கார்கில்...

indianflag 450சட்டென நினைவில் வருவது 1999 ஆம் ஆண்டு நடந்த போர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடந்த போரில் இந்தியா பாகிஸ்தானை வென்று வெற்றிக் கொடியை நாட்டியது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், இந்திய இராணுவம் திராஸ் பகுதியிலுள்ள தோலோலிங் மலையடிவாரத்தில் போர் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்துள்ளது. 

நாம் இப்பொழுது இருக்கும் இடமும் அதுவே…!

இது போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டதாகும். இங்கு, போரின் நிலையை வெளியிட்ட அன்றைய நாளிதழ் செய்திகள், புகைப்படங்கள், வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் பெயர்கள், படங்கள், போர் குறித்த ஆவணங்கள், பதிவேடுகள், போரில் உபயோகிக்கப்பட்ட விமானங்கள், பீரங்கிகள் மற்றும் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

1999 ஆம் ஆண்டு இப்போருக்காக நாடு முழுவதும் மக்கள் நன்கொடைகளை தந்து தங்களாலான உதவியைச் செய்தனர். அவ்வாறு நன்கொடை கொடுத்த மக்களின் பெயர்கள் பக்கம் பக்கமாக நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் வந்தது இன்றும் என் நினைவில் உள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போதே, நமக்குள் ஒரு ராணுவ வீரன் வந்து மெய்சிலிர்க்கச் செய்கிறான்.

எதிரியிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களில் பாகிஸ்தான் நாட்டுக்கொடியும் ஒன்று. இதை பார்க்கும் போது, இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பிரபலமான பாகிஸ்தான் பெரியவர் அந்நாட்டுக் கொடியை உற்சாகத்துடன் அசைப்பதை பார்த்த நினைவுகள் வந்து போயின.

இது எதிர் நாட்டு படையிடமிருந்து கைப்பற்றப்பட்டதால், தலைகீழாக வைக்கப்பட்டு இருந்தது.

போரில் இறந்த எதிர் நாட்டவர்களையும், உரிய மரியாதையோடு அடக்கம் செய்த புகைப்படமும் நம்மை வெகுவாகக் கவர்ந்தது.

அக்கணமே என்னுடைய இந்த பயணக்கதை கார்கிலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என எண்ணி மேலோட்டமாக வார்த்தைகளை கோர்த்து மனதில் நிறுத்தினேன்.

அதுதான் இதுவரை படித்ததும் கூட…!

நம்மைக்கவர்ந்த மற்றொன்று என்னவென்றால், இங்கிருந்து நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்அஞ்சல்அட்டை அனுப்பும் வசதி. அதன் பின்புறம் கார்கில் போர் நினைவிடத்தின் புகைப்படம் அழகான தரத்தில் பதியப்பெற்றது.

இதன் விலை ரூபாய் 20. நாங்கள் வாங்கி அனுப்பலாம் என்று நினைத்துக்கேட்கும் போது,மதிய உணவு இடைவேளைக்காக அங்காடி மூடப்பட்டிருந்தது. 

--------------                               ----------------                            ---------------------                                  ------------------

"இமயத்தின் இமயங்கள்" பயண ஆசை என்னுள் கடந்த ஐந்தாண்டுகளுக்குமுன்பு அக்டோபர் மாதத்தில் மணாலி சென்ற போது தோன்றியது. அப்போது அங்கு பனிமலைகள் இல்லை. ஆனால் தூரத்தில் இருந்த பனிமலைகள் என்னை வெகுவாகக்கவர்ந்தது. 

அப்படி பனி மலைகளுக்குக்கிடையே பயணம் செய்ய வேண்டுமானால், நாம் மணாலியிலிருந்து "லே" (ஊர் பெயர்) சென்றால் போதும்.

அவ்வாறு தோன்றிய ஆசை, ஐந்தாண்டுக் கனவாக இருந்து, கடந்த ஓராண்டாக திட்டம் போடப்பட்டு, கடந்த 2018மார்ச் மாதம் இறுதி வடிவம் எடுத்தது.

ஒன்பதுநாள் பயணமாக, சென்னையிலிருந்து விமானத்தில் ஸ்ரீநகர் சென்று, அங்கிருந்து லே, நுப்ரா பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, மணாலி, டெல்லி வழியாக மீண்டும் சென்னையை அடைவது இறுதி திட்டமாக வடிவெடுத்தது.

எங்களைப் பற்றிய சில தகவல்களை நான் இங்கே கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

நாங்க ஆறு பேரு ..!

ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள். பழனிசாமி, அரவிந்த், சிவலிங்கம், சிவகுமார்,  ஆதித்யன் மற்றும் கிரிதரன். அண்ணன் பழனிசாமி சுற்றுலாக்களுக்காகதிட்டமிடும்அழகேஅழகுதான். பல்வேறு இணையதளங்களை ஆராய்ந்து, மிகவும் குறைந்த செலவில் நிறைந்த அனுபவங்களோடு சென்றுவருவது,  எங்களது ஒவ்வொரு பயணத்தின் சிறப்பம்சமாகும்.

அதுபோலவே இந்த பயணத்திற்கும் நூறு நாட்களுக்கு முன்னதாக விமானப்பயணத்திற்கான முன்பதிவுகளை செய்து விட்டு, ஒவ்வொரு நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தோம்.

நாட்கள் நகர்வது கடினமாகவே இருந்தது.

பயணத்தின் ஒரு மாதத்திற்கு முன்பு, தங்குவதற்காக விடுதிகளின் முன்பதிவு, தோராயமான செலவுகள் என எங்கள் அண்ணன் அனைத்து முன்னேற்பாடுகளை செய்து முடித்தார். 

இறுதியாக மாதங்கள் வாரங்களாகவும், வாரங்கள் நாட்களாகவும் மாறி வந்தது "இமயத்தின் இமயங்கள் " பயணத்தின் முதல் நாள்.

அது கூடவே, எனக்கு வந்தது ஆட்காட்டி விரலின் பின் பகுதியில் வீக்கமும் தீராத வலியும். காரணம், சில நாட்களுக்கு முன்னர் இவ்விரலில் சிறியதாய் அடிபட்டு உட்காயமாகவே மாறியிருந்தது. 

பொதுவாக புகைப்படம் எடுக்க இந்த விரலே பொத்தானை அழுத்துவதற்கு பயன்படும். அதனால் எனக்குக்கவலையும்பற்றிக் கொண்டது.

இங்கு செல்வதே பிரமாண்டமான மலைகளின் அழகையும், பள்ளத்தாக்கு,சமவெளி மற்றும் மாசற்ற வான்வெளியையும் பார்த்து ரசிக்கவும், ரசித்ததை புகைப்படம் எடுப்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருந்தது. எங்கே இந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறாமல் போய்விடுமோ..! என்ற ஏக்கமும் இருந்தது.

நாள் 1

முதல் நாள் சென்னை விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து டெல்லி சென்று பின்னர் காஷ்மீர் செல்வதாக திட்டம். அவ்வாறே சென்னை விமான நிலையம் காலை 7 மணிக்கே சென்றதால் பசி கிள்ளியது. அன்று ஞாயிறு என்பதால் வெளியிலும் கடைகள் திறக்கப்படாமலிருந்துதது. விமானநிலைய வெளிப்புறத்திலிருந்த கடையில் 2 இட்லி 75 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு, நண்பர்கள் 6 பேரும் பயணத்தைத்தொடங்கினோம்.

இவ்வாறு பொது இடங்களில், மக்களுக்காக குறைந்தபட்சம் உண்ணும் உணவையாவதுஅதன் உரிய விலைக்கு விற்றால் அனைவரும் பயன்பெறலாம்.

இது கடைகளின் மிக உயர்ந்த வாடகையால்வரும் விளைவு…!

இப்பயணத்தில் வரும் மிக உயர்ந்த இமய மலைச்சிகரங்களில்கூட தேநீரின் விலை 20~30 மட்டுமே. ஆனால் விமான நிலையங்களில் குறைந்தபட்ச விலை ரூபாய் 80.

இங்கு விற்கும் உயர் ரக மதுபானங்கள் வெளியில் விற்கும் விலையைவிட குறைவுதான்…!

இதுமட்டும் எவ்வாறு சாத்தியம்..? என்ன கொடுமை ..!

விமானத்தில் டெல்லி செல்ல சென்னையிலிருந்து பயணம் ஆரம்பித்தது.

விமானம் மேலே எழும்பியபோது,சென்னை மாநகரத்தின் வான்வெளிக்காட்சி என்னை வெகுவாகக்கவர்ந்தது. குறிப்பாக, கத்திப்பாரா பாலமானது வண்ணத்துப்பூச்சியின் சிறகைப்போல்விரிந்து, அதில் செல்லும் வாகனங்கள், சிறியதாக ஊர்ந்து செல்லும் அழகு குழந்தையைப்போல் என்னை ரசிக்கச் செய்தது.

அவ்வப்போது எனது விரல் எதிலாவது இடித்துக்கொண்டு வலியை இன்னும் மிகைப்படுத்தியது. ஒருகட்டத்தில் விமானப்பணிப்பெண்ணிடம் முதலுதவி கேட்க,அவர்களும் சிறிது நேரத்தில், களிம்பு தடவி பெருவிரலோடு கட்டுபோட்டுவிட்டனர்.

