இது ஒரு முன்னேற்பாட்டுடன் செய்யப் பட்ட குழுப் பயணம். கேலக்ஸி ட்ரிப் மேக்கர் என்னும் அமைப்பினால் நடத்திச் செல்லப் படுகிறது என்பது போக வேண்டிய இடங்கள், சாப்பாடு, இடங்களில் செலவிட வேண்டிய நேரங்கள் போன்ற எண்ணமின்றி பயணிக்கும் செளகரியத்தைக் கொடுத்தது. கிட்டத்தட்ட அறுபது நபர்கள் இப்பயணத்திற்காக முன்பதிவு செய்து வந்திருந்தனர். அனைவரின் ஒன்று கூடலுக்கான இடம் வத்தலகுண்டு ஆனைப்பிரிவு. அங்கே பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே இருந்த திருமண மண்டபத்தில் சிறு இளைப்பாறலுக்குப் பிறகு காலை உணவை முடித்துக் கொண்டு மூன்று வேன்களில் புறப்பட்டோம்.

கும்பக்கரை அருவி

 வழமை போல் சக பயணிகள் சூழலை சுமூகமாக்கினர். வாகனங்கள் வத்தலகுணடிலிருந்து விரையத்தொடங்கின. இரண்டு கிலோ மீட்டர் கடந்தப் பிறகு குளிர் மென்மையாகத் தழுவியது. தூரம் கடக்க கடக்க குளிர் காற்றின் முரட்டுத் தனமான அணைப்பை சமாளிக்க முடியாமல் வாகனங்களின் ஜன்னல்கள் மூடப்பட்டன. வத்தலகுண்டிலிருந்து முப்பது கிலோமீட்டர் கடந்த நிலையில் வாகனங்களை நிறுத்தி, இப்படியே சரிவில் இறங்கி நடக்க கும்பக்கரை அருவியை அடையலாம் என்றார்கள். ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாத சிற்றருவியைச் சந்தித்தோம். நகரத்தின் கழிவுகளும் குளோரினும் கலக்காத தூய்மையான தண்ணீர் சுவையாக இருந்தது. கொடைக்கானல் மலையிலிருந்து வந்து கொண்டிருந்த நீர் கால் வைத்து இறங்க சில்லிட்டது. இதன் ஆரம்ப இடத்தில் நாம் நெருங்கவே இயலாது அதன் சில்லிப்பில் விரைத்து விடுவோம் என்றார்கள். இங்கு கால் வைத்தவுடன் இருந்தச் சிவ்லிப்பு நனைய நனைய போய் விட்டிருந்தது. அருவியில் தலைக் காண்பித்து விட்டு இயற்கையிலேயே அமைந்திருந்த பாறைச் சரிவில் ஓடும் தண்ணீரோடும் பாசானோடும் வழுக்கி விளையாடினோம். அதன் வழுக்கும் தூரம் மிகக் குறைவே தீம் பார்க்குகளில் வைத்திருக்கும் செயற்கை சரிவு போன்ற தூரம் இல்லை. இதற்கும் உடன் பயணித்த நண்பர்கள் சகோதர சகோதரிகள் ஊக்குவிப்பு அளித்து உடன் நின்றனர். நீங்கள் கும்பக்கரை அருவி செல்கையில் இம்மகிழ்வினையும் தவற விடாதீர்கள்.

