Regional magazinesசிறுபத்திரிக்கைகள் குறித்து பேசுவதும்.. கலந்துரையாடுவதும்... காலத்தின் தேவை என்றே கருதுகிறேன். ஏனென்றால் சமூகத்தின் ஓர் அங்கமாகவே தான் சிறு பத்திரிக்கைகள் இருக்கின்றன. மனிதன் தன்னை தொடர்ந்து பண்படுத்திக் கொண்டே இருக்க கலை இலக்கியம் மிக அவசியம். அந்த கலை இலக்கியத்தின் முக்கியமான வடிவம் தான் சிறு பத்திரிக்கைகள் என்று நம்புகிறேன்.

முதன் முதலில் ஆனந்த விகடனில் தான் எனது கவிதை வெளி வந்தது. எழுதி எழுதி நிறைந்து கிடக்கும் ஒருவனுக்கு பத்திரிக்கை வெளி மிக தேவையான ஒரு வடிகாலை உருவாக்குகிறது என்று தான் சொல்வேன்.

ஆனால் அதையும் தாண்டி தொடர்ந்து இலக்கியத்தில் இருக்கும் போது வெகு ஜன பத்திரிக்கைகளின் கோலோச்சும் தன்மையும்... சிறு பத்திரிக்கைகளின் அறிவு தேடலின் உண்மையும் புரிய வரும்.

அதன் பிறகு குமுதம்... குங்குமம்... பாக்யா என்று வணிக பத்திரிக்கையில் வெளி வர ஆரம்பித்தது. மனம் நிறைந்து மீண்டும் மீண்டும் எழுதிக் குவித்தேன். பிறகு தான் என் பார்வை... தாமரை இதழ் மீது விழுந்தது. அதற்கும் அனுப்பினேன். அங்கும் கவிதை மட்டுமல்லாமல் கட்டுரையும் சேர்ந்து வெளி வர ஆரம்பித்தது. அப்படியே கணையாழிக்கும் அனுப்பினேன். அதில் கவிதை கட்டுரையோடு சேர்த்தி... குறுநாவல்... சிறுகதை என்று இதோ போன மாதம் வரை வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றன.

பிறகு காக்கை சிறகினிலே.. அச்சாரம்.. அத்திப்பூ... சுவடு.. திணை என்று ஆங்காங்கே இருக்கும் சிறு பத்திரிக்கைகளில் வெளி வந்தபடி இருக்கின்றன.

என்னை பொறுத்த வரை... வளர்ந்து வரும் எழுத்தாளனுக்கு சிறு பத்திரிக்கையின் பங்கு மிக அலாதியானது. ஆழம் காண சொல்வது சிறு பத்திரிக்கைகள் தான்.

அடிப்படை வாதத்தில் இருந்து விலகி வேறொரு கோணம் காண செய்வது சிறு பத்திரிகைகள் தான். மேம்போக்காக நுனிப்புல் மேய்தல் சிறு பத்திரிக்கையில் நிகழாது.

என்னையே எடுத்துக் கொண்டால்... வணிக பத்திரிகைகளுக்கு எழுதும் போது என் தரத்துக்கு எழுத முடியாது. இன்னும் கொஞ்சம் என்னை குறைத்துக் கொண்டு.. எழுதினால் தான் அவர்கள் அதை பிரசுரம் செய்கிறார்கள். ஆனால் சிறு பத்திரிக்கைகளில் என் மொழி நடையில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்ததில்லை.

வணிக பத்திரிக்கைகளில் ஏற்கனவே ஓரளவுக்கு பிரபலமானவர்கள் பற்றி தான் அதிக செய்திகளோ இன்பார்மேஷனோ வருவதை நாம் காண்கிறோம். இப்போது வரை சில முக்கிய முன்னணி வணிக பத்திரிக்கைகளில்... புதிதாக சிறுகதைகள் எழுத வரும் ஆட்களுக்கு வாய்ப்பு கொடுத்த மாதிரி தெரியவில்லை.

ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டுமே திரும்ப திரும்ப எழுதுகிறார்கள். பலபோது அது மொக்கை போடுகிறது என்பது தனி கதை. ஆனால் சிறு பத்திரிக்கை எழுத்து தரமாக இருக்கும் பட்சத்தில்... அவன் புதியவனா.. பழையவனா... தெரிந்தவனா... சொந்தக்காரனா.. நண்பனா என்றெல்லாம் பார்ப்பதில்லை.

எழுத்து சமூகத்துக்கு எதுவோ சொல்கிறது என்று தெரிந்தால்... பிரசுரம் செய்து விடுகிறார்கள். படைப்பு சுதந்திரத்தை சிற்றிதழ்கள் செய்கின்றன என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்ததால் திடமாக கூற முடிகிறது. (சிறு பத்திரிக்கையிலும் ஆங்காங்கே க்ரூப்பிசம் இருக்கிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.)

இன்னொரு விஷயம் சிறு பத்திரிக்கைகளில் எனக்கு பிடித்தமானது... உலக இலக்கியங்களின் மொழி பெயர்ப்பு வருவது. அப்படித்தான் ரஷ்ய இலக்கியம் என்னை வந்து சேர்ந்தது. அப்படித்தான் காஃப்காவும் காம்யூவும்... வந்தடைந்தார்கள்.

