ஏரியைக் கண்ட மகிழ்ச்சியில் வண்டி கீழ்நோக்கிச் செல்லும் சாலையில் மெதுவாய்ச் சென்றது. ஏரியின் நுழைவு வாயிலை அடைந்து, அதன் பிரமாண்டத்தைக் கண்டு வியந்து நின்றோம். அதோடு மட்டுமில்லாமல் இங்கிருந்து வெளிநாடுகளின் தூரத்தைக் குறிப்பிட்டிருந்த மைல்கல்லானது, எங்களை மேலும் வியக்க வைத்தது. அவ்வாறே முன்பதிவு செய்திருந்த கூடாரத்தைச் தேடிச் சென்றோம்.

kashmir milestoneதூரத்தில் சில கூடாரங்களும், வலதுபுறத்தில் சில கூடாரங்களும் இருந்தன. எங்களுக்கு எங்கு செல்வது எனத் தெரியாமல் சிறிது நேரம் அங்கேயே களைப்பாறினோம். பழனி அண்ணன் வலதுபுறத்திலுள்ள கூடாரங்களுக்குச் சென்று விசாரித்து வருவதெனச் சென்றார்.

ஏறக்குறைய அரைமணி நேரத்திற்கு பின்னர் திரும்பி வந்து, “தம்பி பக்கத்துல இருக்க மாதிரி இருக்கு, போனா போயிட்டே இருக்கு” என வியந்து கூறினார்.

ஆம், தூரங்கள் ஆகாயத்திலும் கடலிலும் தொலைந்து போகின்றன.! அதேபோல் மலைகளிலும் இவ்வாறான ஏரிகளிலும் அருகிலிருப்பதைப்போல் தென்படும் யாவும் மிகத் தூரமானவையே..!

இக்கரடுமுரடான பாதை பாங்மிக் என்னுமிடத்திற்கு செல்கிறது. இது ஏரியின் நுழைவு வாயிலிருந்து ஏறக்குறைய 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அடுத்த அரைமணி நேரத்தில் நாங்கள் அங்கு சென்று, தங்கும் விடுதியைக் கண்டறிந்தோம்.

வழக்கம் போலவே ஆரம்பித்தது பிரச்னை..!

kashmir lake 1ஆம்..! நாங்கள் ஏரியை நோக்கி அமைந்துள்ள கூடாரத்தை முன்பதிவு செய்திருந்தோம். அவர்களோ, " அதுவெல்லாம் ஆட்கள் வந்துவிட்டார்கள்" என பொய் கூறினார்.

இந்தி தெரிந்த பழனி அண்ணனும் கிரியும் சும்மா விடுவார்களா..?

நுழைந்து விட்டனர் கூடாரத்தினுள்! இறுதியாக சண்டையிட்டு முன்பதிவு செய்திருந்த இரு கூடாரத்தினுள் மூன்று மூன்று பேராக பிரிந்து மெத்தையில் விழுந்தோம் பயணக் களைப்பில்...! ஆதிக்கு களைப்பு, பசி, குளிர் என எதுவும் கிடையாது. உடனே ஏரிக்கு செல்வோம் என கிளம்பினான். என்ன செய்வது..!

பயணக் களைப்பும், குளிரும் நம்மைத் தூங்க வைத்துவிடும் என எண்ணி, ஏரிக்குச் செல்வதெனத் தயரானோம். ஏரியின் மாலை நேர மாயாஜாலங்கள் ஆரம்பித்தன.

ஏரியின் நீர் அடர் நீல நிறமாகக் காட்சியளித்தது. அனைவரும் குதூகலத்துடன் ஏரியை நோக்கிச் சென்றோம். ஏரியின் ஓரத்தில் கிடந்த கூழாங்கற்களை மெல்லிய அலைகள் நனைத்து நனைத்து குளிக்கச் செய்தது. அதனால் தான் என்னவோ மிக வெண்மையாய்க் கிடக்கிறது இந்தக் கற்கள்..!

kashmir lake 2ஏறத்தாழ அரைமணி நேரமாக புகைப்படம் எடுத்துக் கொண்டும், கரையில் அமர்ந்தும் மாலை நேரப் பொழுதை இனிமையாகக் களித்தோம். சூரியன் மறைய மறைய குளிரின் ஆதிக்கம் கூடியது. கூடாரத்தினுள் சென்று இழுத்துப் போர்த்தி தூங்கணும் போலிருந்தது.

நாங்கள் தங்கியிருந்த கூடாரங்கள், கோடை காலத்தில் மட்டுமே நான்கு மாதங்கள் தற்காலிகமாக அமைக்கப்படுகின்றன. குளிர்காலங்களில் இப்பகுதியில் -22 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதால், மொத்த ஏரியும் உறைந்து விடுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் வாகனங்களை ஏரியின் மீது ஓட்டி மகிழ்கின்றனர். இணையத்திலும் இதைபோன்ற காணொளிகளைக் காண முடிகிறது. குளிர் காலத்தில் இங்கு செல்வது, நமது உடலிற்கு மிகவும் ஆபத்தான விளைவை ஏற்படுத்தக்கூடும். அதையும் மீறிச் செல்லும் நபர்களை ஆச்சரியமாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

இரவு வர வர குளிரின் தாக்கம் கூடியது. சிற்றுண்டிகளை உண்டுவிட்டு இரவு உணவு வேண்டாமெனக் கூறிவிட்டு தூங்கினேன்.

நண்பர்கள் சிலர் வழக்கம் போல குளிருக்கு இதமாக பானங்களை குடித்து, இரவு உணவு உண்டு தூங்கச் சென்றனர். தூக்கம் விரைவாக வரவில்லை..!

இன்றைய பயணத்தின் கண்ட காட்சிகள் அனைத்தும் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. பாங்காங் ஏரியின் அருகில் நாம் தூங்குகிறோம் என்று நம்ப முடியாமல் தூக்கம் வந்தது.

பயணத்திற்கு திட்டமிடும் போது, பார்க்கும் இணையதளப் புகைப்படங்களை, சில நாட்களில் நேரில் சென்று பார்க்கும் போது, மெய்யாய் உணர்வதற்கு சற்று தாமதமாகும். அதுதான் எனக்கும் நடந்தது..!

அழகான காலை வேளை வந்தது 4.30 மணிக்கே..! எழுந்து சிறுது வெளியில் வரலாம் என நினைத்தால் நள்ளிரவுக்குளிர் இன்னும் விடுவதாய்த் தெரியவில்லை.