vellakaviமலையிறங்கல்

 நீர் விளையாட்டு முடிந்து பசியுடன் நடந்து வாகனத்தை அடைந்தோம். அனைவருக்கும் பசியெடுத்தது. ஆனாலும் வெளிக் காட்டாது ஒன்றரை மணி நேரம் பயணித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவை உண்டு தயரானோம். வழக்கமாக மலையேற்றம் என்பது ஏறி இறங்குவதாகத்தான் இருக்கும். இந்த வெள்ளகவி மலையில் இறங்கி ஏறினோம். முதல் அடியே கரடு முரடான பாதையில்தான் ஆரம்பம். எனக்கு முதல் முறையென்பதால் கண்ணைக் கட்டினாற் போன்றிருந்தது‌. இருபக்கமும் இருந்த கிடுகிடு பளளங்களைக் காண்பதைத் தவிர்த்துக் கொண்டே நடந்தேன். சரிவுகள் கடக்க கடக்க பாதை நீண்டு கொண்டே இருப்பது போலிருந்தது. கால்கள் நடுங்கத் தொடங்கின. நான்கு கிலோமீட்டர் என்றார்கள். உணவிற்காக சரிவான சாலையில் கடந்து வந்த தூரம், மக்கள் நடமாட்டம் இருக்கும் மலையோடு இயைந்த பகுதி எல்லாமும் இணைக்க மொத்தமாக எட்டு கிலோ மீட்டர் வரும் என்று போய் வந்தவர்கள் கூறினார்கள்.

பாதையின் கடினத் தன்மையும் முதல்முறையும் மெல்லிய அச்சத்தை ஏற்படுத்தியது. அனுபவமிக்க நபர்கள் புன்னகையுடன் நடக்கத் தொடங்கினர். ஒருவருக்கொருவர் ஊக்குவிப்பு அளித்துக் கொண்டனர். தூய்மையான காற்றும் பசுமையும் சகோதரர்களும் நண்பர்களும் தூரங்களைக் கடக்க உதவினர்.

 ஒருவழியாக இருட்டுவதற்குள் மேடு பள்ளமான தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். உள்ளூர் வாசிகள் உதவியுடன் இரவு உணவு தயாராகிக் கொண்டு இருந்தது. அங்கிருந்த மலைவாழ் சிறுவனிடம் எப்படி தம்பி தினமும் சென்று வருகிறீர்கள் என்று இரைக்கும் மூச்சோடு கேட்க பற்கள் தெரியச் சிரித்தான். இரவின் சிறகு விரிய மின் விளக்குகளும் கூடாரங்களும் தயாராகின. உற்சாகமூட்டும் விதமாகவும் ஒன்று கூடலின் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் குளிருக்கு இதமாகத் தீ மூட்ட, சுற்றி அமர்ந்து கொண்டோம். 

இசைமணி

 மஞ்சள் வண்ணம் கலந்த சிகையோடு ஒரு நபர் ஏற்பாட்டுக் குழுவினரால் அறிமுகப் படுத்தப் பட்டார். புத்துணர்ச்சியான முகத்தோடு எல்லோரிடமும் சிநேகம் பாராட்டிய அவர் பெயர் சவுண்ட் மணி என்றனர். அவரும் தன்னை அவ்வாறே அறிமுகப் படுத்திக் கொண்டார். இசைக்கருவிகளை மீட்டுருவாக்கம் செய்பவர் என்றது மெலிதாக ஆர்வத்தைத் தூண்ட, கவனிக்கத் தொடங்கினேன். ஆம் எதிர்பார்த்ததிற்கும் மேலாக அதிக இசைக் கருவிகளைப் பற்றிக் கூறி இசைத்தார். சிலவற்றிற்கு இவரே பெயரும் சூட்டுகிறார். உதாரணத்திற்கு நாவினால் இசைக்கப்படும் கருவி ஒன்றிற்கு 'நா முழவு" என்று பெயர் சூட்டினார்.

