உலகத்தின் பெரும்பான்மை மக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகள் வணிக சினிமாக்களில் பேசப்படுவது அரிதினும் அரிதான ஒன்று. அப்படியான அரிதினும் அரிதான பிரச்சினையை உதயநிதி ஸ்டாலினும், மகிழ் திருமேனியும் தங்கள் கதைக்களமாக தேர்ந்தெடுத்து 'கலகத் தலைவன்' என்ற பெயரில் ஒரு சினிமாவாக உருவாக்கியுள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தப் படம் அரசியல் ரீதியாக மக்கள் செல்வாக்கை அதிகரிக்க உதவுமா என்றால் உதவாது. தயாரிப்பாளராகவும், விநியோகதஸ்தராகவும் பெரிய வெற்றியை கலகத் தலைவன் உதயநிதிக்குக் கொண்டு வராது. நடிகராக அவருக்குப் பாராட்டு கிடைத்தாலும், இந்தப் படம் அவருக்கு எவ்விதத்திலும் பெரிய லாபத்தைக் கொண்டு வந்து சேர்க்காது. இருப்பினும் துணிந்து நடித்திருக்கிறார்; துணிந்து தயாரித்திருக்கிறார். அதற்காக பாராட்டுக்கள்.

தனிநபர் உறவு, காதல், பிரிவு, திருமணம் என இதற்குள்ளயே சுற்றிச் சுழலும் தமிழ் சினிமாவின் கதைக்களத்தை உலகை ஆளும் கார்ப்பரேட் பக்கம் திருப்பி இருக்கிறார்கள் மகிழ் திருமேனியும் உதயநிதி ஸ்டாலினும்.

kalaka thalaivanசிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படத்தின் தொடர்ச்சியாக பேண்ட் ஷர்ட் போட்ட ஹைடெக் நபர்களை கார்ப்பரேட் ரவுடிகளாக இப்படத்தில் காட்டியுள்ளனர். லுங்கி கட்டிய, மீசை வைத்த ரவுடிகள் என்பதைத் தாண்டி, நவீன தொழில்நுட்ப உதவி கொண்டு இயங்கும் ஹைடெக் ரவுடிகள் உலகெங்கும் உண்டு.

சாதாரண, ஏழை மக்களை கார்ப்பரேட்டுகள் கொல்வதோடு நிற்பதில்லை. ஏழை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அனைவரின் குரல்களை ஒடுக்கவும், அவர்களைக் கொலை செய்யவும் கார்ப்பரேட்டுகள் எனப்படும் பெரு முதலாளிகள் தயங்குவதில்லை.

தங்கள் வணிக நலனுக்கு எதிராக எவர் நின்றாலும், அவர்களை மக்கள் நல விரோதிகளாக கட்டமைப்பது என்பதில் தொடங்கி கொலை செய்வது வரை எல்லையற்ற கிரிமினல் குற்றங்கள் புரிந்த வரலாறு இவ்வுலகில் உண்டு. அந்த குற்றங்கள் கைதேர்ந்த ஹைடெக் ரவுடிகளால் செய்யப்படுவதால், அவை பற்றி ஆதாரங்கள் வெளியில் கசிவதில்லை. இயல்பான மரணம் என்ற சித்திரமே பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கும்.

வட - தென் அமெரிக்க கண்டங்களைப் பிரிக்கும் பனாமா கால்வாயின் மீதான பனாமா நாட்டு மக்களுக்கு உள்ள உரிமையை வென்றெடுக்கவும், அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து விடுபட உறுதியோடும் வேலை செய்த பனாமா அதிபர் டோரிஜோஸ் விமான விபத்தில் இறந்தது தற்செயலா?

சொராபுதீன் சேக் கொலை வழக்கு விசாரணைக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை நீதிமன்றத்திற்கு நேரில் வர ஆணையிட்ட நீதிபதி லோயாவின் இறப்பு தற்செயலானதா அல்லது ஹைடெக் ரவடிகளால் செய்யப்பட்ட இன்டெக்சுவல் கொலையா? 

"ஸ்டெர்லைட்டே எம் மண்ணை விட்டுப் போ" என்ற வீர முழக்கத்தோடு ஜனநாயக வழியில் போராடிய தூத்துக்குடி மக்களை கொத்துக் கொத்தாக நெஞ்சைக் குறிவைத்து சுட்டதில் வேதாந்தாவிடம் லாபவெறி இல்லையா?

