sivaji mgr 600

நடராசன் அவர்களால் கீசக வதம் திரைப்படம் 1916ல் எடுக்கப் பட்டது. தமிழ்ப் புனைவுத் திரைப்படத்தின் தொடக்கம் அது. எனவே இந்த வருடம் தமிழ் சினிமாவின் நூற்றாண்டாகிறது.

கொண்டாடுவது என்பது சில புதிய விதைகளை விதைப்பது என்றே கருதுகிறோம்...

தமிழ்த் திரைப்படத் துறையில் விதைக்க விரும்பும் மாற்றங்கள்……………

1.தமிழக அமைச்சரவையில் கலை, இலக்கியம், நாடகம்,சினிமாவெக்கென்று தனி அமைச்சரவை, பண்பாட்டு அமைச்சர் என்று ஒருவர் உருவாக்கப் பட வேண்டும்,

2.தமிழக அரசின் கீழ் சினிமாவெக்கென்று சுயேட்சையாக, தன்னாட்சி அதிகாரத்துடன் சினிமா அகாடெமி சினிமா விற்பன்னர்களால் உருவாக்கப்பட வேண்டும். திரைப்படத் துறைக்கும், அரசுக்கும் இது இணைப்புப் பாலமாக விளங்க வேண்டும்.

3. அரசு விருதுகள், திரைப்பட விழாக்கள், சிறு திரைப்படங்களுக்கான மானியங்கள் இந்த சினிமா அகாடெமியின் கீழ் வர வேண்டும். குறும்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரப்படங்கெளுக்கு விருதுகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.

4.அரசு திரைப்பட விருதுகள் அந்தந்த வருடத்திலேயே வழங்கப் பட வேண்டும், நடுவர்கள் சினிமா அகாடெமியின் திரைப்பட வல்லுநர்களாக இருக்க வேண்டும்.

5. ஒவ்வொரு வருடமும் அரசால் திரைப்பட விழாக்கள் வெவ்வேறு நகரங்களில் நடத்தப்பட வேண்டும்.

6.அனைத்து மாவட்டங்களிலும் பெரிய ஊர்களில் சிறிய திரையரங்குகள் கட்டப்பட வேண்டும். சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடுவதற்கும், திரைப்படச் சங்கச் செயல்பாடுகளுக்கும் இவை பயன் படுத்தப் படவேண்டும்.

7.சிறிய பட்ஜெட் படங்களுக்கான மானியம், வெறும் பணத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், புதிய வடிவம், மாற்றுச் சினிமாக்களுக்கு ஒதுக்கப் பட வேண்டும்.

8. தமிழகத்தில் முதலில் திரைப்படம் திரையிடப்பட்ட விக்டோரியா பப்ளிக் ஹால் சினிமா அருங்காட்சியமாக மாற்றப் பட வேண்டும்.

9. அகாடெமியின் கீழ் அரசு திரைப்பட ஆவணக் காப்பகம் உருவாக்கப் பட வேண்டும். ”சாமிக் கண்ணு வின்செண்ட்” ஆவணக் காப்பகத்தின் செயல் பாடுகள் சில… விக்டோரியா பப்ளிக் ஹால் சினிமா அருங்காட்சியகத்தில் உருவாக்கப் பட வேண்டியவை…

அ. ஒரு கலை வடிவமாகவும் அதே நேரத்தில் ஒரு தொழிற்துறையாகவும் இருக்கும் சலனத் திரைப்படத்தின் வரலாறு மற்றும் வளர் நிலைகளைத் தொகுக்கும்.
ஆ. தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய முழுமையான புள்ளிவிவரங்களை வரிசைப்படியும் வகைப்பாட்டின் அடிப்படையிலும் ஆவணப்படுத்தும்.
இ. தமிழ்த் திரைப்பட வரலாற்றின் தடயங்களைத் தேடிக் கண்டடைந்து ஒழுங்கமைத்து,பாதுகாக்கும்.
ஈ. தமிழ்த் திரைப்படங்கள் மீதான ஆய்வுகளை ஒழுங்கமைத்து, ஊக்கப்படுத்தும் மற்றும் வழிகாட்டும்.
உ. தமிழ்த் திரைப்படங்களின், இயக்குநர்கள், மற்றும் தொழிற்நுட்பக்கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒலி-ஒளி ஆவணங்களாக உருவாக்கி பாதுகாக்கும்.
ஊ. புகைப்படங்கள் திரைப்படத்தின் நெகட்டிவ்கள், பிரிண்டுகள், பாட்டுப்புத்தகங்கள், படத்தின் முழுக் கதைக்கான திரைக்கதை எழுத்துக்கள், அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு டிஜிட்டல்முறையில் தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.
எ. சினிமா நூலகம் அமைத்து தமிழ் மற்றும் உலக திரைப்படம் தொடர்பான நூல்கள் அனைத்தும் சேர்க்கப்படும்.
ஏ. ஆராய்ச்சி மாணவர்கள் விரும்பும் படத்தைப் பார்ப்பதற்கு சிறிய காட்சிக்கூடம் கொண்டிருக்கும்.
ஒ.மக்கள் விரும்பும் படங்களைப் பார்ப்பதற்கு சிறிய திரைப்படங்கள் உருவாக்கப் படவேண்டும்.

10.பிலிம் நியூஸ் ஆனந்தன் போன்ற தனிப்பட்ட ஆவண சேகரிப்பாளர்களின் சேகரிப்புகள் அவர்கள் பெயரிலேயே காட்சிப் படுத்தப் பட வேண்டும்.

11. திரைப்படக் கலை,குறிப்பாக உயர் நிலைப்பள்ளிகளிலேயே கட்டாயப் பாடத் திட்டமாக கொண்டு வரப் பட வேண்டும்,

இவை யாவும் செயல் படுத்தப் படும் போதே உண்மையான நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் தொடங்குகிறது எனலாம். 

- ஆர்.ஆர்.சீனிவாசன்

Pin It