shortfilm indiranவினோத் மலைச்சாமியின் இந்திரனின் ராணி குறும்படம், நால் வருணப் படைகளுக்கு எதிராக அவ்வருணங்களின் வரையறைகளில் இடமளிக்கப்படாத வருணமற்ற சாதியினரின் குரலாக ஒலிக்கிறது.

பிறப்பு கொண்டு ஏற்றத்தாழ்வைப் போதிக்கும் வருண அமைப்பில் நான்கு வருணங்களும் தங்களுக்குள் அதிகாரத்திற்கான மோதலை நிகழ்த்தியபடியே இருக்கின்றன. வருணங்களுக்குள் இல்லாத வருணம் அற்ற சாதியினருக்கு எதிரானதாகவும் அவர்களை அதிகாரப் போட்டியின் வரம்புக்குள்ளேயே கொண்டு வந்துவிடக் கூடாது என்கிற கவனமும் இந்த வருண மோதல்களின் இணைப் போக்காக வரலாற்றில் தொடர்ந்து வந்திருக்கிறது.

இந்த அதிகார மோதல்களின் நடுவில் உதிக்கும் அவதார அரசியலை இந்திரனின் ராணி தனக்கானக் கருவாகக் கொண்டுள்ளது. வருணங்களையும், வருண அமைப்பையும், அவற்றின் காப்பாளராகக் கருத்தமைவு செய்யப்படும் அவதாரங்களையும் ஒட்டுமொத்தமாக மறுத்தும், எதிர்த்தும் கதையாடிய பவுத்தத்தின் நிலையில் நின்று பேசுகிறது இந்தக் குறும்படம்.

வைதிக, சனாதன சமயத்தின் அடையாளமாக கிருஷ்ணன் பாத்திரம் உள்ளது. அதற்கு எதிர்நிலையில் பவுத்த அடையாளமாக போதிமரையும் அவருடைய தளபதியாக இந்திரனையும் இயக்குனர் வினோத் மலைச்சாமி முன்வைக்கிறார். அத்துடன் நின்று விடாமல், பெண்ணை வைத்து சமயங்களின் அதிகார அரசியலைக் குறியீடாக்குகிறார்.

போதிமரின் மகள் ராணியை நிகழ்தகவு மையமாக்கி சமயம் மற்றும் வருண அரசியலைப் பேசுகிறார். அதாவது கிருஷ்ணன் விருப்பப்படி அவருடைய இரண்டாம் தாரமாக ஆகியிருந்தால், இந்திரன், கிருஷ்ணன் இருவரையும் தவிர்த்து இன்னொருவரின் மனைவியாகியிருந்தால் என்கிற சாத்தியப்பாடுகளைக் கொண்டு ஒரு காட்சியில் உரையாடலை நிகழ்த்துகிறார்.

சமய மற்றும் சமுக அரசியல் வரலாற்றில் பெண்ணுடலின் வகிபாகம் எப்போதும் இருந்து வருவது; மற்றும் நுட்பமான அசைவைக் கொண்டது. தாய்வழிச் சமூகத்தில் பெண்ணுக்கு இருந்த தேர்ந்தெடுக்கும் சுயாதீனம், பின்னர் இல்லாமற் போனதன் நுண்ணிய வலி, ராணி பாத்திரத்தின் வழியாக உணர்த்தப்படுகிறது.

நிலமானியச் சமூகத் தோற்றத்தின் பின்னர் பெண் அடிமைானதும், இந்தியச் சுழலில் வைதீக மரபின் கருத்தியல்கள் அவளை மேலதிக அடிமைத்தனத்துக்குள் வைத்ததும் தெரிந்ததுதான்.

வரலாற்றை எழுதுவதில் பெண்ணின் தேவை உணரப்பட்டதே இல்லை. பெண் எழுதும் வரலாறு சொல்லப்படாத உண்மைகளைக் கண் கூசும் அளவுக்கு ஒளியுடன் பேசும் என்பதாலேயே அது மறுக்கப்பட்டு வந்துள்ளது. இந்திய வரலாறு என்பது வைதீகச் சாயலுடனே எழுதப்பட்டு வந்துள்ளதை மறுத்து அது பவுத்தச் சாயலுடனான பெண் எழுத்தாக எழுதப்பட வேண்டும் என்பதை இந்தக் குறும்படம் சொல்ல வருகிறது.

இவற்றையும் இன்னும் கூட சிலவற்றையும் இரண்டு டான்களின் கதையாக வடிவமைத்து மிக நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார் வினாத் மலைச்சாமி. குறும்படங்கள் திரைத்துறையில் நுழைய விரும்புகிறவர்களுக்கான தொடக்கப் படிக்கட்டுகளாக இருப்பவை. ஆனால் திரைப்படங்களுக்குரிய தொழில் முறை நேர்த்தி அவற்றில் காணக்கிடைப்பது அரிது. திரைப்படங்களுக்கு இருக்கும் வணிகத் தளம் குறும்படங்களுக்கு இல்லாமல் இருப்பது அதற்கு ஒரு முக்கியக் காரணம். ஆனாலும் திரைப்படங்களுக்குரிய முழுமையான மெனக்கெடலுடன் சில குறும்படங்கள் அபுர்வமாகக் காணக்கிடைக்கும். இந்திரனின் ராணி அந்த மாதிரியான ஒரு படம்.

விரிந்த பரப்புடன் கூடிய அரசியலை அரை மணி நேரக் குறும்படத்தில் சொல்ல முனைவதால் உண்டாகும் பார்வையாளர் நிலையிலான புரிதல் குறைகள் இருந்தாலும், அவற்றை நேர்த்தியான காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, இசை (சில இடங்களில் நிசப்தத்தைப் பேச விட்டிருக்கலாம்), படத்தொகுப்பு போன்றவற்றால் சரி செய்கிறார் இயக்குனர்.

இந்தக் குறும்படத்தின் செய்நேர்த்தியை விரிந்த திரையில் நல்ல படிமங்களாக்கித் தரக்கூடிய திரை இயக்குனராக வினோத் மலைச்சாமி தன்னுடைய தடத்தை வெளிக்காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

- கணேஷ் சுப்ரமணி

Pin It