அதுமட்டுமில்லாமல் இங்கு ஒளி மாசுபாடு என்பது இல்லாததால் பால்வெளி அண்டத்தை புகைப்படமெடுக்கும் எண்ணமும் எனக்கிருந்தது. ஆனால் அதற்காக முன்னேற்பாடு மற்றும் சரியான உபகரணங்கள் இல்லாததாலும், குளிரின் தாக்கத்திலும் தூங்கிப் போனேன் என்று தான் சொல்ல முடியும்.

நாள் 6

காலை நன்றாய் விடிந்தவுடன், கூடாரத்தின் வாயிலில் அமர்ந்து ஏரியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.

kashmir lake 3134 கிலோமீட்டர் நீளமும் 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டு, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பொதுவானதாய் அமைந்துள்ளது. ஏறத்தாழ ஏரியின் 60 விழுக்காடு சீனாவின் பக்கம் உள்ளது. இருப்பினும் இந்தியாவிலுள்ள ஏரியின் அமைப்பு மிக அகலமாக இருக்கின்றது. இதன் அதிகபட்ச ஆழம் 100 மீட்டர். ஏரியின் உப்பு தன்மை மிக அதிகம். விஷால் நடித்த வெடி படத்தின் "என்ன ஆச்சு " பாடலில் இவ்வேரியின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

காலையில் எழுந்து அனைவரும் கிளம்பி, உணவு உண்டு, ஹிமாலயன் வண்டியை விரட்ட ஆரம்பித்தோம். காலநிலை சற்று மோசமாகத்தான் இருந்தது. இருப்பினும் எங்கள் பயணம் திட்டமிட்டவாறு சென்று கொண்டிருந்தது. நேற்று நாங்கள் வந்த பாதை அல்லாமல் மற்றொரு சாலை ஒன்று மலைகளை ஒட்டி இருப்பது எங்களுக்கு முந்தய நாள் இரவு தெரிய வந்தது. சாலை நன்றாக மலையை ஒட்டி இருந்தததால், ஏரியை சற்று உயரமான இடத்திலிருந்து ரசித்துக் கொண்டே சென்றோம். ஆனால் சிறிது கவனம் சிதறினாலும், சரிந்து கொண்டு உப்புநீரில் மூழ்கிட நேரிடும்.!

kashmir lake 4ஆதலால், ஆதி அதி கவனமுடன் வாகனத்தை செலுத்த, நான் ஏரியை புகைப்படமெடுத்துக் கொண்டே வந்தேன்.

சில நிமிடங்களில் ஏரியின் நுழைவு வாயிலை அடைந்தோம். மேகக்கூட்டங்கள் அதிகரித்ததால் குளிர் வாட்டியது. “சென்று வருகிறோம்..!” என ஏரிக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு, லே செல்லும் வழியில் சென்று கொண்டிருந்தோம்.

நேற்றய பொழுதில் மணல் மேடுகளாய்க் காட்சியளித்த சாலைகள் இன்று அமைதியாய் இருந்தன. அதன் பின்னர் சிறு புல்வெளி நிலங்கள் தென்பட்டன. ஆங்காங்கே இமாலயன் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. வண்டி நிறுத்தப்பட்டு தரையோடு தரையை படுத்து, மாடுகள் புற்களை கடித்து மேயும் காட்சியைப் படமெடுத்தேன். கோரைப்புற்கள் என்னுடைய மூன்றடுக்கு ஆடையைத் துளைத்து உடம்பில் ஊசி போல் குத்தியது.

kashmir bullஇருப்பினும் இடைவிடாமல் எனது பணியை முடித்து, பயணம் மீண்டும் ஆரம்பமானது.

பள்ளத்தாக்குகளில் ஆங்காங்கே கூடாரமிட்டு ராணுவ முகாம்களில் வெளியே எழுத்துத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. சில இடங்களில் குழந்தைகள் பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள்.

லே செல்ல நாங்கள் மீண்டும் நேற்று வந்த வழியாக துர்புக் வரை சென்று, அங்கிருந்து சக்தி, காரு என 223 கிலோமீட்டர் பயணத்தை இன்றைய இலக்காக நிர்ணயித்தோம்.

வண்டி இடைநில்லாமல் துர்புக் வரை சென்றது. பிறகு அனைவரும் சேர்ந்து தேநீர் அருந்தி, இடப்புறமாக பிரிந்து செல்லும் லே சாலையில் வேகத்தைக் கூட்டி பறந்து சென்றது.

மலைமுகடுகள் சுமாராகவே இருந்தன. கடைசி இரெண்டு நாட்களில் ரசித்தவாறு இயற்கை அமைப்புகள் இன்று அவ்வளவாகக் காணமுடியவில்லை. தூரத்தில், முற்றிலும் உறைந்து சிறிய ஏரியில் சிலர் அதிசயமாக நின்று பார்த்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். எங்களுக்கு விருப்பம் இல்லாததால் எங்கும் நிற்காமல் சென்று கொண்டிருந்தோம்.

சாலையின் நிலைமை தூரம் செல்லச் செல்ல மோசமானதாக இருந்தது. சில நேரத்தில் கரடு முரடான சாலையில், இல்லை இல்லை சாலை என்று கூறமுடியாது..! கரடு முரடான பாதையில் செங்குத்தாக ஏறிச் சென்றது. வாகனத்தின் வேகத்தை கூட்டவும் முடியாத, நிற்கவும் முடியாத சூழல்! ஏனென்றால் பனி உருகிச் செல்லும் நீரானது மண்ணோடு கலந்து அதில் வாகனங்கள் அடிக்கடி சென்று சகதி போன்று இருந்தது. சில நிமிடங்கள் மேலே செல்லச் செல்ல சுவாசிப்பதில் சிரமும் ஏற்பட்டது.

kashmir roadபிறகுதான் தெரிந்தது சாங் லா மலைமுகடை அடைகிறோம் என்று..! இதன் உயரம் 17590 அடியாகும். இங்கு கர்துங்லா மலைக்கு அடுத்து உயரமான வாகனங்கள் செல்லக்கூடிய இடம் இதுவாகும். ஏற்கனவே கர்துங்லா மலையில் பெற்ற அனுபவங்கள், எங்களை சில நிமிடங்கள் மட்டுமே இங்கே இருக்க வைத்தன. சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பத்து நிமிடத்தில் மலை முகடிலிருந்து கீழே இறங்கினோம்.

