காஷ்மீரில் சூன் 11 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை மட்டும் 51 பொது மக்கள், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. பாகிஸ்தானின் தூண்டுதலால்தான் மக்கள் தெருக்களில் இறங்கி, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரை நோக்கி கல்லெறிகின்றனர் என்று இந்திய அரசு சொல்கிறது.

உண்மைகளை அறியும் நோக்கத்தோடு "காஷ்மீரில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் ஆகஸ்ட் 14 அன்று, சென்னை லயோலா கல்லூரியில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறீ நகரிலிருந்து "ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பு' ஒருங்கிணைப்பாளர் குர்ரம் பர்வேஸ், பெங்களூரிலிருந்து காஷ்மீரிகளின் சுயநிர்ணய இயக்கத்தின் சமய மற்றும் பண்பாட்டுப் பிரிவிலிருந்து மாணவர் காலிது வாசிம் மற்றும் கவிஞர் இன்குலாப் ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சி, தகவல் தொழில்நுட்பத் துறையினர் மற்றும் இளைஞர்கள் இணைந்து செயல்படும் "சேவ் தமிழ்' (Save Tamil movement) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"சேவ் தமிழ்' இயக்கத்தின் சார்பில் உரையாற்றிய அருண், “ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நான்காம் கட்ட ஈழப்போரின் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட செய்தியை வெளியிடாமல், ஊடகங்கள் எப்படி இருட்டடிப்பு செய்தன என்பதை நாம் நன்கு அறிவோம். இன்று காஷ்மீரில் நடக்கும் போராட்டத்தையும் ஊடகங்கள் மறைப்பதையும், திரிப்பதையும் நம்மால் உணர முடிகிறது. எனவே, காஷ்மீரில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாதாரண காவலரைப் பார்த்தாலே பயப்படும் நம்மைப் போன்ற பொதுமக்கள், காஷ்மீரில் உயிரைத் துச்சமாக மதித்து, ஆயுதமேந்திய காவல் படைகளை நோக்கிப் போராடுவதன் காரணம் என்ன? ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் வெடித்தெழுவது அன்றி வேறொன்றும் இல்லை” என்றார்.

கவிஞர் இன்குலாப் தமது உரையில், 1948 இல் காஷ்மீர் எப்படி இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதையும், காஷ்மீர் மக்களின் விடுதலை வரலாற்றையும் விளக்கிப் பேசினார். இந்திய அரசு எப்படி காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தையும், இந்தியாவில் உள்ள பிற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தையும் ஒடுக்குகிறது என்று விளக்கினார். நான்காம் கட்ட ஈழப் போரில் ஆயிரக்கணக்கானத் தமிழர்களைக் கொல்வதற்கு துணை போன இந்திய அரசின் கரங்களில் ரத்தக் கறை படிந்துள்ளது என்று இந்திய அரசைக் கண்டித்தார்.

இந்திய அரசும், ஊடகங்களும் காஷ்மீர் குறித்து திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கும் மாயைகளை உடைத்துப் பேசினார் காலிது வாசிம். “1948 இல் இந்தியாவோடு காஷ்மீரை இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மன்னர் அரிசிங்கிற்கு மக்கள் ஆதரவு கிடையாது. மேலும், அம்மன்னர் கூட நிபந்தனையோடு கூடிய இணைப்பு என்றும், பொது வாக்கெடுப்பு மூலம் இணைப்பு குறித்து காஷ்மீர் மக்களின் விருப்பத்தைக் கண்டறியும் வரை, நடைமுறையில் இருக்கும் தற்காலிகமான இணைப்பு என்றும்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்படி ஒரு நியாயமான பொது வாக்கெடுப்பு, கடந்த 62 ஆண்டுகளில் நடத்தப்படவில்லை என்பதால், அவ்வொப்பந்தம் தன்னுடைய சட்டப்பூர்வ மதிப்பை இழந்துவிட்டது.

