* இவள் போன்ற பெண்கள் இளவரசிகளாக எங்கோ யாருக்கோ காத்துக் கொண்டே இருக்கிறார்கள். தேடிக் கொண்டிருப்பவர்கள் பாக்கியவான்கள்.
இந்தப் படத்தைப் பற்றி எழுதக் கூடாது என்று ஓர் எண்ணம். எதனால் என்றெல்லாம் தெரியவில்லை. சில போது அப்படி ஒரு கிறுக்குத்தனம் வரும். ஆனால் அதையெல்லாம் தாண்டி படத்தில் நாயகனுக்கு நாயகியைக் கண்டதும் வரும் காதல் போல படம் பார்த்ததும் எனக்குள் ஒரு மொட்டவிழ்ந்தது. பிறகு ஒரு மெட்டெழுந்தது. அவிழ்ந்த மெட்டெல்லாம் அலைக்கழிக்கும் இசைதேவனின் இசையோடு என்னையே எனக்கு காட்டிக் கொடுத்தது.
காதல்... காதல்... காதல்... காதல் போயின் சாதல் சாதல் சாதல்....
மெஹந்தி சர்க்கஸ்.
ஒரு சர்க்கஸ்காரி மீது வரும் காதல். அவளுக்கும் அவன் மீது வரும் அதே கண்டதும் வரும் பிடிப்பு. காலம் காலமாக சர்க்கஸ்காரிகளை ஊருக்காரன்கள் காதலிப்பதும்.... ஊர்க்காரிகள் சர்க்கஸ்காரன்களை காதலிப்பதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த காதலில் ஒரு ஆச்சரியம் இருக்கிறது. அந்தக் காதலில் ஒரு ஒப்பனை இருக்கிறது. அதில் இயல்புக்கு மீறிய சுதந்திரம் ஒன்றை காண முடிகிறது. அதனாலேயே அந்த மாதிரி காதல் கதைகள் நம்மை வெகுவாக ஈர்த்து விடுகின்றன. அதுவும் 90களின் காதல்களில் ஒருவகை இன்னொசென்ட் இருந்ததை நினைத்து பார்க்கிறேன். முன்பெல்லாம் ஊருக்குள் வரும் சர்க்கஸ் கூட்டம் நமக்குள் திருவிழாவை விதைத்தது. இப்போது அப்படியெல்லாம் ஊருக்குள் அவர்கள் வருவார்கள் என்பதே வழக்கொழிந்து போய் விட்டன...என்பதை நாம் நம்பத்தான் வேண்டும்..
மூக்குத்தி குத்தியிருக்கும் பெண்களை இயல்பாகவே பிடித்த காலம் அது. பேசி பழகிய அக்காக்கள்.. பேருந்தில் வரும் அசலூர்க்காரிகள்... கிழவிகள்.. பெரியாம்மாக்கள்.. சித்திகள்.....அத்தைகள்......பா ட்டிகள்... ஒன்று விட்ட சகோதரிகள்...... சொந்த அக்கா தங்கைகள் என்று பெரும்பாலும் மூக்குத்தி குத்தி இருந்தார்கள். அதில் ஒரு ஆனந்த அழகு ஒட்டியிருந்ததை ஆழமாய் ரசித்தவனுக்கு இந்த மாதிரி ஒரு பெண் மூக்குத்தி குத்தியிருப்பதைக் காணுகையில் படக்கென்று உள்ளே பூத்து விடும் நட்சத்திரத்தை இன்னும் இன்னும் உயரத்தில் கொண்டு போய் வைக்கத்தான் இந்த மனம் பாடாய் படும்.
இந்தப்படமும் அதே பாடு தான் படுகிறது.
இவள் போல் ஒரு பக்கம் வகிடு எடுத்து காதை மறைத்து தலை வாரி இருக்கும் பெண்களை அத்தி பூத்தாற் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக காணுகையில்... இளையராஜா யாருக்கும் சொல்லாமல் மூளைக்குள் அமர்ந்து கிடார் வாசிக்க ஆரம்பித்து விடுகிறார்.