ஒரு மணி நேரங்களில் சக்தி எனும் கிராமத்தை அடைந்தோம். இது அகம் எனும் ஊரிலிருந்து (நேற்று காலை தேநீர் அருந்திய இடம்) பாங்காங் ஏரி செல்லாமல் லே அடைய குறுக்கு வழியாகும். இங்கிருந்து காரு ஏறத்தாழ 20 கிலோமீட்டர். சாலை அமைப்பதற்காக மண் மற்றும் கற்கள் கொட்டப்பட்டு கொடூரமாய்க் காட்சியளித்தது. நாங்களும் சிறுது தூரம்தானே என நினைத்து மெதுவாய்ச் சென்றால், சென்று கொண்டே இருந்தது. நாங்கள் முழுவதும் புழுதிப்புயலில் சிக்கியவாறு உடல் முழுவதும் காணப்பட்டது. ஏறக்குறைய நாற்பது நிமிடங்களாக சரியாய் மூச்சு கூட விடமுடியாத சூழலில் சென்று கொண்டிருந்தோம். அதும் பெரிய வாகனங்கள் சென்றால், புழுதியின் ஆதிக்கம் இன்னும் அதிகமாய்த் தெரிந்தது.

ஒரு வழியாய் காரு அடைந்தோம். சாலை அருமையாய்க் காணப்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு திடீரென மேடு பள்ளங்கள் வந்து சென்றன.

இருப்பினும் சுமுகமான சாலையால் மேலும் களைப்பின்றி மதியம் 2 மணியளவில் லே அடைந்தோம்

இரவு எட்டு மணிக்குள் வாகனத்தை திரும்பி ஒப்படைக்க வேண்டும். ஆதலால் நகரத்தை இரவு வரை சுற்றிவிட்டு அதன் பின் கொடுப்பதாகத் திட்டமிட்டோம்.

இன்றிரவு தங்குவதற்காக ஸ்டெர்லிங் விடுதியில் முன்பதிவு செய்திருந்தோம். அரை மணி நேரத்தில் விடுதியை அடைந்து களைப்பாறினோம்.

சிறிது நேரத்திற்கு பிறகு அருகில் மலைமேலிருக்கும் சாந்தி ஸ்தூபிக்குச் சென்றோம். இது வெள்ளைநிறத்தில் குவிமாடமாக கட்டப்பட்ட புத்த கோவிலாகும்.

kashmir shanthi domeஇங்கிருந்து லே நகரத்தின் மொத்த அழகையும் ரசிக்குமாறு அமைந்துள்ளது. மலைகளுக்கிடையே லே நகரம் அமைந்திருப்பினும், பசுமையாகக் காட்சியளிக்கிறது. சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நகரத்தினுள் சென்றோம்.

நாளைய பயணத்திற்கு இன்னோவா முன்பதிவு செய்திட அண்ணன் பழனியும், கிரியும் ஒருபுறம் அலைந்து திரிய, நாங்கள் ஒருபுறம் வாகனத்தை ஒப்படைத்துவிட்டு, லே நகரத்தின் இரவொளியில் சுற்றித்திரிந்தோம். ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட ஆசை வந்தது. ஏற்கனவே வெப்பநிலை 10 டிகிரி. இருப்பினும் ஆசை நிற்குமா ?..!

மேலும் சிக்கன், மட்டன், கபாப் என கண்ணில் கண்டதை வாங்கி உண்டு களித்தோம். பிறகு இரவு உணவு உண்டு தங்கும் விடுதியை அடைய மணி பதினொன்றைத் தாண்டியது. கூடவே அண்ணன் பழனியும் கிரியும் வாகன முன்பதிவை பலமணி நேரம் அலைந்து முன்பதிவு செய்து சற்றுமுன் வந்திருந்தார்கள்.

நாள் 7

மறுநாள் லே முதல் மணாலி செல்ல இன்னோவாவில் 21000 கட்டணம்!

மொத்தம் 470 கிலோமீட்டர். இடையில் 250 கிலோமீட்டரில் சர்ச்சு என்ற இடத்தில் தங்கிச் செல்லுமாறு திட்டம். இன்றைய தினத்திலிருந்து ஊர் திரும்பும் பயணமென்பதால் சற்று வருத்தமாகவே இருந்தது.

kashmir hillஇது லே-வில் தங்கும் இரெண்டாம் இரவென்பதால் பெரிதாக தூக்கமின்மை மற்றும் தலைவலி பிரச்சினை இல்லை..! விடுதியும் சகல வசதிகளோடு இருந்ததால் நன்றாய்த் தூங்கி எழுந்தோம்..!

7ஆம் நாள் பயணத்தின் காலை வேளையில் எழுந்து அனைவரும் கிளம்பித் தயாராய் இருந்தோம். விடுதியின் முன்னே மகிழ்வுந்தும் தயாராய் இருந்தது.

ஓட்டுநர் தூங்கி எழுந்து எங்களை வரவேற்று உடமைகளை மேலே கட்டி பயணத்திற்குத் தயாரானோம்.

சில நிமிடங்களில் வாகனம் லே நகரத்தை தாண்டி மணாலி செல்லும் திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சாலையும் நன்றாய் இருந்ததால் வாகனம் சற்று வேகமாச் சென்றது. நாங்களும் காலைப் பொழுதின் இனிமையை ரசித்துக்கொண்டும், பேசிக் கொண்டும் வந்தோம். சில இடங்களில் வாகனம் 100 யைத் தாண்டி அதிவேகத்தில் சென்றது. மேலும் சில இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு செங்குத்து மேடாகக் காட்சியளித்தது.

அவ்வாறான இடங்களில் வலப்புறம் ஏறி முந்தி செல்வது. என ஓட்டுனரின் செயல் அதிர்ச்சியளித்தது எங்களுக்கு..!

மேலும் ஏன் இவ்வாறு செல்கிறீர்கள் என்று கேட்கும் போது, “ஆமா, இவ்வாறு சமதளத்தில் வேகமாய்ச் சென்றால்தான், இன்று இரவு மணாலி செல்ல முடியும் எனக்கூறினார். எங்களுக்கு ஒரே குழப்பம். “டேய் மண்டையா, நாங்க வழியில் ஓரிரவு தங்கி செல்லுமாறு திட்டமிட்டுதான் முன்பதிவு செய்துள்ளோம்” என்றோம். அவன் “இல்லை இல்லை எனக்கு சொல்லியது 1 நாளில் மணாலி செல்வதுதான்” என்றான்.

ஆரம்பித்தது சண்டை..!

kashmir hill 1அண்ணன் பழனியின் இந்தி மொழி காட்டம், ஓட்டுனரை நிலைகுலைய வைத்தது.

இத்தனையும் இடைத்தரகர்களினால் வந்த வினை. அவர்கள் தெளிவாய் எங்களது திட்டத்தை ஓட்டுனரிடம் தெரிவிக்கவில்லை.

இவ்வேளையில் இடைத்தரகரிடம் பேச அழைத்த போது சிக்னல் இல்லை.