இருந்தாலும் வலி நின்ற பாடில்லை. களிம்பு தடவிய தருணங்கள் மட்டுமே இனிமையாய் இருந்தது.

அருகிலிருந்த அண்ணன்பழனி, “என்னடா..! எப்படி இருந்தது கட்டு?”என்று கேட்க, வலி கலந்த சந்தோஷத்தில், மிகவும் ஜில்லென்று இருந்தது என பதிலளிக்க, வான்வெளிப்பயணம் மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.

பின்னர் டெல்லி சென்று அங்கு 3மணிநேரம் இடைவெளியில் காஷ்மீர் விமானம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த இடைவெளியில் மதிய உணவிற்காக பீசா வாங்கி தற்காலிகப் பசியை அடக்கிக் கொண்டோம்.

அதன் பிறகு காஷ்மீர்பயணம் ஆரம்பித்தது.

காஷ்மீர் விமானத்தில் சாளர இருக்கையில் அமர, சென்னையிலே கேட்டு பெற்றதால், பனி மலைகளின் அழகைக்காண ஆவலுடன் காத்திருந்தேன்.

வெகு நேரமாகியும் தரைகளை மட்டுமே காண முடிந்தது. இறங்குவதற்கு 15 நிமிடம் முன்பு,தூரத்தில் பனி மலைகள் தென்பட ஆரம்பித்தது.

இருப்பினும் காற்றின் வேகமும், மேகக்கூட்டமும் அதிகமானதால் விமானம் மேலும் கீழும் அதன் பறக்கும் உயரத்தில் மாற்றம் கண்டுகொண்டிருந்தது.

விமானம் பறக்கும் உயரத்திலிருந்து திடீரென்று கீழே இறங்கும் பொது, வயிற்றில் ஏற்படும் ஜிவ்வென்ற உணர்வு நன்றாகத்தான் இருந்தது.

காஷ்மீர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், உடமைகளை எடுத்துக்கொண்டு வெளிவரும் போது யூகலிப்டஸ் வாசனை மூக்கை துளைத்தது. விமான நிலையத்தில் இப்படி ஒரு வாசனையா ? என ஆச்சரியத்தில் வெளியேறிக்கொண்டிருந்தோம்.

பின்னர் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த மகிழ்வுந்தில் தால் ஏரிக்கு புறப்பட்டுச்சென்றோம்.

இவ்வாசனையானது எங்களது மகிழ்வுந்து பயணத்திலும் தொடர்ந்ததால், அனைவரின் உடமைகளை ஆராயும் போது, நண்பரின் பையிலிருந்த யூகலிப்டஸ் குப்பிஉடைந்திருந்தது.

செல்லும் வழியெங்கும் ராணுவ வீரர்கள். எங்களுக்கோ இனம் புரியாத பயம்..!அது அனைவருக்கும் பீதியை உண்டாக்கியது. அதற்கு முன்தினம் ரம்ஜான் பண்டிகையானதால் பாதுகாப்பிற்காகவும், உள்ளூர் நிலையை அமைதியாக பாதுகாத்திடவும் இத்தனை பட்டாளத்து வீரர்கள்.

அவர்களின் கண்காணிக்கும் விதம்மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. மணல் மூட்டைகளுக்கு பின்னர், கம்பி வேலிகளுக்கு உள்ளே, மேம்பால தூண்களுக்கு பின்னர், மரங்களுக்கு பின்னர் எனபிரமிக்க வைத்தது. அந்த ஊருக்கு அது புதிதல்ல. அந்த நிலைமையை பார்க்கும் எங்களுக்குஅது புதிதாய்த் தெரிந்தது.

அவ்வாறே, விளையாட்டாக இப்பொழுது திடீரென ஒரு துப்பாக்கியால் நமது வாகனத்தை சுட ஆரம்பித்தால் என்ன ஆகும் எவ்வாறு முன்னெச்செரிக்கைகளை கையாள்வது என பேசிக்கொண்டும், காஷ்மீரின் முழுக்கடையடைப்பாக இருந்த நகரத்தின் நிலையையும் பார்த்து சென்று கொண்டிருந்தோம்.

விமான நிலையத்திலிருந்து தால் ஏரியானது 15கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஏறக்குறைய 40நிமிடப்பயணம்.

திடீரென பயங்கர வெடி சத்தம்...
நாங்கள் அனைவரும் பயந்து என்ன நடக்கிறதென்று தெரியாமல் பதறிப்போய்விட்டோம்.

பிறகு வெளியில் பார்த்தால்,பட்டாசை சாலையில் வைத்து வெடித்துக்கொண்டிருந்தனர்.