இந்த படத்தில் வரும் அந்த "மெஹந்தி" மீது யாருக்கும் காதல் வரும். எனக்கு காதலோடு சேர்த்து அழுகையும் வந்தது. ஆசை முகம் மறந்து போச்சே.. யாரிடம் சொல்வேன் தோழி என்று காரணமே இல்லாமல் உளரும் 2 மணி நேரக் காதலை, எனக்குள் பொத்துக் கொண்டு ஊற்றும் பெரு மழையை இப்படி எழுதித்தான் பகிர்ந்து கொள்ள முடியும்.
இத்தனை அழகாய் ஒருத்தி இருந்தால்.... காதல் தானாக வலை செய்து,. தானே மாட்டிக் கொண்டு அவஸ்தை படும். நமது கதை நாயகன் "மாதம்பட்டி ரங்கராஜ்" அவள் மீது தீராக் காதலோடு வெகு இயல்பாய் ஒரு காதலனை கண் முன் நிறுத்துகிறார். 90களின் ஹேர்ஸ்டைலில் வாரி சீவி வசந்த காலம் சுமக்கிறார். 90 களுக்கென்று ஒரு நடை கூட இருந்தது. அது கூட அவரிடம் கச்சிதம். வீதிகளில்......கடைகளில்..... ஒவ்வொரு பிரேமிலும் இளையராஜா பாடல்...... நம்மை போட்டு தாக்குகிறது. வேரோடு பிடிங்கி வீசி எறிகிறது. அடித்து நொறுக்குகிறது. பின் போக்கிடமின்றி முலை சப்பும் சிறு குழந்தையாய் காதலோடு கசிந்துருகுகிறது.
வழக்கம் போல வந்த காதலில் வழக்கம் போல வரும் பிரிவு.. கிளிஷே தான் என்றாலும்.. அந்த காதலில் அவர்கள் பிரிந்ததை உள்ளூர ரசிக்கும் இளையராஜாவின் இசை அவர்களை எப்படியும் சேர்த்து வைத்து விடும் என்று நம்பவும் வைக்கிறது. காதலின் பிரிவில் இன்னும் கூடும் காதலை உணர்கிறோம். படத்தில் அவர்கள் காதலில் ஆழமில்லை தான். திரைக்கதையில் பெரிய வேலைகள் எதுவும் இல்லை தான். ஆனால்.. 90 களில் பக்கத்துக்கு வீடுகளில்... பள்ளிக்கூடங்களில்.... சினிமா கொட்டாயில்...தென்னத்தோப்புகளி ல்.... கரும்புக்காடுகளில்...இளையராஜா பாடல்களை தூதுவாக்கி.... எல்லா உணர்வுகளுக்கும் இளையராஜாவையே துணையாக்கி ஒரு அக்காவும் ஒரு அண்ணனும்.. காதலித்தார்கள் தானே.
அவர்கள் தான் இவர்கள்.
நன்றாக வடிவமைக்கப்பட்ட காதல் நிஜத்தில் வாய்ப்பதில்லை. அது அப்படியே எங்கோ எப்படியோ காத்து வாக்கில் உதித்து விடுவதும் உண்டு. இங்கே உதிர்த்து விட்டு மறைந்து போன அவளை தேடுகிறான் கதை நாயகன். தேய்கிறான். சாதியும்... இனக்குழுவும்.. எங்கும் எப்போதும் எதையாவது பிரித்துக் கொண்டே தான் இருக்கும். இங்கு காதலை பிரிக்கிறது. படம் ஆரம்பிக்கையிலேயே கதை நாயகியின் மகள் தான் அம்மாவின் காதலனைத் தேடி வருகிறாள். ஆரம்பமே அட்டகாசம். ஆனால் அதன் பிறகு...எங்கோ தடுமாறும் திரைக்கதையிலும் நாயகனும் நாயகியும் அவர்கள் காதலும் கலர்புல். இடையிடையே வரும் இளையராஜாவின் சாயலோடு ஷானின் இசையும் பாடலும்... தூக்கி போட்டு கொல்லவில்லை என்றாலும் மெல்ல சாகடிக்கும்... காதலோடு இனிக்கிறது.
