சில கதாபாத்திரங்கள்... நாம் பார்க்கும் படங்களில்.... பார்த்த படங்களில்... பார்க்க போகும் படங்களில்...தொடர்ந்து வரும். நிறைய படங்களில் பார்த்துக் கொண்டே இருப்போம். நல்லா பழக்கமான முகமாக இருக்கும். ஆனால் அவர்கள் பெயரோ... பின்புலமோ... சினிமாவில் அவர்கள் யார் என்று எந்த யோசனையும் வந்திருக்காது. எதுவுமே தெரிந்திருக்காது. தெரிந்து கொள்ளவும் நாம் யோசித்திருக்க மாட்டோம்.

kk soundarஅப்படி நான் பார்த்த இந்த முகம் அடிக்கடி பல படங்களில் பார்த்திருக்கிறேன். முக்கியமாக கிராம படங்களில் முன்னால் அமர்ந்திருக்கும் பெரிய மனிதர்களில் முதலாவதாக இருப்பார். இவரின் குரலும் அப்படியே நம் பெரியப்பாவுக்கோ மாமாவுக்கோ சொந்தமானதாக இருக்கும். இன்னமும் சொல்ல போனால் படங்களில் இவர் வரும் குறிப்பிட்ட அந்த காட்சிகள்...நமக்கு மிக நெருக்கமானதாக மாறி விடுவதை நான் உணர்ந்திருக்கிறேன். விடுமுறைக்கு ஊருக்கு செல்கையில் கிடைக்கும் ஆசுவாசம் இவரின் தோற்றத்தில்.... தோன்றலில்...கிடைக்கும்.

ஊருக்குள் நுழைந்ததுமே ஒருவர் முகம் நினைவுக்கு வருமே அப்படி ஒரு முகம் இவருக்கு. கேட்டதுமே நம்பிக்கை ஏற்படுத்துமே ஒரு குரல் அப்படி ஒரு ஆறுதலான குரல் இவருக்கு. போகிற போக்கில் ஒரு சிற்றூரில் ஒரு மீசை இருக்கும் தானே. அந்த மீசை தான் இவர். எல்லாவற்றுக்கும் ஒருவரை கேட்டு கேட்டு ஊருக்குள் செய்வார்களே.. அந்த ஒருவர் தான் இவர். ஊருக்கு ஒரு பொறுப்பான மிடில் கிளாஸ் தலைவர் இருப்பாரே. அந்த கண்ணியமான பாத்திரம் தான் இவர்.

அப்படி இவரை நிறைய படங்களில் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் பார்த்த பாக்யராஜின் "ஒரு கை ஓசை"யில் பாக்யராஜ்க்கு அப்பாவாக வந்து முழு படத்துக்கும் தானும் ஒரு சுவரென தாங்கி இருப்பார் இந்த வெண்கலக் குரல்காரர். பேச்சு வராத பையனை வைத்துக் கொண்டு போராடும் அப்பாவாக இந்த படத்தையே சமநிலை செய்யும் பாத்திரம். இவர் ஏற்ற எல்லா பாத்திரங்களுமே நம்பகத்தன்மை வாய்ந்தவையாக மாறிவிடுதல் தான் இவரின் நடிப்பின் இருத்தல்.

"திரும்பி பார்" "குமுதம்" "அன்னை இல்லம்" "வல்லவனுக்கு வல்லவ"னின் இன்ஸ்பெக்டராக...நடித்திருப்பார்.

"மண் வாசனை"யில்.... ஊர் பெரிய மனுஷராக வந்து திண்ணையில் அமர்ந்து காந்திமதியிடம் பேத்தி வயதுக்கு வந்த விஷயத்தை பட்டும் படாமல்.... ஒரு சமாதான தூதுவாக பேசும் காட்சியெல்லாம் ஒரு நடுத்தர தலைவனின் அமைப்பைக் கொண்டிருக்கும்.

"சங்கர் குரு" படத்தில் பள்ளி வாத்தியாராக நடித்திருப்பார்.

பாக்யராஜ் மிக அழகாக இவரை பயன்படுத்தி இருப்பார். "முந்தானை முடிச்சி" ல் ஊர்வசிக்கு அப்பாவாக நடித்திருப்பார். ஊர்வசி செய்யும் அதகளத்துக்கு ஈடு கொடுக்கும் அந்த அப்பாவை ரசிக்காமல் இருக்க முடியாது.