குறிப்பாக மகிழ்வுந்தின் இடப்புறம் அமர்ந்திருந்த ஆதியும்கிரியும்வெடி சத்தத்தில் திடீரென கீழே குனிந்து ஒளிந்து கொண்ட விதம்,எங்களுக்குஅடக்கமுடியாதசிரிப்பலையாகமாறியது
ஏனென்றால் சிறிதுநேரத்திற்கு முன்புதான் இதைப்பற்றிப்பேசிக்கொண்டிருந்ததால், இதன் சுவாரசியம் முற்றியது.

செல்லும் வழியிலே பசி ஆட்கொள்ள, அங்கே அசைவ உணவகத்தை நோக்கி படையெடுத்தோம். நன்கு திருப்தியாக குறைந்த விலையில் அசைவ உணவாக,கோழி வறுவல், காஷ்மீர் ஆட்டுக்கறி மற்றும் ரொட்டி என அன்றைய நாள் முழுவதுக்கும் சேர்த்து உண்ணப்பட்டது.

அது தான் நாங்கள் உண்ட திருப்தியான உணவு. அடுத்த எட்டு நாட்களில் அதுபோன்ற உணவு கிடைக்காது என அப்போதுதெரியாது.

மாலையில் தால் ஏரியை அடைந்ததும் எண்ணற்ற படகுகளைக்காண முடிந்தது.

kasmir boat 600சுற்றுலா சவாரிக்காக நன்கு அலங்கரிக்கப்பட்ட, மெத்தையுடன் கூடிய சிறிய ரக படகுகளும், இரவில் தங்குவதற்கான பெரிய ரக படகுகளும் இருந்தன.

நாங்கள்முதல் நாள் இரவு தங்குவதற்கு இணையத்தில் முன்பதிவு செய்திருந்தோம். அங்கு சாலையில் இருந்து தங்கும் படகிற்குச்செல்ல சிறிய படகில் நூறுமீட்டர்தூரத்தைக்கடந்தோம்.

படகுக்காரரோ நாங்கள் முன்பதிவு செய்த அழகான படகினை தராமல், அருகிலிருந்த சுமாரான படகினைக்காண்பித்து அதில் ஆறு பேரும்தங்கி கொள்ளுமாறு கூறினார். காரணம் அதில் நான்கு பேரும் தங்குவதற்கு அறைகள் இல்லை. இல்லையென்றால் ஒவ்வொரு படகில் மூன்று பேராக தங்கிக்கொள்ள சம்மதித்தான். அதாவது நல்ல நிலையில் உள்ள படகுகளின் புகைப்படங்களை வைத்து இணையத்தில் வரும் முன்பதிவுகளை பெற்றுக்கொண்டு, அவர்கள் வந்தவுடன் அது இல்லை, இதுதான் என்று பேரம் பேசுவது எங்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பிறகு முன்பதிவு செய்த அறைகளை தற்காலிகமா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலையில் விற்பது அவர்களது குறிக்கோள் .

பிறகு அனைவரும் அவர்கள் கூறியது போலவே வேறொரு படகில் தங்கினோம்.

அதற்காக விலையும் குறைத்துப்பேசப்பட்டது.

எங்கள் குழுவில் இந்தி மொழி அண்ணன்பழனிக்குகிரிக்கும்சரளமாக பேச தெரிந்திருந்ததால் இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க ஏதுவாக இருந்தது.

சிறுது ஓய்விற்குப்பிறகு, தால் ஏரியை சுற்றி பார்க்கச்சிறிய படகில் சென்றோம். அதுவும் ஒரு நபருக்கு ரூபாய் 200 சொல்ல,இந்தியில்பேரம்பேசி பேசி பாதியாகக்குறைக்கப்பட்டது .

இரண்டு மணி நேரம் பயணம். துடுப்பு கொண்டு மட்டுமே இயங்கும் படகு மிக மெதுவாக சென்றது.

அசைவ உணவு, அலங்கார பொருட்கள், காஷ்மீரத்தின் பாரம்பரியஉடைகள் என மிதக்கும் சந்தைகளை அங்கு காண முடிந்தது.இது எங்களுக்குபுதிய அனுபவமாக இருந்தது.

இதற்கு முன்னர் கிழக்கு ஆசிய நாடுகளில் மிதக்கும் சந்தைகளை இணையத்தில் பார்த்தது நினைவில் வந்து சென்றன.

அவ்வாறே படகு சவாரி ஆனந்தமாக செல்லச்,மாலைஏழு மணியாகியும் சூரியன் மறையவில்லை. இரவு 8.00 மணி வரை வெளிச்சம் இருந்தது, மிகவும் ஆச்சர்யத்தை உண்டாக்கியது.

