daanaakkaranதமிழ் சினிமா தன் இயங்கியல் கோட்பாட்டை இரண்டாயிரத்துக்கு பிறகு உணர்ந்திருக்கிறது. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்கத் தகுந்தது. ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து படங்கள் சமூக சிக்கல்களை முன்வைத்து பேசு பொருளாக மக்கள் மன்றத்தில் உரையாடல் நடத்தி வருகின்றன.

சமுதாய கண்ணோட்டத்துடன் மண்ணையும், மக்களையும் நேசிக்கும் கலைப்படைப்புகளை யார் கொண்டுவந்தாலும் அதைக் கொண்டாடுவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

S.P. ஜனநாதன், வெற்றிமாறன், பா. ரஞ்சித், ஞானவேல், மாரி செல்வராஜ், உள்ளிட்ட இயக்குனர் வரிசையில் இப்படத்தின் இயக்குனர் தமிழ் தன்னை அழுத்தமாக வரலாற்றில் இணைத்துக் கொண்டுள்ளார்.

டாணாக்காரன் படத்தை ஒரே வரியில் இப்படி சொல்லிட முடியும். "கடைநிலைக் காவலர்கள் தன், கனவுகளைக் சுமந்து எப்படியாவது போலீஸாகிட வேண்டும் நோக்கத்தில் பட்டாலியனில் பயிற்சி பெறும் போது உண்டாகும் நெருக்கடிகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் கதைக்களம்".

கடுமையான பயிற்சியும், தண்டனையும் காவலர்களை எப்படி திசைவழி மாற்றி அழைத்துச் செல்கிறது என்பதை தத்துரூபமாக களத்தில் இருக்கும் ஆய்வை வெளிக் கொணரும் நோக்கில் இப்படம் அமைந்துள்ளது.

கதைக்கு வருவோம். இது ஓர் உண்மைச் சம்பவத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட படம். டாணாக்காரன் என்பது காவலரைக் குறிக்கும் ஒரு பண்டைய சொல். 1982-ஆம் ஆண்டு காவலர் பயிற்சியில் தேர்வாகியவர்களை 1998-ஆம் ஆண்டு தான் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த 80S Batchசை அவர்களுக்கு திறமை இல்லை எனச்சொல்லி வெளியே தள்ளி விட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகார மட்டத்தில் சூழ்ச்சி நடக்கிறது. வேலை கிடைப்பது அரிதான செயல். அப்படிப்பட்ட இந்த வேலைக்காக இதுவரை சந்தித்த கொடும் இன்னல்கள், இதோ… அதோ… வேலைக்கு சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் 16 ஆண்டுகள் வீணாக கழித்து தான் மிச்சம். கோர்ட், கேஸ் என்று படியேறி…படியேறி… அதன் பிறகு தீர்ப்பு, பயிற்சி காவலர்களுக்கு சாதகமாக அமையும் போது அவர்களை ஏற்க மறுக்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து இளம் பயிற்சிக் காவலர்கள் அவர்களுக்கு துணையாக இருந்து எப்படி தங்கள் தகுதியையும் வளர்த்துக் கொண்டு அவர்களையும் முன்னேற்றம் அடையச் செய்கிறார்கள் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்து.

பயிற்சி என்கின்ற பெயரிலும், தண்டனை என்கின்ற பெயரிலும் யாரும் செய்ய அஞ்சும், மனித பிசாசுகளின் தலையில் முள் கிரீடம் வேயப்பட்டதைப்போல, தண்டனைகளைக் கொடுத்து ஒன்று பயிற்சி விட்டு தானாகவே ஓடிவிடுகிற சூழலை உருவாக்க படுகிறது. மற்றொன்று தண்டனை என்கின்ற பெயரில் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலைக்கு தூண்டப்படுகிறது.