சண்டை முற்றி உப்சி எனுமிடத்தில், “காவல் நிலையத்திற்கு செல்வேன்” என்றான். நாங்களும் தாராளமாகப் போகலாம் என உள்ளே சென்று முறையிட்டோம்.

இந்தியில் நடந்த காரசாரமான சண்டையில், காவலர் எங்களுக்கே சாதகமாக தீர்ப்பு வழங்கினார். எங்களுடைய கொள்கை என்னவென்றால், ஒரே நாளில் மணாலி சென்றால், ஓட்டுனருக்கு களைப்பு மிகுதியால், கவனக்குறைவேற்பட்டு ஏதேனும் விபத்து நடக்கலாம் என்பதே..!

அதற்குக் காவலர், " இங்குள்ள ஓட்டுனர்கள் ஒரே நாளில் செல்லும் அனுபவமிருப்பதால் கவலையடையத் தேவையில்லை என்றார். மேலும் "உங்களது விருப்பம் போலவே இடையில் ஓரிரவு தங்கிச் செல்லுங்கள்” என எங்களிடமும், ஓட்டுனரிடம் எங்கள் விருப்பத்திற்கேற்றவாறு நடந்து கொள்ளவும் சொன்னார் " .

சண்டை முடிந்து வெளியில் வரும் போது காலைப் பசி கிள்ளியது.

எதிரே உள்ள உணவகத்தில் சப்பாத்தி, ஊறுகாய், ரொட்டி, தேநீர் என இருந்ததை உண்டுவிட்டு வாகனம் கிளம்பியது.

புயலுக்குப்பின் இருக்கும் அமைதியைப்போல வாகனம் மெதுவாய்ச் சென்றது. ஓட்டுனரும் மனநிலை மாறி அவனுக்குப் பிடித்த இந்தி பாடல்களை போட்டுகொண்டு வந்தான். அவன்போக்கில் விட்டுவிடுவோம் என என்னி நாங்களும் எங்களுக்குள் கலாய்த்துக்கொண்டு இமயத்தின் அழகினை ரசித்துக் கொண்டு வந்தோம்.

ஓரிரு மணி நேரங்களில் பெரிய மலையின் மேலே கொண்டை ஊசி வளைவாக மேலே ஏறிக்கொண்டிருந்தோம். அப்போது சிந்து நதியின் கிளை நதி ஒன்று வெளிர் பச்சை நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நீரின் நிறம், வெண்மை நிற மணற்படுகை, பகலின் வெளிச்சம் என மலை உச்சியின் மேலே நல்ல ஒரு இயற்கை காட்சியைத் தந்தது.

தக்லாங் லா மலை முகடை அடைந்ததும் வாகனத்தை விட்டு வெளியேறிய போதுதான் தெரிந்தது அதன் குளிர் தன்மை. ஏறக்குறைய கர்துங்லா போல் மூக்கிலிருந்து தண்ணீராய்க் கொட்டியது. இருப்பினும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அருகிலிருந்த கூடாரத்தில் தேநீர் அருந்தினோம். பிறகு விரைவாக வாகனத்தினுள் சென்று மணாலியை நோக்கிக் கிளம்பினோம்.

kashmir taglangla(படத்தில் ஆதி மற்றும் சிவலிங்கம் )

அதற்கு முன்பாக ஓட்டுனரிடம் “நீங்களும் நில்லுங்கள் புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பில் அனுப்புகிறோம்” என்றதும், அசடு வழிய நின்றான்.

அதனைத் தொடர்ந்து மலையை விட்டு கீழ்நோக்கி இறங்குமாறு இருந்தது. சில கிலோமீட்டர் தொலைவில் நல்ல சமவெளி பகுதியில் சென்று கொண்டிருந்தோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தரை சீராகவும், தூரத்தில் மலைகள் தென்பட்டன. அப்போது இருபுறமும் செங்குத்தான 200அடி ஆழத்தில் காட்டாறு சென்றது போல மணலாறு ஓடிக்கொண்டிருந்தது. அதனருகில் சென்று சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சற்று ஓய்வெடுத்தோம்.

அப்போது தனியாக ஒரு ஸ்கூட்டரில் ஒருவர் அவ்வழியே சென்றவர் எங்களை நோக்கி வந்து ஆற்றின் அருகே பேசிக் கொண்டிருந்தோம். அவருக்குத் தனியாய் இவ்வாறான பயணங்கள் செய்வது பிடித்தமான செயலாகக் கூறினார்.

இதற்கும் ஒரு தனித்திறமை வேண்டும்..!

“மோசமான வானிலை, கொட்டும் பனி, கரடுமுரடான சாலைகள், அதனை மறிக்கும் பனியாறுகள், எப்போதாவது வரும் எதிர் வாகனங்கள், எந்நேரத்திலும் பழுதாகும் வாகனம், உடல்நிலை மற்றும் ஓட்டுதலில் கவனம், இவையனைத்தையும் தாண்டி உறுதியான மனவலிமை " இத்தனை சவால்கள் நிறைந்தது அவருடைய பயணம்..!

ஆச்சரியப்பட்டு, அவரது பயணம் சிறக்க வாழ்த்துக்களைக் கூறிவிட்டு மெதுவாய் நகர்ந்தோம்.

சில நிமிடங்களில் பாங் எனும் இடம் வர ராணுவ முகாம் ஒன்றிருந்தது. எங்களுக்கு முன்னே ஏறக்குறைய 30 ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொரு வாகனத்தையும் கடந்து செல்ல போதும் போதும் என்றாகிவிட்டது. சாலையின் அகலம், எதிரே வரும் வாகனம், ராணுவ வாகனத்தின் வேகம் என்று இவை அனைத்தையும் கணித்தே முந்திச்செல்ல வேண்டும். ஆதலால் அரைமணி நேரத்திற்கு பிறகு இவைகளைக் கடந்து சென்றோம். பசி மெல்ல வயிற்றைக்கிள்ள அடுத்து வரும் இடங்களில் சாப்பிட நிறுத்தச் சொன்னோம்.

kashmir hill 2ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு சர்ச்சு எனும் ஊர் வர சாப்பிட ஆவலாய்க் காத்திருந்தோம். சாலையில் பாலம் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்ததால் சிறுது நேரம் இறங்கி நடந்து சென்று எதிர்புறம் நின்றிருந்தோம். பிறகு சாலை சீராக, வாகனத்தில் ஏறி பயணத்தைத் தொடர்ந்தோம். ஓட்டுநர் “இங்கு சாப்பிட நன்றாக இருக்காது, அருகில் வேறொரு கடையில் சாப்பிடலாம்” எனக் கூற, நாங்களும் சம்மதித்தோம்.