அதன் பின்னர் இங்கேபுகழ் பெற்ற பாதாம் தேநீர் (காஷ்மீரி காவா)அருந்தி, படகோட்டியிடம் தால் ஏரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைக்கேட்டுப்பெற்றோம்.

boat 2 600இங்கு குளிர் காலத்தில் ஏரிஉறைந்து விடுவது வழக்கமான ஒன்று. அப்போது மேற்பரப்பில் பனிக்கட்டிகளை துடுப்பினால் உடைத்து கிடைக்கும் குறுகிய வழியில் செல்வோம் என்றார். ஏனென்றால் ஏரியின் நீர் முழுவதும் உறைவதில்லை,அதன் அடிப்பரப்பில் குளிர்ந்த நீரே இருக்குமாம். இந்த ஏரியின் மொத்த சுற்றளவு சுமார் 35 கிலோமீட்டர்.இங்கு மீன் பிடித்தல் மற்றும் படகு சவாரி மட்டுமே பிரதானத்தொழிலாக இருக்கின்றது.

இரவு நேரத்தில் படகு வீடுகளின் வண்ணமயமான மின் விளக்குகுகள் நீரில்பட்டு எதிரொளித்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

nightviewboat 600படகு சவாரியின் போது நடு விரல் மற்றும் மோதிர விரலையே புகைப்படம் எடுக்க உதவின.இதனால்ஆட்காட்டிவிரலின் வலி பன்மடங்காகஉயர்ந்து, விட்டு விட்டு வலி விரலை இழுத்தது.

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, இரவு உணவு உண்பதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தோம்.

சாலை முழுவதும்இரு சக்கர வாகனங்களை தாறு மாறாக ஓட்டிக்கொண்டு, வெடிகளை வெடிக்க செய்ததும்,எங்களுக்கு ஒருவித கலவர பூமியாகவே காஷ்மீர் தெரிந்தது.

வலிக்கு நிவாரணம் கிடைக்க மருந்தகத்தை நோக்கி கண்கள் பாய்ந்தது.சுமார் 2 கிலோமீட்டர் நடந்து சென்றும், கிடைக்கவில்லை. அனைத்து கடைகளும் மூடிய நிலையே...!

இறுதியாக பசிக்கு பழங்களைவாங்கிக்கொண்டு, வரும் வழியில் எதேச்சையாக ஒரு மருந்தகம் தென்பட, அங்கு சென்று வீங்கிய கைவிரலை காட்டி,கிடைத்த வலி நிவாரணி மாத்திரையை பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் சென்றேன்.

வரும் வழியில், வாங்கிய அப்ரிகாட் பழங்களை உண்டுகொண்டே,இரவு உணவை வாங்கிக்கொண்டு, படகை அடைந்தோம்.

இங்கு போஸ்ட்பெய்டு (ஏர்டெல்மற்றும் BSNL) தொலைபேசி எண்கள் மட்டுமே இயங்கும். ஆதலால் காஷ்மீர், லே செல்லும் போது இதைகருத்தில் கொள்ள வேண்டும்.

பிறகு படகில் உணவு உண்ட பின்னர், மாத்திரையை சாப்பிட்டு, உறங்கச்சென்றோம்.இவ்வாறாக பயணத்தின் முதல் நாள் முடிந்தது.

நாள் 2

இரண்டாம் நாள் காலை 5 மணிக்கே வெளிச்சம்புகுந்து என்னை எழுப்பியது . எழுந்து வெளியே வந்து அமைதியான தால் எரியும் அதன் பின்புறம் இருந்தமலை முகடுகளும்அற்புதமான இயற்கைக்காட்சியை நமக்களித்தன.

flowers 600முந்தய நாள்,படகுகள் மற்றும் மிதக்கும் சந்தையினால் பரபரப்பாக இருந்த ஏரி இப்போது அமைதியான ஒரு தருணத்தைத்தந்தன. அழகானவண்ணமலர்களைத்தாங்கியபடகுகள்எங்கள்படகுவீட்டின்முன்பேசெல்லஆரம்பித்தது.

இரண்டாம் நாள் பயணம்,காஷ்மீரிலிந்து திராஸ் சென்று,இரவு தங்கி, மறுநாள் லேசெல்வதாக திட்டம்.படகு வீட்டிலிருந்து கரையை அடைந்தோம்.

அங்கே சில கைவினை பொருட்கள், தோலிலானபைகள், காஷ்மீரின் பாரம்பரிய உடைகள், பாசிகள் என வியாபாரிகள் நம்மை சூழ்ந்து கொண்டு, விலைகளை இரட்டிப்பாக கூறி அதன் பின்னர் உண்மையான விலைக்கு விற்றனர். அங்கு வாங்கிய பைகள், பாசிகள் நம்மூர் விலைகளைவிட குறைவாகவே இருந்தன.

