kanaka 630ஒரு கிராமத்துல ஒரு பெரிய வீடு.

அங்க ஒரு பொண்ணு தாவணி, பாவாடையில் அசத்துற அழகுல குண்டு குண்டு கண்ண வெச்சிக்கிட்டு இருக்கும்.. அப்போ கார்த்திக் வரணும்.. இல்ல பிரபு வரணும்..

செமயா வந்து பச்சக்குனு பாக்கற நமக்கு ஒட்டிக்கும் என்னவோ. 'அட இது நம்மாளுப்பானு' தோணும் இல்லையா... அந்த முகம் கனகாவுக்கு. இதழோரம் விரியும் சிறு புன்னகைக்குப் பின் பளிச்சிடும் பிரகாசத்தில் முத்துப்பற்கள்.... பின் முகமெல்லாம் கவிச்சொற்கள்.

"மல்லிகையே மல்லிகையே...தூதாகப் போ...." என்று பூச்செடிக்குள் நின்று பாடுகையில்... திரை தாண்டி தவம் கலைவது இயல்புதான் என்றாலும்.....இயல்பில் இருப்பு கொள்ளாத இம்சை எனக்குள். பார்க்க, பார்க்கப் பிடிக்கும் அழகு. சில நேரத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பிடித்து விடும் அழகு. நடிப்பிலும் தனி முத்திரை பதிக்கும் நடிகை. செல்லக்கிளி, சிந்தாமணி, முத்து மீனா, காமாட்சி போன்ற பெயருக்கு ஏற்ற முகம். அம்மன் வேடம் சரியாகப் பொருந்தும் நடிகை கனகா என்றால், சாமி வந்து கேட்டாலும் ஆம் என்றுதான் சொல்லத் தோன்றும்.

"மாங்குயிலே பூங்குயிலே...." என்றாலே ராமராஜன் கூட கனகாவும் நினைவுக்கு வருவதை காலம் கடந்தும் பத்திரமாக வைத்திருக்கிறது சினிமா மனது. கிராமத்துப் பின்னணியில் கதை என்றால் அங்கே தாவணி பாவாடையில் தேவதையை உலாவ விட கனகாவைத் தேடலாம் என்பது என் கருத்து. பார்த்ததும் காதல் வந்து விடும் பெண் கனகா. இதழ் வழியே விரியும் பூ உலகம் கனகாவுக்கானது.

"குடகு மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா....... என் பைங்கிளி....." எனும்போதே சோகமும் அழுகைமும் மாறி, மாறி மிளிர மாட்டு வண்டியில் அமர்ந்திருக்கும் கனகாவை இப்போதும் நினைத்தாலும் மனதுக்குள் இளையராஜா இசைதான். கூர்நாசியும் இல்லாமல் கொஞ்சம் ஜப்பான் நாசியும் இல்லாமல் கலந்த மூக்கில்... கவர்ச்சி கூடுதல். கண்களைப் பற்றி என்ன சொல்ல......வண்டுகளின் வகைகளில் இரண்டு என்று கவிதை எழுதலாம். சிரித்தால் படக்கென்று குழந்தை தவழும் முகத்தில் அழுதால் மனம் பதறும் பாக்கியம் பெற்றவர்கள் அவரைக் காதலிக்கலாம்.

"பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி..." பாட்டினில்.... அய்யனார் குதிரைக்குள் ஒளிந்திருப்பார் கனகா. வெளியே கார்த்திக் நம்பியாருடன் சேர்ந்து பாட்டு பாடி ஆடிக் கொண்டிருப்பார். பாட்டு முடிந்ததும் அவரைத் தூக்கி கொண்டு போவது தான் திட்டம். இடையிடையே இன்செர்ட் ஷாட்டில் குதிரைக்குள் இருக்கும் கனகாவைக் காட்டுகையில்... அப்பப்பா....அத்தனை ரியாக்சன்ஸ். காதலின் பிரிவும் காதலின் வலியும் காதலின் வலிமையும்......அன்பின் மொத்தமும்.... யுத்தத்துக்கான யுக்தியும்... என்று உடல் மொழியும் முக பாவனையும் அப்படி வெளிப்படும்.

