தமிழ் சினிமா பாடல்களில் பெண்களை போற்றி எழுதப்பட்ட பாடல்களாக இருந்தாலும், அவளை சிலாகித்து எழுதப்பட்ட பாடல்களாக இருந்தாலும் பெண் என்பவள் ஒரு பொருள் என்கிற கருத்தை அப்பாடல்கள் அழுத்தமாக பதிவு செய்திருக்கின்றன.. பெண் அங்கங்களை வேறு சில உவமானங்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாக சித்தரித்த பாடல்கள் அனைத்தும் பெண்ணை பூமாதேவியாகவும், பூவாகவும், தெய்வமாகவும், சித்தரித்த ஆண் உளவியலின் தொடர்ச்சி என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எப்போதும் பெண்ணை தன்னைப் போன்ற ஆசாபாசங்கள் நிறைந்த சராசரி உயிர் என்பதை ஏற்க மறுக்கும் ஆண் வக்கிரத்தையே நம் தமிழ் சினிமா பாடல்கள் உணர்த்துகின்றன.
எம்ஜிஆர் காலத்து பாடல்களில் பெண்கள்
பெண்களின் நன்மதிப்பைப் பெற்ற கதாநாயகர்களில் முதன்மையானவர் எம்.ஜி.ஆர். 70களுக்குப் பிறகு, எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் வரும் பாடல் காட்சிகளும் சரி, பாடல் வரிகளும் சரி, இன்றைய சிம்புவின் பாத்ரூம் கற்பனையை மிஞ்சும் அளவிற்கு இருக்கும். உரிமைக்குரல் படத்தில் வரும் “மாங்கா திருடி திங்கிற பெண்ணே மாசம் எத்தனையோ?” என்கிற பாடலை குடும்பத்துடன் யாரும் பார்க்கமுடியாது. அந்த பாடலில் எம் .ஜி .ஆர், லதாவை பார்த்து,” மாங்கா” என்று விளிப்பது எந்த அர்த்தத்தில் என்று அனைவருக்கும் தெரியும். இதயக்கனி படத்தில் வரும் “இதழே இதழே தேன் வேண்டும்”,உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் அவள் ஒரு நவரச நாடகம்” போன்ற பல சினிமா பாடல்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.
”சக்கரவல்லி கிழங்கு மாமா சமைஞ்சது எப்படி?”
”சக்கரவல்லி கிழங்கு மாமா சமைஞ்சது எப்படி?” என்று கவிஞர் வாலி வெளிப்படையாக கேட்க ஆரம்பித்த பிறகு தான், பெண்ணிய அமைப்புகள் வெகுண்டெழுந்தன.. 90 களின் மத்தியில் வெளிவந்த இந்த பாடலுக்காக வாலிக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்தன. ஆனால்,வாலி 70 களின் தொடக்கத்திலேயே எம் ஜி ஆர் பாடல்களில் தனது வக்கிரத்தை அழகியல் தன்மையுடன் வெளிப்படுத்தியிருப்பார்.
எம் ஜி ஆர் பாடல்கள் மட்டுமல்ல, சிவாஜி, ரஜினி கமல் என அனைவரின் பாடல்களிலும் பெண்களை அநாகரிகமாக சித்தரித்து பல பாடல்கள் வெளிவந்துள்ளன. இதில் வாலி போன்ற கவிஞர்கள் முன்னோடி என்றாலும் மற்ற கவிஞர்களும் சளைத்தவர்கள் அல்ல. நாயகன் படத்தில் ஜனகராஜ் ஆடும் ஒரு பாடலில், ”காட்டுல மேட்டுல உழைப்பவன் நான், ஆடிட பாடிட வேண்டாமா?“ என்கிற வரி வரும். அதாவது பாட்டாளி வர்க்கம் தன் களைப்பை போக்கி கொள்ள பெண் இன்பம் தேவை என்கிற அர்த்தத்தில் அந்த பாடல் வரும். இது போன்ற பாடல்களை அயிட்டம் டான்ஸ் என்கிற பதத்தில் கூறுவார்கள்.
ஆனால், குறைந்த பட்சம் அந்த கால பாடல்களில் ஏதோ ஒரு அழகியல்தன்மை ஒளிந்திருந்தது. அழகியல் என்கிற பெயரில்தான் உடைமைசமுகத்தின் அனைத்து கூறுகளையும் பல படைப்பாளிகள் நியாயப்படுத்தினர். இலைமறை காயாக பெண் அந்தரங்களை பற்றி பேசினர். ஆனால், சிம்பு போன்ற நடிகர்களுக்கோ அழகியல் தன்மையும் இல்லை. நாகரிகமும் தெரியவில்லை. அதனால்தான் பச்சையாக வார்த்தைகளை இடுகின்றார்கள். அதைதான் சிம்பு “,வாலி போல பாட்டு எழுத எனக்குத் தெரியலையே “என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார்.
பெண் உடல் குறித்த ஆண் மொழி வாலியிலிருந்து சிம்பு வரை பொதுவாகவே இருந்திருக்கிறது.வெளிப்படுத்தும் விதத்தில் சிம்பு நான்காம் தரத்திலும் கேவலமாக அம்பலப்பட்டு நிற்கிறார்.