காலை 7 மணி அளவில் எங்களது பயணம் தால் ஏரியை சுற்றிக்கொண்டு லே செல்லத் தயார்ஆனோம்.இதற்காகபடகுக்காரர் முலமாகஒரு இன்னோவா முன்பதிவு செய்திருந்தோம்.அதுதான் நங்கள் விமானநிலையத்திலிருந்து நேற்று தால் எரிக்கு வந்ததும் கூட .

சுமார் 35 கிலோமீட்டர் சுற்றளவை கொண்ட ஏரியை அதன் சுற்றளவில் பாதியை சுற்றி கார்கில் சாலையை அடைந்தோம். ஏரியை ஒட்டிய சாலையில், காலைக்கதிரவனின் கீற்று ஒளியில் மீன்பிடி படகுகள் ஜொலித்தன .

நாங்கள் தங்கியிருந்த படகுவீடு, பிரதான சாலையில் இருந்துசுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருந்ததே பிரமிக்க வைத்தன.ஆனால் இக்காலை வேலையானது அதன் மொத்த சுற்றளவையும் காண வைத்தது.

படகு சவாரி மற்றும் படகு வீடானது ஏரியில் மொத்த பரப்பில் சுமார் 4 விழுக்காடே..!

மற்ற இடங்கள் மக்கள் வாழிடமாகவும்,மீன்பிடி இடமாகவும் பயன்படுகிறது.

பிறகு வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பி, எல்லையோர கிராமங்களின் அழகையும், நெல் வயல்களின் பசுமையும் தேனிமாவட்டத்தைகண் முன் நிறுத்தின. அவ்வாறே செல்லும் வழியில் சிந்துநதியைக்கடக்க நேரிட்டது. பனிமலைகள் உருகி,மூன்று நாடுகளை ஏறத்தாழ 20 துணை நதிகளோடு கடந்து, பல்லாயிரக்கணக்கான வாழ்வாதாரங்களை செழிப்படைய வைத்து,இறுதியாக அரபிக்கடலில் சங்கமிக்கின்றது.

இதன் தோற்றம் சீனாவில் இருந்தாலும், இந்தியாவின் வழியாக இமயமலையில் பல மலைத்தொடர்களை கடந்து, காஷ்மீர் மற்றும்பஞ்சாபை செழிக்க வைத்து, பாகிஸ்தான் செல்கிறது. இந்நதியின் மொத்த பயண தூரத்தில் 93விழுக்காடு பாகிஸ்தானில் மட்டுமே. ஆதலால் இது அவர்களின் தேசிய நதி.

அதனைத்தொடர்ந்து செல்ல, காலை பசி வயிற்றை உருட்டியது. ஆதலால் சாலையோர கடைகளை நோட்டமிட்டபடிசென்று கொண்டிருந்தோம்.

இறுதியாக, ஒரு சாலையோர உணவகத்தில்வாகனத்தை நிறுத்தி, பூரியும்,ரொட்டியும் சொல்ல, அரைமணி நேரம் கழித்துவந்தது.

காத்திருந்த வேளையில், இரு சிறுவர்கள் சாலையிலிருந்து ஒரு பெட்டியில் ஏதோ எடுத்து வந்து எங்களிடம் நீட்ட, சிவப்பு நிறத்தில் பளபளப்பானசெர்ரி பழங்கள். விலையை விசாரிக்க, 1கிலோ 120 ரூபாய் என்றனர். நண்பர்கள் சிலர் ரூபாய்100என்று குறைத்துக் கூற, இறுதியாக நாங்களே சிறுவர்களுக்காக 120 ரூபாய் கொடுக்க, குதூகலத்துடன் விடைபெற்றனர்.

பழத்தின் சுவை மிகுதியாலும், காலை பசியாலும் ஆறு நபர்களுக்கு அதுவிரைவாகத்தீர ஆரம்பித்தது.

இன்றைய பயணத்தின் மற்றோரு சிறப்பு என்னவென்றால், இது தேசிய நெடுஞ்சாலை எண் 1.நெடுஞ்சாலைப்பயணங்கள் என்றால், நிழல்களற்ற சாலையில் அரளிச்செடிகளிக்கிடையே மிக வேகமாச் செல்லும் மகிழ்வுந்துகளும், மிதமான வேகத்தில் செல்லும் சரக்கு வாகனங்களும், அடிக்கடி வரும் சுங்கச்சாவடிகளும், குறைவான தரத்தில் பன்மடங்கு விலையோடு இருக்கும் உணவகங்களே நம் மனதில் இருப்பவை.