இங்கு இன்றிரவு தங்குவதாய்த் திட்டம். ஆனால் ஓட்டுநர் இங்கு தங்குவது சுவாசப்பிரச்சினை நிறைய வரும், ஆதலால் ஜிஸ்பாவில் தங்கலாம் எனக் கூற நாங்களும் அரை மனதுடன் சம்மதித்தோம். ஏனென்றால் இன்னும் பகல் பொழுது முடிய ஏறக்குறைய 4 மணி நேரம் இருந்தது.

எங்கும் நிறுத்தாமல் வாகனம் செல்லச் செல்ல பசி மேலும் பலம் பெற்றது.

எங்கேயாவது நிறுத்துவான் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் சண்டையிட்டோம். நான் என்ன பண்ணுவது, கடைகள் இல்லை என பொறுப்பற்றதனமாகக் கூறினான். இறுதியாக ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு சாலையோரத்தில் ஜிங் ஜிங் பார் எனும் இடத்தில் நின்றோம். வெளியில் பலமான ஊசிப் பனிக்காற்று..!

kashmir hill 3வேகமாய் இறங்கி கடைக்குள் தஞ்சம் புகுந்தோம். அனைவருக்கும் தேநீர், நூடுல்ஸ், ஆம்லெட் சொல்லிவிட்டு காத்திருந்தோம்.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் பனிப்பொழிவு இருப்பதாய்த் தெரிந்தது. இருப்பினும் கூடாரத்தினுள் குளிர் அதிகமாகவே இருந்தது. சூடாய் நூடுல்ஸ் வர பசிக்கும் குளிருக்கும் வேகமாய் ருசித்தோம். அரைமணி நேரத்திற்கு பிறகு சாப்பிட்டு வெளியே வந்து குளிரை ரசிக்க முடியாமல் நின்று கொண்டிருந்தோம்.

வாகனத்தினுள் பயணத்தின் போது அடிக்கடி புகை வந்து கொண்டிருந்தது. ஓட்டுனரிடம் சொல்லவே, சிறு காகிதத்தை இருக்கையின் அடியில் எதோ ஒரு இடத்தில் வைத்து அடைத்தான். அவனது புத்திக்கூர்மையை நினைத்து வியந்து மீண்டும் கோபம் தலைக்கேறியது. பெரும்பாலும் கண்ணாடி மூடிய நிலையிலே பயணம் செய்ய முடிந்தது. ஆதலால் புகையின் தாக்கம் வாகனத்தினுள் பின்னிருக்கையில் அதிகமாய் இருந்தது. புகை வெளியேறும் குழாயில் எதோ துளையேற்பட்டு இவ்வாறு நடந்தது. எங்கு பிரச்சினை, துளை எங்கு உள்ளது என எதுமே கவனிக்காமல் காகிதத்தை சொருகியது கோபத்தின் காரணம்.

பிறகு மீதமுள்ள பயணம் முழுவதும் கைக்குட்டையை முகத்தில் கட்டிக்கொண்டும், ஆட்கள் முன்னும் பின்னும் மாறி மாறி அமர்ந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.

சில கிலோமீட்டர் தொலைவில் பனிப்பொழிவு தீவிரமாய் இருந்ததை பார்த்து மகிழ்ந்து கண்ணாடியை இறக்கி கையில் பிடித்தும், படமெடுத்தும் மகிழ்ந்தோம்.

அரைமணி நேர பயணம் மிக ஆனந்தமாக இருந்தது. ஏனென்றால் எங்களது இந்த பயணத்தில் பனிப்பொழிவை கண்டது இதுவே முதன் முறை..!

ரோஜா படத்தின் பாடல் வரிகள் ஞாபகம் வந்தன.

"புது வெள்ளை மழை ஒன்று பொழிகின்றது,

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது,

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது,

மனம் சூடான இதம் தேடி அலைகின்றது

இப்பாடல் வரிக்கும் எங்களது நிலைமைக்கும் மிகச்சரியாய் இருந்தது.!

முதல் வரியை நேரில் கண்டு ரசித்துக்கொண்டிருக்கிறோம், இரண்டாம் வரியில், வண்டியில் செல்லும் நாங்களா கொள்ளை நிலா என நினைத்து சிரித்துக்கொண்டிருந்தோம்.

kashmir road 2மூன்றாம் வரியை கடைசி நான்கு நாட்களாய் அனுபவித்து வருகின்றோம்.

நான்காம் வரியை பயணத்தின் முதல் நாள் முதல், தினத்தோறும் இரவு "கிடைக்காதா சரக்கு" என ஏங்கித் தவித்ததுதுண்டு..!

ஜிஸ்பா வர, அருகிலிருக்கும் கூடாரங்களைப் பார்த்து தங்குவதற்கு பேசிக்கொண்டிருந்தோம். இங்கு ஏதும் முன்பதிவு செய்யப்படவில்லை. ஆதலால் நாங்களும் யோசித்துக் கொண்டு வர, ஓட்டுனரும் “இரவு 10 மணிக்குள் மணாலி சென்று விடலாம்” என்ன சொல்லுகிறீர்கள்? எனக்கேட்க சில நிமிடங்கள் யோசித்து, சரி என்றோம். ஆனால் மெதுவாய்ச் செல்லுமாறு அறிவுறுத்தினோம்.

இன்று இங்கு தங்கி மீண்டும் நாளை காலை மணாலி சென்று, பேருந்தில் டெல்லி செல்வது மிகுந்த சிரமாகவும், இன்றே மணாலி சென்றால், இரவே நன்றாய் ஓய்வெடுத்து நாளை முழுவதும் மணாலியில் சுற்றிப் பார்க்கலாம் எனத் தோன்றியது.

வண்டியும் மெதுவாய் கேலாங் கிராமத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. மாலை வெயிலில் பனிபோர்த்திய மழையின் உச்சி, சற்றே பசுமையான சில இடங்களும் கண்கவர்ந்தன. மலையை விட்டு கிழே இறங்க அங்கு மிகப்பெரிய பிரமாண்டமான பாலம் வேலை நடந்து கொண்டிருந்தது. இது பாகா ஆறும், செனாப் ஆறும் ஒன்றிணைந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. செனாப் ஆற்றின் பக்கவாட்டில் ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு கோக்சர் எனுமிடத்தில் தேநீரருந்த நிறுத்தினோம்.

