தூணுக்கு சுடிதார் போட்டு விட்டால் கூட கொஞ்சம் நேரம் உற்றுப் பார்த்து விட்டு, "சூப்பரா இருக்கு....." என்று சொல்லும் 17 வயதில்... பரு முளைத்துத் திரிந்தபோது ரம்பா எனும் இந்த சிண்ட்ரெல்லாவின் எண்ட்ரி. பொல்லாத அந்தப் பருவத்தில்.... புருவம் உயர்த்தி வந்த ரம்பாவுக்கு சிரிப்பே கொஞ்சுவது போலத்தான். கொஞ்சுவது சிரிப்பது போலத்தான்.
"ஏய் மாமனுக்கு ஏங்கி மனம் மத்தளம் கொட்டுதடி....
இந்த மல்லிகைப்பூ காமன்கிட்ட மல்லுக்கு நிக்குதடி....
என் சாமிகிட்ட சேதி சொல்லி சாதிக்க சொல்லுங்கடி..."
பாடல் பின்னால் ஒலிக்க ஒரு மொட்டை மரத்தில் வெள்ளைப் புடவையில்... இந்த சிண்ட்ரெல்லா படுத்துக் கொண்டு உடலை அப்படி இப்படி ஆட்டி... ஏதேதோ செய்வார். கண்கள் திறந்திருக்க... உள்ளே காடும் திறந்திருக்க.... மிருகம் பிளாட்.
"ஆசை..... ஆசை.. ஆசை...." என்று சையை இழுத்து இன்னொரு ஆசை சொல்கையில் கொள்கையற்று கொடி பிடிக்கும் வால் மனது. ஆசை கூடி, வெறி ஆகி, திரைக்குள் கை விட்டு இழுத்துப் போகும் காதலையும், காமத்தையும் ஒரு சேர விதைத்த இந்த சிண்ட்ரெல்லாவின் முகத்தில்... பருவம் பூத்துக் குலுங்கி பூக்கள் உதிரும் மலை முகடுகளின் வாசத்தை உணர்ந்திருக்கிறேன்.
"பெண்ணல்ல...பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ"
என்று பிரபு பாடுகையில் அவர் நினைப்பில் மட்டுமல்ல ரம்பா எனும் அழகி.. என் நினைவிலும் தான். இப்படித்தான் என சொல்ல இயலாத ஒரு முக வெட்டுத் தோற்றம் ரம்பாவுக்கு. ஆனால் பார்த்ததுமே பிடித்து விடும். கண்கள் கொஞ்சம் ஷிப்ட் ஆன மாதிரி இருக்கும். ஆனால் அந்தப் பார்வையில்.... "அழகிய லைலா.... அது அவளது ஸ்டைலா" பாடாமல் இருக்க முடியாது. அதுவும் அந்த சிவப்பு ஆடையில் மர்லின் மன்றோவைப் போல காற்றுக்கு மேலே தூக்கும் பாவாடையை காற்றோடு சேர்த்து
அழுத்திப் பிடித்துக் கொண்டே "உள்ளத்தை அள்ளித்தா" படத்தில் ஆடும் அவரின் ஆட்டத்துக்கு உயிர் கிழிய கத்தி இருக்கிறேன். அந்தப் படத்தின் அந்த சுவரொட்டிக்கு முத்தமிட்டு எட்டிக் குதிக்கையில் சுவர் கம்பிகள் முட்டியில் கிழித்த காயம் இன்றும் தழும்பாகி இருக்கிறது எனக்கு. அது தழும்பு மட்டுமல்ல, அதனுள் இருக்கும் தாளமும் கூட.
ரம்பாவின் பேரழகு 90களின் இறுதியில்...மெருகேறிக் கிடந்தது இனிப்பு கூடிய காலத்தின் சிமிட்டல்கள். மேனகை, ஊர்வசி, ரம்பை மூன்றும் சேர்ந்து ரம்பாவானது என்று பௌதீக மாற்றம் செய்து பார்த்திருக்கிறேன். வரலாறு பெரிதாக ஒன்றும் இல்லை. ரம்பாவுக்கும் ராத்திரி கனவிருக்கும் என்பது தான்.
ரம்பாவுக்கு நன்றாக நடிக்கவும் வரும் என்று நம்பிய படம் "நினைத்தேன் வந்தாய்"
"உனை நினைத்து நான் எனை மறப்பது, அதுதான் அன்பே காதல்...காதல்.... காதல்...காதல்" என்று பாட்டு பாடி தன் காதலை தன் அக்காவுக்கு விட்டுக் கொடுக்கும் ரம்பாவைக் காதலிக்காமல் என்ன செய்வது? ரம்பாவின் கொஞ்சும் குரல் கூட அலாதியானது. பிரியமானது. நேராக இதயம் தொடும் இசைக்குறிப்புகள் அடங்கியவை. அதிரூப லயங்கள் நிறைந்தவை. அதிகமாகப் புகழ்வது ரம்பாவுக்குப் பொருந்தும்.