ஆனால்தேசிய நெடுஞ்சாலை எண் 1 வழியானது, மேற்கூறியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.மிதமான வேகம், வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள், மாசற்ற சூழல், குறைந்தவெப்பநிலை, விண்ணை முட்டும் மலைகள், கூடவே வரும்சிந்து நதி, மிளிரும் பனிமலைகள் என நமது மனதைக்கொள்ளையடித்துச் செல்கிறது இந்த இமயங்கள்.

அதன் பின்னர், காலை வேலை பயணம் இமயத்தின் அழகை கண்களுக்கு விருந்தாக்கியது. எவ்வாறென்றால், பசுமையான புல்வெளி, ஊசியிலை பைன் மரங்கள், அருகிலிருக்கும் மலைகள், தூரத்திலிருக்கும் பனிமலைகள், அதன் மேலே வெண்மேகம், அதன் பின்னே நீல வானம்....இதுதான் சோனமார்க் பகுதியின் எழில்மிகு தோற்றம்.

snowmountain 600இதுவே குளிர் காலங்களில் இவை அனைத்தும் வெண்மையான பனிகளால் சூழப்பட்டு அழகுறுகின்றன.வாகன ஓட்டத்தில், இந்த அருமையான காட்சிகள் அனைத்தும் ரசித்துக்கொண்டே புகைப்படமும் எடுக்கப்பட்டது.

snowmountain 2 600பிறகு பல்டல் பகுதியை அடையும் போது சிந்து நதி பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கில் கூடாரங்கள். அது அமர்நாத் யாத்திரை செல்லுவதற்கு போடப்பட்டது என தெரியவந்தது.

house mountain 600அமர்நாத் செல்ல இரு வழிகளில் யாத்திரைகள் செல்வதுண்டு. ஒன்று பல்டல் மற்றொன்று பகல்காம்.

பல்டல்வழி மிக குறைந்த தூரம் 16கிலோமீட்டர் . ஆனால் செங்குத்தான மற்றும் சாய்வான மலைத்தொடர்களைக்கடக்க வேண்டும். மிகவும் சிரமமானது.

பகல்காம் வழியானது4~5நாட்கள் நடந்து கிட்டத்தட்ட 50கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். இவ்வழியானது பல்டல்வழியை விடச்சிறந்ததாக இருக்கும்.

ஆதலால் அனைவரின் தேர்வும் இவ்வழியே…! நடக்க முடியாதோர் குதிரைகளில் செல்லுமாறு காஷ்மீர் மாநில அரசு வழிவகை செய்துள்ளது. அதிக பட்சம்இருவழி கட்டணமாக 5000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இந்த யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து செல்லும் போது சோஜிலா மலைத்தொடர் வர ஆரம்பித்ததது. இது 11578 அடி உயரத்தில் இருப்பதால் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு, குளிர் காலங்களில் காஷ்மீரிலிருந்து லே செல்லும் வழிமூடப்படுகிறது.

இதனால் ராணுவ போக்குவரத்து பெரிதும் பாதிக்கிறது. இதற்காக கடந்த மே மாதத்தில் சோனாமார்கிலிருந்து திராஸ் வரை சுரங்கப்பாதை அமைக்க 6808 கோடி மதிப்பில்திட்டம் தீட்டப்பட்டு, 14கிலோமீட்டர் தூரத்திற்கு, இருவழிச்சாலையாக, பல்வேறு சிறப்பம்சங்களோடு வேலை நடைபெற்று வருகிறது.

இதனால் 3மணிநேர பயணம் வெறும் 15 நிமிட பயணமாக மாறும். அதுமட்டுமல்லாமல் வருடமுழுவதும் பயணம் செய்ய ஏதுவாக அமைகிறது.

இதன் பணிகள் முடிந்து, உபயோகத்திற்காக திறக்கப்படும்போது, ஆசியாவின் மிக நீளமான இருவழிச்சுரங்கப்பாதையாக இருக்கும்.

இந்த சுரங்க பாதை திட்டம், வழக்கமான போக்குவரத்திற்கு மட்டுமே பெரிதும் உதவியாக இருக்கும். சுற்றுலா செல்லும் போது மலைகளின் அழகை 3 மணி நேரப்பயணமாக அனுபவித்து செல்வது உன்னதமான அனுபவமாக இருக்கும்.

அதன் பிறகு, சோஜிலா மலைத்தொடர் உச்சிக்குச்சென்று அங்கே வாகனத்தை விட்டு வெளிவரும் போதுதான் அந்த சீதோஷண நிலையை அறிய முடிந்தது.

சுவாசிக்க முடியாமலும், ஊசி போன்ற பனிக்காற்றும், நடக்க கூடமுடியாத நிலையைமுதன் முதலாக இமயமலையில் உணர முடிந்தது.