இருக்கிறது என நாம் நம்பினால், ஆதாரங்களை நம்மால் திரட்ட முடியுமா? சுட்டவரை அடையாளம் கண்டுவிட்டோம். சுடச் சொன்னவரை அடையாளம் காண முடியுமா? ஒரு வேளை அடையாளம் கண்டால், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியுமா?

கார்ப்பரேட் முதலாளிகள், அரசாள்பவர்களின் துணையின்றி எதையும் செய்வதில்லை என்பதை நம்மில் பலர் ஒத்துக்கொள்வோம். அதானி - அம்பானி - அனில் அகர்வாலுக்காக வேலை செய்யும் மோடியை இன்று மக்கள் விரோதி என விமர்சிப்போர் பலருண்டு. ஆனால் அதானியும் அம்பானியும் அகர்வாலும் நம்முடைய விமர்சன வட்டத்திலிருந்து ஒவ்வொரு முறையும் தப்புவது எப்படி?

பெருமுதலாளிகளின் எல்லையற்ற லாபவெறிக்கு துணை போகும் அரசியல்வாதிகளுக்கு சில நேரம் வரலாறு தண்டனை தருகிறது. ஆனால் லாபத்தை சம்பாதித்து, தின்று கொழுக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் "வெற்றியின் அடையாளமாக, திறமையினால் உலகை வென்ற அறிவாளிகளாக" வரலாற்றில் நிலைபெற்று விடுகிறார்கள். நிகழ்காலமோ, எதிர்காலமோ அவர்களுக்கு எந்தக் காலத்திலும் தண்டனை கிடைப்பதில்லை. 

இந்தியாவை இரண்டு நூற்றாண்டு காலம் ஆண்ட ஆங்கிலேய ஆட்சியாளர்களைப் பற்றி பொதுமக்கள் மத்தியில் இருக்கும் எதிர்மறை (விமர்சனக்) கருத்தைப் போல், அந்த இரு நூற்றாண்டு காலம் இந்தியாவின் வளங்களை சுரண்டிக் கொழுத்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மீது நமக்கு (பொதுமக்களுக்கு) எந்தவித விமர்சனமும் இல்லை.

தங்களது வர்த்தக நலனுக்காக இந்தியாவை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சுரண்டுவதற்கு முன்னர், டச்சு கிழக்கிந்திய கம்பெனி, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி, போர்த்துக்கீசிய கிழக்கிந்திய கம்பெனி என சக ஐரோப்பிய வல்லாதிக்க நிறுவனங்களுடன் மோதி வெற்றி பெற்ற பின்னரே இந்தியாவில் தங்கள் மேலாதிக்கத்தை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நிறுவியது. இருநூறு வருடங்களில் அவர்கள் சுரண்டிய இயற்கை வளம் ஒரு புறம் எனில், மறுபுறம் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவ அவர்கள் செய்த போரினால் மாண்ட இந்திய மக்கள் லட்சக்கணக்கானோர். உழைப்பு, உடல், உயிர், இயற்கை வளம் என அனைத்தையும் ஒரு சேர சுரண்டியது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி. அவர்களின் சுரண்டலுக்குத் துணையாக நின்றது ஆங்கிலேய ஆளும் வர்க்கம் எனில், இரு நூறு ஆண்டுச் சுரண்டலை அனுபவித்தது பிரிட்டிஷ் பெருமுதலாளி வர்க்கம்.

காலனியாதிக்க காலத்தில் நடந்த போர்கள் தொட்டு, இன்றைய உக்ரைன் – ரஷ்ய போர் வரை பலனடைவது பெரு முதலாளி வர்க்கம். போரில் யார் தோற்றாலும், போரில் யார் செத்தாலும், லாபம் அடைவது பெருமுதலாளி வர்க்கமே. இனம், தேசியம், மொழி, எல்லை, நாடு என எந்த வரையறையும் பெருமுதலாளி வர்க்கத்திற்கு இல்லை. சுரண்டலில் வெற்றி அடைந்த பெருமுதலாளிகள் ரோல் மாடல்களாக நம்முன்னே காட்சி அளிக்கிறார்கள். சுரண்டப்பட்ட நாமோ பரிதாபத்திற்குரிய உயிர்களாக, நம்மைச் சுரண்டிக் கொழுத்தவர்களை ரோல் மாடல்களாக கற்பனை செய்து கொண்டு, நம்மாலும் அவர்களைப் போல வாழ்க்கையில் ஒரு நாளாவது வாழ முடியாதா என்ற ஏக்கத்துடன் காட்சி அளிக்கிறோம்.