“இப்போது நடக்கும் காஷ்மீர் மக்களின் எழுச்சிமிக்க போராட்டம், ஏதோ வளர்ச்சியின்மையின் காரணமாக மக்கள் வெளிப்படுத்தும் கோபம் என்று காரணம் சொல்லப் பார்க்கிறார்கள் இந்தியாவின் அறிவுஜீவிகள். காஷ்மீர் மக்கள் தங்களுடைய உரிமையான உள் கட்டமைப்பையும், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும், வேலைவாய்ப்புகளையும் கோருகின்ற அதே நேரத்தில், இந்தியாவிலிருந்து விடுதலையைத்தான் விரும்புகின்றனர். காஷ்மீர் ஓர் உள்நாட்டுப் பிரச்சனை என்று தொடர்ச்சியாகப் பொய் சொல்லி வருகிறது இந்திய அரசு. அப்படி

யெனில், இதுவரை காஷ்மீர் பிரச்சனை குறித்து 18 முறை அய்.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே அது ஏன்? இந்தியா பாகிஸ்தானோடு மேற்கொண்ட தாஷ்கண்ட் மற்றும் சிம்லா ஒப்பந்தத்தில் காஷ்மீர் பற்றி பேசியிருப்பது ஏன்? காஷ்மீர் பிரச்சனையில் காஷ்மீர் மக்கள்தான் முதன்மையான தரப்பினர் ஆவர். காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அங்கீகரிக்காமலும், காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்காமலும் இவ்விஷயத்தில் ஓர் அங்குலம் கூட முன்னேற முடியாது.

“உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம் ஒடுக்குமுறைக்கெதிரானப் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும். ஆசாத் காஷ்மீர் போராட்டமானாலும், இலங்கையில் நடக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டமானாலும், வடகிழக்கு இந்தியாவில் நடக்கும் நாகாலாந்து விடுதலைப் போராட்டமானாலும் - நமது மொழியும், வரலாறும் வெவ்வேறாக இருக்கலாம்; ஆனால், நீதிக்கான நமது போராட்டம் ஒன்றுதான். மக்கள் இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார் காலிது வாசிம்.

இறுதியாகப் பேசிய குர்ரம் பர்வேஸ், இலங்கையில் நடைபெறும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை காஷ்மீர் மக்களாகிய நாங்கள் மிக நுட்பமாகக் கவனித்து வருகிறோம். எங்களுக்கு எழுச்சியூட்டிய போராட்டங்களுள் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஒன்று. கடந்த ஆண்டு தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துயரங்களுக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இலங்கை அரசு தமிழர்தம் விடுதலை வேட்கையைக் கொல்ல முடியாது. இது, காஷ்மீரிகளுக்கும் பொருந்தும். இந்தியப் படையினர் காஷ்மீர் மக்களைக் கொன்று குவிக்கலாம். ஆனால், காஷ்மீர் மக்களின் விடுதலை வேட்கையைக் கொல்ல முடியாது.

அடிப்படையில், காஷ்மீர் மக்களின் போராட்டம் என்பது இருத்தலின் வெளிப்பாடு. காஷ்மீரிகளோ, தமிழர்களோ இம்மண்ணில் இருக்கும்வரை அவர்தம் விடுதலை வேட்கையும் உயிர்ப்போடுதான் இருக்கும். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை தாகத்தை அழிப்பதற்கு ஒடுக்குமுறையாளர்கள் - வெடிகுண்டையோ, துப்பாக்கி ரவையையோ இதுவரை கண்டுபிடிக்கவில்லை. காஷ்மீரிலும், ஈழத்திலும் உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க என்ற முன்னுரையோடு, காஷ்மீரில் நடப்பதை விவரிக்கத் தொடங்கினார். அந்த உரை பின்வருமாறு :

“ஜம்மு காஷ்மீரில் 1990களிலிருந்து, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 8 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். காஷ்மீரில் உள்ள ராணுவ, துணை ராணுவ, காவல் துறையினரின் பெரும் பகுதி காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பொதுமக்களை கட்டுப்படுத்துவதில்தான் உள்ளதே தவிர, எல்லைப் பாதுகாப்பில் அல்ல. மேலும், ராணுவம் இன்று கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், கடைவீதிகள் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது.