அவ்வாறு இருந்தும் 30 நிமிடங்கள் அங்குசாலையில் வரும் இரு சக்கர வாகனங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லியும், அடிவாரத்தில் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளை ரசித்தும்,ரசித்ததை புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தோம்.

mountainroads 600சோஜிலா மலைத்தொடரை கடந்து அதன் மறுபுறம் கீழே இறங்கும் போது பசியும் தொற்றிக்கொண்டது. அடுத்து வருவது திராஸ்.

இங்கு இரவு தங்கி, மறுநாள் செல்வதே எங்கள் திட்டம்.

ஆனால் இப்போது மதிய வேலையே..!

mountroads 600இன்றைய திட்டத்தின்படி,சோனாமார்கில் 2~3 மணி நேரங்கள் செலவிடுவதாக இருந்த நேரம் இப்போது மீதமிருந்தது.

வாகன ஓட்டுனரும், "இங்கே மதிய வேளை உணவு உண்ட பின்னர் கார்கில் போர் நினைவகத்தைசிறிது நேரம் பார்த்துவிட்டு, அங்கிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில், கார்கில் சென்று இரவு தங்கிக்கொள்ளலாம்" என யோசனை சொல்ல, அதுவும் எங்களுக்கு நல்ல திட்டமாகத்தெரிந்தது.

மறுநாள் பயணத்துக்கும் கார்கில் பகுதி ஒரு மைய்யமான(மய்யம் அல்ல) இடமாகத்தெரிந்தது.என்ன..! அங்கு இரவு தங்கும் விடுதிகளின்எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

அவ்வாறே திராஸ் பகுதியில் மதிய உணவிற்காக, உணவகம் சென்று, அசைவ உணவை கேட்க, வந்தது 30 நிமிடங்களுக்குபிறகு..! ஆட்டுக்கறி அருமையாக அமைந்தது…! கோழிக்கறி கோபம் ஏற்படுத்தியது. ஏனென்றால் அது நன்கு வேகாமலும்,பழைய கறியாகவும்காணப்பட்டது.

காஷ்மீரில் உண்ட முந்தய நாள் அசைவ உணவு, இந்த உணவைவிட ஒப்பிடமுடியாத வண்ணம் சுவையாகவும், விலைகுறைவாகவும் காணப்பட்டது.

அவ்வாறே மதிய உணவை முடித்துக்கொண்டு, வாகனம் செல்லச்செல்ல தூக்கம் கண்ணை சொக்கியது...

சில நிமிடங்கள் அசந்து தூங்கியவுடன், நண்பர் எழுப்ப, வந்தது கார்கில் போர் நினைவகம்...!

kargilwar 600

இது கார்கில் ஊரிலிருந்து 50கிலோமீட்டர் முன்னதாக அமைந்துள்ளது. பின்னர் நினைவகத்தினுள் செல்லும் முன் நமது அடையாள அட்டைகள் ராணுவ அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, சில விதிமுறைகளோடு நம்மைஉள்ளேஅனுமதித்தனர்.

kargilmemorial 600இதன் பின்னர் நடந்தது கதையின் ஆரம்பத்தில் நான்சொல்லியதுவே !

அதன் பிறகு கார்கிலுக்குச்சென்று தங்கும்விடுதிகள் பார்த்துத்தங்கினோம்.சிறுது ஓய்விற்குப்பிறகு, மாலை 5 மணிக்கே கார்கில் கடைவீதியை "மாமோஸ்"சாப்பிட அலசி ஆராய்ந்து, இறுதியாக எங்களது விடுதியின் அருகில் இருக்கும் உணவகத்திற்குச்சென்று மறுபடியம் அசைவ உணவிற்கானவேட்டை தொடங்கியது. சிக்கன் மாமோஸ் டெல்லி பகுதியில் கிடைப்பதைவிட சற்று வித்தியாசமாகவே இருந்தது.

வேட்டை முடிந்ததும், இரவு குளிருக்கு இதமான பானங்கள் எங்கு கிடைக்கும் என சிலரிடம் கேட்க, சரியாய்ப்பதில் கிடைக்காததால் ஏமாற்றமே கிடைத்தது...! இதில் எனக்கு எந்த ஏமாற்றமும் ஏற்படவில்லை.

தங்கியிருந்தவிடுதியில் கேட்ட போதிலும் விரோதியை போல் பார்த்தனர்.

இரவு 10 மணி அளவில் தூங்கச் செல்லும் போது அதே நபர் வந்து, பானங்கள் வேணுமா? என்று கேட்க, நண்பர்கள் காட்டமாக, “வேண்டாம்” எனச்சொல்ல, இரண்டாம் நாள் இனிதே முற்றிற்று...!

Pin It