"சின்னவீடு" படத்திலும் இவர்கள் கூட்டணி தொடர்ந்தது.

"மனைவி ரெடி" படத்தில் கதாநாயகியின் அப்பாவாக இருப்பார். மகள் திருமணத்தன்று மாப்பிள்ளை ஓடி விட்டது தெரிந்து தூக்கு மாட்டிக் கொள்வார். பிறகு காப்பாற்றட்டப்பட்டு பரிவு ஏற்படுத்தும் பாத்திரத்தில் ஒரு நிஜ அப்பாவின் முகம் மீசை அற்றும் ரசிக்கும் படியாக இருக்கும்.

"நிழல்கள்" படத்தில் நிழல்கள் ரவியின் அப்பாவாக....."சின்ன பசங்க நாங்க" படத்தில் முரளிக்கு அப்பாவாக........"நம்ம ஊரு பூவாத்தா" படத்தில்... கௌதமியை பொண்ணு பார்க்க வரும் கங்காவுக்கு அப்பாவாக......" ரெட்டை ஜடை வயசி"ல் மந்த்ராவுக்கு அப்பாவாக......."மகாபிரபு" படத்தில் வினிதாவுக்கு அப்பாவாக......."பெரிய தம்பி" படத்தில் சந்திரசேகருக்கு அப்பாவாக........." நம்ம ஊரு நல்ல ஊரு" படத்தில் ரேகாவுக்கு அப்பாவாக........." வா அருகில் வா" படத்தில்.. வைஷ்ணவியின் அப்பாவாக........"சாத்தான் சொல்ல தட்டாதே" படத்தில் யுவஸ்ரீக்கு அப்பாவாக........ இப்படி பல படங்களில் அப்பாவாக வந்து வாழ்ந்திருப்பார். அப்பா கதாபாத்திரமாக இருந்தாலும்.. அந்த கதாபாத்திரத்துக்கு பெரிய மீசையோ... சிறிய மீசையோ... மீசை இல்லாமலோ.... உடை... பாவனை என்று சிறு சிறு வித்தியாசம் காட்டி இருப்பார். ஒரு நடிகனின் உருமாற்றம் அந்தந்த பாத்திரத்துக்கு ஏற்ப இருந்தால் போதும் என்றளவுக்கு இருக்கும்.

"உன்னை நினைத்து" தான் இவருக்கு கடைசி படம். சூர்யாவுக்கு அப்பாவாக தளர்ந்த நடிப்பில்... அவருக்கே உண்டான தனித்துவம் மின்னும்..... நடிப்பை செய்திருப்பார். பழுத்த கண்களில் காலத்தின் தளர்வை கண்டோம். அதோடு நடிப்பையும் நிறுத்திக் கொண்டார். மூச்சையும் நிறுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட 50 களில் இருந்து இவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது...... பிறகு அவரைத் தேடி படிக்கையில் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் இவர் பெயர் K.K சௌந்தர் என்றே தெரிந்தது. ஈரோட்டை சார்ந்தவர்....என்றும் தெரிய வந்தது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறை நடிகர்களோடு நடித்து விட்டவர்.

இவரைப் போல பெயர் தெரியாத எத்தனையோ சிறு கதாபத்திரங்கள் நம் மனதில் பதிந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே நாம் மிகவும் ரசித்த படங்களில் ஒரு ஓரமாய்.... பூத்து குலுங்கும் பூக்களோடு பூக்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் தான் அவர்கள் சார்பாக ஊர் பெரியவருக்கு (இவருக்கு) இந்த மரியாதை.

சிவாஜி எம் ஜி ஆர் ரஜினி கமல் மட்டுமா சினிமா. பசி நாராயணன்.... ஒரு விரல் கிருஷ்ணராவ்...செந்தில் மாதிரியே ஒருவர் இருப்பார்... அவர்.... ஓமக்குச்சி நரசிம்மன்.... முள்ளும் மலரும் படத்தில் முடி வெட்டுபவர்.... இன்னும் இன்னும்.... இந்த மாதிரி நிறைய ஆர்வமூட்டக் கூடிய பாத்திரங்களும் சேர்ந்து தான் சினிமா.

எல்லா காலத்திலும் இவர் மாதிரி துணை கதாபாத்திரங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள். நாமும் தொடர்ந்து ரசிப்போம். அது தான் K.K சௌந்தர் போன்றோர்களுக்கான வாழ்த்து.

- கவிஜி

Pin It