முதல் வேலையாக தண்ணீர் வாங்கி மூக்கை சிந்த கருப்பாய் வந்து கொண்டே இருந்தது புகை மற்றும் மூக்குக்கழிவுகள். இன்னும் நான்கு மணி நேர பயணம் இருக்கே என்று கவலையுற்றேன்.! பிறகு தேநீரருந்தி பயணத்தைத் தொடங்கினோம். இப்பொது ரோதங் மலைத்தொடரை பின்புறமிருந்து ஏறி முன்புறம் இறங்கி மணாலி செல்லவேண்டும். சாலை மிக மோசமாய் இருந்தது. பனி உருகி செல்லும் நீர் சாலையிலுள்ள மண் எல்லாம் சேர்ந்து வாகனம் செல்லச் செல்ல சேரும் சகதியுமாகி, குண்டு குழியுமாய் இருந்தது.

இது சாதாரண சூழ்நிலையிருந்ததாலும், கரணம் தப்பினாலும் ஏறக்குறைய 7000 அடி முதல் 10000 அடி வரை இம்மலையின் பள்ளத்தாக்கு நம்மை வரவேற்கத் தயாராய் இருக்கும்.!

இரவு எட்டு மணியளவில் ரோதங் மலைத்தொடரின் உச்சியை அடைந்து, வாகனத்தை விட்டு இறங்கி பேருக்கு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம். பகல் நேரம் என்றால் இறங்கி சுற்றிப் பார்த்துவிட்டு ரசிக்கலாம். இரவில் ஏதும் தெரியவில்லை. விண்மீன் மற்றும் வாகனத்தின் வெளிச்சம் மட்டுமே தெரிந்தது.

kashmir hill 4இறுதியாக மணாலியை அடைவதற்கு முன்னர், யோசித்துப் பார்த்தோம். ஏன் இவனிடம் சண்டையிட்டோம், காவல் நிலையம் சென்றோம் என எதும் புரியவில்லை எங்களுக்கு..! இடைத்தரகர்களின் இந்த சூழ்ச்சிதான் எங்களுடைய கோபத்திற்குக் காரணம். பாதுகாப்பான பயணமாய் அமைந்ததே எங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. பொதுவாய்ச் சுற்றுலா செல்லும்போது இது போன்ற நிபந்தனைகளை தெளிவாய்ச் சொல்லி, முன்பதிவு செய்து, ஓட்டுனரிடமும் பேசிக்கொள்ளுவது சிறந்தது. எனது பரம்பிக்குளம் பயணத்தில் நண்பரின் நண்பர் இதுபோன்று என்னை ஏமாற்றியது மனக்கசப்பை ஏற்படுத்திவிட்டது.

பயண முடிவில் கட்டுபடியாகாது, எதாவது போட்டுத்தாருங்கள் என்று கேட்பது வேறு, ஏமாற்றுவது வேறு..! ஏமாற்றுப்பேர்வழிகளுக்கிடையே தங்கமான ஓட்டுநர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..! அவர்களுக்கு நாம் சிறந்த சன்மானம் வழங்குவதில் தப்பில்லை.!

எது எவ்வாறோ, பயணங்கள் திட்டமிட்டவாறு அமைந்துவிட்டால் சுவாரசியம் இல்லை. ஆனால் இவ்வாறான ஏமாற்றமும் இருக்கக்கூடாது.

இரவு 11 மணியளவில் மணாலி அடையும் முன்பாக கடும் போக்குவரத்துக்கு நெரிசல் காரணமாக சில மணி நேரங்கள் காத்திருந்தோம். பிறகு நிலைமை சீராகி மெதுவாய் மணாலி பேருந்து நிலையம் அருகில் வந்தடைந்தோம். வாகனத்தை விட்டு இறங்கும் முன்பே தங்குவதற்கு நல்ல விடுதியை பார்த்துவிட வேண்டுமென நினைத்தோம். ஆனால் அனைத்து விடுதியும் முன்பதிவாகியே இருந்தது. எங்களது திட்டத்தில் இங்கு இன்று தங்குவதாக இல்லை. பிறகு ஒரு மணி நேரம் அலைந்து திரிந்து இறுதியாக ஒரு விடுதியை அடைந்து தங்கினோம்.

குறைந்த விலை, நல்ல அறைகள் மற்றும் முன்பதிவற்ற விடுதிகளை காண்பது மிகச் சவாலாக இருந்தது. இவ்வேளையில் காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டதை போல் 21000 ரூபாய் எங்களிடம் பெற்றுக்கொண்டு ஓட்டம்பிடித்தான் ஓட்டுநர்..!

ஏறக்குறைய 18 மணி நேரத்திற்கு மேலான பயணக் களைப்பும், மணாலி குளிரும் எங்களை மிகவும் சோர்வடையச் செய்தது.

அரை மணி நேரமாக மூக்கைச் சிந்தவும், உள்ளே சென்ற கரும்புகைகள் கழிவுகளோடு வந்து கொண்டே இருந்தது. மூக்கு வலியெடுக்க, போதும் என நினைத்துத் தூங்கச் சென்றேன்.

நான் மற்றும் சிவக்குமார் மட்டும் அறையில் தூங்கிக் கொண்டிருந்தோம். மற்ற நண்பர்கள் ஐஸ் கிரீம் சாப்பிட வெளியில் சென்றனர்.

நாள் 8

மறு நாள் காலை சற்று தாமதமாக எழுந்து, குளித்து கிளம்பினோம். மெதுவாய்க் கடைவீதி சென்று, சாலையோர உணவு, பழங்கள், ஐஸ் கிரீம் என வாங்கித் தின்றோம். பிறகு மரக்கட்டைகளில் பெயர் எழுதி தரும் கடையில் சென்று, பெயர் மற்றும் வாசகங்களை எழுதி வாங்கினோம். சாவிக்கொத்து அளவிலான பெயர்பலகைக்கு ரூபாய் 30, பெரிய அளவிலான பலகையில் வண்ணம் பூசி பெயர் எழுத ரூபாய் 100~300 வரை கட்டணமிருந்தது.

கூடவே முந்தய நாள் மணாலியிலிருந்து டெல்லி செல்ல தனியார் பேருந்தில் முன்பதிவு செய்தோம். ஆதலால் இன்று மாலை 6 மணி வரை மணாலி கடைவீதியில் மட்டுமே சுற்றினோம். பிறகு பேருந்து நிலையத்தை அடைந்து தயாராய் இருந்த எங்கள் பேருந்தில் அமர்ந்தோம். சில நிமிடங்களில் பேருந்து புறப்பட்டு வளைந்து நெளிந்து சென்றது.

நீளமான பேருந்து என்றாலும் வளைவுகளில் மிக லாவகமாக ஓட்டிச் சென்றது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் நாங்கள் இரெண்டாம் வரிசை இருக்கைகளில் இருந்ததால் ஓட்டுனரின் செயல்களைக் கண்காணிக்க முடிந்தது. ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்கு பிறகு ஓரிடத்தில் சாப்பிட முப்பது நிமிடங்கள் நிறுத்தினர்.