சனவரி 2004 இலிருந்து நவம்பர் 2008 வரையிலான காலத்தில் மட்டும் (மும்பை தாக்குதலுக்கு முன்னர் வரை) 6 ஆயிரத்து 588 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தைதான் இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதிக் காலம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. அமைதிக் காலம் தவிர்த்த போர்க் காலங்களில் கொலைகளின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும். கெடுவாய்ப்பாக, ஜம்மு காஷ்மீரில் அமைதிப் பேச்சுவார்த்தை என்பது, தண்டனை பயமில்லாமல் பொதுமக்களை கொலை செய்யும் நடைமுறையை மறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மக்கள் போராட்டங்களுக்கு எதிர்வினையாக அவர்களைக் கொலை செய்வது என்பது, போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறையாமல் தொடர்கிறது. ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்கள் உலக அரசியலையும், தங்களைச் சுற்றி நடக்கும் பிராந்திய புவிசார் அரசியலையும் கருத்தில் கொண்டே தங்களது போராட்ட முறைகளைத் தீர்மானிக்கின்றனர். மாறி வரும் உலகச் சூழலில் பெரும் திரளான பொதுமக்கள் ஒன்று கூடி, தங்களை ஒடுக்குகின்ற இந்திய அரசை எதிர்த்து அமைதியான, ஆயுதமற்ற போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால், அவர்களின் இந்த அமைதி வழிபோராட்டத்திற்கு, இந்திய அரசு ஆயுதப்படை களைக் கொண்டு பதிலளிப்பதால், பொதுமக்கள் படுகாயங்கள் அடைவதும், உயிரிழப்பதும் நிகழ்கின்றன. இதன்மூலம் மக்களின் வலியை அதிகப்படுத்தி வருகிறது அரசு.

வன்முறை மற்றும் அமைதி வழி போராட்டம் என்று, எந்த வகையில் மக்கள் போராடினாலும் அதை இரும்புக்கரம் கொண்டு இந்திய அரசு அடக்கி வருகிறது. இதனால் மக்கள் தங்களின் அதிருப்தியை காட்டுவதற்கான எல்லா கதவுகளும் அடைக்கப்படுகின்றன. ஆயுதம் தாங்கிய போராட்ட வழிகளைத் தவிர்த்து பெரும் திரளான மக்கள் ஒன்று கூடி, ஆயுதம் இல்லாமல் போராடுவதை அரசு அங்கீகரிக்க மறுப்பதுடன் கொடூரமாக ஒடுக்குகிறது. இது, இந்திய அரசு இப்பிரச்சனையை எவ்வாறு கையாளுகிறது என்பதையும் காட்டுகிறது. தற்பொழுது நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் - இன்றைய அரசின் மீதான கோபம் மட்டுமல்ல; 1989 இலிருந்து காஷ்மீர் மக்களை ராணுவம் மற்றும் துணை ராணுவம் மூலம் சிறைப்படுத்தி வைத்திருப்பதையும், அதற்கு துணை செய்யும் தொடர்ச்சியான வன்முறையையும், 1947 ஆம் ஆண்டிலிருந்து காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்குவதையும் எதிர்ப்பதும்தான்.

இந்திய அரசு, காஷ்மீர் பிரச்சனைக்கு புதுமையான தீர்வைத் தருவதாக கூறி வருகிறது. ஆனால் கடந்த கால நிகழ்வுகளை உற்று நோக் கினால், இந்தியாவின் அணுகுமுறை என்பது தீவிர ராணுவவாதமாகவே இருந்துள்ளது. அரசியல் ரீதியாக மக்களையோ, சுதந் திரத்திற்காகப் போராடும் தலைமையையோ அரசு அணு கியதில்லை. காஷ்மீர் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சுயநிர்ணய உரிமை குறித்து, அரசு இதுவரை பரிசீலித்தது கூட இல்லை.