காவல்துறையில் புரையோடிப்போயுள்ள பழமை வாதத்தையும், அவர்களின் அதிகாரத்தையும், அடக்குமுறைகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்கக்கூடாது. சகித்துக் கொள்ளவேண்டும். சகித்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்ளவேண்டும். அதிகாரம் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கிறது. அதிகாரம் ஒரு போதை என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்து இயம்பி இருக்கிறது.

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவு சிலருக்கு காவலராகவும், நீதிபதியாகவும், மருத்துவராகவும் உருவாக வேண்டும் என்ற லட்சியத்துடன் வருபவர்களை இச்சமூகம் எப்படி அவர்களை பார்க்கிறது?.

இங்கும் நாயகனின் அதிகப்படியான கனவே ஒரு கடைநிலைக் காவலராகிட வேண்டும் என்பதுதான். காரணம் தன்னுடைய அப்பா சொந்தத் தேவைக்காக கந்து வட்டிக்காரரிடம், வட்டிக்கு கடன் வாங்குகிறார். குறிப்பிட்ட வட்டித் தொகையைச் செலுத்த முடியாமல் வட்டி குட்டி போட்டு, குட்டி வட்டி போட்டு இப்படி தொகை பெரிய அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. வட்டிக்கு பணம் கொடுத்த அந்த மனிதர் ஈவு இரக்கம் இல்லாமல் பணம் வாங்கிய ஒரே குற்றத்திற்காக அவருடைய தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படும் அளவிற்கு நடந்து கொள்கிறார். பொதுவெளி அடித்து, துவைத்து, மானபங்கம் படுத்தியதற்காக நாயகனின் அப்பா தனக்கு ஏற்பட்ட துயரத்தை காவலரிடம் சென்று முறையிடுகிறார்.

அந்த காவலரிடம், "நான் இன்னும் சில தினங்களில் பணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதுவரைக்கும் பணம் கொடுத்தவரை பொறுத்துக் கொள்ளுமாறு சொல்லச் சொல்லிக் கேட்கிறார்". அந்த காவல்துறை அதிகாரிக்கும், பணம் கொடுத்தவரும் உறவுகார்கள் என்பதனால் பணம் கொடுத்தவர் காவல் நிலையத்திலேயே காவலர்கள் எதிரிலேயே இன்னும் பலமாக தாக்குகிறார். அத்தோடு இல்லாமல் காவல் துறையினரும் அவரை நிர்வாணப்படுத்தி சிறையில் அடைக்கின்றனர். இது தன் மகன் கண்ணெதிரே நடந்ததை எண்ணி கலங்குகிறார். அப்பொழுதுதான் அவர் சொன்ன வார்த்தை இது. "நீ ஒரு நல்ல போலீஸ்காரரா வரணும் தம்பி. ஒரு வேலை ஒரு நல்ல போலீஸ்காரர் இருந்திருந்தால் இது போல நடந்து இருக்காது இல்ல". இந்த வார்த்தைதான் நாயகனைக் காவல்துறையை நோக்கி நகர்த்தியது.

இதற்கிடையில் எண்பதுகளில் வேலைக்கு வர வேண்டியவர்கள் தொண்ணூத்தி எட்டில் தான் வேலை கிடைத்து பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு வெறும் ஆறு கழிப்பறைகள் தான் ஒதுக்கப்படுகிறது. அங்கு வேறு கழிப்பறை இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் பல கழிப்பறைகள் வெறுமனவே பூட்டப்பட்டு இருக்கிறன. இந்த கழிப்பறைகளைத் திறந்து விடச் சொல்லி உயர் அதிகாரியிடம் நாயகன் முறையிடுகிறான். ஆனால் அந்த அதிகாரியோ அதில் ஒரு கழிப்பறையைப் பூட்டி விடுமாறு கட்டளையிடுகிறார். இங்கிருந்து ஒரு ஈகோ தொடர்கிறது. அந்த ஈகோ பிரச்சினை தான் நாளடைவில் தண்டனை என்ற பெயரில் எண்பதுகளின் பயிற்சி காவலர் ஒருவர் இறந்து விடுவிறார். இந்தக் காரணங்கள் வெடித்து ஒரு கலவரத்திற்கு வழி வகுக்கிறது.

