"கரகர.....கர கர...... கர்ர.... கர்ர கர்ர்ர்ர்ர.......... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர" என்று வெற்றிடத்தில் கையில் பிடிக்காத மாஞ்சா கயிற்றால் ஒருவனின் கழுத்தை அறுக்கும் காட்சியில் பார்த்திபன் என்ற நடிப்பு அசுரன் வெளியே வருகிறான்.

பார்த்திபனின் முகம்.. சிரித்தால் சிறுபிள்ளையாகவும்....முறைத்தால் கொடூரமாகவும் ஆவது நடிப்பா......இல்லை அப்படி அமைந்த ஒரு முகமா என்று தெரியவில்லை. மனிதர் நின்று அடித்திருக்கிறார். ஒரு முழுப் படத்தையே வசனங்களால் பேசிக் கொண்டே இருப்பது நாம் நினைத்த மாதிரி போர் அடிக்கவில்லை. இடையிடையே அவரின் நக்கலும் நையாண்டியும்.. உபதேசமும்... புத்திசாலித்தனமும்... அற்புதம் செய்திருக்கிறது.

oththa seruppu parthibanஒரு வார்த்தையை விட்ட இடத்தில் இருந்து அதே வார்த்தையிலிருந்து ஆரம்பித்து அடுத்த வேறொரு அர்த்தத்தை தொட்டு பேசும் கலை அவருக்கு வாய் வந்த கலை. ஒத்த செருப்பிலும் கலை வாய் தொட்டு மூளை உணர தமிழின் தாகம் நிறைக்கிறது.

ஒரே அறைக்குள் திரைக்கதை விளையாடுகிறது என்பது மிகப் பெரிய பரிசோதனை முயற்சி தான். உலக சினிமாக்களில் இது போன்ற படங்களை நாம் பார்த்திருந்தாலும்.... இங்கே நம் படங்களிலும் அது சாத்தியம் என்று நிரூபித்திருப்பது பலத்த கை தட்டலுக்கானது. அது வெற்றியும் பெற்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். திரை அரங்கம் நிறைந்த காட்சியே கண் கொள்ளாத காட்சி. இந்த முயற்சிக்கு பாராட்டுகளை கொடுத்து தான் ஆக வேண்டும். பார்த்திபன் என்ற நடிகன் மீதுள்ள மிக பெரிய தன்னம்பிக்கையும்....ஸ்க்ரிப்ட் மீதிருக்கும் அசாத்திய நம்பிக்கையும் தான் இப்படி ஒரு பரீட்சையை எழுத தூண்டி இருக்கும்.

பார்த்திபனின் குரலில் ஒரு மாய வசீகரம் இருக்கும். அது இந்தப் படத்தில் ஏற்றி இறக்கி....அழுது சிரித்து...... கோபப்பட்டு....கொஞ்சி... அன்பையும் வம்பையும் சேர்த்து சரியான விகிதத்தில் பிரித்து ஒரு தேர்ந்த படைப்பாளியின் உச்சபட்ச கலைத்தன்மையை தொட்டிருக்கிறது.

"காதல் கிறுக்கன்" மற்றும் "குடைக்குள் மழை"யின் தாக்கத்தில் உருவானதாகத்தான் இருக்க வேண்டும்.. ஒத்த செருப்பு. மூன்று படங்களிலும் ஒரு பெண், ஏமாற்றி விட்டதன் பின்னணியில் தான் கதை அமைந்திருக்கிறது. விட்டு சென்ற பெண்ணின் மீது கொண்ட காதலும்.. கோபமும் அவருள் கனன்று கொண்டே இருப்பதை உணர முடிகிறது. நிஜமும் நிழலும் சந்தித்துக் கொள்ளும் இடைவெளியில்... "ரசூல் பூக்குட்டி"யின் சப்தம்.. நிறைவாய் கொலைகள் செய்கின்றன. பின்னணி இசையும்... ஒலியும்... அசுர பலத்தில் கதையை தாங்கிப் பிடிக்கின்றன. அவ்வப்போது காதலால் நிரம்புகையில் இளையராஜாவின் இசை காதலால் ததும்புகிறது.