சிம்பு - தனுஸ் - கார்ப்பரேட் ஆணாதிக்க கலாச்சாரம்
உடைமைச் சமூக மனநிலையிலிருந்து கார்ப்பரேட் கலாச்சாரத்திற்கு இன்றைய தலைமுறை வந்து விட்டது. உடைமைச்சமூகத்தின் பல்வேறு ஆதிக்க கருத்தியல்கள் காலத்தின்போக்கில் அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால், பெண் தன்னுடைய உடைமை என்கிற ஆணாதிக்க உளவியல், இன்றைய கார்ப்பரேட் உலகத்திலும் தொடர்கிறது. இன்னும் சொல்லப்போனால், இன்றைய கார்ப்பரேட் நுகர்வு கலாச்சாரத்திற்கு பெண்ணுடல் மிகப்பெரிய சந்தை. ஏற்கனவே திணிக்கப்பட்டிருக்கிற உடைமைச் சமூக பழமைவாத சிந்தனையும்,தற்போது இருக்கிற கார்ப்பரேட் ஆணாதிக்க வணிகமும் ஒன்றிணைந்த வடிவம்தான் தனுஸ், சிம்பு போன்ற நடிகர்கள்.
”ஒய் திஸ் கொலைவெறி", "அடிடா அவளை, கொல்றா அவளை,” போன்ற பாடல்களின் தொடர்ச்சிதான் சிம்புவின் பீப் சாங். இந்த வக்கிரம் பிடித்த பாடல்களெல்லாம் அதிக லைக்ஸ் பெற்றதே! இந்த நாகரிக தமிழ் சமூகம் கொண்டாடியதே! நமக்கு மட்டும் ஏன் இந்த அளவிற்கு கொந்தளிக்கிறார்கள் என்பதுதான் சிம்புவின் அப்பாவித்தனமான கேள்வி.
பொதுபுத்தியின் கோபம் நியாயம்தானா?
இன்று சிம்புவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் கேட்பவர்கள் அனைவரும் மன்னன் படத்தில் ரஜினிகாந்த், விஜயசாந்தியை கன்னத்தில்,” பளார், பளார்” என்று அறையும்போது கைதட்டி வரவேற்றவர்கள்தானே.
”இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பள “பாடுற மாட்டை பாடி கறக்கனும்,ஆடுற மாட்டை ஆடி கறக்கனும்” போன்ற பெண்களின் ஆளுமை வளர்ச்சிக்கு தடைபோட்ட பாடல்களை வரவேற்று கொண்டாடிய கூட்டம்தானே.
பெண்ணை பாதுகாக்க வேண்டிய கடமை ஆணிற்கு இருக்கிறது என்று இந்த சமூகம் நம்பும்போது, பெண்ணை ஒடுக்குகிற உரிமையும் ஆணிற்கு உண்டு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அதனால்தான் பெண்ணை அடக்கும் கதாநாயகர்களை இவர்கள் கொண்டாடுகிறார்கள். உடல்ரீதியாக அநாகரிகமான பாடல் வரிகள் எழுதும் போது கொதித்து எழுகிறார்கள். பெண்ணை அடிமைப்படுத்துவதை ஏற்றுக் கொள்கிற பொதுபுத்தி,பெண்ணை அநாகரிகமா சித்தரிக்கும்போது கோபப்படுவதின் பின்ணனி என்ன?.
பெண் உடல் பாதுகாக்கப்பட வேண்டியது, புனிதமானது என்கிற ஆணாதிக்க உளவியல்தான் காரணம். ஆகவே,பெண் விடுதலை என்பது பெண் உடலை பாதுகாப்பதோ, போற்றி பேணுவதோ அல்ல. அவள் உடல் என்னவாக இருக்க வேண்டும் என்கிற உரிமையை பெண் தீர்மானிப்பது.
ஆகவே,சிம்புவிற்கு எதிராக போராடுபவர்கள் பெண்ணிய அரசியலை கையில் எடுக்க வேண்டும். பெண்ணுடல் பாதுகாப்பு அரசியல் பேசுவது மீண்டும் ஆண் உலகத்திற்குள் தங்களை ஒப்படைப்பது போன்றது. இந்த அநாகரிக பாடல்களுக்கு காரணம் பழமைவாத ஆணாதிக்க கருத்தியலும்,கார்ப்பரேட் நுகர்வுகலாச்சாரத்தின் எல்லையற்ற பெண்ணுடல் சந்தையும்தான் என்பதை உணர வேண்டும். இந்த அரசியலை கையிலெடுப்பதுதான் இது போன்ற அநாகரிக பாடல்வரிகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும்.
சிம்பு அநாகரிகத்தின் தொடக்கமல்ல,இந்த சமூகமும், சினிமாவும், குடும்ப அமைப்பும் ஆண்டாண்டு காலமாக போதித்து வரும் ஆணாதிக்க அநாகரிகத்தின் தொடர்ச்சி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
- ஜீவசகாப்தன்