மேலும், பயிற்சிக் காவலரிடம் கையூட்டு கேட்கும் காட்சியையும் நாயகன் அம்பலத்திற்கு கொண்டு வந்து விடுகிறான். அதனால் இன்னும் அவன் மீதும் அவனுடைய நண்பர்கள் மீதும் வன்மம் அதிகரிக்க தொடங்குகிறது. இப்படியாக தொடர்ந்து செல்லும் அந்தப் படம் சொல்லும் ஒரே பாடம் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதுதான். இங்கு எல்லாவற்றையும் சிஸ்டம் தான் தீர்மானிக்கும்.

பொதுவெளியில் இந்தப்படத்திற்கு பிறகு காவலர்கள் மத்தியில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. ஆனால் பயிற்சி காவலர்களைப் பார்க்கும்பொழுது பரிதாபமும், பச்சாதாபம் பொதுமக்களுக்கு உண்டாகும். மட்டுமல்ல அவர்களின் கோபத்தை கூட வெகுஜன மக்களால் புரிந்து கொள்ள முடியும்.

எப்பொழுதும் அதிகார மட்டம் தனக்கு மேலே இருப்பவர்களை எதிர்க்காது. தனக்கு கீழே இருப்பவர்களிடம் தன்னுடைய அதிகாரத்தையும், வெறுப்பையும், பகை உணர்ச்சியும் கக்கிக்கொண்டே இருக்கும். இது ஏனென்று கேட்கக் கூடாது. எல்லாம் சிஸ்டம் தான் தீர்மானிக்கும்.

இதை தான் மனு தர்மமும், வர்ணாசிரம கோட்பாடும் வலியுறுத்துகிறது. நான்கு வர்ணம் கட்டமைத்துள்ள சாதிப் படிநிலையில் (பிராமணன், சத்திரின், வைசியன், சூத்திரன்) சத்ரியன் தனக்கு மேலே இருக்கும் பிராமணனை எப்பொழுதும் எதிர்க்கக் கூடாது. பிராமணர்களுக்கு சேவை செய்து கொண்டே இருக்க வேண்டும். வேண்டுமென்றால் தனக்குக் கீழே இருக்கும் வைசியனை எவ்வளவு வேண்டும் என்றாலும் எதிர்க்கலாம். ஆனாலும் பிராணனை எடுக்கக்கூடாது. இதுதான் மனு சொல்லும் சட்டம். வைசியன் சத்ரியனால் நசுக்கப்படும் போது அதை எதிர்த்தோ? அதிர்ந்தோ? கேள்வி கேட்கக்கூடாது. வேண்டுமென்றால் வைசியன் சூத்திரன் மீது ஆதிக்கம் செலுத்தலாம். எவ்வளவு வேண்டும் என்றாலும் அவனை அடிக்கலாம், உதைக்கலாம், மிதிக்கலாம் ஆனாலும் ஒரு போதும் வைசியன் சந்திரியனை எதிர்க்கக் கூடாது. சூத்திரன் தனக்கு மேலே இருக்கக்கூடிய மூன்று பேர்களுக்கும் சேவை செய்வது தான் தன்னுடைய கடமை. வாய் திறந்து பேசக்கூடாது, தன்மீது பழிபாவம் சுமத்தும் போது கூட, பொறுத்துக் கொள்ள வேண்டும். மாறாக அதிகாரத்தில் தன்னைவிட மேலானவனை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது. தன்னை விட கீழானவனை நசுக்கி சுகம் கண்டுகொள்ளாம். இதுதான் வருணாஸ்ரம கோட்பாட்டின் தருமம். சமூக கட்டமைப்பு. இதுபோன்றுதான் கட்டப்பட்டுள்ளது.