வாழும் காலத்தில் பெரு நிறுவன முதலாளிகள் தங்களை வள்ளல் மகாராஜாக்களாக நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். புனிதர் பட்டத்தோடு நிகழ்காலத்தில் பெரும்புகழ் பெறுகிறார்கள். அந்த புனிதர் பட்டத்திற்குப் பின்னால் உள்ள திரைமறைவுக் குற்றங்களை கேள்வி கேட்கிறது 'கலகத் தலைவன்'. 

பெரு முதலாளி வர்க்கம் நமது உழைப்பை, வளங்களை மட்டுமே சுரண்டவில்லை. மாறாக நம்முடைய சிந்தனை முறையை மாற்றி அமைக்கிறார்கள். அதனால் தான் தனது லாபத்திற்கு பலரின் வாழ்வாதாரத்தை சீரழித்த ஸ்டெர்லைட்டால், சில கோடி பணத்தை செலவழித்து, சிலரை தங்கள் அடியாட்களாக மாற்ற முடிகிறது. இன்னும் சில கோடிகள் செலவழித்து கருணை மகாராஜா பட்டத்தை சூட்டிக் கொள்ள முடிகிறது.

அப்படிப்பட்ட கருணை மகாராஜாக்களின் பின்னணியில் இருப்பது திறமையோ, அறிவாளித்தனமோ இல்லை, மாறாக லாப வெறி தான் இருக்கிறது என்ற எளிய உண்மையை 'கலகத் தலைவன்' பேசுகிறது. நம்மில் பலர் அறியாமலும் அறிந்தும் கார்ப்பரேட் அடியாளாக பயன்படுத்தப் படுகிறோம் என்ற உண்மையை தேர்ந்த கார்ப்பரேட் அடியாளின் ஒப்புதல் வாக்குமூலமாக சினிமாத்தனத்தை தாண்டி 'கலகத் தலைவன்' நமக்குச் சொல்கிறது. நம்மை வளப்படுத்திக் கொள்கிறோம் என்ற போர்வையில் இந்த அடியாள் வேலையில் ஈடுபடுகிறோம்.

படம் பார்த்து முடித்து திரையரங்கை விட்டு வெளியே வரும் அனைவரும் வில்லனாக வரும் கார்ப்பரேட் அடியாளின் மீதே கோபம் கொள்வார்கள். தன்னுடைய லாப வெறிக்காக பலரைக் காவு வாங்கிவிட்டு, அம்பலமானவுடன் தற்கொலை செய்து கொண்ட பெரு நிறுவன முதலாளி மீது வர வேண்டிய கோபத்தை அவனின் கைக்கூலியின் மீது நாம் காண்பிப்பது ஏன்? திரையிலும் நிஜத்திலும் உள்ள உண்மை இது தான். நமது சிந்தனை முறையைக் களவாடியது தான் முதலாளி வர்க்கம் செய்த மிகப் பெரிய சுரண்டல். அந்த சுரண்டலில் இருந்து விடுபட வேண்டுமானால், மாற்றுச் சிந்தனை அவசியம். நான், எனக்கு என்ற கருத்தாக்கங்களில் இருந்து விடுபட்டு, 'அனைவருக்கும்' என்ற ஓற்றுமை உணர்வு வரும் போது தான் நம்மிடம் சிந்தனை மாற்றமும் வரும்.

கலகத் தலைவன் போன்ற அனைத்துப் படங்களும் வணிக லாபத்தை குறிவைத்தே எடுக்கப்படுகின்றன. எனினும் அதன் வணிக நோக்கத்தையும் மீறி, உள்ளடக்கம் காரணமாக திரைக்கதை நேர்த்தியைத் தாண்டி அப்படங்களுக்கு ஒரு கூடுதல் அழகு வந்து விடுகிறது. அந்த வகையில் திரைக்கதையை, படமாக்கிய நேர்த்தியை மிஞ்சிய அழகு கலகத் தலைவனின் உள்ளடக்கத்தில் இருக்கிறது.

- சு.விஜயபாஸ்கர்