'இந்தப் பெண்ணுக்காக என்னவேனா பண்ணலாம்' என்று தோன்ற வைத்து விடும் ஒரு கிக் கனகாவின் நவரசத்தில் இருக்கிறது. கண்கள் மட்டுமே தெரியும் இடைவெளியில் காதலும்... சோகமும் சற்று நேரத்தில் கிடைக்கப் போகும் விடுதலையும் என்று மாறி மாறி படபடக்கும்... அந்தக் கண்களில் இருந்து தான் கனகா என்ற பெண் உருப் பெறுகிறார் என்று நம்புகிறேன். நந்தவனத்தில் பனி உதிர மலர்ந்திருக்கும் மலரோ என்று ஐயம் வரும் போதெல்லாம் கனகாவின் கண்களில் உருளும் கருப்பு வெள்ளை சிரிப்பை கையோடு வைத்திருக்கிறேன். அது தான் இங்கே கட்டுரையாகிறது.

kanaka 448பாட்டினில் ஒரு வரி வரும்..

"மரிச்சாலும் மல்லுக்கட்ட துணிஞ்சாரு... மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு..." எனும்போது கோபத்தில் விரியும் கண்கள் பின் வரியில் அப்படியே சாந்தமாக மாறும். எங்கோ நிறுத்தி விட்டு, எங்கோ பறந்து விடும் அற்புத வனம் ஒன்று நம் முன்னே விரியும் அங்கே கனகா சாமியாகி உலாவும் கற்பனை எனக்கு சிறகடிக்கும். ஒரு வீட்டில் குத்து விளக்காய் ஒரு பெண் இருப்பாள் இல்லையா.. அந்தத் தோற்றம் கனகாவுக்கு. கனகாவுக்கு சொந்த வாழ்க்கை சரியாக இல்லை என்பதில் மிக வருத்தம் உண்டு. பெரிய பெரிய திறமைசாலிகள் எல்லாம் இப்படித்தான் சொந்த வாழ்வில் எங்காவது சறுக்கி விடும் நிலை சகஜமாய் வந்து போகிறது. கலைஞர்களுக்கே உண்டான வாழ்வியல் சாபம் கனகாவுக்கும் உண்டு என்பதில்... அவர் அழும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

"உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத் தோணும். உன் கண்ணப் பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்யத் தோணும்..." வரப்பெல்லாம் ஆடும் காட்சிக்கு கனகா என்றே பெயர் இருக்கட்டும். அதே படத்தில்... ரஜினியை 'சின்னையா..... சின்னையா' என்று கூப்பிட்டுக் கொண்டே காதலிக்கும் அந்தப் பெண்ணை காலத்துக்கும் வயல் வரப்பில் நடக்க விடலாம். அவரைப் பூங்காற்றைப் போல விட்டு விடுவது தான் சரி. அங்கும் இன்னும் மனம் போன போக்கில் உலாவட்டும். கனகாக்கள் அப்படித்தான் வாழ வேண்டியவர்கள்.

"ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே" எனும்போது வேறு என்ன செய்ய.. தானாக புன்னகைக்கும் டொபமைனை அப்படியே விட்டு விடுவது தான் சரி. தூண்டில் சிரிப்பும் மீன் கண்ணும்.. கனகாவுக்கு இருப்பது தான் இயற்கையின் சித்திர வேலைப்பாடு. சுடர் விடும் ஜோதிக்கு சற்று அருகாமையில் புன்னகைக்கும் அவர் மீது காலத்துக்கும் காதல் உண்டு. எனக்கோ காலத்துக்கும் காதல் உண்டு.

கனகாவிடம் எனக்குப் பிடிக்காதது அவர் பெயர் மட்டுமே..

சிண்ட்ரெல்லாக்கள் தொடரும்...

- கவிஜி

Pin It