உள்ளே பிடிக்கும் தீக்காட்டில் தீயிக்கும் பிடிக்கும் ரம்பா, கிளியோபாட்ராவின் சாயலையே வைத்திருக்கிறார் என்று இன்றும் நம்பும் மனதுக்கு எரியத்தான் ஆசை. ரம்பாவும் நானுமாக எரிந்திருக்கிறோம் நிறைய முறை. ரம்பா சோ ஹாட்.
"காஷ்மீர் ரோஜா தோட்டம்...... அது, பூத்தது காலையில்ல்ல்தான்..." என்று "என்றென்றும் காதல்" படத்தில் பாடுகையில்... ரம்பாவின் தங்க நிற உடையும் தாங்க இயலா இடையும்... பாடல் முடியும் வரை... விஜய் ஆகவே திரைக்குள் கற்பனை செய்வது ஆனந்தத்தின் அத்துமீறலும் கூட.
"காஷ்மீர் ரோஜா தோட்டம்......அது, தேடுது காதலைத்த்த்தான்..." என்று வலது கையை தலையில் இருந்து ஒரு பக்கமாக இழுத்து இறக்கி வாயசைக்கும் ரம்பாவுக்கு கன்னங்களில் காஷ்மீர் ஆப்பிள்கள். கண்களில் கவிப்பேரரசு தொகுப்புகள்.
கண்கள் சுருக்கி, சுண்டு விரல் கடித்து, பாதிக் கன்னம் மூடி, வெட்க சிரிப்பு தரும் ரம்பாவுக்கு சிறகுகள் இருக்கும் என்று நம்பி இருக்கிறேன். நேராக ஒளி வீசும் நட்சத்திரத்தில் இருந்து வந்த மாயப்பெண் என்று நம்புவது எனக்கு எளிதாக இருந்திருக்கிறது. எப்போதும் வயதே ஆகாது என்று நம்பும் ரம்பாவை நான் 90 களின் இறுதியிலேயே கடைசி பெட்டியைப் போல கழட்டி விட்டு விட்டேன். அதன் பிறகு இப்போதைய புகைப்படங்களையோ, அவரின் நிகழ்ச்சிகளையோ நான் பார்ப்பது இல்லை. சிண்ட்ரெல்லாவுக்கு வயதாவதை ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன்.
"கண்ணைப் பறிக்கிற காஷ்மீர் ரோஜா என்னைப் பறிக்கிறதே" என்று பாடல் ஆரம்பிக்கையில் ஒரு க்ளோஸப் ரம்பாவின் முகத்துக்கு போகும். மூக்குத்தி முகத்தில்... மணப் பெண்ணாக பெண் பார்க்கும் படலத்தில் அமர்ந்திருப்பார். ஒரு வெட்கம்.. ஒரு சலனம்....ஒரு சிரிப்பு....ஒரு நாணம்.. என்னென்னவோ பண்ணி விடும்.... எண்ணத்தில் எதை எதையோ பின்னி விடும்.
நான் ஊரை விட்டு வருகையில் என் நண்பன் ஒருவன் என்னை கட்டி பிடித்து பிரிய முடியாமல் இருந்த தருணத்திலும் காதோரம் கிசுகிசுத்தான்.
"விஜி.. அந்த ரம்பா ஆல்பத்தை எனக்கு குடுத்துட்டுப் போடா"
அழுகையிலும் சிரித்துக் கொண்டே எடுத்துக் கொடுத்தேன். அது நூறு போட்டோக்கள் அடங்கிய ஆல்பம். செய்தித்தாள்களில், பத்திரிக்கைகளில் இன்னும் எங்கெல்லாமோ கிடைத்த அவரின் புகைப்படங்களை வெட்டி ஒட்டி வைத்திருந்தேன். ஆல்பத்தை எப்போதோ நண்பனுக்கு குடுத்திருந்தும் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் ரம்பா எனும் பேரழகு, மூளைக்குள் 17 வயது 'பரு' பையனை சுரண்டிக் கொண்டே தான் இருக்கிறது.
கண்ணைப் பறிக்கிற காஷ்மீர் ரோஜா ரம்பா......!
(சிண்ட்ரெல்லாக்கள் தொடரும்... )
- கவிஜி