இந்திய அரசு எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு, பேச்சுவார்த்தை தான் ஒரே வழி என்று கூறுகிறது. ஆனால் மக்களின் விருப்பமான சுயநிர்ணய உரிமையைப் பற்றி மட்டும் பேசுவதே இல்லை. இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர், ஒரு பிரச்சனை அல்ல, இது ஒரு சர்ச்சைக்குரிய பகுதி. இந்தியா காஷ்மீரை ராணுவமயப்படுத்துவதன் மூலம் காஷ்மீர் நிலத்தையும், காஷ்மீரில் உள்ள முக்கியப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வளங்களையும் தனது கட்டுக்குள் வைத்துள்ளது. நீதித் துறை, கல்வி நிலையங்கள், ஊடகம் போன்ற ஜனநாயகத் தூண்களை செயலிழக்க வைத்துள்ளது இந்திய அரசு. இதில் இந்தியாவின் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே சிறப்பாகப் பணியாற்றுவதைக் கண்டு இந்தியா பெருமை கொள்ளலாம். அதுதான் இந்திய ராணுவம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல் தலைவர்களின் கட்டுப்பாட்டின்படி செயல்படும் இந்திய ராணுவத்தால்தான் காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதியாக நீடிக்கிறது. இந்தியப் படையினர் இந்துத்துவ தேசியவாதிகளுடன் கைகோத்துக் கொண்டு, கடந்த மே மாதம் 100 கிராம பாதுகாப்பு குழுக்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. இத்தகைய "சுய பாதுகாப்பு' பிரச்சாரங்களையும், குழுக்களையும் மேற்கொள்வதன் மூலம் ராணுவமயமாக்கலையும், வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதையும் அதிகரித்து இப்பிரச்சினைக்கு மதச்சாயம் பூசுகின்றனர்.

ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் இந்தியப் படையினரின் சொல்லும், செயலும் - மக்களின் ஒத்துழையாமை இயக்கத்தை பயங்கரவாதத்திற்கு இணையான தேசத்துரோகமாக சித்தரிக்க முயல்வதாகத் தோன்றுகிறது. அமைதியான போராட்டங்களில் பங்குபெறும் ஆண்களையும், பெண்களையும் துப்பாக்கியால் சுடுவதன் மூலம் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை மேற்கொள்கின்றனர். காஷ்மீரில் மக்கள் கல்லெறிவதென்பது, கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு செயல். அதை வன்முறையென்று சொல்கிறார்கள். அரசியல் ரீதியாக கோரிக்கைகளை எழுப்புவதற்கான வழிகள் திட்டமிட்ட முறையில் அடைக்கப்படுவதால் வேறுவழியின்றி, ஒடுக்கப்பட்ட மக்கள் ஆத்திரத்தில் கல்லெறி கின்றனர். ஆதிக்கம் செலுத்துவதற்காக அரசு பயன்படுத்தும் கொடூரமான வழிமுறைகளை கல்லெறிவதோடு ஒப்பிட முடியாது.

விடுதலையைக் கோரும் தலைவர்கள் எண்ணற்ற பேர், வீட்டுக் காவலிலும், தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போராடுவதைக் கூட தடுக்கிறார்கள். சான்றாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சிறீநகர் வந்து, மனித உரிமை மீறல்களை கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று உறுதி அளித்துக் கொண்டிருந்தபோது, சுமார் நூறு தோழர்களுடன் போராட்டம் நடத்த முனைந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தப்பட்டார். தேர்தல் நடந்த பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகப் பேசுவார்கள். அதன் பிறகு, பிரிவினைவாதிகள் தேவையற்றவர்களாக ஆகிவிடுவார்கள் என்று இந்தியப் பிரதமர் 2008 ஆம் ஆண்டு கூறினார்.

தடுப்புக் காவலிலும், கைது செய்யப்பட்டும் இருக்கும் செயல்வீரர்கள், வழக்குரைஞர்கள், அறிவுஜீவிகள், காஷ்மீர் விடுதலையைக் கோரும் தலைவர்கள் மற்றும் சிறுவர்களின் முழு எண்ணிக்கை எவரிடமும் இல்லை. இந்திய அரசு, ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல் துறையின் அடக்குமுறையை எதிர்க்கும் குடிமைச் சமூகத்தின் ஒரு சாரரை மிரட்டுவதற்கும், பயமுறுத்துவதற்கும், அடக்குவதற்கும், சந்தேகத்தின் பேரில் கைது செய்வதற்குமே - தடுப்புக் காவல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுகின்றன.

2010 சனவரியிலிருந்து ஆகஸ்ட் வரை.மட்டும் 89 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 71 பேர் இந்திய ஆயுதப்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இன்றளவும் நாங்கள் தான் (பொது மக்களை) வன்முறை செய்வதாகவும், இந்திய ராணுவத்தை அமைதியின் வடிவ மாகவும் சித்தரித்து வருகின்றனர்.