இந்த வர்ணாசிரம கோட்பாட்டின் தத்துவம் தான் காவல்துறையிலும் நீடித்து இருக்கிறது. காவல்துறையில் இருக்கும் ஓர் உயர் பதவியில் இருப்பவர் தனக்கு மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரத்தை எப்போதும் கேள்வி கேட்க மாட்டார். தனக்கு கீழானவர்கள் மீது தான் அதிகாரம் செலுத்துவர். அந்த அதிகாரி தன்னைவிட பதவியில் குன்றியவர் மீது ஆதிக்கம் செலுத்துவார். அந்த அதிகாரி தன்னைவிட எளிய அதிகாரி மீது எரிந்து விழுவார். அவர், அவருக்கு கீழே உள்ளவரிடம் தன் எதிர்ப்பை காட்டுவார் இப்படியாகத்தான் அதிகாரம் கை மாறி உள்ளது. ஒருவேளை என்றாவது ஒருநாள் மேலதிகாரியின் கேள்வி கேட்டால் அதிகாரியையே கேட்கிறாயா?. உனக்கு அந்த தைரியத்த யார் கொடுத்து?. என்ற கேள்விகள் எழும்.

இறுதியாக போட்டி நடக்கும் வெற்றி தோல்வி பெருமாள் இருக்கும் நிலை உருவாகிறது. ஒருவேளை அந்தப் போட்டியில் நாயகன் வெற்றி பெற்றார் இந்த பயிற்சியை முடித்து காவலராக தேர்வு செய்யப்படலாம். அல்லது தோல்வியடைந்தால் தன்னுடைய அப்பாவின் கனவையும் தன் லட்சியம் காவல்துறை பணியிலிருந்து வெளியேற வேண்டும். இதுதான் ஒப்பந்தம்.

நாயகனின் குழு தான் March fast வெற்றி பெறுகிறத. ஆனால் அடுத்து வளரும் இளம் தலைமுறைக்கு வெற்றியை அறிவிக்க காவல்துறை உயர் அதிகாரி மறுத்துவிடுவார். அவர் சொல்லும் ஒரே காரணம் இங்க எல்லாம் சிஸ்டம் தான் தீர்மானிக்கும். சிஸ்டம் என்பது அதிகாரம் அந்த அதிகாரத்தை யாருக்கும் விட்டு தர முடியாது என்ற கோணத்தில் பதிலளிப்பார்.

அதன்பிறகு நாயகன் உயிருக்கு உயிராக நேசித்த அந்த காவல்துறை பணியை விட்டு வெளியேற முயற்சிக்கும் பொழுது தான். பயிற்சியின்போது சட்டம் குறிப்பு வகுப்பெடுத்த காவல் அதிகாரி ஒருவர், நாயகனைப் பார்த்து இப்படிச் சொல்கிறார்.

"ஏ!... தம்பி இந்த சிஸ்டம் இருக்கே முரட்டு வெள்ளைக்காரனுக்கு, முட்டாள்தனமான அரசியல்வாதிக்கும் பொறந்த கொழந்தடா. இங்க நேர்மையாக இருப்பவ தான் கஷ்டப்படுவா. இதை மாத்தனும். நாம மாதம வேறு யார் வந்து மாத்துவா? மக்கள நேசிக்கிற நீ வெளிய போய் என்ன செய்யப் போற?.

சிஸ்டத்திற்கு எதிரா போராட்டம் பண்ண போறீயா? இல்ல ஆர்ப்பாட்டம் பண்ண போறீயா? அதிகாரமில்லாத உணர்ச்சி உன்ன எரிச்சிக் கொண்டும்.

அதிகாரம் வலிமையானது. அந்த அதிகாரத்த கைப்பத்தனும். சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் சொன்னது தான். இங்க சிஸ்டம் எதுவுமே சரியில்ல. உனக்கு எதிரானதா இருக்கு. இந்த சிஸ்டத்தில, அதிகாரத்தை கைப்பத்துவதுக்கான அத்தனை கதவுகளையும் நான் திறந்து வைத்திருக்கேன்.