அவன் வித்தைக்காக கத்திகளால் குத்த தயாராகும் போது உன்னால் வாழ ஆசை பட்ட நான் சாகவும் தயார் என்பது போல இரு கைகளையும் விரித்து ஒரு ஏசுவை போல நிற்கும் அவள் கண்களில்... காதல் மட்டுமே நிறைந்திருக்கும்.
நயவஞ்சகம் அந்த கத்தி குத்து வித்தைக்காரனிடம் இருப்பதை முன்னமே அறிந்தாலும்..அவன் போக்கில் அவனை போக விட்டு ரசிக்க முடிகிறது. அவன் போன்ற மனிதர்கள் நம் காலடியில் நச்சுப்பாம்பாய் ஆடிக் கொண்டே இருப்பார்கள். ரசிக்கும் படியாகவும் இருக்கும். ஆனால்.... ரத்தமின்றி அவர்கள் செய்யும் கொலை அவநம்பிக்கையின் பக்கம் இந்த வாழ்வை குடை சாய்த்து விடும்.
ஒயின் கோப்பையோடு... தன் காதலியின் கடிகாரத்தோடு தமிழ் சினிமா கண்டெடுத்த புது பாதிரியார்.... வேல ராம மூர்த்தி. இதுவரை அவர் நடித்த பாத்திரங்களிலேயே இது தான் ஆக சிறந்தது. அபத்தமில்லாத அப்பழுக்கில்லாத முற்போக்கு சிந்தனையோடு இருக்கும் இந்த பாதிரியாரிடம் கூசாமல்... ஆசி வாங்கலாம். முற்போக்கு பாதிரியார்கள் இன்னும் தேவை. காதலுக்கு உதவி பண்ணும் அந்த பெண்மணியின் வீட்டில் அம்பேத்தின் பெரியாரின் புகைப்படங்கள்... அட்டகாச டச். அதிகார வர்க்கத்துக்கு எப்போதும் அச்சம் ஊட்டும் அவர்களே காதலுக்கும் விடுதலை. காதலினால் மாறப்போகும் சாதிக் கொடுமைகளுக்கும் விடுதலை.
90 களின் பைக்கில் கவனம் செலுத்திய இயக்குனர்... 90 களின் பியர் பாட்டில்களிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். வயதான ஒப்பனை யாருக்குமே பொருந்தவில்லை. ஹிந்திக்காரர்கள்.. பேசும் தமிழ் மொழி.. குறிப்பாக கதை நாயகி பேசும் கொஞ்சும் தமிழ்..... காதலில் குட்டி நிலா மயிலிறகு பயிரிடுகிறது. கொடைக்கானல் கண்ணுக்கு நெருக்கமாக.......கோடி அருவி கொட்டுகிறது.
அவன் என்னைக்கு இருந்தாலும் வருவான்னு காத்திருக்கும் இவள் போன்ற பெண்களுக்காக காலம் முழுக்க காத்திருக்கலாம். அந்த காத்திருப்பில் 90 களின் உண்மை இருந்தது. நிறைய தெரிந்து கொள்ளாத தினம் ஒரு முறை மட்டுமே செய்திகள் கேட்ட, பார்த்த ஒரு நிதானம் இருந்தது. சத்தியமாய் சொல்லலாம். அந்த காதலின் வீரியம் இன்று இல்லை. இனி இருக்காது. அலைபேசிக்குள் அடைபட்ட காதலர்களுக்கு தாடி வைத்த தேவதாஸ் மீம்சாகி போனான் என்பது சோகம். கேசட்டில் அவனுக்கு பிடித்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்கும் காதலிகளை கோமாளிகளாக பார்க்கும் இன்றைய குறுஞ்செய்தி தலைமுறைகளுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான்...
காதல்... காதல்... காதல்... காதல் போயின் சாதல் சாதல் சாதல்....
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல....
அது தேடி உசுர ஒட்டுதே தினம் உன்னால....
மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே....
மனசோட துளை போட்டு எனையே கண்டவளே.....
கண்ணா மூடி கண்ட கனவே...
பல சென்மந் தாண்டி வந்த உறவே...
- கவிஜி
- கவிஜி