நாங்கள் ஏறும் போதே பானி பூரி, மாமூஸ் மற்றும் தேவையான நொறுக்குத் தீனிகளை வாங்கி வைத்திருந்ததால் அதையே சாப்பிட்டுவிட்டு உறங்கினோம். பேருந்து இரவு முழுவதும் மணாலி மலையை மட்டும் கடந்து வந்து, விடிந்தவுடன் மலையை விட்டு இறங்கியது.

நாள் 9

சில நிமிடங்களில் சண்டிகர் வந்தது. வாகனத்தில் சில பழுதேற்பட்டிருந்ததால் ஆங்காங்கே மெதுவாகவும் நிறுத்திச் சென்றனர். காலையில் ஓரிடத்தில் சாப்பிட நிறுத்தினர். தேநீர் ரொட்டி என காலை உணவை முடித்தோம். ஏனென்றால் மதிய உணவு டெல்லி சென்று ஆந்திரபவனில் சாப்பிடத்திட்டமிட்டிருந்தோம்.

போக்குவரத்துக்கு நெரிசலால் டெல்லியை அடைய 11.30 மணி ஆனது..! ஏறக்குறைய நான்கு மணிநேர தாமதம்..! காஷ்மீரி கேட்டில் இறங்கி அங்கிருந்த ஆந்திரபவனுக்கு ஓலா மகிழ்வுந்தில் சென்றோம்.

rohtang passநான்காண்டுகளுக்கு முன், டெல்லியில் பணிபுரிந்த போது ஒவ்வொரு வாரமும் ஆந்திரபவன் வந்துவிடுவது வழக்கம். ஏனென்றல் வாரம் முழுவதும் நண்பர்களோடு அறையில் சமைத்து சாப்பிடுவது வழக்கம். வார இறுதி விடுமுறை நாட்களில் இங்கு வந்து வயிறார சாப்பாடு சாப்பிட்டுவிட்டு இந்தியா கேட் பகுதியில் சில தூரம் நடந்துவிட்டு இறுதியில் மரத்தடியில் படுத்து தூங்குவது வழக்கமான ஒன்று..! அவ்வாறு இங்கு சாப்பிட வரும் போது கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். சாப்பிட டோக்கன் வாங்கும் போது அதில் வரிசை எண் இருக்கும். இந்த வரிசை எண் கூப்பிட்டு, சாப்பிட இடம் கொடுப்பார்கள்.`

இதை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளும் தெரிந்த குட்டையாய் குண்டான சிவப்பான நபர் அழகாய்க் கூப்பிட்டு அமர வைப்பார். ஒரு சமயம் நான் பசியோடு சென்ற போது என்னுடைய டோக்கன் எண் 85 என்றிருந்தது. அவரும் 80, 81 என எண்ணி 85 வரும் போது செல்ல முயன்றேன். அவர் டோக்கனை பார்த்துவிட்டு “தம்பி, இது அடுத்த பேட்ச் டோக்கன் 85” என்று நிற்க வைத்து விட்டார். பிறகு காத்திருந்து 45 நிமிடத்திற்கு பின்னர் உணவருந்தினேன். இதை ஏன் இப்பொது சொல்கிறேனென்றால் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். பொதுவாக தென் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாவினர் இங்கு வந்து சாப்பிடுவது வழக்கம். அதுதான் இப்போது எங்களுடைய கவலையும் கூட..!

எங்கே கூட்டம் அலைமோதிவிடுமோ என்று..!

சரியாக மதிய உணவிற்காக 12.15 மணிக்கு அங்கு சென்றோம்.

என்ன அதிசயம் கூட்டம் இல்லை. சென்றவுடன் சாப்பாடு, சிக்கன் என்று ஆளுக்கொரு டோக்கெனை வாங்கி, இருக்கையில் அமர்ந்தோம். நான் மேலே சொன்ன நபரும் எங்களை காலி மேசையைக் காட்டி அமரச் சொன்னார். இங்கு உணவு பரிமாறுபவர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் எது கேட்டாலும் மொழி பிரச்சினையின்றி உடனடியாகக் கிடைக்கும்.

இங்கு சாப்பாடு விலை 100 ரூபாய் மட்டுமே. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். பெரிய சாப்பாட்டு தட்டில் முதலில் காய்கறி குருமா என ஆரம்பிக்கும். கூடவே வடை அளவில் பொன்னிறத்தில் பொருபொருவென்ற பூரி வைப்பார்கள். அதற்கு ஏற்றவாறு தக்காளி கலந்த குருமா கிடைக்கும். நான் கிட்டத்தட்ட 10 பூரி உண்பேன். அதற்கடுத்து சாப்பாடு வைப்பார்கள். அதற்கு பொடி மற்றும் நெய் ஒவ்வொரு மேசையிலும் வைத்திருப்பார்கள். அதையும் சாப்பிட்டுவிட்டு அடுத்ததாக சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர், தயிர், பாயசம் கேசரி என நீண்டு கொண்டே செல்கிறது உணவின் வகைகள்..! அனைத்தும் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் 2 பூரி சாப்பிட்டால் நன்றாயிருக்கும் எனத் தோன்றும் எனக்கு…! மேலும் நம்மூர் மக்கள் கையிலெடுத்து லாவகமாகச் சாப்பிட்டு ஏப்பம் விடும் நேரத்தில், வடஇந்திய மக்கள் கரண்டியில் சாதத்தை டரக் டரக் என தட்டில் வருடி, குழியிலிருக்கும் சாம்பாரை சற்று சேர்த்தும் உண்டுகொண்டிருப்பார்கள்.

அதுமட்டுமில்லாமல், சாம்பாரை கிண்ணத்தில் வாங்கி குடித்து மகிழ்ச்சியில் திளைத்து “சவுத் இந்தியன் தாளி சம்பார் அச்சா ஹே " னு கூறுவார்கள்.

பத்து நாட்களுக்கு பின் திருப்தியான உணவு உண்ட மகிழ்ச்சியில் எழுந்து வெளியில் வந்தோம். மீண்டும் ஓலா மகிழ்வுந்தில் விமான நிலையம் அருகில் மஹிபால்பூர் ஏற்கனேவே முன்பதிவு செய்திருந்த விடுதிக்குச் சென்றோம். மணாலியிலிருந்து வரும் போது டெல்லியில் ஓரிரவு தங்கிச்செல்வதாய் திட்டமிட்டிருந்தோம். ஏனென்றல் மலைப்பிரதேசங்களில் போக்குவரத்துக்கு நெரிசல் மற்றும் விபத்துகளால் ஏறக்குறைய பல மணி நேரங்கள் தாமதமாகலாம். அவ்வாறான சூழ்நிலையில் விமானத்தை விட்டுவிடும் வாய்ப்புள்ளது.

