சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் முற்போக்குவாதிகளாலும், ஜனநாயக சக்திகளாலும் காறி உமிழப்பட்ட 'கேரளா ஸ்டோரி' திரைப்படம் 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தைப் போன்று திட்டமிட்டு எடுக்கப்பட்ட சங்கிகளின் திரை மலமாகும்.

திரைபடங்களைத் தங்களது கருத்துப் பரவலுக்கான சரியான வழியாக கண்டுகொண்ட சங்கிகள் சென்சார் போர்டு, நீதித்துறை என அனைத்தையும் கைக்குள் போட்டுக் கொண்டு, மிகக் கீழ்த்தரமான இழிந்த கருத்துகளைக் கூட துணிந்து திரைப்படமாக எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இதன் மூலம் நாடு முழுவதும் மதவெறியைத் தூண்டவும், பதற்றத்தை ஏற்படுத்தவும், அதை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுக்களாக மாற்றவும் திட்டமிட்டிருக்கின்றார்கள்.

ஒரு பக்கம் பிபிசி ஆவணப்படத்தை ஒளிபரப்ப தடைவிதித்த சங்கிகள், சமூக வலைதளங்களில் தங்களுக்கு எதிரான கருத்துகளை எழுதுபவர்களை தங்களின் இணைய கூலிப்படைகள் மூலம் முடக்கும் சங்கிகள், 'கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றவுடன் தாங்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திராத கருத்து சுதந்திரத்தைப் பற்றி அனைவருக்கும் வகுப்பெடுக்கின்றார்கள்.

விபுல் ஷா தயாரிப்பில், சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவான 'கேரளா ஸ்டோரி' படத்தில் 32,000 இந்துப் பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி உள்ளதாகவும், இந்துப் பெண்கள் முஸ்லிம் பெண்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும், பின்பு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக வேலை செய்ய நாடு கடத்தப்படுவதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.the kerala storyமேலும் அடுத்த 20 வருடங்களில் கேரளா, இஸ்லாமிய மாநிலமாக மாறும் என்று முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தவிர மிக மோசமான அருவருப்பு நிறைந்த இஸ்லாமிய வெறுப்புக் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன.

சங்கிகளின் ஒரே நோக்கம் இந்தியா மிகப்பெரும் முஸ்லிம் தீவிரவாத அச்சுறுத்தலில் உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும், இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தின் ஆதரவாளர்களாகவும், அதற்காக அவர்கள் இந்துப் பெண்களை மதம் மாற்றி தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்ற நச்சு சிந்தனையை விதைப்பதுதான்.

இதற்காக அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய நச்சுப்பொய்யின் நவீன சொல்தான் 'லவ் ஜிகாத்' என்பது.

1920கள் மற்றும் 1930களில் மத மோதல்கள் அதிகரித்து வந்த பின்னணியில், வட இந்தியாவில் இந்து தேசியவாதக் குழுக்கள் இந்துப் பெண்களை முஸ்லிம் ஆண்கள் 'கடத்திச் செல்வதாக' எதிர்ப்பு தெரிவித்து, அவர்களின் இந்து மனைவிகளை மீட்க வேண்டும் என்று பொய்யைப் பரப்பி, பீதியூட்டினார்கள்.

ஏறக்குறைய 100 ஆண்டுகள் கழித்து, 2020ம் ஆண்டு பிஜேபி ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச அரசு கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்த அவசரச் சட்டத்தின் மூலம், கட்டாயப்படுத்தியோ, நேர்மையற்ற முறையிலோ, மத மாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக இந்தச் சட்டம் இஸ்லாமிய ஆண்களை இந்துப் பெண்கள் காதலித்து திருமணம் செய்யக் கூடாது என்ற பார்ப்பன பாசிச சிந்தனையில் இருந்து கொண்டு வரப்பட்டது.

இந்த அவசரச் சட்டத்தின்படி, திருமணத்துக்காக பெண்கள் மதம் மாறினால் அது செல்லாது என அறிவிக்கப்படும். திருமணத்துக்குப் பிறகு மத மாற்றம் செய்து கொள்ள விரும்புபவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் அதற்காக விண்ணப்பித்தாக வேண்டும்.

அதே போல ஏப்ரல் 2021 இல், குஜராத் சட்டமன்றம் மதச் சுதந்திரச் சட்டம், 2003ஐத் திருத்தியது. 'லவ் ஜிஹாத்' இலக்கு வைக்கும் நோக்கத்துடன், திருமணம் அல்லது கவர்ச்சி மூலம் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்படுவதற்கு எதிராக கடுமையான விதிகளைக் கொண்டு வந்தது.