தற்போது ராஜஸ்தானில் மட்டுமே செய்யப்படும் 'மோர்சிங்' என்னும் வாயினால் இசைக்கப்படும் கருவியின் முன்னோடி, சத்தியமங்கலம் சோளகப்பட்டியில் இருளர் இன பழங்குடியின மக்கள் பயன்படுத்திய குபிங் என்னும் கருவியாகும் என்கிறார். விரல் அகலத்தில் அரையடி நீளத்தில் இருக்கும் அதனை வாயருகில் வைத்து எதுவோ செய்ய அதனுள்ளிலிருந்து எழும்புகிறது இசை. தொலைவில் இருக்கும் நபருக்கு சங்கேத மொழியாக இருளர் இன மக்கள் ஆங்கில ஒய் வடிவத்தை மரத்துண்டுகளில் கொண்டு வந்து அதன் இருமுனைகளிலும் குறிப்பிட்ட சில மரங்களின் வேர்களை பிணைத்து வாயில் இசைத்து ஒலி எழுப்பி பயன்படுத்தினர் என்பதும் இவரது பேச்சினூடாகத் தெரிய வருகிறது.

இருளர் இன மக்கள் அன்பளிப்பாக அளித்தது என்று புல்லாங்குழல் போன்ற பருமனில் அதைவிட நீண்ட குழலைக் காண்பிக்கிறார். அதனில் துளைகளிட்டு தேன்மெழுகு போன்ற பொருட்கள் பயன்படுத்தி வரையப் பட்டிருந்தது. வளைவுகளில்லாத கோடுகளாக தீட்டப்பட்டிருந்த குழலில் டைமன், முக்கோணம், கட்டம் போன்ற வடிவங்கள் பிசிறின்றி காணப்படுகிறது.‌ அதனைக் கையில் பிடித்து காற்றில் கோலமிடுவது போல் அப்படியும் இப்படியும் அசைக்கிறார்‌ அழகிய இசை வெளியேறி ஆச்சர்யப் படுத்துகிறது. மேலும் கிண்ணாரம், குடுகுடுப்பி, மானிடன் குழல், பவுனி வாய் யாழ், Asalato, Genggong, உடுக்கை, Dhad, டமருகம் போன்ற பற்பல கருவிகளுடன் வாழும் சவுண்ட் மணி இன்னும் கவனத்திற்கு வரவேண்டும்.

 சவுண்ட் என்பது சத்தத்தைக் குறிக்கும். இவரிடம் இருக்கும் பொருட்கள் எல்லாம் ரிதத்தை வெளிப்படுத்தச் செய்கிறது. எனில், இவருக்கு 'இசைமணி' என்பது பொருத்தப்பாடுடைய பெயராக அமையும். சில திரைப்படங்களில் பங்காற்றிய, பல திரைப்படங்களில் பங்காற்ற இருக்கும் இசைமணி இசைக்கருவிகளின் மீதான நாட்டம் பிள்ளைப் பிராயத்திலேயே வேர் பிடித்து விட்டது என்கிறார். தனது விருப்பத்தை மனத்தளர்வின்றி தொடர்ந்து செய்வதாகக் கூறுகிறார். குழுவினரிடமும் உங்கள் பிள்ளைகள் பிடித்ததைச் செய்ய ஊக்குவிப்பு அளியுங்கள் என்பதைத் தனது கோரிக்கையாக முன் வைக்கிறார்.

 பறையிசையே தன்னை அடைமாளப் படுத்தியதாகக் கூறியவர் பறையெடுத்து ஒலிக்க விட தீயைச் சுற்றி ஆண்கள் தனியாக பெண்கள் தனியாக ஆடி மகிழ்ந்தனர். உணவு முடித்து பெண்களும், குடும்பமாக வந்திருந்தவர்களும் அதே இடத்திலேயும் தனியாக வந்திருந்த ஆடவர் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளகவி கிராமத்திலும் தங்க வைக்கப்பட்டனர்.