அதிகாரத்த கைப்பத்தி சிஸ்டத்தை சரி பனிக்குங்க. அதிகாரத்த நாம் கைப்பத்த வேண்டியதா இருக்கு. நீங்க போட்டியில காட்டின வேதத்த வேலையில காட்டினா ஒரு ஐபிஎஸ் ஆபிசராக, டி.எஸ்.பி ஆபீஸரா வர முடியும். அதிகாரத்தில மக்கள் பக்கம் வந்து நிக்கலாம்.

மக்களுக்கு ஒரு பிரச்சனைனா அதை சந்திக்கும் முதல் நபர் போலீஸ்காரன் தான். உங்களப் போல மக்களை நேசிக்கும் நேர்மையான பசங்க இருந்தாதான் அவர்களுடைய பிரச்சினைய நியாயமாக பேசி தீர்த்து வைக்க முடியும். அதனால் தான் சொல்றேன். நீங்கள் எல்லோரும் காக்கிச்சட்டைப் போடணும்."

என்று சொல்லி முடிக்கும் போது அவரின் அனுமதியோடு நாயகன் காவலரை அணைத்துக் கொள்கிறான்

படத்தின் இயக்குனர் தமிழ் அவர்களைப் பற்றி இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. இது வெறுமனவே படமாக பார்க்க முடியாது. ஒவ்வொரு காவலர்களின் வரலாற்றை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறார். காவல்துறை என்பது மக்களுக்கானது என்பதில் கேள்வி எழுகிறது. எந்த இடத்திலும் சற்றும் பிசகாமல் கதையின் தன்மை மாறாமல், களத்தை மட்டுமே தீர்மானித்து பயணித்திருக்கிறார். காவல் துறையினர் பயிற்சிபெறும் அந்த அரங்க கட்டமைப்பு, வளாகம், பயிற்சிபெறும் மைதானம் உள்ளிட்டவை தான் பிரதானமானவை. இந்த படைப்புக்கு பின்னால் இருக்கும் ஒவ்வொரு படைப்பாளிகளையும் எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.

குறிப்பாக உதவி இயக்குனர்கள், கலை இயக்குனர் அனைவரும் ஒவ்வொரு காட்சிகளையும் நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றனர். கேமரா அத்துணை அழகாக பதிவு செய்திருக்கிறது. ஒரு காட்சியை பார்க்கும் பொழுது அதனுடைய பின்புலம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானித்து விட முடியும். இந்தப் படம் இத்துனை பெரிய வெற்றி படமாக மாற்றிய பங்கு ஒளிப்பதிவாளர் பங்கு மிகப்பெரியது. அந்தவகையில் வெயிலையும், நிழலையும், இரவையும், பகலையும் அத்துணை அழகாக படமாக்கியிருக்கிறார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் மனதை வருடி சென்றிருக்கிறார். கவிதை வரிகள், வசனம் உள்ளிட்டவை அத்துணை அற்புதமானவை.

நடிகர்கள் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர், லால் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் தங்களின் முழு பலத்தையும் காட்டி நடித்து ஒரு வரலாற்றை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றனர். இதைப் பார்க்கும் பொழுது ஓர் திரைப்படத்தை பார்க்கிறோம் என்ற மன நிலைமை எங்கும் எழவில்லை. மாறாக இது அகக் கண்ணால் பார்க்கும் காட்சி அல்லாமல் மாறாக புறக் கண்ணால் பார்க்கும் காட்சியாக நடிப்பின் உச்சத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது அவர்கள் நடிப்புக்கு கிடைத்த வெற்றி.

நல்ல காலம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட்டிருந்தால் நிறைய இடங்களில் சென்சார் என்கின்ற போர்வையில் வெட்டப்பட்டு இருக்கும். OTTயில் வெளியிட்டு இருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது.

இது ஒரு வெற்றி படம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இதை பொது வெளியில் கொண்டுபோய் சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

- எ.பாவலன்

Pin It