இந்திய அரசு தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டங்களை, காஷ்மீரின் பிரச்சனையாகக் கருதவே இல்லை. ஆனால் அதேநேரத்தில் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் ராணுவம் தனது படைகளை அதிகரித்தும், பலமாக வேரூன்றியும் வருகிறது. இந்திய அரசு - ராணுவம் மற்றும் துணை ராணுவத்தின் அடக்குமுறைகளைக் கண்டு கொள்ளாமலும் அல்லது கட்டுப்படுத்த முடியாத நிலையிலும் இருக்கிறது. ஒருபுறம் "காஷ்மீர் மக்களைப் பாதுகாப்பதற்கே இந்திய ராணுவப்படை' என்று கூறிக் கொண்டே, மறுபுறம் இந்திய அரசின் பாதுகாப்பு நலன்களுக்காகப் பொதுமக்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு நியாயத்தையும் கற்பிக்கிறது. எமது மக்களின் "பாதுகாவலர்கள்' வித்தியாசமானவர்கள். அவர்கள் எப்பொழுதும் எங்களை எதிரிகளாகவும், துப்பாக்கி இல்லாத பயங்கரவாதிகளாகவுமே பார்க்கின்றனர். இந்தியாவைப் பாதுகாப்பதற்கு காஷ்மீரில் ராணுவ அடக்குமுறை தேவை என்பதாகப் புரிந்து கொள்ள வைக்கப்படுகின்றனர்.

சர்வதேச மனித உரிமை சட்டங்கள் - ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் ஏற்படுத்தும் தண்டனை பயத்தை - பொது பாதுகாப்புச் சட்டம், சச்சரவுப் பகுதி சட்டம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் போன்றவை எல்லாம் சட்டப்பூர்வமாக இல்லாமல் செய்து விடுகின்றன. 2009 பிப்ரவரி 26 அன்று பதவியேற்ற பின்னர் முதலமைச்சர் அப்துல்லா, "ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்' நீக்கப்படும் என்றார். கடந்த தேர்தல் அறிக்கையில் அவர் அவ்வாறு கூறியிருந்ததாலேயே அவர் வெற்றியும் பெற்றார். "ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை' நீக்குவது சட்டப்பூர்வமாக மட்டுமின்றி, அரசியல் பூர்வமாகவும் தண்டனை பயத்தை கொண்டு வரும். "ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை' நீக்குவது மட்டுமின்றி, தங்களுடைய பாதுகாப்பும் மேம்படுத்தப்பட வேண்டுமென காஷ்மீரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்திய அரசு நிர்வாகத்தாலும் ராணுவத்தாலும் வன்முறை சோதனைகளை மேற்கொள்ளும் பரிசோதனைக் கூடமாக காஷ்மீர் ஆக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ராணுவ ஆட்சி நடக்கிறது என இந்திய அரசும், சர்வதேச சமூகமும் இன்று வரை கூறவே இல்லை. ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் ராணுவமயமாக்கல் "உள்நாட்டுப் பிரச்சனை' என்று கூறப்படுகிறது. ஆனால், இப்பகுதி சர்வதேச சச்சரவு மற்றும் போர் பகுதியின் விதிகளுக்குள் வரவேண்டிய பகுதியாகும். இந்திய அரசின் திட்டமிட்ட மனித உரிமை மீறல்களையும், மனித இனத்திற்கு எதிரான குற்றங்களையும் சர்வதேச சமூகம் கண்டிக்காமல் அமைதி காக்கிறது. காஷ்மீர் பிரச்சனையும் பிற சர்வதேசப் பிரச்சனைகளைப் போன்றதே. இதில் சர்வதேச சமூகத்தின் தலையீடு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. சமூக நீதியின்படி ஒரு சரியான முடிவுக்கு வருவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.

சர்வதேச சமூகத்தின் கவனத்திலும், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் பேச்சுவார்த்தையிலும் காஷ்மீர் மக்கள் ஒரு தரப்பினர் என்பது திட்டமிட்டு விடுபட்டே வருகிறது. இந்திய அரசு அமைதி வழியில் போராடி வருபவர்களை தொடர்ந்து கடுமையாக அடக்குமேயானால், அதே பொதுமக்களை மீண்டும் ஆயுதங்களை கையிலெடுக்க நிர்பந்திக்கிறது என்றே பொருள். இதனால் மீண்டும் வன்முறைச் சக்கரம்தான் சுழலும்.” 

- ச. இளங்கோ

Pin It