் இதைக் கூறலாம். அவர்களிலும் சிலர் முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருப்பர்.

இது கருப்பொருள் ஒன்றில் தோய்ந்து, அதன் வழியில் சென்று, அதனை நிலை நிறுத்தும் பொருட்டு,அதன் நுண்மை கண்டறிந்து சொல்வது.

அக்கருத்து பிறரால் முன்னரே சொல்லப்படாதிருத்தல் வேண்டும். அவ்வாறு செய்வோர் எத்துறையினராயினும் அவர்களுக்கு ‘Ph.D’ என்ற பட்டம் கொடுக்கப்படும்

அதாவது Doctor of philosophy என்பதன் சுருக்கம். Doctorate எனவும் சொல்லப்படுகிறது. Ph.D, Doctorate என்பதெல்லாம் ஆங்கிலத்தின் தாக்கம். அப்பட்டம் பெற்றோர் தன் பெருக்கு முன்னொட்டாக Dr. என குறிப்பிட்டுக் கொள்வர்.

இது Doctor எனப்படும் மருத்துவரை, Dr. என சுருக்கி சொல்வதன் வெளிப்பாடு.

தமிழ்த்துறையில் தோய்ந்தவர்களையும் அவ்வாறு விளிப்பது பொருத்தமன்று என சிந்தித்தனர். அக்காலம் தனித் தமிழியக்கம் தழைத்தோங்கிய காலம்.

அக்காலட்டத்தில் பாவாணர், ‘பண்டாரகர்’ என்ற சொற்கொண்டு விளித்தார். இது பண்டாரச் சொல்லாக தெரிகிறது என்றனர்.

சிலர் தங்கள் பெயருக்கு முன் பண்டாரகர் என்பதை சுருக்கி ‘பர்’ என பதிந்தனர். இது Dr.என்பது போலாகும். பண்டாய நான்மறை என்ற தொடர் திருவாசகத்தில் உள்ளது.

அவ்வாசகத்தின் வாசனை அறியாதவர்கள் அவ்வாறுதான் சொல்வர். பின்னர்தான் ‘ முனைவர்’ என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. ஆய்வை முனைந்து செய்து அரிய கருத்தைச் சொல்வதால் முனைவர் என்றனர்.

இஃது இயைபாக உள்ளது. அவ்வளவே. இச்சொல்லுக்கு முன்னோடி 'தொல்காப்பியர்’ எனக் கூறலாம். அவர்தான் தொல்காப்பியம், பொருள் அதிகாரத்தில், மரபியலில் "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் ‘ முனைவன்’" எனக் கூறுகிறார்.

வினை மறுப்பைப் பற்றி கூறுகின்ற தொல்காப்பியர், வினை நீக்கக் கூடியது என்றும், அவ்வாறு வினை நீக்கிய அறிஞர்கள் வினையினின்று நீங்கியவர்களாக – முனைவர்களாக - முதல்நூல் ஆசிரியர்களாக - மதிக்கப்பட்டனர் என்பதற்காகத்தான், மேற்படி தொல்காப்பிய நூற்பாவை, மேற்கோள் காட்டுகிறார் பேராசிரியர், க.நெடுஞ்செழியன் "ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்" என்னும் நூலில்.

"முனைவன் கண்டது முதன்மை நூலாகும்" எனவும் தொல்காப்பியர் குறிப்பிடுவதாக, பூண்டி புட்பம் கல்லூரியில் பணியாற்றி பேராசிரியர், பா.இறையரசன் கூறுகிறார்.

ஆக, முனைவர் என்பது முந்துநூல் கண்டவர்களுக்கு வழங்கப்படும் பட்டம் என்பதையும், அனைத்திற்கும் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது என்பதையும் உணர்வோம்.

ஆனால், ‘கௌரவ டாக்டர்’ பட்டம் எவ்வாறு வந்தது?

அப்பட்டம் பெற்றோரை, ‘பண்டாரகர்’ அல்லது ‘முனைவர்’ என்று எவ்வாறு நாம் விளிக்க இயலும்?

அவர்கள் டாக்டராக இருக்கட்டுமே!.

- ப.தியாகராசன்

Pin It