இந்த விடுதியிலும் சண்டை நடந்தது. நாங்கள் முன்பதிவு செய்த விடுதியில் தங்குமறை தராமல் அருகிலிருக்கும் அவர்களுடைய மற்றொரு விடுதியில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். அது சற்று தூரமாயிருந்தது. அதுவும் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. இந்தியில் சண்டை நடந்தது. நாங்கள் ஒரு ஓரமாக உட்கார்ந்து கடைக்காரனுடைய அல்ப புத்தியையும், ஏமாற்றும் வித்தையையும் கண்டு கடிந்து கொண்டிருந்தோம். இறுதியாக வெற்றி நமதே என முடிவுக்கு வர நேரடியாக அறைக்குச் சென்றோம்.

அறையில் தண்ணீர் வரவில்லை. குடிநீர் இல்லை. ஏசி வேலை செய்யவில்லை. ஆனால் இரெண்டு அறைகள் குளியலறை என புதிதாய் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பைப் போலிருந்தது.

பிறகு மூன்று முறைக்கு மேல் குடைச்சல் தந்ததால், தண்ணீர் வந்தது குடிப்பதற்கு.! பிறகு சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு இரவு உணவு சாப்பிடச் சென்றோம். இரவில் ஏசி முன் படுத்திருந்தும் சூடான காற்றே வந்தது.

நாள் 10

காலையில் எழுந்து கிளம்பி தயாராகி விமான நிலையத்தை அடைந்தோம். விமானமேறி சென்னையை பத்து மணிக்கு வந்தடைந்தோம். பயணக்களைப்பு வாட்டியது. வாங்கி வந்த தின்பண்டங்கள் மற்றும் பொருட்களால் குடும்பத்தினர் மகிழ்ந்தனர். பிறகு புகைப்படம் அனைத்தையும் பார்த்து விட்டு, கணினியில் ஒரு நகலெடுத்தேன்.

நாம் சென்று வந்த இடங்களா ?, என ஆச்சரியப்படுமளவிற்கு இருந்தது அனைத்துப் புகைப்படங்களும்..!

ஒவொருவரும் வாழ்வில் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய இடங்களில் லே மற்றும் லடாக் முக்கியமானவை..!

குடும்பத்துடன் சென்ற வர ஏற்ற இடமாக இருப்பினும், காலநிலை, சுவாசக்கோளாறு என சில சிக்கல்கள் உண்டு. ஆதலால் 20~40 வயத்துக்குட்பட்டோருக்கு மட்டுமே ஏற்ற இடமாக இது அமையும்.

மேலும் மகிழ்வுந்தில் செல்லுவதை விட, மோட்டார்சைக்கிளில் லே-வை சுற்றியுள்ள பகுதியை காண்பது மனதிற்கு புத்துணர்வூட்டும் விதமாக இதன் இயற்கையமைப்பு அமைந்துள்ளது.

பிரமிக்க வைத்த மலைத்தொடர்களின் பயணம் முடிந்து மீண்டும் சென்னையின் வாழ்க்கை ஓட்டத்திற்குத் தயாராகிக் கொள்வது சற்று சிரமாகவே இருந்தது.

மேலும், கர்துங்லாவில் பனிமலைகளோடு எடுத்த ஹிமாலயன் வாகனத்தின் படத்தை முகநூலில் பதிவிட்டேன். கூடவே "எங்களை மிகுந்த உயரத்திற்கும், பள்ளத்தாக்கு,ஆறுகள் மற்றும் பனிமலைகள் என கண்கூடாகக் காட்சிகளை அளித்து, இனிய பயணத்தை அளித்த இவ்வாகனம் கடைசியில் எங்கள் மனதையும் கவர்ந்து விட்டது” என வாடகைக்கு எடுத்த கடையின் பெயரிட்டு பதிவு செய்தேன். இதைப்பார்த்த கடைக்காரரும் அகம் மகிழ்ந்து பாராட்டினார்!

ஏறக்குறைய பத்துநாட்களுக்குப் பிறகு அலுவலகம் செல்ல, என்ன வேலை பார்க்கிறோம், கணினி கடவுச்சொல் என அனைத்தும் மறந்தே போயின. இடைவேளையில் நண்பர்களுடனும் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம். சிலர் உயிருடன் திரும்பி வந்துவிட்டீர்களா ? எனவும், ஏதும் சொதப்பல் ஆனதா ? என்கின்ற கேள்வியே விளையாட்டுத்தனமாய் அதிகமாகக் கேட்டனர். வெகு சிலரே “எவ்வாறிருந்தது இமயமலையின் அழகு” என ஆர்வமாய்க் கேட்டறிந்தனர்.

kashmir budgetபயணத்தின் செலவு கணக்குகளை பார்க்கும் போது தோராயமாக ஒருவருக்கு 30000 ரூபாய் வந்தது.

சில நாட்களில் ஏறக்குறைய 4000 மேற்பட்ட புகைப்படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். கூடவே இக்கதையை எழுதவும் ஆரம்பித்தேன்.

----------------------------------

" கார்கில்..

சட்டென நினைவில் வருவது 1999 ஆம் ஆண்டு நடந்த போர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடந்த போரில் இந்தியா பாகிஸ்தானை வென்று வெற்றிக் கொடியை நாட்டியது...."

--------------------------------------

இறுதியாக,

பிரம்மாண்டத்தின் உச்சகட்டத்தை கண்டுகளிக்க ஒருமுறையாவது சென்று வாருங்கள் லே மற்றும் லடாக் பகுதிக்கு..!

நன்றியுரை:

இப்பயணத்திற்கு அனுமதியளித்தும், இக்கதையை எழுதத்தூண்டிய என் அன்பு மனைவிக்கும், பயணத்தை சிறப்பாய்த் திட்டமிட்ட பழனி அண்ணனுக்கும், மோட்டார் சைக்கிள் பயணத்தில் என்னை பின்னிருக்கையில் மட்டும் அமர வைத்து நிறைய புகைப்படங்கள் எடுக்க உதவிய தம்பி ஆதிக்கும், முழுப்பயணமும் சிறக்க உதவிய சக பயண நண்பர்களுக்கும், இக்கதையை வாசகர்களிடையே கொண்டு சென்ற கீற்று இணையத்தளத்திற்கும் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

பயணங்களும், பயண அனுபவங்களின் பகிர்வும் தொடரும்..!

- ப.சிவலிங்கம்

Pin It