நின்ற இடத்திலேயே நடித்துக் காட்டும் காட்சியை நம் மனதுக்குள் கடத்தி விடும் வல்லமையை சரியான டைமிங்கில் நிகழ்த்திக் காட்டி இருக்கும் பார்த்திபனுக்கு இது மைல் கல். முதல் 15 நிமிடங்களுக்கு பொறுமையாக அமர்ந்து விட்டால்.. அடுத்து, படம் முடியும் வரை திரை உங்களை கபளீகரித்துக் கொள்ளும்.

கவனம் சற்று பிசகினாலும்.. திரைக்கதையின் நேர்த்தியை ஆடியன்ஸ் உள்வாங்குவது தவறி விடும். மூன்று கொலைகளோடு நான்காவது கொலையையும் சேர்த்துக் கொள்ளும் இடம் தான் கதையின் முடிவும்.....சட்டத்தின் ஓட்டையும் ஒளியும் இடம். மிக நீண்ட குறுக்கு வெட்டு புத்திசாலித்தனத்தில் இந்தக்கதையின் முடிச்சுகள் கோர்க்கப்பட்டிருக்கிறது.

உடல் நிலை சரி இல்லாத மகேஸ் பரிதவிக்க வைக்கிறான். சமீப காலமாக காயத்ரியின் குரலில் மயங்கித் திரிகிறேன். இம்முறையும் அந்த மாயம் நிகழ்கிறது. காயத்ரியின் குரலில்.. தொன்று தொட்ட காதல் வழிந்தோடுகிறது. ஒரு இனம் புரியாத இம்சையை அந்த குரலில் இனம் காண முடிகிறது. அந்த குரலின் பின்னால் நாகரிக இயலாமையின் வன்மம் கடலோசையில் அச்சுறுத்துவது ஆண்டிராய்டு உலகில் நாம் சந்தித்தே ஆக வேண்டிய சுடும் நிஜம்.

சம கால அரசியலையும்.. இங்கு நடக்கும் அதிகாரவர்க்கத்தின் அயோக்கியதனத்தையும் போகிற போக்கில் பேசிக் கொண்டே செல்லும் பார்த்திபனின் சமூக அக்கறையும் கச்சிதமாக சேர்ந்து கொள்கிறது. "உங்கள் சட்டங்களின் ஓட்டைகளை பயன்படுத்தி ஒரு சாமானியன், விளிம்பு நிலை மனிதனும்தான் தப்பிக்கட்டுமே..."என்று காவல் அதிகாரியிடம் கேட்கையில்... சரி தான்.. என்று தோன்றுகிறது... காவல் அதிகாரிக்கும்.

"ஒத்தை செருப்புக்கு வந்ததுக்கு ரெண்டு செருப்பாலயும் அடிச்சுக்கணும்" என்ற குரல்களையும் திரையரங்கில் கேட்க முடிந்தது. காலத்துக்கும் குறைசொல்லிகள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அது தேவையாகவும் இருக்கிறது.

ட்ரைலரில் பார்த்த "குளுருதா புள்ள" பாடல் படத்தில் மிஸ்ஸிங். பாட்டுக்கான இடமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரே ஆள் நடிக்க வேண்டிய தேவையை இந்த படம் ஏற்படுத்த வில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறோம். இருந்தும் ஒற்றை யானைக்கு பலம் அதிகம் என்று காட்டி இருக்கிறார் பார்த்திபன்.

சரி, குறைகள் இல்லையா என்றால்..... இந்த மாதிரி படத்துக்கு குறைகளை பற்றி யோசிக்கத் தேவையில்லை.

வாழ்வின் மகத்தான தருணங்களை யாருக்கோ நாமும் நடித்துக் காட்டிக் கொண்டே தான் இருக்கிறோம்....பார்த்திபனைப் போல. இறுதியில் திரையில் பூ மலர்ந்தால் நலம்.

- கவிஜி

Pin It