கர்நாடக மாநில அமைச்சரவையும் மதமாற்ற எதிர்ப்பு 'லவ் ஜிஹாத்' மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது, இது டிசம்பர் 2021 இல் சட்டமாக மாற்றப்பட்டது.

மேலும் 2021 அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் லவ் ஜிகாத் தடைச்சட்டம் கொண்டு வரப்படும் என பிஜேபி வாக்குறுதியும் அளித்தது.

இவ்வளவு வன்மத்தோடு சட்டம் கொண்டுவரும் அளவுக்கு ஒருபோதும் மதமாற்ற திருமணங்கள் இந்தியாவில் அதிக அளவில் நடைபெற்றது கிடையாது.

2011 ஆம் ஆண்டு சென்செஸ் தரவுகள் படி ஒட்டுமொத்த இந்தியாவில் சுமார் 5.8 சதவீத திருமணங்கள் மட்டுமே மாற்று சமூகத் திருமணங்களாகப் பதிவாகியுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையில் பெரிய மாற்றமொன்றும் ஏற்பட்டு விடவில்லை.

அதே போல மனித வள மேம்பாட்டு கணக்கெடுப்பில் கூட, மாற்று சமூகத்தினரை திருமணம் செய்து கொள்வது வெறும் 5 சதவீதமாக மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

இந்தியாவில் டெல்லி, மும்பை, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற இடங்களில் மாற்று சமூகத்தினரை திருமணம் செய்வது தொடர்பாக Social Attitudes Research for India (Sari) என்கிற பெயரில் ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

அதில் பெரும்பாலான மக்கள், மாற்று சமூகம் & மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு எதிராக உள்ளனர் என்பதை விட, மாற்று சமூகம் & மதத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதற்குத் தடை விதிக்க தனி சட்டமே இயற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

உண்மையில் இதுதான் இந்தியாவின் நிலை. சொந்த மதத்துக்குள்ளேயே திருமணம் செய்யும் அளவுக்குக் கூட நாகரீகப்படாத அநாகரீக சாதிவெறி பிடித்த கூட்டம் இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதை எப்படி ஏற்றுக் கொள்ளும்?

இந்தியாவில் 90 சதவீதத்துக்கும் அதிகமான திருமணங்கள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டவையாக இருக்கின்றன. மதங்களைக் கடந்து திருமணம் செய்வது அரிதாகவே நடக்கின்றது. 2 சதவீதத்துக்கும் சற்று கூடுதலாகத்தான் மதங்களைக் கடந்த திருமணங்கள் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

இந்த 'கேரளா ஸ்டோரி' திரைப்படத்தையே எடுத்துக் கொள்வோம். உண்மையில் அங்கு 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டார்களா?

கடந்த இரண்டு ஆண்டுகளில் தென் மாநிலத்திலிருந்து லவ் ஜிகாத் வழக்குகள் ஏதும் பதிவாகியுள்ளனவா என்று கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பென்னி பெஹனான் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை அமைச்சகம்,

'லவ் ஜிஹாத்' என்ற சொல் தற்போதுள்ள சட்டங்களின் கீழ் வரையறுக்கப்படவில்லை. லவ் ஜிகாத் போன்ற எந்த ஒரு வழக்கும் மத்திய ஏஜென்சிகளால் புகாரளிக்கப்படவில்லை என்று கூறியிருந்தது.

மேலும் "கேரளாவில் மதங்களுக்கு இடையேயான திருமணங்கள் தொடர்பாக இரண்டு வழக்குகள் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) விசாரிக்கப்பட்டுள்ளன" என்றும் கூறியிருந்தது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்குகளில் கட்டாய மதமாற்றத்திற்கான எந்த ஒன்றும் கண்டறியப்படவில்லை. இதுவரை யாரும் தண்டிக்கப்படவும் இல்லை. தற்போது எங்கிருந்து இந்த 32,000 பெண்களும் வந்தார்கள் என்பதை புளுகுக் கூட்டம்தான் சொல்ல வேண்டும்.

தொடர்ச்சியாக கேரளாவில் மதப் பதற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய சங்கிக் கும்பல் முயன்று வருகின்றது. இதற்காக அது பல வெட்கம் கெட்ட பொய்களையும் பரப்பி வருகின்றது.

