இயல்பாக இருப்பது என்பது சௌகரியம் மட்டுமல்ல, அது அழகும் கூட. வாரப்படாத தலை, மழிக்கப்படாத முகம், கசங்கிய உடை என இருந்த சப்பாணி கமலின் அழகு, நான்கு மணி நேரம் செலவழித்து மேக்கப் போட்ட எந்தவொரு தசாவதார கமலிடமும் தென்படவில்லை. இயல்பான கதை, கதைக்கேற்ற மனிதர்கள் என தமிழ் சினிமா மாற்றத்திற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதில் மேலும் ஒரு வரவுதான் ‘பசங்க’.
அதிகப்பிரசங்கித்தனமாக குழந்தைகளைப் பேசவிட்டு எடுக்கப்பட்ட ‘அஞ்சலி’ படம்தான் குழந்தைகளுக்கான படம் என்றால் அதை எடுத்த மணிரத்னத்தை கொஞ்ச நாளைக்கு ‘பசங்க’ பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிடலாம். அதன்பிறகாவது உருப்படியாக எடுக்கிறாரா என்று பார்ப்போம்.
எங்கே இருந்தய்யா வந்தாரு இந்த பாண்டிராஜ்? இப்போதுதான் ஆறாம் வகுப்பு முடித்துவிட்டு வருகிறேன் என்று அவர் சொன்னால், அதை நம்பலாம் போலிருக்கிறது. ஆறாம் வகுப்பு மாணவர்களின் மனவுலகை அவ்வளவு கச்சிதமாக செல்லுலாய்டில் கொண்டுவந்திருக்கிறார். இரண்டரை மணி நேரம் நானே ஆறாம் வகுப்பு சிறுவனாக இருந்த உணர்வு ஏற்பட்டது.
படம் முழுவதும் தமிழ் சினிமாவின் ஹீரோயிசத்தை வாரு வாரு என்று வாரியிருக்கிறார். சிக்ஸ் பேக், கையில் துப்பாக்கி என்று திரியும் கதாநாயகன்களுக்கெல்லாம் பெரிய வேட்டு வைத்திருக்கிறார். நக்கலும் நையாண்டியுமாக வசனங்கள், எந்த இடத்திலும் லாஜிக் இடிக்காத கதை, சினிமா மொழி தெரிந்த நெறியாள்கை, காட்சிகளுக்குத் தேவையான பின்னணி இசை, கேமிரா கோணங்கள் என படம் முழுவதும் ஏகப்பட்ட பிளஸ்கள்...
LIC ஏஜெண்ட், பால்வாடி டீச்சருக்கிடையிலான காதல் தமிழ் சினிமாவிற்கு ரொம்ப புதுசு. அதிலும் அந்த எல்.ஐ.சி. ஏஜெண்ட் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவுதான். வாத்தியார் அப்பாவும், அன்புக்கரசு அப்பாவும் பேசிக்கொள்ளும் காட்சி, LIC ஏஜெண்ட் - பால்வாடி டீச்சர் காதல் திருமணமாக நிச்சயமாகும் காட்சி, வாத்தியார் எழுதச் சொல்லி அன்புக்கரசு லெட்டர் எழுதும் காட்சி, இறுதியில் அன்புக்கரசு உயிர் பிழைக்க எல்லோரும் கைதட்டுவது உள்ளிட்ட சில காட்சிகளின் முடிவுகளை எளிதாக நம்மால் ஊகிக்க முடிகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி பல காட்சிகளின்போது தியேட்டரில் விசில் பறக்கிறது.
தான் இயக்குவது மட்டுமல்ல, தயாரிக்கும் படமும் நல்ல படமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கும் இயக்குனர் சசிக்குமாருக்கு பாராட்டுக்கள்.
குழந்தைகளது மனதை இழந்துவிட்டோம் என்று வருத்தப்படுபவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து அந்தக் குறையை ஒரு இரண்டரை மணிநேரம் தீர்த்துக் கொள்ளலாம். மாற்று சினிமாவை விரும்புவர்கள் அதை தமிழிலேயே பார்த்து மகிழ்ந்து கொள்ளலாம்.
- சங்கராச்சாரி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
இயல்பான ‘பசங்க’
- விவரங்கள்
- சங்கராச்சாரி
- பிரிவு: திரை விமர்சனம்