வணிக பத்திரிக்கைகளில் பெரும்பாலைய பக்கங்களை சினிமா செய்திகள் பிடித்துக் கொள்ள... மிச்சம் இருப்பதில் தான் மற்றவை இருக்கின்றன. அந்த பிசினெஸ் சிறு பத்திரிக்கைகளில் இல்லை. தரமான சினிமாவுக்கென்றே சிறு பத்திரிக்கை இயங்குவதை நாம் அறிவோம். படைப்பும் வாசகனும் மிக நெருக்கமாக சந்தித்துக் கொள்ளும் துல்லியத்தை சிறு பத்திரிக்கைகள் சாத்தியப்படுத்துகின்றன. தேர்ந்த சிறு பத்திரிக்கைகள் வாழ்வின் அனுபவத்தை மிக நேர்த்தியாக வாசகனுக்கு கடத்தி விடும்.

அரசியல் பார்வையை... சமூக பார்வையை... சினிமா பார்வையை... இலக்கிய பார்வையை சிறு பத்திரிக்கைகளே என்னில் மாற்றி அமைத்தன... என்று பெருமையாக சொல்லிக் கொள்ள முடியும்.

நகுலன்... தேவதச்சன்... தேவ தேவன்... லாசரா... ஞானக்கூத்தன்… M.V வெங்கடராமன்... மெளனி... தி. ஜா… கு. பா. ரா.... கரிச்சான் குஞ்சு... இந்திரா பார்த்தசாரதி... ஜி நாகராஜன்.. இன்னும் எழுத்து முன்னோடிகள் பலர்... எல்லாரும் எனக்கு சிறு பத்திரிக்கை மூலமாகவே அறிமுகம் ஆனார்கள்.

ஏன் சிற்றிதழ்களின் தேவை இன்னமும் நம் சமூகத்து தேவையாய் இருக்கிறது என்று யோசிக்க யோசிக்க... இந்த மானுட சமூகத்தை பண்பட்ட சமூகமாக தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்கும் வேலைகளை செய்யும் மிக முக்கியமான இடத்தில் சிற்றிதழ்கள் இருக்கின்றன என்று புரிகிறது.

வார்த்தைகளை மடக்கி போட்டு அதை கவிதை என்பது... நிகழ்வை அப்படியே அடுத்தடுத்து எழுதி... இறுதி வரியில்.. கிறுக்குத்தனமான ஒரு வரியை சேர்த்து அதை கவிதை என்பது... இது போன்ற மொக்க கவிதைகளை சிற்றிதழ்கள் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. தகுதி இருந்தால் தான் சிறு பத்திரிக்கைக்குள் வர முடியும்.

சிற்றிதழ்கள் படித்து முடிக்கையில் நமக்கு ஒரு கன்டென்ட் கிடைத்திருக்கும். நான் குறைந்த பட்சம் ஒரு நான்கு கவிதைகளாவது எழுதி இருப்பேன். அப்படி ஒரு திறவு சிறு பத்திரிக்கை மூலமாக கிடைப்பதை நான் வெகு நுட்பமாக அறிந்திருக்கிறேன்.

கிறுக்குத்தனம் தான் கவிதை என்று தொடர்ந்து புரிந்து கொள்ளும் சூழலில்.. கவிதை என்பது நிதானம் என்று புரிய வைத்தது சிற்றிதழ்கள் தான்.

அதே நேரத்தில்... சிற்றிதழ்கள் இயல்பாக இருப்பதில்லை. சிற்றிதழ்களைக் கையாள்வோர் தங்களை ஒருவகை மேட்டிமைத் தனத்துக்கு ஆட்படுத்திக் கொள்கிறார்கள் என்ற குற்றசாட்டும் இருக்கிறது. எல்லாவற்றிலும் விலக்கு இருக்கும் தானே.

சிற்றிதழ்களிலும்... ஆங்காங்கே ஓரிரு உதாரணங்கள் மேற்சொன்னவைகளில் இருக்கலாம். மற்றபடி பொதுவாக சிற்றிதழ்கள் புரிவதில்லை. எளிமையாய் இல்லை என்று சொல்வதெல்லாம் நொண்டி சாக்கு.

புரியவில்லை புரியவில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி புரியும். புரிய முற்பட்டு தொடர்ந்து இயங்குகையில்... புரியாமல் எதுவும் போகாது என்பது மீண்டும் என் அனுபவத்தில் இருந்தே நான் நம்பும் கருத்து.

சிறு பத்திரிக்கை நடத்துவது அத்தனை எளிதான காரியம் அல்ல. ஒவ்வொரு பகுதியும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.... அதே சமயம்... சுவாரஷ்யம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாகரீமும் இருக்க வேண்டும். அதில் நவீனமும் கலந்திருக்க வேண்டும்.

அட்டைப்படத்தில் இருந்து.. எண்டு கார்ட் வரை.. பரபரவென அறிவு பூர்வமான விஷயங்களை சேர்த்து அசல் இலக்கியத்தை வாசகனுக்கு மடை மாற்றி விடுவது மிக ஈடுபாட்டுடன் செய்ய வேண்டிய பணி.

பொழுது போக்க படிப்பது அல்ல சிறு பத்திரிக்கை. சிறு பத்திரிக்கை பொழுதை ஆக்க படிப்பவை.

- கவிஜி