லவ் ஜிகாத் மூலம் மாற்று மதத்திலிருந்து அழைத்து வரப்படும் பெண்ணின் சாதிக்கு ஏற்ப பணம் தரப்படுவதாகவும், அப்பணம் அந்த பெண்ணைக் கூட்டி வரும் ஆணுக்கு வழங்கப்படுவதாகவும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள்.

“பிற மதங்களிலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறும் பெண்களுக்கு சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வழங்கப்படும்" என ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் இணையதளத்தில் அறிவித்ததாக சங்கிக் கும்பல் துண்டு பிரசுரம் அடித்து விநியோகித்தது.

இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கர்நாடகா தலைவர் அப்துல் வாஹித் சைட் கூறிய போது “இது போன்ற ஒரு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்து, அதில் எங்களது அலுவலகத்தின் முகவரியை வழங்க நாங்கள் முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்" என்றும், "இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" எனவும் தெரிவித்தனர்.

அதே போல சங்கிகளால் பரப்பப்பட்ட மற்றொரு வீடியோவில், ஒரு இஸ்லாமிய இளைஞரும், ஒரு இந்துப் பெண்ணும் காதலிப்பது போன்றும், அப்பெண் ஆரம்பத்தில் தாவணி அணிந்து இந்து மதக் குறியீடுகளுடன் இருப்பது போன்றும், பின்னர் அவர் வைத்திருக்கும் பொட்டு அகற்றப்பட்டு, குர்தி (Long Kurti) அணிந்து இஸ்லாமிய மதத் தோற்றத்தில் இருப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டது. வீடியோவின் இறுதியில் ஸ்கை பேக்ஸ் (Sky Bags) எனக் காண்பிக்கப்பட்டு அந்த வீடியோ முடிவடைகிறது.

ஆனால் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில் அது சங்கிகளால் பரப்பப்பட்ட பொய் என்பது நிரூபிக்கப்பட்டது.

அதே போல கம்யூனிஸ்டான அங்கிதா விஜய் என்ற இந்துப் பெண் அப்துல் என்ற இஸ்லாமியரைக் காதலித்து வந்ததாகவும், அந்நபர் அங்கிதாவை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் காயங்களுடன் இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் சங்கிகள் பரப்பினார்கள்.

ஆனால் பரப்பப்பட்ட புகைப்படங்களைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், அப்பெண் முஸ்லீம் காதலரால் தாக்கப்பட்டார் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பரப்பப்பட்ட புகைப்படத்தில் இருப்பது அங்கிதா விஜய் அல்ல என்றும், அவர் அனிக்கா விக்ரமன் என்னும் மலையாள நடிகை என்றும், அவரது முன்னாள் காதலர் அனூப் பிள்ளை என்பவர்தான் அவரைத் தாக்கியுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அனூப் பிள்ளையும் இஸ்லாமியர் இல்லை.

அந்த புகைப்படங்களைக் கூட அந்த நடிகையே தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

இப்படி சங்கிகளால் திட்டமிட்டு நூற்றுக்கணக்கான பொய்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக தினம் தினம் பரப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கேரள அரசு முடிவெடித்த போது, அதை வைத்து கேரளாவைத் தாண்டி இந்தியா முழுவதும் இந்துமத விழுமியங்களுக்கு பேராபத்தை கம்யூனிஸ்ட்கள் ஏற்படுத்துகின்றார்கள் என்று சங்கிக் கும்பல் பிரச்சினை செய்தது.

ஆனால் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் பாஜகவை மண்ணைக் கவ்வ வைத்து கேரள மக்கள் தங்களின் மதவெறிக்கு எதிரான முற்போக்கு சிந்தனை மரபை வெளிக்காட்டினார்கள்.

வாய்வழியாக உருட்டுவதைவிட திரைப்படங்களின் வழியாக உருட்டினால் மக்கள் நம்பி விடுவார்கள் என்ற எண்ணத்தில்தான் தற்போது சங்கிக் கும்பல் 'கேரள ஸ்டோரி' என்ற பொய்களின் மீதும், புரட்டுகளின் மீதும் கட்டமைக்கப்பட்ட கேவலத்தை திரைப்படமாக எடுத்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் இந்த முறையும் சங்கிகளின் முயற்சி சிதைந்திருக்கின்றது.

நீதிமன்றம், தணிக்கை ஆணையம், அரசு என அனைத்துமே சங்கிகளின் பக்கம் நின்றாலும், மக்களே அதைப் புறக்கணித்து இருக்கின்றார்கள். பார்ப்பனியத்தின் அழிவு காலம் நெருங்கி விட்டதையே இது காட்டுகின்றது.

- செ.கார்கி

Pin It