சூரிய உதயம்

 இரவு உணவு முடித்து உறங்கத் தயாராகையில் காலையில் சூரியன் உதிக்கும் காட்சி அழகாகத் தெரியும் என்றனர். காலையில் காத்திருந்து பார்த்தோம் பேரழகாக இருந்தது. மலைகளின் பின்னிருந்து ஒளிவட்டம் மேல் எழ தொடர்ந்து செஞ்சிவப்பு இளஞ்சூரியன் தரிசனம் அளிப்பது கண் நிறைக்கும் காட்சி. முந்தைய நாளில் இருந்த கால்வலி அயர்ச்சி சற்று மட்டுப்பட உணவு முடித்து, குழு புகைப்படங்கள் எடுத்து முடித்து ஏறத் தொடங்கினோம். இறங்குகையில் கால் நடுக்கத்தோடு நெருங்கிக் கொண்டிருந்த இரவும் இணைந்து சிறிது பதட்டத்தைக் கொடுத்திருந்தது. ஏறுகையில் பகல் வேளை வசதியாக இருந்தது. மேகங்கள் குழுமி அடிக்கடி மெதுவாக மலைகளில் பதிவது சூழலை ரம்யமாக்கியது. இறங்க ஆன மூன்று மணி நேரம் ஏறுவதற்கு நான்கைந்தாகியது. அழகான சூழல் நடுங்கும் குளிருமில்லை, சுட்டெரிக்கும் வெயிலுமில்லை உடல் ஏற்றுக் கொள்ளும் மென் குளிரும் குழுமும் மேகங்களும் அனைவரையும் உற்சாகப் படுத்தியது.

ஏறியவுடன் சாப்பாடு, நடை, பைன் மரக் காடு என்று இனிதே நிறைவுற்றது வெள்ளகவி பயணம். 'கேலக்ஸி ட்ரிப் மேக்கர்' அமைப்பு சிறப்பான வகையில் ஏற்பாடு செய்து வழிநடத்தி நிறைவு செய்தது

நிறைவு

முதல் முறையான எனது இப்பயணத்தில் பேருதவியாக இருந்து ஊக்கமளித்த சகோதரன் ஆதி இங்கு நினைவுகூரத் தக்கவன்.

ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த வெள்ளகவி கிராமத்தினை பார்த்திருக்கலாம் என்று இப்போதும் தோன்றி கொண்டேயிருக்கிறது.. கொடைக்கானலில் இருந்து வட்டக்கானல் வழியாகவும் கும்பக்கரையில் இருந்தும் செல்லக் கூடிய இருவழிகள் இருக்கின்றன. இரண்டும் கரடுமுரடான மலைப் பாதைதான். உள்ளூர் வாசிகள் அதிக சுமைகளைத் தூக்குவதாயிருந்தால் பழக்கப் படுத்திய குதிரைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.. நூற்றைம்பது குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் அங்கே யாரும் செருப்பு அணிந்து நடக்க மாட்டார்கள். ஊரில் அதிக அளவில் சிறுதெய்வ கோவில்கள் இருக்கின்ற காரணத்தால் ஊர்க்காரர்கள் மட்டுமல்ல வெளியூர் வாசிகளும் அங்கே பாதுகையைக் கழற்றி கையில் பிடித்துக் கொண்டுதான் நடக்க வேண்டும். ஆரம்பப் பள்ளி ஒன்று இருப்பதாகக் கேள்வி பட்டேன். தொடர்ந்து கிராமத்தைப் பற்றிய கேள்விகள் மனதில் தோன்றுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறதா?

இத்தனைக் கரடு முரடான பாதைகளைக் கடந்து அவசரத்திற்கு எப்படி மருத்துவ வசதி பெறுவார்கள்?

ஆரம்பக் கல்வி முடித்த அனைவரும் உயர் கல்வியைத் தொடர்கிறார்களா?

கேளிக்கைகளுக்கு என்ன செய்வார்கள்?

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உபயோகிக்க மாட்டார்களா...?

சுத்தமான காற்றை சுவாசித்து நல்ல உடல் உழைப்போடு ஆரோக்கியமாய் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்வியலினை மாசுபடுத்தாது இயல்பு கெடுக்காது போய் வாருங்கள். இயற்கை அற்புதமானது!

- அகராதி

Pin It